புதிய அரசியலமைப்பு தொடர்பில் சர்ச்சையை உருவாக்க சில தமிழ் தரப்பினரை அரசு பயன்படுத்துகின்றதா?

புதிய அரசியலமைப்பு தொடர்பில் ஒரு சர்ச்சையை உருவாக்கி தமிழ் மக்களிற்கே இது சம்பந்தமான தெளிவில்லை என்று ஒரு சாட்டு சொல்கிற யுத்தியை அரசாங்கமே தமிழ் தரப்பின் சிலரை வைத்து செய்கின்றதோ என சந்தேகம் எழுவதாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பேச்சாளரும் முன்னாள் எம்.பி.யுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார் .

பருத்தித்துறையில் உள்ள யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,

புதிய அரசாங்கம் எங்களிடத்தில் தீர்வு இருக்கிறது என சொல்லிக் கொண்டு இருக்கிறது. நாங்கள் அறிய ஆவலாக இருக்கிறோம். ஆனால் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கருத்தைப் பற்றி அறிய எந்த எண்ணமும் கிடையாது. அது பற்றி எங்களுக்கு தெரியும். எங்களது நிலைப்பாடு என்ன என எங்களிற்கு தெரியும்.

நாங்கள் அந்த வரைபோடு இணங்கி செயற்பட்டவர்கள்.அதற்கு பிறகும் தெட்டத் தெளிவாக எழுத்து மூலமாக தமிழ் தேசிய .கூட்டமைப்பாக எங்களது யோசனைகளை முன்வைத்து வருகிறோம்.ஆகவே எங்களது நிலைப்பாடு என்ன என எங்களிற்கு தெரியும். கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் நிலைப்பாடு என்ன எனவும் எங்களிற்கு தெரியும்.அது எல்லோருக்கும் தெரியும்.

நாங்கள் அறிய முனைவது அரசாங்கத்தின் நிலைப்பாடு. அதுவும். 2/3. பெரும்பான்மையுடன் வந்துள்ள அரசாங்கத்தின் நிலைப்பாடு தெரியாமல் எங்களுக்குள்ளே ஒரு சர்ச்சையை ஏற்படுத்த வேண்டிய தேவை இல்லை.அப்படி ஒரு சர்ச்சையை உருவாக்கி தமிழ் மக்களிற்கே இது சம்பந்தமான தெளிவில்லை என்று சாட்டு சொல்கிற ஒரு யுத்தியை அரசாங்கமே தமிழ் தரப்பின் சிலரை வைத்து செய்கின்றதோ என சந்தேகம் எழுகின்றது.

அரசாங்கம் தமது நிலைப்பாட்டை சொல்ல வேண்டும்.

அதன் பிறகு நாங்கள் எமது நிலைப்பாட்டினை ஏனைய கட்சிகளோடு பேசி இலங்கை தமிழ் அரசுக் கட்சி முன்னைய வகிபாகத்தை செய்யும். யாரோடு பேச வேண்டும் என தீர்மானித்து முன்னெடுப்போம் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *