யாழ் சென்.ஜோன்ஸ் கல்லூரி அதிபர் உயர் இலட்சியமிகு ஆனந்தராஜன்!…. ஐங்கரன் விக்கினேஸ்வரா.

(யாழ் கல்வித்துறையின் கலங்கரை விளக்கான  அதிபர் ஆனந்தராஜன் 1985 ஜீன் 26 இல் மறைந்த  நினைவு நாளாகும்)
ஒழுக்கம் என்றால் யாழ் பரியோவன் கல்லூரி என்ற உச்ச நிலைக்கு உயர்த்திய பெருமை யாழ் மண்ணின் கலங்கரை விளக்கான மறைந்த
செ. எ. ஆனந்தராஜவையே என்றும் நினைவூட்டும். 1985 ஜீன் 26 இல் மறைந்த அதிபரின் நினைவு நாளாகும்.
உயரிய இலட்சியங்களுக்காக மாணவர்களை நல்வழிப்படுத்த மனோதைரியத்தோடு தனிமையாக நின்று தன் வாழ்வை அர்ப்பணம் செய்த
அதிபர் ஆனந்தராஜனின் வாழ்க்கையானது, யாழ் கல்வித்துறையின் புலமையை சர்வதேசத்துற்கு எடுத்துக் காட்டும் சான்றாக அமைகிறது. தமிழ் சமூகத்தில் நீதி, சகோதரத்துவம், அன்பு ஆகிய உயரிய இலட்சியங்களுக்காக அயராது உழைத்து, மாணவர்களுக்காக என்றும் மனோதைரியமாக செயலாற்றியவர்.
யாழ் பரியோவன் கல்லூரிக்கு நன்மை பயக்கும் எந்த காரியத்திற்கும் மனோதைரியமாக நின்று ‘எமது அதிபர்’ என்ற கூற்றுக்கு வரைவிலக்கணமாய் ஆசிரியர்களுக்கும் – மாணவர்களுக்கும் இடையே ஓர் ஆன்மீக பாலமாய், அதிபர் செ. எ. ஆனந்தராஜன் என்றும் விளங்கினார்.
மறைந்த அதிபர் செ. எ. ஆனந்தராஜன் ஒரு சிறந்த நல் ஆசிரியர். பொறுப்போடும் விருப்போடும் கற்பிப்பவர். ஆரோக்கியமான தமிழ் மாணவ சமுதாயத்தை உருவாக்க விழிப்போடிருந்தவர். அதனால் கற்பிக்கும் ஆசிரியர்களின் திறனிலும் நம்பிக்கை வைத்திருந்தவர்.
சிறந்த பன்முக ஆளுமை மிக்க அதிபரின் கட்டுப்பாடில்லாமல் ஒரு பாடசாலையை திறம்பட வழி நடத்த முடியாது என்பதை நன்கறித்து பிறருக்கு ஒரு எடுத்துக் காட்டாக அமைந்தவர் அதிபர் செ. எ. ஆனந்தராஜன் அவர்கள்.
அவரது அயராத உழைப்பானது ஒவ்வொரு மாணவர் மீதும் வைத்திருந்த நம்பிக்கையைக் காட்டுகிறது. அவர் தனது மாணவரின் மீது அசையாத நம்பிக்கையை வைத்திருந்தார். மாணவர்களிடையே ஓர் ஆன்மீக பாலமாய், திரு. செ. எ. ஆனந்தராஜன் இப்பாடசாலைக்கு ஒரு சிறந்த அதிபராக, குடும்பத்திற்கு ஒரு சிறந்த தலைவனாக, சமூகத்திற்கு சிறந்த ஒரு வழி காட்டியாக மிளிர்ந்தவர்.
அவரின் உயர்ந்த இலட்சியங்களை நிறைவேற்றுவது அவரது மாணவர்களாகிய நாம் அவருக்கு செய்யும் அஞ்சலியாகும்.
திறமையான மாணவர்களை கௌரவித்து அவர்களை பாராட்டுவதையும், பல தடவை பரிசளிப்பு விழாக்களில் மாணவர் திறன் பற்றிய பரீட்சை முடிவுகளை
மதிப்பிடும் போது கேட்டு அக மகிழ்ந்துள்ளோம். ஒரு பரியோவன் மாணவன் எப்படி இருக்க முடியும் என்பதை, எங்கும் அவரது ஒழுக்கத்தால் அடையாளம் காணப்படுவார் என்று அவர் அடிக்கடி கூறுவது பொது வழக்கமாகும்.
மறைந்த ஆனந்தராஜன் அவர்கள் ஒரு கலைஞனும் கூட. மாணவர்களை
உற்சாகப்படுத்துவதில் கருத்தாக இருப்பார். பாடசாலை நிகழ்வுகளிலே பழமொழிகள், உபகதைகள், மனம் நோகாத கிண்டல்களைப் பொருத்தமாகப் பொடிபோட்டு பேசுவார். அதனால் எட்ட நிற்பவர்களும் கிட்ட அவரை நெருங்கிடும் கவர்ச்சி கொண்டவர்,
ஒரு பாடசாலை அதிபருக்குரிய கடமைகள் பல. அப்பொதுவான கடமைகளுல் மேலும் சில சிறப்பான திறன் அதிபர் அவர்களுக்குள்ளதை நாமறிவோம். மாணவரின் கடமைத் தேவைகளை நிர்ணயிக்கும் போது பலரதும் கருத்திற் கொண்டு பரியோவன் கல்லூரிக்காக அயராது உழைத்தவர்.
கடினமான போர்க் கால சூழலிலும் திறமையான முடிவுகளை எடுப்பதிலும் அவற்றைச் செயல்படுத்துவதிலும் அவருடைய திறமை அலாதியானது. அவர் மாணவர்களுக்கு ஆற்றிய சேவைகளே அதற்குச் சான்று.
அத்துடன் அவர் ஒரு சிறந்த நிர்வாக அதிபராக இருந்ததால், ஆசிரியர்களின் அடிப்படைப் பொருளாதாரப் பிரச்சனைகளையும், அதனால் ஏற்படும் குடும்பச் சுமைகளையும் நன்கு அறிந்திருந்தார். புதிய கல்வி, பாடத்திட்டம், கற்பித்தல் தொடர்பான கருத்தரங்குகள்-பயிற்சிகளில் பங்கேற்கவும், புதிய விஷயங்களை ஆராய்வதற்கும் கற்றுக்கொள்வதற்கும்
மாணவர்களை ஊக்கப்படுத்திய்
அவரின் ஆர்வமும் முயற்சிகளும் அளப்பரியவை.
அதனால்தான், தன்னுடன் ஒத்துழைத்து பணிபுரியும் ஆசிரியர்களின் தரத்தை உயர்த்தவும், காலத்தின் தேவைகளுக்கு ஏற்றவாறு பாடத்திட்டத்தில் மாற்றி பயிற்சி அளிக்கவும் ஆசிரியர்களை ஊக்குவித்தார். அத்தகைய தேவைகள் ஒவ்வொரு அதிபரின் உரிமையான கடமை என்பதை உணர்ந்து பணியாற்றினார்.
அதிபர் செ. எ. ஆனந்தராஜன் அவருக்கு இக்கல்லூரியோடு நீண்ட கால வரலாறு ஒன்றும்உள்ளது. அத்துடன் தந்தையாராகிய திரு. ஜி. எஸ். செல்லையா அவர்களும் இக் கல்லூரியில் ஆசிரியராக இருந்தவர்.
அதிபரின் ஆளுகையில் பள்ளி ஆசிரியர்களும் உளரீதியான முரண்பாடுகள் எதுவுமின்றி, அவரது பணிப்புரைகளை ஏற்று செவ்வனே செயலாற்ற முடிந்ததமையினாலேயே மாணவர்களின் திறமை மேம்பெற்றது.
அதிபர் அவர்கள் ஒவ்வொரு விடயத்திலும் மிக்க அவதானியாக இருந்தார். படிக்கும் மாணவர்களின் தவறுகளை மட்டுமன்றி உடல் உளக் குறைகளையும் ஆதரவோடு விசாரித்தறிந்து கொள்வார். அவர் நிர்வாகத்திறன் வாய்ந்தவர். கல்லூரியை நிர்வகிக்கும் ஆசிரியர்களையும் நன்கு மதிக்கவும் தெரிந்திருந்தார்.
மாணவர்களை எவ்விடத்தில் கண்டாலும் அழகாகப் முழுப் பெயர் சொல்லி அழைப்பார். அருகிலிருப் போர்க்கு அறிமுகம் செய்துவைப்பார். அவர் எமக்கு அதிபராக, தலைமை நிர்வாகியாக எந்தப் பிரச்சினையிலும் அவரை நாடினால் ஒரு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கைக்குரிய கலங்கரை விளக்காக மிளிர்ந்தார்.
பரியோவன் பாடசாலை விழாக்களிலும், மற்றய நிகழ்வுகளிலும் அவரின் பேச்சுக்கள் பகடிக்கதைகளுக்கு நிரந்தர இடம் இருந்தது. விழாக்களில் மாணவரிற்காக அவர் பாடிய பாடல்கள் இனிமையானவை, கருத்தாளமிக்கவை, மாணவரை கவர்ந்தவை, ஆம் அவர் மாணவரின் ஒரு அபிமான அன்பான அதிபருமாவர்.
தனது  பிள்ளைகளுக்கும் மட்டும் தகப்பனாக இருக்காமல், கல்லூரி விடுதியில் தங்கும் அனைத்து மாணவர்களுக்கும் ஒரு அன்பு மிக்க அதே சமயம் கண்டிப்பான தந்தையாக காட்சியளித்தவர். பள்ளி விடுதி மாணவர்களின் குறைகளை நேரில் அறிவதற்கு அவர் விடுதி மாணவர்
பிரதிநிதிகளை ஒவ்வொரு வாரமும் சந்தித்து குறை தீர்ப்பதும் அதிபரின் ஒரு சிறந்த அணுகு முறையாகும்.
மாணவர் மத்தியில் கட்டுப்பாட்டை நிலை நாட்டுவதில் அதிபர் மிகவும் கண்டிப்பானவர். அவர் அதிபராக இருந்த வருஷங்களில் இக்கல்லூரி பல துறைகளிலும் முன்னேறிய போதிலும், கட்டுப்பாட்டுக்கே பெயர்பெற்று மேலோங்கியது.
இக்கல்லூரியில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க விரும்பும் பெற்றோரை “நீங்கள் ஏன் இந்த கல்லூரியில் சேர்க்க விரும்புகிறீர்கள்” என்று கேட்டால், அவர்கள் சொல்வது “எங்கள் பிள்ளைகள் கட்டுப்பாடுடன் வளர்வதற்காகவே. வாழ்க்கையில் எத்துறையிலும் வெற்றியீட்டுவதற்கு அத்தியாவசியமான அத்திபாரம் கட்டுப்பாடே எனக் கூறுவார்கள்.
பரியோவனில் பல ஆண்டுகள் ஆசிரியராகவும், கடமையுள்ள அதிபராகவும் சிறப்புறக் கடமையாற்றிய அனுபவமும், ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்தின்
கல்வித்துறையில் பட்டப்பின்படிப்பில் ஓராண்டுப் பயிற்சி பெற்ற கல்வித்தகமையும் அவரிடம் இருந்தது.
மாணவர்களுடையே கண்டிப்பான ஆசிரியராக, அதிபராக, சிறந்த நிர்வாசியாகவுமிருந்தார். ஆயுனும் அவர் கனிவான நண்பராகவுமிருந் தார். கலைத்திட்ட ஆலோசகராகவுமிருந் தார். அதேவேளை புதிய அணுகு முறைகளை வரவேற்பவராகவுமிருந்தார்.
 அவரிடம் ஆளுமை பலமுமிருந்தது. அதனாலவர் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசவுமில்லை.
பரியோவன் பாடசாலைக்கு ஒரு சிறந்த அதிபராக, சமூகத்திற்கு சிறந்த ஒரு வழி காட்டியாக மிளிர்ந்தார். அவரின் உயர்ந்த இலட்சியங்களை நிறைவேற்றுவது அவருக்கு செய்யும் அஞ்சலியாகும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button