விஷ ஊசி போட்டு 300 பேர் கொலை? பள்ளிபாளையத்தில் திடீர் பரபரப்பு!…

பள்ளிபாளையம் பகுதியில், விஷ ஊசி போட்டு, 300க்கும் மேற்பட்டோரை கொலை செய்ததாக திடுக்கிடும் தகவல்கள் பரவியுள்ளது. தற்போது சட்டசபை கூட்டம் நடந்து வருவதால் போலீசார் விசாரணையில் தீவிரம் காட்டாமல், மேேலாட்டமாக விசாரிப்பதாக கூறப்படுகிறது.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ், 33; இவர் எந்த வேலைக்கு செல்லாமல், பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையிலேயே எந்த நேரமும் சுற்றித்திரிவதை வழக்கமாக கொண்டு இருந்தார். மேலும், பிணவறையில் பணிபுரியும் ஊழியர் ஒருவருடன் சேர்ந்து, அவர் சொல்லும் வேலைகளை செய்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 18ம் தேதி மாலை, சமூக வலைதளங்களில் மோகன்ராஜ் பேசும் வீடியோ பரவியது. அதில் அவர் பேசியிருந்ததாவது: பள்ளிபாளையம் பகுதியில் வயது முதிர்ந்த, உடல்நலம் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் படுத்த படுக்கையாக இருப்பவர்களை, அவர்களின் குடும்பத்தினரின் வேண்டுகோளின் படி, விஷ ஊசி போட்டு கொன்றுள்ளேன். இதற்காக, 5,000 ரூபாய் கட்டணம் வசூலிப்பேன். இதுவரை, 300க்கும் மேற்பட்டோரை, விஷ ஊசி போட்டு கொன்றுள்ளேன். 10 ஆண்டாக இந்த வேலையை செய்து வருகிறேன். இவ்வாறு அவர் பேசியிருந்தார்.

இதையறிந்த பள்ளிபாளையம் போலீசார், மோகன்ராஜை ஸ்டேஷனுக்கு அழைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் கூறுகையில், ”சமூக வலைதளத்தில் பரவிய, ‘வீடியோ’ அடிப்படையில் மோகன்ராஜிடம் விசாரணை நடத்தினோம்.

அவர், ‘போதையில் உளறி விட்டதாக’ தெரிவித்தார். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். 300க்கும் மேற்பட்டோரை கொலை செய்ததாக கூறியது குறித்து, விசாரித்து வருகிறோம். ஆதாரங்கள் கிடைக்கும் பட்சத்தில், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.

இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: இதுபோன்று கொலை செய்வதை, உறவினர்கள் யாரும் முன்வந்து புகாரளிக்க மாட்டார்கள். இது ரகசியமாக நடந்து வரும் செயலாகும். இது போல் செய்ய மோகன்ராஜ் போன்றோர்களும், ‘போலி’ டாக்டர்கள் சிலரும் பள்ளிபாளையம் பகுதியில் உள்ளனர். மோகன்ராஜுக்கு அரசு மருத்துவமனையில் என்ன வேலை; ஏன் எப்போதும் அங்கேயே சுற்றி வருகிறார்; அவருக்கு ஊசி மற்றும் விஷ மருந்து எப்படி கிடைக்கிறது என்ற விபரங்கள் தெரிய வேண்டும்.

முழுமையான விசாரணை நடத்தினால் மட்டுமே, குற்றவாளியை கண்டுபிடிக்க முடியும். சட்டசபை கூட்டம் நடந்து வருவதால் போலீசார் விசாரணையில் தீவிரம் காட்டாமல், மேலோட்டமாக நடவடிக்கை எடுத்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button