ரஷ்ய கூலிப்படைத் தளபதி அரசியல் தஞ்சம் – இனி உக்ரைனுக்கு ஆதரவு..!
ரஷ்யாவின் வோக்னர் கூலிப்படையின் முன்னாள் தளபதியும் ரஷ்யாவின் ரம்போ என விளிக்கப்பட்டவருமான அண்ட்ரே மெட்வெடேவ் நோர்வேயில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைனின் உப்புச்சுரங்க நகரான சோலேடர் அண்மையில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் வரும் வகையில் விழவைத்த சமர் தளத்தில் வோக்னர் கூலிப்படை முக்கிய பங்கை வழங்கிய நிலையில் இந்த நகர்வு இடம்பெற்றுள்ளது.
உயிர் பயத்தின் அடிப்படையில் வோக்னர் படைப்பிரிவுக்கு தனது சேவையை புதுப்பிக்க மறுத்த மெட்வெடேவ், கடந்த 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை ரஷ்ய – நோர்வே எல்லையைக் கடந்து புகலிடம் கோரியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
யெவ்ஜெனி ப்ரிகோஜின் தலைமையிலான வோக்னர் கூலிப்படை குழு, 2014 இல் உருவாக்கப்பட்டது.
இந்தக்குழு ஆபிரிக்க நாடுகள் மற்றும் சிரியாவில் அரச தரப்புக்காக போரிட்டு வருகிறது.
தற்போது உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிலும் அது ஒரு முக்கிய பங்காளியாக உருவெடுத்துள்ள நிலையில், அண்ட்ரே மெட்வெடேவ் இப்போது நோர்வேயில் புகலிடம் கோரியுள்ளார்.
இனிவரும் காலங்களில் அவர் உக்ரைனுக்கு ஆதரவு கொடுக்கப்போவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
![]()