, “பஞ்சுமிட்டாய்க் காலங்கள்”…. கவிதைதொகுப்பு! …… விமர்சனம் ….. அண்டனூர் சுரா.

மிட்டாய்க் கவிதைக்காரர் – கவிஞர் ரேவதி!
இவரது கவிதை வரிகளிலிருந்தே இத்தொகுப்பைப் பற்றிச் சொல்வதாக இருந்தால், கொடுக்கில் ஒட்டிக்கொண்டிருக்கும் தேனை நக்கிச் சுவைத்தல் போன்றது, “பஞ்சுமிட்டாய்க்
காலங்கள்”.
கவிஞர் ரேவதியின் முதல் பிரசவம் இது. அதற்குரிய வலியும் மகிழ்ச்சியும் இதற்குள் இருக்கிறது. குழந்தை, இளமை, வாலிபம், காதல், தாய்மை, வயோதிகம், மரணமென வாழ்த்தலின் கூறுகளையும் அதன் பாடுகளையும் பாடுகிறது. மென்மெல்லிய சொல் வலைகளால் பின்னப்பட்ட கவிதை வரிசையில் ‘எச்சங்கள்’ என்கிற கவிதை ஆணாதிக்கத்திற்கு எதிரான கோபத்தைக் கொட்டுகிறது. இத்தொகுப்பில் இடம்பெற்ற ஒரே கோபக் கவிதை . ஒரு தலைமுறை வாழ்தலுக்கு ஒரு பிடி கோபம் போதுமானது. எனக்குப் பிடித்தமான கவிதையும் கூட. வாசகன் அதைத் தேடி வாசிக்க வேண்டும், என்பதற்காக அக்கவிதையை பிரதியிடாமல் விட்டு நகர்கிறேன்.வீட்டிற்குள் குழந்தையைத் துரத்திப் பிடிக்கையில் வீட்டின் நீள அகலம் கூடிவிடுவதைப்போல சில கவிதைகள் தரும் உலகம் பக்களவைத் தாண்டிய வெளியாக விரிக்கிறது.உங்களிடம் ஒன்று கேட்கட்டுமா? என்கிற கவிதை கேள்விகளைக் கொண்ட வடிவக் கவிதை. கேள்விகளைத் தொடுக்கிக்கொண்டுவரும் அக்கவிதை , “என்னதான் செய்துகொண்டிருக்கிறீர்கள்? அடடே வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள்????” என்பதாக முடிகிறது. கவிதை அப்படியாக முடிந்துவிட்டாலும் அக்கவிதை தரும் பரப்பு அதன் பிறகே எனக்குள் தொடங்குகிறது. அந்த வரியை நான் இப்படியாக திருத்திவாசித்துக்கொண்டேன். ‘ அடடே வசித்துக்கொண்டிருக்கிறீர்கள்???’நாம் அல்லது நம்மில் பலர் வாழ்வதாக நினைத்துக்கொண்டு வசிப்பதைக் காட்டும் பிழைத்திருத்தல், பற்றியதான கவிதை. இதுபோன்ற வடிவம் அல்லது படிகத்தினலான கவிதையே கவிஞனை காலத்தோடு வாழ வைக்கிறது. வாழ்தலுக்கும் வசித்தலுக்குமான வித்தியாசத்தைக் கவிஞர் தங்கம்மூர்த்தியின் ஒரு கவிதை எனக்கு புலப்படுத்தியிருந்தது. ” வாடகை வீட்டில் வசிக்கலாம், வாழ முடியாது “வசித்தல், வாழ்தல் இரண்டையும் பிரித்துக்காட்டும் படிகம் இதற்குள் இருக்கிறது. இரண்டும் ஒன்றல்ல, எனக் காட்டுகிறது. ரேவதியின் கேள்விகளாகக் கொண்ட இக்கவிதையில் வாழ்ந்துகொண்டிருப்பதாக நினைத்து வசித்துக்கொண்டிருப்பவர்களை எள்ளுகிறது அல்லது நகையாடுகிறது.
எப்போதும் தன்னை தானாகவே வைத்துக்கொள்ள விரும்பும் ரேவதிக்கு, கல்லூரி பருவத்தில் கவிதைப் போட்டியில் பரிசு பெற்றலோடு எழுத்திற்குள் வந்துவிட்ட ரேவதிக்கு, வீதி இலக்கிய வட்டம் வீதி அமைத்துக்கொடுத்ததை இந்நேரத்தில் நினைவுகூர்ந்து பெருமிதம் கொள்கிறேன்.தொகுப்பை முழுமையாக வாசித்து முடிக்கையில் அட்டைப்படத்திலிருந்த இரண்டு குழந்தைகளையும் உற்றாய்ந்து இதில் யார் ரேவதி எனத் தேடச்செய்தேன். காலம் சொல்லவேண்டிய பதிலுக்கு நானென்ன பதில் கூறுவதென, நகர்ந்துகொள்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள், கவிஞரே!காலம் உங்களைத் தோளைத் தாண்டியும் சுமக்கும்!!
![]()
நன்றி அண்ணா