இலக்கியச்சோலை
“எறிகணை” …. ( நாவல் ) ….. நூல் அறிமுகம்!

சாதாரண தமிழ்ச் சனங்களின் கதையாக எளிமை ததும்பும் மொழிநடையாக நெஞ்சில் ஈரம் சொட்டச் சொட்ட ஈழ நிலத்தின் வலிகளைச் சொல்லியிருக்கிறது எறிகணை.
தமிழரின் இறந்த காலங்கள் எல்லாம் இறப்பின் வடுக்களையே சுமந்து வந்திருக்கின்றன என்பதை எறிகணைகொண்டு நினைவுபடுத்தியிருக்கும் எழுத்தாளர் தியா அவர்கள் இந்த நாவலை இவ்வளவு தாமதமாக இலக்கிய உலகிற்குத் தந்திருப்பது கவலையைத் தந்தாலும் இப்படைப்பு இன்றைய இளம் தலைமுறையின் கைகளுக்குச் சரியான நேரத்தில் சென்றடையவே காலம் எறிகணைக்கு இவ்வளவு தாமதம் தந்திருக்கிறது என நான் நினைக்கிறேன்.
வடகிழக்கு கல்வி வளர்ச்சியில் கடந்த சில ஆண்டுகளாகவே பின்தங்கியிருக்கும் இப்போதைய நிலையில் யுத்த அசம்பாவித நேரங்களில் கூட எம் முந்தைய தலைமுறை கல்விக்காக அலைந்த அலைச்சலையும், நவீன வளர்ச்சியில் இன்றை எங்கள் தலைமுறைகள் போதைகளோடு திக்குமுக்காடுவதையும் ஒப்பிட்டுப் பார்க்க தலைக்குள் எறிகணை வெடிக்கிறது.
புவனாவோடு ஆரம்பிக்கப்படும் இக் கதை புவனாவின் திவசத்தோடு முடிகின்றது. செல் கணவனைத் தின்ற பின்னும் ஒரு குடும்பத்தின் தலைவியாக பிள்ளைகளை வளர்த்தெடுக்க நிறையச் சவால்களைச் சந்திக்கிறார் புவனா. யுத்தம் அவர்களை நகர்த்தி நகர்த்தி பயணப்பட வைத்துக்கொண்டேயிருந்தது. புவனாவின் மகன் செல்வன் வளர வளர கொஞ்சம் கொஞ்சமாக குடும்பத்தின் முழுப் பொறுப்பையும் செல்வன் முழுவதுமாக ஏற்று தன் இரண்டு பெண் சகோதரிகளுக்காகவும் தாய்க்காகவும் நிறையவே போராடுகிறார். இது எளிய சனங்களின் கதை.
இந் நாவலில் வரும் நாயகிகளான சுரபிக்கும், நிலாவுக்கும் எழுத்தாளர் சமமான முக்கியத்துவம் கொடுத்து அவர்களுக்கான காதல் கதைகளை ஆக்கியிருக்கும் விதம் அருமை. நாவலை சுவைத்துப் பாருங்கள் அதன் அற்புதம் புரியும்.
யுத்தம் முடிந்து உறவுகளைத் தொலைத்து அவர்கள் உள்ளனரா? அல்லால் இல்லாமற் போனாரா? என்ற தெளிவில்லாத தன்மையும் உறுதியான உண்மை எதுவென தம் தம் உறவுகளைத் தேடி எத்தனை தமிழன் அலைந்து களைத்திருப்பான்? செல்வன் புவனாவை தேடுவதில் அந்த வலி உங்களுக்குள்ளும் ஏறும். ஒவ்வொரு வாசகனுக்குள்ளும் இந்த எறிகணை வெடிக்கும்.
பண்டாரவன்னியன் புத்தகசாலை
📞 +940772244616
![]()