இலக்கியச்சோலை

ஈழத்தின் தூரிகை ஓய்வெடுத்து ஓராண்டு!…. திரு.கு.குகதாசன் (B.F.A (Art & Design), Dip in Edu)

ஈழத்தின் தூரிகை ஓய்வெடுத்து ஓராண்டு.

கலாபூசணம் ஓவியர் ஆசை இராசையா

16.08.1946 – 29.08.2020

 

திரு.கு.குகதாசன் (B.F.A (Art & Design), Dip in Edu)

ஆசிரியர், யா/அராலி இந்துக்கல்லூரி, யாழ்ப்பாணம்.

ஈழத்து இயற்பண்புவாத ஓவியச் செல்நெறிகளில் தனித்துவமிக்கவராக இணையற்ற கலைத்துவ ஆளுமையைக் கொண்ட கலைஞராகத் தன்னை அடையாளப்படுத்தி நிற்பவர் ஓவியர் ஆசை இராசையா அவர்கள். யாழ் மண்ணில் வளமிக்க ‘அச்சுவேலி’ யில் 16.08.1946 இல் பிறந்த இவரது தந்தை

ஆசை அமைதியும், தர்ம சிந்தனையும் நேர்மை வழிப்போக்கும் கொண்டவர் – தாயார் செல்லம்மாவும் தந்தை வழிவாழும் பொறுப்புணர்வு மிக்க குடும்பப் பெண் – தையல் கலையில் தேர்ந்தவர். மகன் இராசையாவின் ஓவியத்திறன் இயல்பிலேயே இளவயதிலேயே வேரூன்றி வளரத் தொடங்கியது.

விடாமுயற்சியும், இடையறா உழைப்பும் கொண்ட எவனும் பொருளாதார இலக்குடன் கூடிய போராட்ட வாழ்வை எதிர்கொண்டு வாழும் அச்சுவேலிக் கிராமத்து மக்களின் வாழ்வோடு கலைத்தாகம் கொண்ட இராசையா அவர்களின் நெருக்கமான ஒட்டுதல் சாத்தியமற்றுப் போனதில் வியப்பில்லை. ‘கலை’ பொருளாதார எற்றத்திற்கு உதவாது என்பதே கிராமத்துச் சித்தாந்தம்.

பாடசாலை வாழ்வு முடிந்ததும் அவரது கலை வேகமாக கொழும்பு நுண்கலைக் கல்லூரியை நோக்கித் தள்ளியது அது அவரது வாழ்க்கையின் திருப்பு முனையை ஏற்படுத்திய தேடல் காலமாகியது. அவருள்ளிருந்த ஓவியக் கலைஞன் புதிய பரிணாமத்தை நோக்கிய வளர்ச்சியில் தன்னை இனம் காட்டத் தொடங்கிய காலம் அதுதான்.

தேடல், ஆய்தல், கற்றல், அறிதல் என விரிந்து பரந்தளத்தில் அவர் ‘ஆத்மா’ வின் கலையார்வம் விஸ்வரூபம் கொள்ளத் தொடங்கியது. அந்த விஸ்வரூப வளர்ச்சி பிரமிக்கவைக்கும் வகையில் வளர்ந்து வந்து இவரை ஒரு மகா கலைஞனாக்கியுள்ளது.

பல கண்காட்சிகளில் இவரது ஓவியங்கள் அவரது தனித்துவக் கலை ஆளுமையை அடையாளப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

பரிசுகள், விருதுகள், பாராட்டுக்கள், கௌரவங்கள் என அவருக்கு கிடைத்த தேசிய அங்கீகாரங்கள் பல. அனைத்தையும் மௌனமாக ஏற்றுக்கொண்டு அமைதியாகத் தன்னியல்பு மாறாத கலைஞனாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளமை வியப்பிற்குரிய ஒன்று.

குடத்துள் விளக்காக அவர் தம்மைச் சுயவிளம்பரங்களைப் புறந்தள்ளி ஒடுக்கிக்கொள்பவராக இருந்தாலும் அவரது கலைப் படைப்புகளின் ‘பிரம்மாண்டம்’ அவரை குன்றின் மேல் விளக்காக சுடர்விடவைத்துள்ளமை அவரது கலை ஆளுமைக்குக் கிடைத்த வெற்றியாகும்.

இலங்கையின் மிகப்பிரபல ஓவியர்கள் வரிசையில் வைத்து எண்ணப்படுபவர், பிறப்பு முதல் 1965 வரை அச்சுவேலியில் வாழ்ந்தவர், அச்சுவேலி மத்திய கல்லூரியின் பழைய மாணவர், ஓவியத்தின்பால் கொண்டிருந்த ஆர்வத்தினால் பாடசாலைக் காலத்தில் ஓவியப் பாடத்திற்கே அதிக மதிப்பெண்களைக் பெற்றதாகக் கூறும் இவர் பாடசாலைக் காலத்தில் தனக்குச் சித்திர பாடத்துறையில் போதிய வழிகாட்டல் கிடைக்கவில்லை எனத் தனது மனஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றார். ஓவியப் பாடத்தில் மேற்படிப்பைத் தொடர்வதென்பதில் சமூகம் அக்கறை காட்டாத காலகட்டத்தில் வீட்டாருடைய எதிர்பையும் மீறிக் கொழும்பு நுண்கலைக் கல்லூரியில் (College of Art and Craft) அனுமதி பெற்று 1966 தொடக்கம் 1969 வரையான காலப்பகுதியில் ஓவிய நுட்பங்களைப் பயின்றார்.

ஸ்கெச் (Sketch) பண்ணுதல், பிரதிமை (Portrait) பண்ணுதல் என எதிலும் தேர்ந்தவராக விளங்கினார். தைல வர்ணம், நீர் வர்ணம், பஸ்டல் என ஓவியக் கலைக்குரிய எவ்வூடகத்தையும் நேர்த்தியாகக் கையாளும் ஆளுமை இவருக்கு உண்டு. நிலக்காட்சி ஓவியங்களை வரைவதில் தனித்துவம் பெற்று விளங்கினார். அச்சுவேலிப் பிரதேசத்தின் இயற்கை அழகு, வல்லைப் பிரதேச நீரோடைக் காட்சிகள், பனைகளும் தாளம் பற்றைகளும் நிரம்பிய காட்சிகள் என இளமையில் தான் தரிசித்த ஊரின் அழகை நிலக்காட்சி ஓவியங்களாக வரைந்து பெருமை பெற்றுள்ளார். இந்த ஓவியங்கள் பல இலட்சம் ரூபாக்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பதையும் இங்கு சுட்டிக் காட்டுதல் பொருத்தம்.

இவர் வரைந்த பிரதிமை (Portrait) ஓவியங்களும் பிரபலமானவை. யாழ். பல்கலைக்கழகத்தில் உள்ள பேராசிரியர் சு.வித்தியானந்தன், பேராசிரியர் மகேஸ்வரன் ஆகியோரின் மெய்யுருக்களும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் உள்ள பசுபதிச் செட்டியார், நாகலிங்கச் செட்டியார் மற்றும் இந்துவின் அதிபர்களது மெய்யுருக்களும் இவரது கைவண்ணத்தில் உருவானவை என்பது குறிப்பிடத்தக்கது.

1971 இல் வேலணை மத்திய கல்லூரியில் சித்திரபாட ஆசிரியராக நியமனம் பெற்ற இவர் பலாலி ஆசிரிய கலாசாலையில் பயிற்சி பெற்று 1975 தொடக்கம் 1983 வரை கொழும்பு றோயல் கல்லூரியில் பணியாற்றினார். இனக்கலவரத்தின் பாதிப்புக்கள் இவரையும் விட்டுவைக்கவில்லை. இதனால் தமிழ் மண்ணிலேயே வாழ்வது என்ற முடிவுடன் உறுதி பூண்டு வாழ்ந்து வந்தார்.

இலங்கை முத்திரைப் பணியக ஓவியக் குழுவில் ஓவியர் இராசையா அவர்கள் இடம்பெற்றமை அச்சுவேலிக்குப் பெருமை தரக் கூடிய அம்சமாகும். இலங்கை அரசின் எட்டு முத்திரைகளுக்கான ஓவியங்களை இவர் வரைந்துள்ளார். சேர். பொன். இராமநாதன், சேர். பொன். அருணாசலம், சேர். வைத்திலிங்கம் துரைசுவாமி, சேர்.ஜோன் கொத்தலாவல, ஜோர்ஜ் ஈ.டி. சில்வா, ஈ.பி. மல்லசேகரா ஆகியோரது மெய்யுருக்களும் ‘தவலம்’ என்ற மலையகப் போக்குவரத்து மார்க்கம், இலங்கையின் முதற் புகைவண்டி ஓவியம் என்பனவுமே அவையாகும்.

ஓவியர் ஆசை இராசையாவின் படைப்புக்களில் வெளிக்காட்டப்படும் உருவங்கள் யாழ். மண் சார்ந்ததாகவே இருக்கின்றன. இவரது முதலாவது தனிநபர் ஓவியக் கண்காட்சி 1985 இல் அச்சுவேலி புனித தெரேசா மகளிர் கல்லூரியில் இடம்பெற்றது.

ஓவியத்துறை சார்ந்து பல பட்டங்களையும் விருதுகளையும் ஆசை இராசையா பெற்றுள்ளார். நல்லூர் பிரதேச செயலகம் வழங்கிய கலைஞானச் சுடர் (2009), வடமாகாண ஆளுநர் விருது (2009), கலாபூஷணம் விருது (2010), கொழும்புத் தமிழ்ச் சங்க விருது (2012), ஞானம் சஞ்சிகை விருது (2012), எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் ‘தமிழியல் விருது’ (2013), திருமறைக் கலாமன்றம் வழங்கிய கலைஞானபூரணன் விருது (2014) என்பன குறிப்பிடத்தக்கனவாகும்.

யாழ். பல்கலைக்கழகச் சித்திரமும் வடிவமைப்பும் துறையில் கற்கும் மாணவர்களுக்கு வருகை விரிவுரையாளராகவும் பணியாற்றினார். ஆசை என ஆன்றோரால் ஆசையாக அழைக்கப்படும் இக்கலைஞர் தரமான நூல்களின் வடிவமைப்பாளராகவும் அட்டைப்பட ஓவியராகவும் நிலவுருக்கள் மற்றும் மெய்யுருக்களை வரைவதிற் புகழ் பெற்றவராகவும் இறுதிவரை தனது கலைச்சேவையைத் தொடர்ந்த ஓவியர் ஆசை. இராசையா அவர்கள் தனது ஓவியங்கள் பற்றியதான “விம்பம்” நூலினையும் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆசை. இராசையா அவர்கள் சுகவீனம் காரணமாகக் கடந்த வருடம் 07.07.2020 இலிருந்து 15.08.2020 வரை வைத்தியசாலையிற் சிகிச்சை பெற்று வீடுதிரும்பியிருந்த போதும் அவரது குடும்பத்தினரின் அரவணைப்பில் இருந்த நிலையில், 29.08.2020 மீண்டும் சுகவீனம் காரணமாகத் தெல்லிப்பழை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மாலை 4.00 மணியளவில் இறைபதமடைந்தார்.

ஈழத் தமிழ்ச் சமூகம் பல்வேறு தளங்களிலும் தடம் பதித்த தனது ஆளுமைகளைத் தொடர்ச்சியாக இழந்து கொண்டிருக்கின்ற துயர்மிகு காலத்தில் வாழ்கின்றோம். இந்தத் தொடர் இழப்புக்களின் வரிசையில் கடந்த ஆண்டு எமது மண்ணின் மூத்த ஓவியர் ஆசை இராசையா அவர்களையும் இழந்து விட்டோம் என்பது மிகுந்த வேதனையத் தருகின்றது. கலையுலகில் நிரப்பப்பட முடியாத இடைவெளியை விட்டு ஆசை. இராசையா அவர்கள் எம்மை விட்டுப் பிரிந்துள்ளாரெனினும், வர்ணங்களுள்ளவரையும் தூரிகைகள் இயங்கும் வரையும் இவ் அற்புத கலைஞனின் பெயரை அவை மானசீகமாக உணர்த்தியவண்ணமே இருக்கும்.

 

திரு.கு.குகதாசன் (B.F.A (Art & Design), Dip in Edu)

ஆசிரியர், யா/அராலி இந்துக்கல்லூரி, யாழ்ப்பாணம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *