கதைகள்

நடுகைக்காரி!…. 25…. ( நாவல் ) ….. ஏலையா க.முருகதாசன்.

 

 

தனத்தையும் பூரணியையும் அனுப்பிவிட்ட ஞானமும் பாறுவும் மீண்டும் அட்டாளைக்குள் போகிறார்கள்.

ஞானம் கிழங்கு அவிச்ச பாத்திரங்களை எடுத்து கழுவதற்காக கிணத்தடிக்கு கொண்டு போக பாறுவும் அவனுடன் போய் கழுவுவதற்கு உதவுகிறாள்.

கேத்தலைக் கழுவுவதற்காக எடுக்க „இப்ப கழுவ வேண்டாம் இன்னொரு தேத்தண்ணி குடிச்சிட்டுக் கழுவுவம் „என்கிறாள் பாறு.

„சரி’ என்று சொன்ன ஞானம்,அவற்றைக் கொண்டு போய் வெயில் படத்தக்கதாக வைச்சவன் மூக்குப் பேணிகளை மட்டும் எடுத்து சாக்குப் பைக்குள் வைக்கிறான்.

„அப்ப பாத்திரங்களை வீட்டுக்கு கொண்டு போகேலையோ’ என்று கேட்க, „இல்லை அதை நாளைக்கு படம் பார்த்திட்டு வரேக்கை எடுத்துக் கொண்டு போவன், கேத்தலையும் கொண்டு போகணும் தேத்தண்ணி வைச்சுக் குடிச்சப் பிறகு பைக்குள்ளை வைக்கலாம்’ என்றவன் அட்டாளைக்குள் போக பாறுவும் போகிறாள்.

„தேத்தண்ணி வைக்கவா „என்று பாறு கேட்க, „இப்ப வேண்டாம் ஒரு இடத்தைக் காட்ட உங்களைக் கூட்டிக் கொண்டு போயிட்டு வந்து குடிப்பம் „என்றவன்,பாறுவை உற்றுப் பார்க்கிறான்.

அவனின் பார்வையைப் புரிந்து கொண்ட பாறு „ ஏன் அப்படிப் பார்க்கிறியள் „ என்று அவள் சொல்லி வாய் மூடுவதற்கு முந்தியே அவளை இழுத்து அணைச்சு சொண்டோடு சொண்டு சேர்த்து முத்தமிடத் தொடங்குகிறான்.

அவனிடமிருந்து விடுபட்ட பாறு „ உங்களுக்கு இதே வேலையாய்ப் போச்சு…..எனக்குப் பயமாயிருக்குது…எதுக்கும் மனக் கட்டுப்பாடு வேணும்..எழும்புங்கோ ஏதோ காட்ட வேண்டும் என்று சொன்னனீங்கள் வாருங்கோ’ என்று அவனை அட்டாளையை விட்டு எழுப்ப, ஞானம் பாறுவையும் கூட்டிக் பெரிய வரம்பில் ஏறி மேற்குப் பக்கமாய் போய்க் கொண்டிருந்தான்.

„எங்கை போறம் „ என்று பாறு கேட்க „ காட்டிறன் „ வாங்கோ என அவன் சொல்ல, „என்னத்தைத்தான் காட்டப் போறியளே தெரியாது „ என்றவள் சிரிப்பை அடக்கிக் கொண்டு இரண்டு சொண்டுகளையும் வாய்க்குள் மடக்க’எல்லா இரட்டை அர்த்தக் கதையளையும் நீங்கள் கதையுங்கோ நான் கொஞ்சம் அப்படி இப்படி நடந்தால் மட்டும் மன அடக்கம் வேணடும்’என்று சொல்லுங்கோ என்றவனுக்கு „ எல்லாம் எங்கடை இரண்டுபேற்றை நன்மைக்குந்தான் கதைச்சனான் „ என்று நடந்து கொண்டே சொன்னவள் பயற்றம் தோட்டத்தைக் கண்டு விடுகிறாள்.

„ அங்கை பாருங்கோ கனக்க பயறு காய்ஞ்சு போய் கிடக்குது „என்று அவள் சுட்டிக் காட்ட ஞானம் பயிற்றம் தோட்டத்துக்குள் இறங்கி காய்ஞ்ச பயிற்றம் காய்களை இழுத்துப் பிய்ச்சுக் கொண்டு வந்து பாறுவிடம் குடுக்கிறான்.

ஞானம் ஒரு பொம்பிளைப் பிள்ளையுடன் நடந்து வருவதைக் கண்ட பயறுத் தோட்டத்திற்கு அடுத்த தோட்டத்தில் நின்ற தோட்டக்கார விசுவர் „ஞானம் உதார் புதுசாயிருக்கு’ என்று கேட்க,’இவ எங்கடை சொந்தக்காரப் பிள்ளைதான் காரைநகரிலை இருக்கிறவ, எங்கடை வீட்டிலை வந்து நிக்கிறா அம்பனை வயல் எப்படி இருக்குமென்று கேட்டா, அதுதான் வயலைக் காட்ட கூட்டிக் கொண்டு வந்தனான் „ என்று பயற்றம் தோட்டத்தடியிலேயே நின்று சொல்லிக் கொண்டிருந்தான் ஞானம்.

ஞானம் தெளிவாகப் பொய் சொல்கிறான் என்பதைக் கேட்டும் கேளாத மாதிரி கேட்டு அடக்கமாகச் சிரித்தவாறே காய்ஞ்ச பயிற்றங்காய்களை உடைச்சு ஞானத்துக்கு குடுத்தபடி தனது வாய்க்குள்ளும் போட்டுக் கொண்டிருந்தாள் பாறு.

„மெய்யே ஞானம் சொந்தக்காரப் பிள்ளையென்று சொல்கிறாய், அந்தப் பிள்ளை உனக்கு என்ன முறை’ என்று விடாது கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார் விசுவர்;.

அவருக்குப் பாறுவை யாரென்று அறிய வேண்டுமென்பது மட்டுமல்ல, ஒரு குமர்ப்பிள்ளை தனியாக ஞானத்துடன் ஏன் தோட்டத்துக்கு சுற்றித் திரியுது என்பதும் அவருக்கு கன யோசனைகளைக் குடுத்தது.

„ எனக்கு ஒருவிதத்திலை மச்சாள் முறைதான்’ என்ற ஞானத்துக்கு „அப்ப சரி மச்சாள் என்றால்………..ஆ…..விளங்குது விளங்குது நீ குடுத்து வைச்சனி …கட்டப் போறவளோடை திரியிறாய்…எங்கடை காலத்திலை

இப்படியெல்லாம் கூட்டிக் கொண்டு திரிய முடியுமே…இஞ்சை கீழ இருந்து புல்லுச் செதுக்கிறாவே என்ரை மனுசி அவள் எனக்கு மச்சாள்தான்….ஆனால் அவளை அடிக்கடி பார்க்க ஏலாது…ஒரு நாள் இப்படித்தான்…’ என்று அவர் கதையை நீடிக்க’ பேசாமல் இரப்பா இப்ப அந்தக் கதை எதுக்கு’ என்று சொல்லியவாறு உழவாரமும் கையுமா விசுவற்றை பெண்சாதி எழும்பி நின்று கொண்டு ஞானத்தையும் பாறுவையும் பார்க்கிறாள்.

„ஞானம் நான் ஒரு நாளைக்கு எங்கடை அந்தக் கதையை விலாவாரியாச் சொல்கிறன்…ம்….பொறுத்த இடத்திலை உனக்கு மச்சம் இருக்குதப்பா ….உன்ரை காட்டிலை மழை பெய்யுது அதவும் இந்த நல்ல வயசிலை… இரண்டு பேரும் உலாத்துங்கோ’ என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே „ பொறுத்த இடத்திலை மச்சம் „ என்றதைக் கேட்ட பாறு சிரிக்க வாயில் போட்டுச் சப்பிக் கொண்டிருந்த பயிற்றங் கொட்டைகள் வாயிலிருந்து சிதற பாறு இரும, ஞானம் அவளின் உச்சந்தலையில் தட்டிவிடுகிறான்.

ஞானமும் பாறுவும் அந்த இடத்தைவிட்டு நடக்கத் தொடங்க,ஞானத்தோடு நிக்கிறவள் யாராக இருக்குமென்று கண்ணுக்கு நேரே கையை வைச்சு நெற்றியைச் சுருக்கி கண்ணை இடுக்கி விசுவற்றை பெண்சாதி பாறுவைப் பார்த்துக் கொண்டே „ இஞ்சரப்பா அந்தப் பொடிச்சி ஆர் தெரியுமோ, புதுசா நடுகைக்கு ஒரு வடிவான பொட்டை வந்திருக்கென்று சொன்னேனல்லோ அதுதான் இது, சுப்பையற்றை பொடியன் உங்களை நல்லாய்ப் பேய்க்காட்டிப் போட்டான்,பொடிச்சி காரைநகருமில்லை கந்தரோடையுமில்லை’ என்று விசுவற்றை பெண்சாதி சொன்னதைக் கேட்டு இரசித்துக் கொண்டே இருவரும் தெற்கு நோக்கிப் போய்க் கொண்டிருந்தனர்.

ஞானத்துக்கு தெரிந்த தோட்டக்காரர் எல்லாம் ஞானத்தோடை ஒரு பொம்பிளைப்பிள்ளை போவதைப் பார்க்கின்றனர்.

„நீங்கள் அவருக்கு பொய் சொல்ல, ஆனால் அவற்றை மனுசி நான் யார் எண்டு கண்டுபிடிச்சிட்டா இஇன்றைக்கு உங்கடை இலகைக்கிளை எங்கடை கதை பரவிவிடும் என்ன நடக்கப் போகுதோ தெரியாது, அற நனைஞ்சவனுக்கு குளிரென்ன கூதலென்ன என்ற நிலைமைக்கு என்னையும் கொண்டு வந்திட்டியள்…ம்…இன்னும் கனதூரம் நடக்க

வேணுமோ’ என்று பாறு கேட்க „அதுதான் இடம் „ என்று ஞானம் காட்ட ஐஞ்சு மீற்றரிலை இருந்த அந்த இடத்துக்குப் போய்ச் சேருகிறார்கள்.

„இதுதான் அந்த இடம் „என்று ஞானம் வெள்ளவாய்க்காலொன்றைக் காட்ட’ இந்த வெள்ள வாய்க்காலைக் காட்டவா எவடம் எவடம் புளியடி புளியடி என்று கூட்டிக் கொண்டு வந்தனீங்கள்,அங்கை றோட்டோரத்திலை இருக்கிற வாய்க்கால் மாதிரித்தானே இதுவும்’ என்று சொல்லி ஞானத்தின் முதுகில் குத்துகிறாள் பாறு.

„இது வெள்ளவாய்க்காலில்லை இதுக்குப் பெயர் வழுக்கையாறு’ என்று ஞானம் சொல்லி முடிக்குமுந்தியே „ஆறா ஒரு சொட்டுத் தண்ணியையும் காணேலை இதை ஆறென்று சொல்றியள், எங்கடை இடத்திலை மலையளும் இல்லை’என்றவளுக்கு, மழை காலத்திலை இந்த வாய்க்காலாலை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்.

அந்த வெள்ளம் இப்படியே மேற்குப் பக்கமாய் போய் தெற்குப் பக்குமாக அளவெட்டி வயலுக்குள்ளாலை மல்லாகத்துக்கு ஒரு றோட்டுப் போகுதல்லே அதன் கிழக்குப் பக்கத்தாலை போய் பினாக்கை குளம் நிரப்பி அப்படியே ஐஞ்சு மதவடிக்குள்ளாலை போய் அராலிக் கடலுக்குள்ளை விழுது, இதைப் பற்றி செங்கையாழியான் என்ற எழுத்தாளர் நடந்தாய் வாழி நீ வழுக்கையாறு என்று கவிதையே எழுதியிருக்கிறார் அந்தளவிற்கு இந்த வெள்ளவாய்க்கால் பிரபலமானது „ என்று சொல்லி முடிச்ச ஞானம்’ நீங்கள் செங்கையாழியானைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறியளா, அவற்றை உண்மையான பெயர் குணராசா அவர் ஜோகிறபியிலை கொனேர்ஸ்’ என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே „ பொறுங்கோ பொறுங்கோ கேள்விப்பட்ட பெயராயிருக்குதே, நான் யூனியன் கொலிஜ்ஜில யோகிறபியும் படிச்சனான் நீங்கள் சொன்னவற்றை புத்தகத்தையும் படிச்ச ஞாபமிருக்கு, அப்ப ஒருநாள் எங்கடை மாஸ்ரர் செங்கையாழியான் என்ற பெயரைச் சொன்னவர்’என்று சொல்லிக் கொண்டிருந்த பாறு „ஐயோ கடவுளே „ என்று ஞானத்திற்கு பின்னால் திடீரேன்று குந்தி இருந்தவள் „சண்டிக்கட்டை அவிழ்த்துவிட்டு கெதிiயில காலை என்னை மறைச்சு அகட்டி வையுங்கோ எல்லாம் போச்சுது „என்று சொல்ல „ அங்கை பாருங்க உங்கடை வழுக்கையாற்றுக்கு அந்தப் பக்கம் ஒராள் தோளிலை மண்வெட்டியை வைச்சபடி சைக்கிளை உருட்டியபடி வாறாரே „ என்று பாறு பதட்டத்துடன் சொல்ல „ ஓம் வாறார்’ அதுக்கேன் நீங்கள் கீழை

இருந்தனீங்கள்…ஓ..அவரைத் தெரியுமே ஒருநாள் எங்கடை தோட்டத்துக்கு குழைதாக்க வந்தவர், நானும் அவருந்தான் குழை தாட்டனாங்கள்’ என்று ஞானம் இயல்பாகச் சொல்ல „ இப்ப யார் குழைதாட்ட கதையைக் கேட்டது அவர் என்ரை மாமா,அம்மாவின்ரை அண்ணை , அவர் என்னைக் கண்டாரென்றால் நான் துலைஞ்சன், போன கிழமை அம்மாவிட்டை வந்து பாறுவை இனி தோட்ட வேலைக்கு அனுப்பாதை அப்பிடி இப்பிடிக் கதை நடக்குது என்று சொன்னவர் போயிட்டாரே புளியடி வைரவரே…அவர் மறையிற வரையும் காலை அகட்டி கைலியாலை மறையுங்கோ’ என்று பாறு பரிதவிக்க’ அவர் ஞானத்துக்கு கையைக் காட்டியபடி போகிறார்.

அப்பொழுது ஞானத்துக்கும் பாறுவுக்கும் நூறுமீற்றர் தூரத்தில் இவர்களுக்கு பின்பக்கமாக பெரிய வரம்பினில் ஏறிய தோட்டத்தில் வேலை செய்து போட்டு போய்க் கொண்டிருந்த புருசனும் பெண்சாதியுமான இருவரில் பெண்சாதிக்காறி „ அங்கை பாரப்பா கூத்தை பொடிப்பிள்ளையர் காலை அகட்டி கைலியாலை மறைக்க அந்தப் பெட்டை வெளிக்கிருக்குது, ஆட்கள் பாக்பகிற இடத்திலை கூச்சநாச்சமில்லாமல் எங்கை கழுவப் போகுதே தெரியாது’ என்று புறுபறுத்தபடி சொல்ல,அதுகள் என்னெண்டாலும் செய்யட்டும் கடைசியிலை காஞ்சோட்டி இலையைப் புடுங்கித்தான் துடைக்குதோ தெரியாது நீ கெதியிலை நட „ என்று புருசன் சொல்லிக் கொண்டே நடக்கிறார்.

„நீங்கள் இனி எழும்புங்கோ உங்கடை மாமா தூரத்துக்குப் போயிட்டார் „ என்று சொல்லிவாறு திரும்பி பாறுவைத் தூக்கி விடுகிறான்.

„நல்ல காலம் தப்பினது புளியடியான்தான் காப்பாற்றினது செக்கல்படப் போகுது வாங்க கெதியிலை போவம் „ என்று பாறு சொல்ல,பாறுவின் இடுப்பில் கையை வளைச்சுப் போட்டபடி அவளுடன் நடந்து போகிறான்.

தோட்ட வேலை செய்தும், குனிந்து கூட்டியும், உரல் இடித்தும் இறுகிப் போன தசைகளின் வாளிப்பைக் கைவிரல்கள் உணர….

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *