இலக்கியச்சோலை

அன்றைய போட்டி!…. எஸ்.ஜெகதீசன்.

கனேடிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் காலகாலமாக பல போட்டி நிகழ்ச்சிகளை போட்டி போட்டு வழங்கி வருகின்றது.

அவை ஒவ்வொன்றிலும் சாமர்த்தியத்துடன் மோதும் தனித்துவமும் இருக்கும்! ஒன்றுக்கொன்று சவாலில்  வேறுபாடு காட்டும் சமயோசிதமும் இருக்கும்!

நேயர்களிடமும் பழக்கமில்லாப் பாவையர் சிந்தும் பாதிப் புன்னகை தந்திடும் பரவசம் இருக்கும்.

1996 ம் ஆண்டுக்கும் 2010 ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் நான் தயாரித்த போட்டி நிகழ்ச்சிகளுக்குள் மிகவும் எளிமையான சாதாரணமான தனித்தனிப் போட்டிகள் பத்திலிருந்து 550 கேள்விகளை அகத்தில் நம்பிக்கையுடன் முதலில் இங்கு தொகுத்துள்ளேன்.

ஏனையவும் முகத்தில் புன்னகையுடன் வருவதற்காக என்னைத் துரத்தும் என்ற கற்பனையுடன்!  

ஜப்பானில் எந்தப் பூ பூக்கும் தினம் தேசிய விடுமுறை தினமாகும்?

பெரும் பாலும் நீர் நிலைகளில் மாலையில் குளித்துவிட்டுத்தான் தன் கூடு திரும்பும் வழக்கம் உள்ள பறவை எது?

படியெடுப்பு முறையில் முதன் முதலாக பிறந்து உலக சாதனை படைத்த செம்மறி ஆட்டுக்குட்டிக்கு என்ன பெயர் ?

ராவணன்ஹதா என்ற வாத்தியம் எந்த நாட்டின் தேசிய இசைக் கருவி?

உலகெங்கும் உள்ள நாணயங்களில் ஆகக் கூடுதலாக எவரது உருவம் உள்ளது?  

மங்கல விழாக்களுக்கு முதன் முதல் சுடப்படும் பலகாரம் எது?

இவ்வாறான கேள்விகள்தான் உள்ளே உள்ளன.

உங்களுக்கு பதில்கள் தெரிந்தவை எனின் கொஞ்சம் சில்மிஷ வார்த்தைகளுடன் அடுத்த நூலில் சந்திப்போம்!

அன்றைய போட்டிகளில் வார்த்தைகளில் சில்மிஷம் எனக்குப் பெரிதும் பிடித்தமானதாக இருந்தது.

சில்மிஷத்தையே வார்த்தைகளாக்குவதில் இளையபாரதிக்கு சுவாரஸியம் கொடையாகவே இருந்தது.

ரம்பாவில் உள்ள மயக்கம் தரும் எழுத்துகள் எவை என்பேன் நான்.

ரம்பாவில் மயக்கும் பகுதி எது என்பார் அவர்.

ருமேனியா நாட்டின் நாணயம் எது என்பது கேள்வி.

காதலியுடன் இருப்பவர்களுக்கு இது தெரியும். மனைவியுடன் இருப்பவர்களுக்கு இது தெரியாது என்பதை இலவச போனஸ் ஆக்குவார் இளையபாரதி .

லியு என்பார்கள் அவரது குசும்பு தெரிந்த நேயர்கள்

துதிக்கையில் வேண்டு என்றால் துதி என்றும் பாடலை இழந்த மதகுரு என்றால் ‘திரி’ என்றும் தாமதமின்றியே பதில் தந்த நேயர்கள் இன்றும் நினைவில் நிலைக்கின்றார்கள்.

இன்றைய நேயர்களுக்கு இவையெல்லாம் புரியுமாஎன்பதே புரியவில்லை!  

திருடா! பனை மரம் தருமாஎன்று இப்போதைய உசாத்துணைகளிடம் கேட்டால் – கள்ளா! என்று சொல்லாமலே அவை மயங்கிவிடும்!

போகத்துக்கு சௌந்தர்யம் எதுஇக் கேள்வி தமிழில் இல்லை என்று கடுமையாக உலுக்கிய தமிழ் அறிஞர்கள் கட்டில் என்ற பதிலை காதுக்குள் கிசுகிசுத்தனர். மழை என எதிர்பார்த்த பதிலுடன் வந்தவர்கள் மாரியாய் மகிழ்வை மனதினுள் பொழிந்தனர்.

உண்மையில் உள்ள கடவுள் எது என்றால் உமை எனவும் எதை விட மனிதம் பெரிது என்றால் மதம் எனவும் கேள்விக்குள்ளே பதிலையும் சதையின் உயிர்த் தோழன் என்றால் நகம் என வினாவிற்கு வெளியே விடையையும் சொன்ன நேயர்கள் எம்முடன் இருந்தார்கள் என்ற நினைப்பே நெஞ்சைப் பெருமிதத்தில் நிரப்பு கின்றது!

இது மட்டுமாஅளக்கலாம்…கேட்கலாம்…எழுதலாம்…வாசிக்கலாம் என கேள்வியே கேட்காமல் அடுக்கிக் கொண்டு போனால் கூட இடையே குறுக்கிட்டு கதை என்றவர்கள் அறிவால் அச்சுறுத்தினர்!

உங்களைப் புரிந்தவர்களுக்கு மட்டும் நல்ல புத்தகமாக இருந்தால் போதும்.

புரியாதவர்களுக்குப் புதிராகவே இருந்துவிடுங்கள்!

அழகென்பது மனதுதானே!

அன்றைய போட்டி கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்க வைக்கும் ஆவணம்!

 கனேடிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்துடனான 25 வருட நிறைவில் மனம் பல வாங்கிய நினைவில் 2021ம் ஆண்டு கனடா விக்டோரியா தினத்தில் (24.05.2021) இந் நூலை வெளியிடுவதில் மகிழ்கின்றேன்!            

இதய நன்றி!

எஸ்.ஜெகதீசன்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button