கதைகள்

நடுகைக்காரி!….தொடர் 19 ….. ( (குறுநாவல் ) ஏலையா க.முருகதாசன்.

புடலைக் கொட்டை நடுவதற்கு பாறுவையும் கூட்டிக் கொண்டு போன ஞானத்தின் நிலை கொஞ்சம் வேறாகத்தான் இருந்தது.

இரத்த நாளங்களில் மதுசாரம் கலந்து ஒரு புதிய மகிழ்ச்சியைக் கொடுத்ததை அவன் உணர்ந்தான்.

பாறு அவனில் இருக்கும் மாற்றத்தை உணர்ந்தாள்.ஆனால் ஞானம் தான் கள்ளுக் குடிச்சதால் நிலைதடுமாறக்கூடாது என்பதில் கவனமாக இருந்தான்.

கொஞ்ச நேரத்திற்கு முந்தி மண்வெட்டியால் குழிக்கான முதல் வேலையாக அளந்தளந்து கொத்திவிட்டிருந்தான்.

முதல் கொத்தின இடத்தில் நின்ற ஞானம் பாறுவிடம்’ இஞ்சை பாருங்கோ இப்படித்தான் குழிசுழிக்கிறது’ என்றவன் குனிஞ்சு வெட்டிய மண்ணைக் கிளறி அதிலிருந்த சின்னச் சின்ன இடப்புக் கட்டிகளை கைகளால் உதிர்த்தியவன் விரல்களால் அந்த மண்ணை வலதும் இடதுமாக சுழிச்சான்.

ஞானம் குழி சுழிப்பதை பார்த்துக் கொண்டிருந்த பாறு „ நானும் சுழிச்சுப் பார்க்கவா’ என்று கேட்க,அவள் எதைக் கேட்கிறாள் என்று தெரிஞ்சும் தெரியாத மாதிரி’ எதை „ என்று ஞானம் கேட்க,’ஓகோ உங்களுக்கு நான் எதைக் கேட்கிறன் என்று விளங்கேலைப் போல’என்றவள், வெட்கத்துடன் „குழியைத்தான்’ என்கிறாள்.

„சரி சுழியுங்கள் „ என்கிறான் ஞானம்.ஆரம்பத்தில் பாறுவால் சரியாக குழிசுழிக்க முடியவில்லையென்றாலும் பழகப்பழக அவளுக்கு அது இலகுவாகிவிட்டது.

ஞானமும் பாறுவும் சேர்ந்து குழிகளை சுழிச்சு முடிக்க வெயில் வெக்கை அதிகமாகியதால் அட்டாளையில் இருவரும் வந்து உட்கார்ந்திருந்தனர்.

„இனி என்ன செய்ய வேண்டும்’ என்று பாறு கேட்க,இனிக் குடத்திலை தண்ணி எடுத்து கைபிடிச்சு வார்க்க

வேணும்.பிறகு கொட்டையை ஊன்ற வேணும் என்று ஞானம் சொன்னான்.

கொட்டையை ஊன்ற வேணும் என்று ஞானம் அழுத்திச் சொன்னதை பாறு இரசிச்சவாறு சிரிக்க’ ஏன் சிரிக்கிறியள்’என்று ஞானம் கேட்க,’ நான் சும்மாதான் சிரிச்சனான்’ எனற்வள் அதையும் சிரிச்சுக் கொண்டே சொன்னாள்.

பாறு தோட்ட வேலைக்கு வந்து கொஞ்ச நாள்தானானாலும் தோட்டக்கார்கள் மத்தியில் கதைக்கப்படும் சிலேடை வார்த்தைகளையும் பரிபாசைகளையும் இரட்டை அர்த்தத்தில் கதைப்பதையும் அவளின் தோழிகள் அவளுக்கு விளங்கப்படுத்தியிருந்தார்கள்

குழிக்கு சுழிக்கிறது கொட்டையை ஊன்றுவது என்பனவும் அவைகளில் உண்டு.தோட்டக்கார்கள் வெயிலிலே வேலை செய்வதால் களைப்புத் தெரியாமல் பகிடிவிட்டுக் கொண்டும் இரட்டை அர்த்தம் உள்ள வார்த்தைகளை பேசிக் கொணடும் கதைச்சுக் கொண்டும் வேலை செய்வார்கள்.

மரவள்ளிக் கட்டையை வெட்டி ஊன்றுவது தோட்ட வேளைகளில் ஒன்று.சக தோட்டக்காரர் மரவள்ளிக் கட்டையை ஊன்றிப் போட்டு மனுசிக்காறியுடன் வருபவரை „ உழவாரத்தால் புல்லைச் செருக்கிக் கொண்டு இருப்பவர்’இன்டைக்கு தோட்டத்திலை என்ன நடந்தது’ என்று கேட்டால் „மரவள்ளிக் கட்டை ஊன்றினனாங்கள் „ என்று ஊன்றியவர் சொல்ல,’ அப்ப கட்டையை மனுசிக்காறியோடு சேர்ந்து ஊன்றிப் போட்டு வாறியளாக்கும்’ என்று சிரிச்சுக் கொண்டே அவர் சொல்ல’அடியொட்ட உழவாரத்தை விட்டுச் செருக்குங்கோ அப்பதான் புல்லு முழுதும் வரும்’ என்பார் மரவள்ளிக் கட்டையை ஊன்றியவர்.இரு தோட்க்காரர்களின் மனுசிமாரும் அதைக் கேட்டுப் பலமாகச் சிரிப்பார்கள்.

ஞானம் தோட்டக்காரர்கள் மத்தியில் புழங்கும் அத்தனை இரட்டை அர்த்தமுள்ள வார்த்தைகளையும், சிலேடை வார்த்தைகளையும் பரிபாசைகளையும் அறிஞ்சு

வைச்சிருந்தாலும் அதனை நண்பர்களுடன் பேசும் போதே அல்லது வேறு எங்குமே பயன்படுத்தியது கிடையாது.

பாறுவை தனது மனைவியாக மனதில் உறுதிப்படுத்திக் கொண்டதால் அவளோடு அவன் பூடாகமாக கதைச்சு மகிழ்ந்தான்.

அட்டாளைக் காலோடு சாய்ஞ்சு இருந்த பாறுவை உற்றுப் பார்த்த ஞானத்தின் பார்வையின் அர்த்தத்தைப் புரிந்து கொண்ட பாறு என்ன என்பது போல பார்க்க’ இன்றைக்கு உங்கடை சொண்டு இரண்டும் முகத்திற்கு இன்னும் வடிவாய் இருக்குது’ என்று சொல்ல,’போதும் போதும் ஏதோ பிளானோடைதான் சொல்றியள் என்று எனக்கும் புரியும் „ என்று அவள் சொல்லி முடிக்கும் முன்பே பாறுவை இழுத்து தன்னோடு அணைத்தவன் தனது சொண்டோடு பாறுவின் சொண்டை இணைக்க பாறுவும் அதற்கு சம்மதம் போல நடந்தாள்.

பாறுவின் கண்களுக்கு யாரோ வருவது போலத் தெரியவே’ விடுங்கள் யாரோ வருகினம் „ என்று ஞானத்தின் அணைப்பிலிருந்து விடுபட பூரணி வருவதைக் கண்டு விடுகிறாள்.கள்ளு மணக்குது என்று ஞானத்திற்கு கேட்குமாறு சொன்னவள் தனது சொண்டுகள் இரண்டையும் துடைச்சுக் கொள்ள பூரணியும் வந்து சேருகிறாள்.

„தண்ணி குடிக்க வந்தனான் „என்று பாறுவைப் பார்த்து புன்னகையுடன் சொல்ல’ இருங்கோ ஐஞ்சு நிமிசித்திலை தேத்தண்ணி வைச்சுத் தாறன் என்ற ஞானம்,கேத்தில் இருந்த அடுப்புக்குள் சுள்ளி விறகுகளை வைத்து நெருப்புத் தணலை ஊதி அடுப்பை எரிய விட்டவன் „நான் போய் தனமக்காவையும் கூட்டிக் கொண்டு வாறன் „ என்ற ஞானம் வெங்காயத்திற்குள் புல்லுப் பிடுங்கிக் கொண்டிருந்த தனத்திடம் போய் கொண்டிருந்தான்.

பாறுவுக்கு கிட்ட உட்கார்ந்த பூரணி „ என்ன பாறு உன்ரை ஆளிலை கள்ளு மணக்குது, எப்ப குடிச்சவர் „ என்று கேட்க பாறு தயங்கித் தயங்கி’ அது நான்தான்…..’ என்று இழுக்க, „நல்ல பிள்ளையை நீதான் பழுதாக்கப் போகிறாய், ஏற்கனவே

சிக்கல் இப்படிப் போனால் இடியப்பச் சிக்கலைவிட பெரிய சிக்கலாகும்’ என்று பூரணி சொல்ல,’ இல்லையக்கா அவர் ஆசைப்பட்டார்….அதுதான் என பாறு சொல்ல,கவனமாயிரு என்று பூரணி சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஞானமும் தனமும் வந்து சேருகின்றனர்.

பாறுவைப் பார்த்த தனம்’ என்ன பாறு பாக்கு வெத்திலை கொண்டு வந்து சப்பினனியோ சொண்டுகள் இரண்டும் நல்லாய்ச் சிவந்து போச்சுது சுண்ணாம்பு கனக்க போட்டிட்டாய் போல’ என்று வேணுமென்றே கள்ளச் சிரிப்புடன் கேட்கிறாள்.

ஞானம் எதுவுமே நடக்காத மாதிரி தேத்தண்ணி போடப் போக பாறு நான் போதடுகிறன் என்று அட்டாளைக்குள்ளால் குனிஞ்சு தண்ணி கொதிச்சுக் கொண்டிருந்த கேத்தலடிக்கு போகும் போது சொண்டுகள் இரண்டையும் அழுத்தித் துடைப்பதை பூரணியும் தனமும் கண்டுவிடுகின்றனர்.

பாறு தேத்தண்ணி போட, ஞானம் காலமை சாப்பிட்டு மிச்சமிருந்த வடைகளை எடுத்து சாப்பிடுமாறு தனத்திற்கும் பூரணிக்கும் குடுக்கிறான்.

தனக்கும் பாறுவுக்கும் ஒவ்வொரு வடையை எடுத்து வைச்சுக் கொண்டு மிகுதி அத்தனையையும் சாப்பிடும்படி பூரணிக்கும் தனத்துக்கும் கொடுத்தவன்’ நல்ல வெயிலாய்யிருக்கு கொஞ்ச நேரம் இஞ்சை இருந்திட்டுப் போய் மிச்சப் புல்லைப் பிடுங்குங்கோ என்று சொல்ல அதற்கு பூரணியும் தனமும் தலையாட்டுகின்றனர்.

காலமை தேத்தண்ணி குடிச்ச மூக்குப் பேணிகளை பாறு கேத்தல் வைச்சிருந்த அடுப்பிலிருந்து சாம்பலை எடுத்து மினுக்கிக் கழுவியிருந்ததால் பேணிகள் பளிச்சென்று இருந்தன.

பாறுவே எல்லாருக்கும் நன்னாரித் தேத்தண்ணியை போட்டுக் குடுக்க வடையையும் சாப்பிட்டு தேத்தண்ணியைக் குடிச்ச பூரணியும் தனமும் அட்டாளைக்கு கீழ் ஓய்வாக இருக்க,ஞானமும் பாறுவும் தேத்தண்ணியைக் குடிச்சு வடையையும் சாப்பிட்டுவிட்டு எழ,ஞானம் முன்னால்

நடக்க தனம் எழுந்த பாறுவின் கையை எட்டிப் பிடிச்சு இழுத்து „கள்ளி அட்டாளைக்குள்ளை என்ன நடந்தது என்று எங்களுக்கும் தெரியும், இதுவே இரவாக இருந்திருக்க வேண்டும் என்னவெல்லாமோ நடந்திருக்கும்,எங்களுக்கும் புருசன்மார் இருக்கினம…ம்….எதோ நடக்கட்டும் ..’ என்று சொல்ல, பாறு வெட்கத்துடன் „அதுக்கு நான் அவசரப்பட மாட்டன்,அவர் தாலி கட்டி பெண்டாட்டியாக்கினதிற்குப் பிறகுதான்…’ என்று சொல்லி கையை விடுவித்த பாறு ஞானத்தை நோக்கிப் போக, திரும்பி வந்த ஞானம் அட்டாளைக்கு கீழிருந்த இரண்டு மண் குடங்களை எடுத்துக் கொண்டு பாறுவையும் கூட்டிக் கொண்டு கிணத்தடிக்குப் போகிறான்.

வாளியால் தண்ணியை அள்ளி குடங்களுக்குள் ஊற்றிக் கொண்டிருக்கும் போது „ உங்களிட்டை ஒன்று கேட்க வேணும்’ என்று ஞானத்தைப் பார்த்து „பாறு சொல்ல, என்ன என்பது போல பாறுவை ஞானம் பார்க்கிறான்…

„நீங்கள் கெதியிலை வேலையொன்றைப் பாருங்கள்.அப்பதான் என்னை உரிமையுள்ள பெண்டாட்டியாக்க முடியும்.உங்கடை சந்தோசத்திற்காகத்தான் சொல்றன்.இப்பிடி எத்தனை நாளைக்கு இரண்டு பேரும் இருக்கிறது…’ என்று பாறு சொல்ல, நான் தெல்லிப்பழை யூனியனில் வேலைக்கு அப்பிளிக்கேசன் போடப் போறன்…யோசிக்க வேண்டாம..கெதியிலை வேலையாகிவிடுவன்…ம் சரி வாருங்கள் குழிக்கு தண்ணி விடுவம்…என்று சொல்லியபடி இரண்டு குடங்களையும் தூக்கினான்.

 

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *