கதைகள்

சிங்கப்பூரில் சிலகாலம்!… 28… (உண்மைக்கதை) ஏலையா க.முருகதாசன்

யோகமலர் தந்த கொழுக்கட்டையை வாய்க்குள் அடைஞ்சு கொஞ்சம் கொஞ்சமாக அதைக் கடிச்சுத் தொண்டை வழியாக உள் இறக்கிக் கொண்டன்.

வேலை செய்து கொண்டே என்னைக் கவனித்த யோகமலர் கண்களால் சாடைகாட்டி அருகில் வரச் சொன்னாள்.அப்பொழுதுதான் அவளின் உச்சி நெற்றியைப் பார்த்தன் அதில் குங்குமம் வைச்சிருந்தாள்.நடு நெற்றியிலும் குங்கமம் வைச்சிருந்தாள்.

அவளுக்கருகில் போய் அவளின் நெற்றியை உற்றுப் பார்க்க „என்ன புருசனாரோ இப்பதான் புதுசா பார்க்கிற மாதிரி பார்க்கிறீங்க ஆமா அப்படி என்னதான் பார்க்கிறீங்க’ என்று கேட்க, „குங்குமத்தை நெற்றி உச்சியிலையும் வைச்சு நடுநெற்றியிலும் வைச்சிருக்கிறியள்…..என்று இழுக்க,’ஆமா நீங்க அம்மன் கோவில்ல அம்மன் சாட்சியா என் நெற்றியில குங்குமம் வைச்சீங்களே அன்னேயிலருந்து இப்பிடித்தான் வைச்சுட்டு வர்றன், நீங்க பார்க்கேலையா’ என அவள் கேட்க,அதைக் கவனிக்கவில்லையேன்று நான் சொன்னால் அவள் ஏதாவது நினைப்பாள் என்று நினைத்த நான் „ நான் சும்மாதான் சொன்னனான்’ என்று சொல்ல,’புருசனாரே நான் உங்களோட பழகின கொஞ்ச நாள்ளேயே உங்களை நல்லாப் புரிஞ்சுகிட்டவள் நான்’ என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே எங்கள் பகுதி வேலைப் பொறுப்பாளர் எங்களை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

எனக்கும் யோகமலருக்கும் கைலாகு தந்தவர்’இன்னும் மூன்று நாட்கள்தானே வேலை செய்வீர்கள் என்பதற்காக வேலையில் ஏனோதானோ என்று இரண்டு பேரும் இருக்கமாட்டியள்தானே’ என்று அவர் சிரிச்சுக் கொண்டே கேட்க „இல்லை நாங்கள் அப்படி இருக்க மாட்டம்,மிகுந்த

அக்கறையுடன்தான் இருப்பம்’ என்று சொன்ன யோகமலர் வியாழக்கிழமை பேர்சனல் மனேஜர் ரானுடன் கதைப்பதற்கு அப்போயிண்ட்மெண்ட் எடுத்துத் தருவீர்களா „ என்ற கேட்டாள்.

„நோ புரபளம் „ என்ற அகமட், வியாழக்கிழமை வேலைக்கு வந்தவுடன் உங்கள் இரண்டு பேரிலை ஒராள் எனக்கு ஞாகப்படுத்துங்கள் „ என்று சொல்லிவிட்டுப் போய்விட’ பேர்சனல் மனேஜருக்கு ஏதாவது ஞாபகார்த்த பரிசு வாங்கிக் குடுப்பமா, அவராலதான் நாங்க ரெண்டு பேரும் ஒரே பக்ரறியில் வேல கிடைச்சு ஒரே வீட்ல ஒண்ணா வாழப் போறம்’ என்றவள், இன்ரேவல் ரைம் என்ன வாங்குவோம்னு யோசிப்பம்’ என்றாள்.

அவளுடன் கதைச்சுக் கொண்டிருக்கும் போதே குவாலிற்றிக் கொன்ரோலர் ஆசா கையைக் காட்டி தான் நிற்கிற இடத்து மிசின் பிழையாக வேலை செய்யுது என்பதைக் காட்ட கைப்பெருவிரலை கீழ்ப்பக்கமாக காட்டினாள்.

அந்த மிசினில் உட்கார்ந்திருந்த மலேய் பெண் என் பக்கம் திரும்பாமலே கையை உயர்த்திக் காட்ட அந்த இடத்தை நோக்கிப் போனன்.

நான் அங்கை போனதும் மிசினுக்கு முன்னால் உட்கார்ந்திருந்த மலேய் பெண் இருக்கையைவிட்டு இறங்கியவள் „பெஸ்ட் விஸஸ்’ என்று கைலாகு தந்தாள்.அவளுக்கு கைலாகு குடுத்துக் கொண்டே என்ன பிழையாக இருக்கும் என்று பார்த்துக் கொண்டே’தாங்யூ..பட் விஸஸ் போர் வட்’ என்றேன்.

அவள் ஒரு கள்ளச் சிரிப்புச் சிரித்துக் கொண்டே „போர் யுவர் சிங்கப்பூர் நியூ லைப் வித் யுவர் லவ்விங் மலேசியன் வைப்’ என்றாள்.

அவளை ஒரு முறை நிமிர்ந்து பார்த்துவிட்டு மிசின் பெடலை அமத்த சிறிய பிரியுள்ள கம்பி போன்ற பாகம் இன்னொரு மடிப்பான பாகத்தில் மத்தியில் ஓட்டை போடாமல் விலத்திப் போட்டது.அப்படி விலத்திப் போட்டால் டிரிப் சுவிட்ச் பாகங்களை ஒருங்கிணைக்க முடியாது.ஆதலால் அதை சரியான இடத்தில் ஓட்டை போடுவதற்கு ஏதுவாக ஒழுங்கு செய்து கொடுத்துவிட்டு இருக்கையைவிட்டு கீழே இறங்க, மலேய் பெண் மிசினின் பெடலை அமத்த ஓட்டை போட்ட பாகங்கள் அதற்கென்று வைக்கப்பட்ட பெட்டிக்குள் விழுந்து கொண்டிருந்தன.

அவற்றிலிருந்து ஐந்தை எடுத்து பரிசோதித்து ஓகே என்று சொன்ன ஆசா „ உங்களுடைய சிறீலங்கா மனைவிக்கு அறிவிச்சிட்டீங்களா மலேசியன் கேர்ளோடை ஒண்ணா ஒரே வீட்டிலை வாழப் போறதென்று’ அவள் கேட்க நான் அமைதியாக நின்றன்.

அவளோ என்னை விட்டபாடில்லை’ இன்னொன்று கேட்க வேணும் மறி பண்ணின கிண்டுப் பெண்கள் இங்கையும் இங்கையும் குங்குமம் வைப்பார்கள் என்று தனது நெற்றி உச்சியிலும் நடுநெற்றியிலும் கைவைச்சுக் காட்டியவள் யோகி வைச்சிருக்கிறாளே உங்கள் இரண்டு பேருக்கும் மறீஜ் முடிஞ்சுதா ஆனா அவள் கழுத்திலை செயினைக் காணவில்லையே „ என்றாள்.

ஆசா செயின் என்று சொன்னது தாலியைத்தான் என விளங்கிக் கொண்ட நான் ஆசா தொடர்ந்து என்னிடமிருந்து எமது அடுத்த நடவடிக்கைகளை அறியாமலிருக்க இந்தக் கதைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக „இனித்தான் கட்டப் போறன் „ என்று சொல்லிக் கொண்டு அந்த இடத்தைவிட்டுப் போக கால் எடுத்து வைக்க „சாய்ச்சிக்குப் போனதும் எனக்கு ரெலிபோன் செய்யுங்க உங்கள் இரண்டு பேரையும் வந்து பார்க்க வேணும் என்னுடைய ரெலிபோன் நம்பர் இருக்குத்தானே „ என்றாள்.

„இருக்குது போனவுடன் அறிவிக்கிறன் „ என்று சொல்லவிட்டுப் போக, கடைக்கண்ணால என்னைப் பார்த்த மற்றப் பெண் ஏதோ மலேய்யில சொல்ல ஆசாவும் தலையை ஆட்டினாள்.

நான் மலேய்க்காரன், சீனாக்காரன் ஆகிய மூவருமே மிசின்களைப் பழுதுபார்க்கும் செற்றப்மென்கள். மலேய்க்காரனும் சீனாக்காரனும் ஐஞ்சு வருசங்களாக வேலை செய்கின்றனர்.அவர்கள் அனுபவசாலிகள்.

சில நாட்களில் எல்லா மிசின்களும் எந்தப் பிழையும் இல்லாமல் வேலை செய்து கொண்டிருக்கும்.ஆனால் சில நாட்களில் ஒன்று மாறி ஒன்று பழுதடைஞ்சு கொண்டேயிருக்கும்.

ஒவ்வொரு செற்றப்மென்னும் ஏழேழு மிசின்களைக் கவனிக்க வேண்டும்.அவரவர்களுக்குரிய மிசின்களை மட்டுமே கவனிப்பதில்லை மற்றைய செற்றப்மென்கள் கவனிக்க வேண்டிய மிசின்களையும் அவர்களுக்கு அதிகமானால் மற்றைய செற்றப்மென்களும் திருத்திக் குடுக்க வேண்டும்.ஒருத்தருக்கொருத்தர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பது வேலையைப் பொறுப்பெடுத்த போது உள்ள ஒப்பந்தத்தில் இருந்த முக்கிய பகுதியாகும்.

இன்னுமொரு முக்கிய விடயம் ஆண் தொழிலாளிகளோ பெண் தொழிலாளிகளோ யாராக இருந்தாலும் வேலை செய்யும் நேரத்தில் கழுத்தில் சங்கிலி போட்டிருக்கக்கூடாது என்பது மட்டுமல்ல பெண்கள் காப்போ அல்லது அழகுக் கயிறுகளையும் கட்டியிருக்கக்கூடாது என்பதுமாகும்.

பாதுகாப்புக்கு முதலிடம் என்பதை வலியுறுத்தி எல்லா இடங்களிலும் அறிவுறுத்தல் ஒட்டப்பட்டிருக்கும். நான் இளந்தாரியாக இருந்த போது போட்டிருந்த வெள்ளிச் சங்கிலியை சிங்கப்பூருக்குப் போன போதும் போட்டுக் கொண்டு போயிருந்தன்.

வேலைக்குப் போன முதல்நாள் எங்கள் அனைவருக்கும் ஜிஇ பக்ரறியில் தொழிலாளிகளின் வேலை என்னஈ வேலை நேரங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்பதற்கான அறிவுறுத்தல் கூட்டம் நடத்தப்பட்டது.

அக்கூட்டத்தில் ஜிஇயின் முகாமையாளரான அமெரிக்கர், பேர்சனல் மனேஜர் ரான்,வேலைத்தள பொறுப்பாளர் அகமட், ரானின் செயலாளர் ஸ்ரெபானி என எல்லோரும் அங்கிருந்தனர்.

முக்கியமாக தொழிலாளர்களின் அசிரத்தையால் எற்படும் ஆபத்துக்களை முகாமையாளர் விளங்கப்படுத்தும் போது ரிவியில் வீடியோவைப் போட்டுக் காண்பித்தார்.

அடுத்த நாள் வேலைக்குப் போகும் போது வெள்ளிச் சங்கிலியை நான் போட்டுக் கொண்டு போனாலும் வேலை துடங்க முந்தி நான் அதைக் கழட்டி காற்சட்டைப் பைக்குள் வைச்சுவிடுவன்.

எனக்கும் யோகமலருக்குமிடையில் அறிமுகம் ஏற்பட்டு அது காதலாகி கணவன் மனைவி என்ற இறுக்கத்திற்கு வந்த போது ஒரு நாள் அவள் முன்னால் எனது கழுத்திலிருந்து சங்கிலியைக் கழட்டிப் காற்சட்iடைப் பைக்குள் வைக்கப் போக அதை வாங்கி „ இனி இது எனக்குங்க திருப்பித் தரமாட்டேனுங்க’என்றவள் தனது கழுத்தில் போடச் சொன்னாள்.

„யாராவது பார்ப்பார்கள் நீங்களே போடுங்கள்’ என்றன்.’ பார்க்கிறவங்க பார்க்கட்டும் போட்டுவிடுங்க „ என்றாள், நான் அவளுக்கு எனது வெள்ளிச் சங்கிலியைப் போட்டவிட்டதைக் கண்ட அவளுடைய தோழிகள் கைதட்டிச் சிரித்தார்கள்.

வேலை துடங்குவதற்கு முன்னர் வெள்ளிச் சங்கிலியை கழட்டி தனது கைப்பைக்குள் வைச்சாள்.பவுன் சங்கிலி

போட்டிருந்தவளின் கழுத்தில் இப்ப அது இல்லை.இப்ப அவளின் கழுத்தில் வெள்ளிச் சங்கிலியே இருந்தது.

மலேய்க்கார பெண்ணின் மிசினைத் திருத்திவிட்டு யோகமலரின் மிசினடிக்குப் போக „புருசனாரோ ஆசா என்னவாம், ஆமா அந்த மலேய்க்காரி கை தந்தாளே எதுக்குங்க தந்தாள் „ என்று கேட்டாள்.

„மலேசியா மனைவியுடன் சிங்கப்பூரில் வாழப் போறதுக்கு வாழ்த்துக்கள்’ என்று கைதந்தவள் „ என்று அவளுக்குப் பதில் சொல்ல, „ஆசா என்ன சொன்னாள்’ என்றாள்.’ நாங்கள் இரண்டு பேரும் சாய்ச்சியில் ஒன்றாய் ஒரு வீட்டில் இருக்கப் போவது சிறீலங்காவில உள்ள என்னுடைய மனைவிக்குத் தெரியுமா’ என்று கேட்டாள்.

„நீங்க என்ன சொன்னீங்க’என்றாள்.நான் ஒண்டும் சொல்லேலை பிறகு அவள் „யோகிக்கு தாலி கட்டேலையா என்றதைச் செயின் போடலையா „ என்று கேட்டாள் „ கட்டப் போறன் „ என்று சொல்லிப் போட்டு வந்திட்டன் , அதை விடுங்க „ என்று நான் சொல்ல,என்னை பார்த்த அவள் முகம் சிவக்கத் தொடங்கியது.கண்கள் இரண்டுக்குள்ளும் கண்ணீர் முட்டியது.

„கண்ணைத் துடைச்சுப் போட்டு வேலையைக் கவனமாகச் செய்யுங்க’ என்று சொல்ல,புறங்கையால் கண்ணீரைத் துடைச்சவள் என்னோட இங்கேயே நில்லுங்க என்றாள்.

நான் எந்த வேலையும் செய்யாமல் நிற்பது எனக்கு ஒரு மாதிரி இருக்கவே தும்புத்தடியை எடுத்து அவளைச் சுற்றியிருந்த இடத்தில் தெறித்து விழுந்த சிறிய டிரிப் சுவிட் பாகங்களையும் புரி வெட்டியபோது கழிவு உலோகம் போய்விழும் பெட்டியைத் தாண்டி விழும் துகள்களையும் கூட்டி அதற்கென்று போடும் பெட்டிக்குள் போடும் போது இன்ரேவலுக்கான மணியடித்தது.

யோகமலர் முட்டை,உருளைக்கிழங்குப் பொரியல்,கரட்டை ஸகிறேப்பிங் செய்து எல்லாவற்றையும் போட்டு சாணட்விச் செய்து கொண்டு வந்திருந்தாள் சாப்பிடச் சுவையாக இருந்தது.

அவளின் கழுத்தில் தாலி கட்ட இன்னும் இரண்டு நாட்களே இருக்கின்றன.தாலிகட்டச் சொல்லி அவள் கேட்டதும் நானும் நடக்கிறது நடக்கட்டும் என்று ஓம் என்று சொல்லிவிட்டன்.அவள் தாலிகட்டச் சொல்லிய காரணம் நியாயமானதாக இருந்ததனாலேயே நானும் அதற்குச் சம்மதிச்சன்.

சாப்பிட்டுக் கொண்டே நான் யோகமலரிடம் „இன்னும் உங்கடை கழுத்திலை தாலி கட்ட இரண்டு நாட்கள் மட்டுமே இருக்கின்றன.நான்தானே தாலி வாங்க வேண்டுமென்று கேட்க, „புருசனாரே தாலியும் தங்கத்தில கொடியும் இன்னைக்கு அப்பாவும் அம்மாவும் வாங்குவாங்க நீங்கள் அதைப்பற்றி யோசிக்காதீங்க, முதல்ல மஞ்சள் கயிறலதான் தாலியை கோர்த்துக் கட்டிறதுன்னு யோசிச்சாங்க அப்புறமாக தங்கத்தில மெல்லிசா கொடி வாங்கிறதென்னு முடிவெடுத்தாங்க’ என்று சொன்னவள், தனது கைப்பைக்குள் இருந்து ஒரு கொழுக்கட்டையை எடுத்து இரண்டாகப் பிய்ச்சு ஒரு பாதியை எனது வாய்க்குள் வைச்சுவிட்டு மற்றப் பாதியை அவள் சாப்பிட்டாள்.

 

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *