கதைகள்

உதிர்ந்த இலைகளும் காய்ந்த சருகுகளும்!… ( சிறுகதை ) …. சங்கர சுப்பிரமணியன்.

சத்பவானந்தா என்ற மிகவும் பிரபலமான
துறவி நாளை நான் பணிபுரியும்
ஆசிரமத்துக்கு வருகிறார். ஆரவாரத்தை விரும்பாதவர் என்பதால் ஒருசிலரை மட்டும் அழைத்திருக்கிறார்கள். நான் அந்த ஆசிரமத்தில் பணிபரிவதால் யாராவது ஒருவரை அழைத்துச் செல்லலாம் வருகிறாயா என்றான் ரமணன் தன் நண்பன் கிருபாவிடம். அதற்கு கிருபா,

“வருகிறேன். பிரபலமானவர் என்றாயே அப்படி என்ன அவரிடம் சிறப்பு?” என்றான்.

“இவர் எல்லோராலும் மிகவும் விரும்பப்படுபவர்”

“துறவி என்றாலே எல்லோரும் விரும்பத்தானே செய்வார்கள்?”

நீ சொல்வது சரி. ஆனால் இவரை எல்லா மதத்தினரும் விரும்புவார்கள். மனதில் பட்டதை ஒழிவு மறைவின்றி சொல்வதோடு அதை யார் மனதும் புண்படாதவாறு கனிவாக சொல்வார். அதனால் அவர் சொல்வதை அறிவுரையாக ஏற்று அதன்படி நடப்பார்கள் என்றான் ரமணன். ரமணின் பேச்சால் தூண்டப்பட்ட கிருபா மறுநாள்
அவனுடன் ஆசிரமம் சென்றான்.

ஆசிரமம் மரங்களும் செடிகளும் நிறைந்த ஒரு சோலைக்கு நடுவே இருந்தது. மலேசியாவில் பினாங்கு பகுதியில் இருக்கும் அந்த ஆசிரம் வேறொரு நாட்டு தேசிய இனத்தால் நடத்தப்படுகிறது. அந்ந சோலைக்குள் நுழைந்தவுடன் எங்கு பார்த்தாலும் அவ்வளவு சுத்தமாக இருந்தது. அந்த ஆசிரமம் மரம் செடி நிறைந்த சோலைக்குள்தான் இருக்கிறதா என்று வியக்கும்படி அவ்வளவு துப்புறவாக இருந்தது.

ஆசிரமத்தினுள் நண்பர் இருவரும் நுழைந்தனர். அங்கு தியானம் செய்யும் இடம்போன்ற பெரிய அறையொன்றில் ஒரு பீடத்தில் சத்பவானந்தர் அமர்ந்திருந்தார். அவர் முன் இருபதுபேர் வரை அமர்ந்திருந்ந்தனர். அவரிடம் அந்த ஆசிரமத்தின் நிர்வாகி அந்த ஆசிரமத்தை பற்றி சொல்லிக் கொண்டிருந்தார்.

இந்த ஆசிரமம் இங்கு இருந்தாலும் இது வேறு நாட்டில் வாழும் தேசிய இனத்துக்கு சொந்தமானது. அங்கு வாழும் எங்கள் இனமக்கள் வெவ்வேறு நாடுகளில் வாழும் எங்கள் இன மக்களைவிட சிறந்தவர்கள் என்றார். இதைக் கவனமாக கேட்டு வந்த துறவி,

“அப்படி உங்கள் நாட்டில் வாழும் உங்கள் இன மக்கள் எந்த வகையில் சிறந்தவர்கள்“ என்றார்.

“எங்கள் நாட்டில் வாழும் மக்கள் குடிப் பழக்கம் இல்லாதவர்கள். கேளிக்கைகளில் நாட்டமில்லாதவர்கள். தனிமனித வழிபாடு, திரைப்பட நடிகர், நடிகை பின் ஓடுவது, கட் அவுட் வைப்பது, பால் ஊற்றுவது போன்ற கேவலமான செயல்கள் எதையும் செய்யமாட்டார்கள்” என்றார்.

இதைக் கேட்ட துறவி மெதுவாக புன்னகைத்தபடியே,

“அதுதான் உங்களைப் போல இந்த சோலையும் செயற்கையாக இருக்கிறது” என்றார்.

அதைக கேட்டு அதிர்ச்சியடைந்த நிர்வாகி
என்ன சொல்கிறீர்கள் சுவாமி? இந்த சோலையை நன்றாக கூட்டிப் பெருக்கி சுத்மாகத்தானே வைத்திருக்கிறோம். செயற்கையாக இருக்கிறது என்கிறீர்களே எனக்கு ஒன்றும் புரியவில்லை என்றார். அதற்கு துறவி சோலை என்பது குப்பை கூளம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இயற்கைக்கு மாறாக ஒரு உதிர்ந்த இலையோ அல்லது மலரோ இன்றி ஒரு காய்ந்ந சருகுகூட இல்லாமல் பாலைவனம் போல் உள்ளதே என்றார்.

துறவி இவ்வாறு கூறக் கேட்டதும் நிர்வாகி அமைதியடைய துறவி மேலும் தொடர்ந்தார். உங்கள் ஊரில் உலகப்புகழ் பெற்ற நடிகர் இருக்கிறாரா என்றார். அதற்க அவர் இல்லை என்றதும் உங்கள் ஊரில் உலகப் புகழ்பெற்ற நடிகர் இருந்து நீங்கள் அவர்கள் செய்வதை எல்லாம் செய்யாவிட்டால்தானே உங்களை சிறப்பானவர்கள் என்று சொல்ல முடியும் என்றவர் வளர்ந்த பெரியநாடான அமெரிக்காவில் மைக்கேல் ஜாக்‌ஷன் என்ற புகழ்பெற்ற பாடகரை கண்டும் காணாமலா இருந்தார்கள் என்றார்.

“உண்மைதான் சுவாமி, தலையில் தூக்கிவைத்து கொண்டாடினார்கள்”

“வியட்னாமில் தலைவர் கோசிமினைக் கொண்டாடியதை தனமனித வழிபாடு என்று கூறுவீர்களா?” என்று கேட்டவர்,

எல்லா மக்களிடையேயும் ஒரு சிறு சதவிகிதத்தினர்  குடிகாரர்களாகவும் தனிமனித வழிபாடு செய்பவர்களாகவும் கேளிக்கைகளில் நாட்டமுள்ளவர்களாகவும் இருப்பார்கள் அதை வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த இனத்தவரையும் குடிகாரர்களாகவும் தனிமனித வழிபாடு செய்பவர்களாகவும் கேளிக்கைகளில் வீழ்ந்து கிடப்பாவர்களாகவும் நினைப்பது ஒரு சருகு கூட இல்லாமலும் ஒரு உதிர்ந்த இலைகூட இல்லாமலும் கூட்டிப் பெருக்கி செயற்கையாக வைத்திருப்பதைப்போல
எம்மவர்கள் வித்தியாசமானவர்கள் என்று கூறவதற்கு ஒப்பாகும் என்றார்.

அவர்களில் இமயம் தொட்டவர்கள்
எல்லாம் உங்கள் கண்களில் தென்படவே மாட்டார்களா? உங்கள் இனமக்களையே வேறுபடுத்தி பார்க்கும் நீங்கள் வேற்றின மக்களை எப்படி பார்ப்பீர்கள்? வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதை என்றும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் யாரையும் தாழ்த்திக் கூறாத உயர் பண்பு உங்கள் வசப்படும் என்று கூறி முடிக்கவும் துறவி சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை என்பதை உணர்ந்து அதை ஆமோதிப்பது போல் தலையாட்டிய நிர்வாகி வெட்கித் தலகுனிந்தார்.

இதையெல்லாம் கவனித்து வந்த கிருபா தன் நண்பனிடம் உண்மையிலேயே
இவர் நற்பண்புள்ள துறவிதான் தன்னை அழைத்தவர்களிடமே அவர்களது குறையை பக்குவமாக கூறி ஒப்புக்கொள்ள வைத்துவிட்டாரே என்றான். நானும் இனி வெவ்வேறு நாடுகளில் வாழும் நம் தேசிய இனத்தை அவதூறு செய்ய மாட்டேன் என்றவன் மற்றவர்களுடன் இணைந்து தியானத்தில் சங்கமமானான்.

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *