கதைகள்

பெருமையும் தற்பெருமையும்!… சங்கர சுப்பிரமணியன்.

கடையம் காமராஜர் மேல்நிலைப்
பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறான் நாகராஜன். நன்றாகப் படிக்கும் துடிப்பான இளைஞன். அவனது பெற்றோர்களும் தன் பிள்ளையை மிகவும் ஒழுக்கமாக வளர்த்து வந்தார்கள். நாகராஜன் வகுப்பில் தமிழ்ப் பாடம்
எடுத்துக் கொண்டிருந்தார் தமிழாசிரியர் சேதுபதி.

மாணவர்களே நாளை நாம் வகுப்பில்
பார்க்கப்போவது பெருமை மற்றும் தற்பெருமை என்பவற்றைப் பற்றி. இதை நான் உங்களுடன் பாடம் நடத்தும் முன்பாக அதைப்பற்றி நீங்களும் உங்கள் பெற்றோருடன் கலந்து அதன் பொருள்பற்றி என்னவென்று அறிந்து வாருங்கள் என்று சொல்லியனுப்பினார்.

பள்ளி முடிந்து வீடுவந்த நாகராஜன் அப்பா அலுவலகத்திலிருந்து வரும் நேரத்தை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்தான். மாலை ஆறு மணியிருக்கும் வங்கியில் இருந்து வந்தார் தந்தை தனபால். வந்தவரை வாசலிலேயே வழிமறித்த நாகராஜன்,

“அப்பா, இன்று தமிழாசிரியர் பெற்றோரிடம் சிலவற்றைக் கேட்டறிந்து வரும்படி சொன்னார்” என்றான்.

நாகராஜனின் பேச்சு சத்தம்கேட்டு அடுக்களையில் இருந்து வெளிப்பட்ட அவன் அம்மா,

“ஏண்டா நாகு, அப்பா இப்பத்தான் அலுத்து களைத்து வந்திருக்கிறார் வந்தவர் காபி குடித்துவிட்டு சிறிது ஓய்வெடுக்கட்டுமே. அப்புறம் உன் படிப்பையெல்லாம் வைத்துக் கொள்ளக்கூடாதா?” என்றாள்.

“சரி விடு. படிப்பின் மீதுகொண்ட ஆர்வத்தில்தானே கேட்கிறான்” என்று மனைவியை சமாதானப் படுத்தியபடி மகனை நோக்கி கேள் என்றார்.

“அப்பா பெருமைக்கும் தற்பெருமைக்கும் வித்தியாசம் என்ன?”

“பெருமை என்றால் மற்றவர்கள் நம் சிறப்பைப் பற்றி சொல்லும்போது அதை எண்ணி பெருமிதம்அடைவது. தற்பெருமை என்றால் தானாகவே தன்னிடம் ஒரு சிறப்பு இருப்பதாக எண்ணிக்கொண்டு மற்றவர்களிடம் அதைப்பற்றி தம்பட்டம் அடிப்பது”

“நன்றி அப்பா” என்ற நாகராஜன் அப்பாவுக்கு நன்றியை தெரிவுத்துவிட்டு அங்கிருந்து அகன்றான்.

மறுநாள் தமிழாசிரியர் வகுப்பில் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். சில மாணவர்களிடம் பெருமை தற்பெருமைபற்று விளக்கம் கேட்டபடியே
நாகராஜனிடமும் வந்தவர் விளக்கம் கேட்டார். அதற்கு நாகராஜன்,

“திருக்குறள் தமிழரின் சொத்து என்று மற்றவர்கள் நம்மிடம் சொல்லும்போது அதைக்கேட்டு நாம் அடைவது பெருமை. அதை  திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் எங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்று நாமே மற்றவர்களிடம் தம்பட்டமடித்தால் அது தற்பெருமை” என்றான்.

அதைக்கேட் ட தமிழாசிரியர் அகம்
மகிழ்ந்து அவனை அருகில் அழைத்து
அவன் முதுகில் தட்டிக் கொடுத்தார். நல்ல வளர்ப்பு, இச்சிறுதிலேயே இவ்வளவு பரந்ந மனப்பான்மையுடன் இருக்கிறாயே. நீ வளர்ந்து வரும் கலத்தில் உன்மூலம் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற கணியன் பூங்குன்றனார் இன்னும் நம்மிடையே வாழ்ந்து வருகிறார் என்பதை எண்ணி தமிழினம் பெருமிதம் அடையுமென்றார்.

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button