முற்பிறவி!… ( சிறுகதை ) …. சங்கர சுப்பிரமணியன்.


மறுபிறவி இருக்கிறது என்கிறார்கள் பெரும்பாலானவர்கள். சிலர் பிறப்பு இறப்பு என்பது எல்லாம் இன்பம் துன்பம் போன்று இயற்கையின் நியதி என்கிறார்கள். இன்னும் சிலர் மறுபிறவியாவது மண்ணாங்கட்டியாவது? என்கிறார்கள். ஆடு, மாடு, பறவைகள் மற்றும் எல்லா உயிரினங்களும் இனவிருத்தி செய்வது போல் மனிதனும் இனவிருத்தி செய்வது ஒரு நிகழ்வு என்கிறார்கள்.
மேல் நாட்டு பண்பாட்டில் நம்மவர்களுக்கு அவ்வளவு ஓர் அலாதியான விருப்பம். அவர்கள் போல் உடை உடுத்துவது உணவு உண்பது விருந்தோம்பல் இல்லாவிட்டாலும் விருந்தோம்பல் மாதிரி காட்டிக் கொள்வது. அது என்ன விருத்தோம்பல் மாதிரி காட்டிக் கொள்வது? குழம்பவேண்டாம். ஒன்றுகூடல் அதாவது தமிழில் சொன்னால் கெட் டுகதர்.
இதற்கு ரோமில் இருந்தால் ரோமானியர்களைப்போல இருக்க வேண்டும் என்று சப்பைக்கட்டு நன்றாக துணை போகிறது. அதுசரி ஆண்கள் வேட்டியை கட்டிக் கொண்டோ பெண்கள் புடவை கட்டிக் கொண்டோ வெளி நாடுகளில் வாழ்பவர்கள் பணிக்கு செல்லமுடியுமா? எமது மதவழக்கம் என்று பட்டை போட்டுக் கொண்டோ நாமம் போட்டுக்கொண்டோ பணி இடங்களில் பவணி வரமுடியுமா? அதுபோல்தான் இதுவும்.
இப்படி மேல் நாட்டுப் பண்பாட்டின்படி குகநாதன் வீட்டு ஒன்றுகூடலில் ஆறு குடும்பங்கள் கலந்து கொண்டன. அதற்காக இந்த ஆறுகுடும்பங்களும் சீனா, ஜெர்மணி, ஸ்பெயின், ஜப்பான் போன்ற நாடுகளில் இருந்து வந்த குடும்பங்கள்
அல்ல. நியூ பாட்டிலில் ஓல்டு ஒயின்தான். அதாவது கூடுவாஞ்சேரியிலம் கும்பிடிப்பூண்டியிலும் காரியாபட்டியிலும் காட்டுமன்னாநல்லூரிலும் இருந்து வந்தவர்களே அவர்கள். பெயரில் தான் ஒன்று கூடல் ஆனால் பேசுவது மட்டும் மேல் நாட்டு அரசியல் அல்ல. பல வீடுகளில் இருந்து வந்த பலதரப்பட்ட உணவுகளை தட்டில் போட்டுக் கொண்டே நந்தகுமார்,
“கோபாலா, தமிழ் நாட்டுத் தேர்தலில் எந்த கட்சி ஆட்சிக்கு வரும்? என்றார்.
“நந்து, இந்து ராம் சொன்னதைக் கேட்டாயா? தி. மு. க. தான் அமோக வெற்றி பெறுமாம்?”
“என்னப்பா இது? இவர்கள் லஞ்சத்தில் கொடிகட்டிப் பறக்கிறார்கள் என்றுதான் மாற்று அரசியல் கேட்டோம். லஞ்சத்தைப் போக்க மறபடியும் லஞ்சமா? என்றார் முனிசாமி.
“அது அப்படித்தான் முனி, நஞ்சுக்கு மருந்து நஞ்சுதான் என்ற உண்மையை நம் மக்கள் உணராத அளவுக்கு இருப்பவர்களா என்ன?” என்று பதில் சொன்னார் பக்கிரிசாமி.
இப்படியாக ஒன்று கூடல் உற்சாகத்தில் கரை புரண்டோடிக் கொண்டிருக்க “ஊரான் விட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே” என்ற பழமொழி பழுதாகி விடாமல் ஒன்றுகூடலை ஒழுங்குபடுத்திய மோகனசுந்தரம் எல்லோரையும் உபசரித்துக் கொண்டிருந்தார். அப்படியே
தனபாலனிடம் வந்து உணவெல்லாம் எப்படி இருக்கிறது என்று கேட்க,
“பிறவிகளில் எனக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும் முந்தைய பிறவி இருக்குமோ என்று சந்தேகம் வருகிறது”
“என்ன தனபாலு, இப்படி அந்தர் பல்டி அடிக்கிற?”
“இல்லப்பா, எவ்வளவு வசதி வாய்ப்பு இருந்தாலும் இப்படி பிச்சைக்காரன் ஆகிவிட்டேனே”
“தனபாலு என்ன சொல்ற? நீ எப்ப பிச்சைக்காரன் ஆனாய்?” என்று கேட்டான் மோகனசுந்தரம்.
சொல்கிறேன் மோகன். பிச்சைக்காரர்களுக்கு மட்டுமே பல வீடுகளில் இருந்து பலவிதமான உணவு கிடைக்கும். ஆதலால் வசதி இருந்தும் இப்படி பல வீட்டு சாப்பாட்டை பிச்சைக்காரன்போல் சாப்பிடுவது முந்தைய பிறவி என்று ஒன்று இருந்திருக்குமோ என்று சந்தேகப் படவைக்கிறது என்றான். மோகனசுந்தரமோ ஒன்று கூடல் ஏற்பாடு செய்யப்போய் இவன் எல்லோரையும் பிச்சைக்காரன் ஆக்கிவிட்டானே என்று அதிர்ந்து போனதோடல்லாமல் நம் பண்பாட்டின்படி விருந்தோம்பல் செய்திருக்கலாமோ என்றும் யோசித்தான்.
-சங்கர சுப்பிரமணியன்.
![]()