கவிதைகள்
ஆண்டவன் அழகு அனுதினம் தெரியும்!… ( கவிதை ) …. கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா

நிலத்தின் இயல்பு நீரில் தெரியும்
குணத்தின் இயல்பு செயலில் புரியும்
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
ஆளுமை அளவு அறிவினைக் காட்டும் !
கண்ணின் அழகு கருணையில் தெரியும்
பெண்ணின் அழகு அடக்கத்தில் தெரியும்
மண்ணின் அழகு வளத்தினில் தெரியும்
வாழ்வின் அழகு வாழ்வதால் தெரியும் !…. 
சொல்லின் அழகு சுவையினில் தெரியும்
சுகத்தின் அழகு நலத்தினில் தெரியும்
வெல்லும் அழகு விவேகத்தில் தெரியும்
விடையின் அழகு மதியினால் தெரியும் !
பொறுமையின் அழகு உயர்வினால் தெரியும்
போதனை அழகு விடிவினால் தெரியும்
அறிவுடை அழகு அனைவர்க்குந் தெரியும்
ஆண்டவன் அழகு அனுதினம் தெரியும் !
![]()