கதைகள்

நடுகைக்காரி!…. தொடர் 14….. (குறுநாவல் ) ……. ஏலையா க.முருகதாசன்.

தொடர் 14.

படலையடியில் கும்மிருட்டில் ஞானத்துடன் கதைச்சுப் போட்டு வந்த பாறுவை விறாந்தையில் நின்று தாய் „இவ்வளவு நேரமும் அப்படி என்ன அந்தத் தம்பியோடை கதைச்சனி’ என்றவள் தற்செயலாக அவளைப் பார்க்கையில் அவளுடைய இரண்டு சொண்டுகளும் சிவந்திருந்ததைக் கண்ட பாறுவின் தாய் செல்லாச்சியின் மனதில் குழப்பகரமான எண்ணங்கள் ஓட,’ ஏன் சொண்டுகள் இரண்டும் சிவந்திருக்கு’ என்று தாய் கேட்டதும் பாறுவுக்கு பகீர் என்றது.

„அது அம்மா இருட்டிலை பூச்சியொன்று பறந்து வந்து சொண்டைக் கடிக்க அதைதட்டிவிட்டு சொண்டைக் கசக்கியதால் சிவந்து போயிட்டுதாக்கும்’ என்றவள் தாயைக் கடைக்கண்ணால் பார்த்தபடியே அறைக்குள் போனவள் கதவடியில் நின்று படிப்பைப் பற்றியும் ஒழுங்கையைக் கூட்டுவதுபற்றியும் நாளைக்குத் தோட்ட வேலைக்கு வரச் சொல்லியுந்தான் கதைச்சவர், கல்விதான் முக்கியம் என்றவர்’என்று பொய் சொன்னாள் பார்வதி.

பாறுவின் தாய் ஏதோ சொல்ல வாயெடுக்க,பாறுவின் தகப்பனும் தம்பியாரும் வருவதைக் கண்டதும் சொல்ல வந்ததை சொல்லாமல் விட்டுவிடுகிறாள்.

„அம்மா இந்தாம்மா கோவில் புக்கையும் வடையும்’ என்று பாறுவின் தம்பியார் தாய் செல்லாச்சியிடம் அவற்றைக் கொடுக்க, அதை வாங்கிய செல்லாச்சி „நீங்கள் இரண்டு பேரும் கோவிலுக்கா போனனீங்கள்,நீங்கள் கடைக்குத்தானே போறன் என்றுதானே சொல்லிப் போட்டுத்தானே போனனீங்கள்….’ என்று செல்லாச்சி சொல்லிக் கொணடிருக்க’ கடைக்குப் போயிட்டு வரேக்கிலை புளியடி வைரவர் கோவிலில் எங்கடை சுப்புத்தம்பியும் பெண்சாதி பிள்ளைகளும் பொங்கிக் கொண்டிருந்தினம், என்னைக் கண்டதும் தவசியண்ணை வாருங்கோ பொங்கிறம், பொங்கி முடிஞ்சதும் வைரவரைக் கும்பிட்டு புக்கையைக் கொண்டு போய் வீட்டிலை குடுங்கள் என்று சொன்னான், அவையின்ரை பிள்ளைக்கு நெருப்புக் காய்ச்சல் வந்ததாம், அதுக்கு நேத்தி வைச்சு பொங்குவதாகச் சொன்னான். அதுதான் நேத்திப் பொங்கல் என்று சொன்னதாலை மறுக்கக்கூடாது என்று அங்கை நின்றிட்டன்’ என்று தவசி சொல்ல’ இவனைக் காணேலை என்று யோசிச்சுக் கொண்டிருந்தனான்,இவன் எங்கையும் போகமாட்டான் செல்வராசாவின் வீட்டிலைதான் நிற்பான் வந்திடுவான் என்று நினைச்சுக் கொண்டிருக்க இவன் உங்களோடை வாறான் இவனும் கோவிலுக்கு வந்தவனா’ என்று செல்லாச்சி

கேட்க ‘நான் கோவில்லையிருந்து வரேக்கை இவன் செல்வராசா வீட்டிலையிருந்து நடந்து வந்து கொண்டிருந்தான், நான் சைக்கிளிலை ஏற்றிக் கொண்டு வந்தனான் „ என்று சொன்ன தவசி,பாறு கதவடியில் நின்று பேசுவதை கவனித்துக் கொண்டிருப்பதைக் கண்டதும் பாறுவை தகப்பன் உற்றுக் கவனித்ததைக் கண்டதும் பாறு பதட்டமடைந்தாள்.

தானும் ஞானமும் புளியடி வைரவர் கோவிலடியால் கதைச்சுக் கொண்டு வந்ததை சுப்புத்தம்பி கவனிச்சிருப்பாரோ இல்லாட்டில் அப்பாதான் அங்கு நின்றிருப்பாரோ, தானும் ஞானமும் அருகருகாக கதைச்சுக் கொண்டு வந்ததை அப்பா கண்டிருப்பாரோ அதனால்தானோ அப்பா கூர்ந்து குறிப்பாக பார்க்கிறாராக்கும் என்றெண்ணிப் பயந்தாள்.

காதலனுடனோ காதலியுடனோ இருக்கும் போதோ கதைச்சக் கொண்டு நடக்கும் போதோ அந்த இனிய உணர்வுகளின் சங்கமத்தில் எல்லாவற்றையும் மறந்துவிடும் நிலை காதலர்களுக்கு உண்டு.அக்கம் பக்கத்தில் யார் இருக்கிறார்கள் என்று கவனிப்பதுமில்லை கவலைப்படுவதுமில்லை.அது காதலுக்கு உள்ள சக்தி.

இரவுச் சாப்பாடடுக்கு நேரமாகிவிட்டதால் பாறுவின் தாய் எல்லாரும் சாப்பிட வாங்கோ எனக் கூப்பிட தகப்பனும்,பாறுவும், பாறுவின் தம்பியும் பந்தியாக இறக்கியிருந்த அடுப்படிக்குள் நுழைந்தனர்.

பாறு பொதுவாக அடுப்படிக்குள் நுழையும் போதே „ அம்மா என்னம்மா இரவுக்கு சமைச்சனி „ என்று கேட்பாள்.இன்று எதையுமே கேட்காமல் அமைதியாக அடுப்படிக்குள் நுழைந்ததைக் கண்ட தாயும் தகப்பனும் யோசிக்கத் தொடங்கினர்.

கும்மிருட்டில் நின்று ஞானத்துடன் கதைச்சுப் போட்டு வருகையில் பாறுவின் சொண்டுகள் இரண்டும் சிவந்திருந்தும், ஏன் சொண்டுகள் சிவந்திருக்கு என்று தாய் கேட்ட போது பறக்கிற பூச்சி சொண்டிலை கடிச்சதால் நான் சொண்டைக் கசக்க சொண்டு சிவந்து போய்ச்சுதாக்கும் என்று ஞானம் பாறுவை இறுக்கி அணைச்சு சொண்டோடு சொண்டு சேர்த்து முத்தமிட்டதை மூடிமறைச்சுச் சொன்னதை தாய் முழுமையாக நம்பவில்லை.

அடுப்படிக்குள் நுழைஞ்சவர்கள் ஏற்கனவே சப்பாணி கட்டிக் கொண்டிருப்பதற்காக அகலம் குறைஞ்ச நீளமான பாயொன்றை தாய் இழைச்சு வைச்சிருந்ததால்,அதை விரிச்சுப் போட்டு அதில் உட்கார்ந்தார்கள்.அன்று வெள்ளிக்கிழமையாதலால் வாழையிலையிலேயே அவர்கள் சாப்பிடத் தொடங்கினார்கள்.

இரவுச் சாப்பாட்டுக்கு பாறுவின் தாய் இடியப்பமும் அவிச்சு சொதியும் வைச்சிருந்தாள்.மத்தியானம் முருக்கங்காயும் பிலாக்கொட்டையும் போட்டு ஒரு கறியும், பட்டர் போஞ்சியும் கரட்டும் போட்டு ஒரு வெள்ளைக்கறியும் வைச்சிருந்தாள்.

நால்வரும் ஒரே வரிசையில் உட்கார இடியப்பம் சொதி கறியளை எல்லாரும் எடுத்துப் போட்டுச் சாப்பிடக்கூடிய தூரத்தில் தாய் வைச்சிருந்தாள்.

தனக்குப் பக்கத்தில் இருந்த மகளின் சொண்டுகளை பார்க்க,பாறு சொண்டுகள் இரண்டையும் வாய்க்குள் மடிச்சவள் தாயைக் கடைக்கண்ணால் பார்த்துவிட்டு இடியப்பத்தை சொதியுடன் குழைச்சு சொண்டில் இடியப்பத் துகள்கள் படத்தக்கதாக வாய்க்குள் வைச்சதைக் கண்ட தாய் இவள் அழகாக சாப்பாடு சொண்டிலே ஒட்டாத மாதிரிச் சாப்பிடுபவளாச்சே பார்க்க அசிங்கமாகச் சாப்பிடுகிறாளே கும்மிருட்டில் ஏதோ நடந்திருக்கு என்றெண்ணியவள் அமைதியாகச் சாப்பிடத் தொடங்கினாள்.

புளியடி வைரவர் கோவிலிலிருந்து சுப்புத்தம்பி குடுத்துவிட்ட வடை புக்கை எல்லாவற்றையும் தாய் எல்லர்ருக்கும் பகிர்ந்து போட்டாள்.

அமைதியாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்த பாறுவின் தகப்பன்’ பிள்ளை நீ தொடர்ந்து அம்பனைத் தோட்ட வேலைக்குப் போகத்தான் வேணுமா,நாங்கள் போகச் சொல்லேலை,உனக்கு பொழுது போகேலை என்று நீதான் போகிறாய், சும்மா கேட்டனான் „என்கிறார்.அவர் கேட்டதும் பாறுவுக்கு புரைக்கேற, தாய் அவளின் தலையில் தட்டிவிட்டு தண்ணியைக் குடிக்கச் சொல்கிறாள்.

தண்ணியைக் குடிச்சு முடிச்சதும்’ வீட்டிலை இருக்க விசராய் இருக்குதப்பா, இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான் போவன் பிறகு போகமாட்டன் பிரைவேட்டாக எஸ்.எஸ்.சி எடுக்கப் போறன் அண்டைக்குச் சொன்னனான்தானே.வீட்டிலை இருந்து படிக்க வேணும், அப்ப சில வேளைதான் தோட்ட வேலைக்குப் போவன், ஞானம் இஞ்சை வந்து ரியூசன் தாறதாகச் சொன்னவர் „ பாறு தயங்கித் தயங்கிச் சொல்ல „ம் கவனமான இருந்தால் சரி’ என்று சொன்ன தகப்பன் அதற்கு மேல் எதுவும் சொல்லவில்லை.

சாப்பிட்டு முடிச்ச பாறுவும் தம்பியாரும் முற்றத்திலை கையைக் கழுவிப் போட்டு பாறு அறைக்குள் போக, தம்பியார் புத்தகங்களை ஒழுங்காக மேசையில் அடுக்கிக் கொண்டிருந்தான்.அடுக்கிக் கொண்டே’அக்கா இங்கிலீஸ் சொல்லித் தாறியா’என்று பாறுவைக் கேட்க, „நாளைக்குச் சனிக்கிழமைதானே நாளைக்குச் சொல்லித் தாறன், எனக்கு ஒரே அலுப்பாக இருக்குது என்றவள் பாயை விரிச்சுப் போட்டு,அதில் உட்கார்ந்து சுவரோடு சாய்ஞ்சு யோசிச்சுக் கொணடிருந்தாள்

வழமையாக இரவுச் சாப்பாடு சாப்பிட முந்தி தவசி ஒரு கிளாஸ் கள்ளுக் குடிப்பவர்.அன்று வெள்ளிக்கிழமையும் கோவிலுக்குப் போய் வந்ததாலும் அவர் கள்ளுக் குடிக்கவில்லை.சாப்பிட்டு முடிஞ்சதும் தகப்பனும் தாயும் வெற்றிலை பாக்குப் போட்டபடி விறாந்தைக் கதிரையிலிருந்து பிள்ளைகளுடன் கொஞ்ச நேரம் கதைச்சுக் கொண்டிருப்பினம். அதுவும் அன்று நடக்கவில்லை.

தவசி சாப்பிட்டு முடிஞ்சதும் முற்றத்திலை கையைக் கழுவியவர் வெற்றிலை பாக்குத் தட்டத்துடன் மீண்டும் அடுப்படிக்குள் நுழைய புருசன் அடுப்படிக்குள்

வந்ததைக் கண்ட செல்லாச்சி ஏதோ என்னோடு கதைக்கத்தான் வருகிறார் என எண்ணிக் கொண்டவள் அடுப்படிக்குள் எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தி வைச்சபடியே கணவனை நிமிர்ந்து பார்க்கிறாள்.

அடுப்படிக்குள் அரைமண்சுவரில் சாய்ந்தபடியே பாக்குத்தட்டத்தை எடுத்து அதிலிருந்து கொட்டைப் பாக்கை பாக்குவெட்டியால் சீவியபடி „பிள்ளை பாறு எத்தனை மணிக்கு வீட்டுக்கு „வந்தவள் என்று கேட்க, „ஒரு ஐஞ்சு மணியிருக்கும் அந்த ஞானம் தம்பிதான் கூட்டிக் கொண்டு வந்து விட்டவர்.எதுவும் பார்க்காமல் கட்டாயப்படுத்தி தேத்தண்ணி வாங்கிக் குடிச்சவர், இந்தக் காலத்திலை இப்படியொரு பிள்ளையைப் பார்க்க முடியாது’ என்று சொல்லிக் கொண்டிருக்க’ பிள்ளை பாறு சொன்னாளா தோட்ட வேலை முடிஞ்சு நேரை இங்கைதான் வாறனெண்டு’ என்று தவசி கேட்க,’ஓம் அப்படித்தான் சொன்னவள்’ என்ற செல்லாச்சி, „ஏன் என்ன பிரச்சினை…….’ என்று கொஞ்சப் பயத்துடன் செல்லாச்சி புருசனைக் கேட்க, „அந்தத் தம்பியையும் பிள்ளை பாறுவையும் அம்பனை றோட்டிலை இருந்து வந்து தெல்லிப்பழைச் சந்தியிலை வடக்குப் பக்கமாக திரும்பி இருவரும் ஆனந்தா பேக்கறிக்குள் போய்விட்டு கன நேரத்திற்குப் பிறகு திரும்பி வந்ததாக கார் டிரைவர் இரத்தினம், கடைக்குப் போன என்னை மறிச்சுச் சொன்னவர்,பிறகு புளியடி வைரவர் கோவிலடியாலை அவை இரண்டு பேரும் நடந்து வந்ததை கோவில் வளவுக்குள் நின்ற சுப்புத்தம்பியும் கண்டவராம் என்று சொல்லி முடிச்சார் புருசன்.

பாறுவின் தாய் செல்லாச்சிக்கு மனதில் பல எண்ணங்கள் ஓடின.பாறு பொய் சொன்னதுடன் ஞானத்தை அனுப்பிவிட்டு வந்த பாறுவின் சொண்டுகள் சிவந்திருந்தமையும் அவளுக்கு அச்சத்தை ஊட்டியது.

„எதுக்கும் பாறுவைக் கவனமாக இருக்கச் சொல்லு நாங்கள் யார் என்று அவளுக்குத் தெரியும்.இது விளையாட்டான விசயமல்ல.தம்முடைய உண்மையான குணத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இ.ருப்பவர்களின் உண்மையான குணத்தை இறுதியில் காட்டுபவர்களும் உண்டு’.

„ஞானம் எங்களுடன் பழகுவதை வைச்சு அவனை நல்லவனா கெட்டவனா என்று அறிய முடியாது’ என்று சொன்னவர் சரி நான் படுக்கப் போகிறன் பாறுவோடை கதை என்றவர், கள்ளை வெளியிலை ஊத்திவிடு என்று புருசன் சொன்னதும் „ அதை நான் சோடாப் போத்தலிலை வார்த்து அந்தத் தம்பியிட்டை குடுக்கச் சொல்லி பாறுவிட்டை குடுத்தனான்’ என்று செல்லாச்சி சொல்லி முடிக்க முந்தி உனக்கென்ன விசரே வீட்டுக்கு வந்தவரிடம் யாராவது கள்ளுக் குடிக்கக் குடுப்பினமா„ என்று புருசன் கேட்க,’இல்லை அந்தத் தம்பி ஞானந்தான் கள்ளுக்குடிக்க ஆசையாயிருக்கென்று பாறுவிட்டை சொல்லிக் கொண்டிருந்ததை நான் கேட்டுக் கொண்டிருந்தனான் „ என்று செல்லாச்சி இழுக்க,’பார் கெதியிலை தன்ரை பிள்ளைக்கு குடியைப் பழக்கினது என்று ஞானத்தின்ரை தாய் தகப்பன் கதைக்கப் போயினம்„ என்று கோபத்துடன் புறுபுறுத்தபடி தவசி எழுந்து போகிறார்.

தவசி போனதன் பின், பாறு படுத்திருந்த அறைக்குள் நுழைந்த தாய் அங்கை பாறு நித்திரை கொள்ளாமல் மேலே பார்த்தபடி இருந்ததைக் கண்டு அவள் பக்கத்தில் உட்காருகிறாள்.

மகளை கூறுகுறிப்பாகப் பார்த்த தாய் „நீ எனக்கு அம்பனை தோட்த்திலையிருந்து நேரை இஞ்சை வீட்டுக்கு வந்தனான் என்றுதான் சொன்னனி, ஆனால் நீயும் ஞானம் தம்பியும் ஆனந்த பேக்கறிக்குள்ளை போனதாக கொப்பாவுக்கு கார்க்கார இரத்தினம் சொல்லியிருக்கிறார், ஏன் பேக்கறிக்கு போனனீங்கள் „ என்று தாய் கேட்டதும், இனி மூடிமறைக்க முடியாதென பாறு’ ஞானம் அம்பனைச் சந்தி ரியூட்டோரியில்,அங்கையொரு மாஸ்டரிட்டை சிங்களம் படிக்கிறவர், அது போதாதென்று,ஆனந்தா பேக்கறி முதலாளியிட்டை கேட்டவர் அவரும் சொல்லித்தாறன் என்று வரச் சொன்னவர்’

„இப்ப முதலாளியின்ரை மகள் அவையின்ரை ஊரான பாணந்துறையிலையிருந்து வந்திருக்கிறதால முதலாளியின் மகள் சிங்களம் சொல்லிக் குடுக்கிறன் என்று சொன்னவாவாம், அப்ப ஞானம் சொன்னார் இண்டைக்கு அங்கை போறணென்டு,நான் கேட்டன் நானும் வந்து பார்க்கலாமோவென்று, அதுதானம்மா சிங்களத்தை எப்படி உச்சரிக்கிறதெண்டு பார்க்க ஆசைப்பட்டுப் போனனான், வேறையொன்றுமில்லை’என்று பாறு சொல்லி முடிச்சாள்.

 

ஆனால்…..

 

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *