கதைகள்

சிங்கப்பூரில் சிலகாலம்!…. 24 …. (உண்மைக் கதை) ….. ஏலையா க.முருகதாசன்

யோகமலரை அவள் இவள் என்று மச்சாளின் மகள் கதைத்தது எனக்குப் பிடிக்கவில்லை.மச்சாளின் மகளின் பக்கம் முகத்தைத் திருப்பாமலே „யாராக இருந்தாலும் அவள் இவள் என்று கதைக்கிறது நல்லதில்லை மரியாதை குடுத்து கதைக்கலாந்தானே „ என்றதும் , „அவளுக்கோ உங்களை மயக்கி வசியம் பண்ணி வைச்சிருக்கிறவளுக்கோ….’ என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே மச்சாளின் மகளின் வீட்டடி பஸ்தரிப்பு நிலையத்தில் பஸ் நிற்க இருவரும் இறங்கினோம்.

„சரி நீங்கள் போவியல்தானே நான் பூன்லேறைவுக்கு பஸ் எடுத்துப் போறன் „ என்றவுடன் வீட்டை வந்து றொட்டியைச் சாப்பிட்டு ரீயும் குடிச்சிட்டுப் போங்கள் நாளைக்கு ஞாயிற்றுக்கிழமை தானே ஆறுதலாகப் போகலாம், நான் உங்களைப் போல நடக்க ஏலாது.நீங்கள் அம்மாவின் சொந்த மச்சான் .ஒரே இரத்தம், வாருங்கள் „ என்றாள் .

நான் பதில் எதுவும் சொல்லாமல் அவளோடு போய்க் கொண்டிருந்தன்.

அறைக்குள் நுழைந்த போது அங்கு யாருமே இருக்கவில்லை.மச்சாளின் மகளுடன் இரண்டு சிங்களப் பொம்;பிளைப் பிள்ளைகளும் இருப்பது எனக்குத் தெரியும்.

ஒருத்திக்குப் பெயர் மாலினி இன்னெர்ருத்திக்குப் பெயர் கீதா.மாலினிக்கும் கீதாவுக்கும் ஆண் நண்பர்கள் இருக்கிறார்கள்.

„எங்கை ஒருத்தரையும் காணேலை „ என்று கேட்டதும் „மாலினி அவளுடைய போய் பிரண்ட் நிமாலுடன் வெளியே போகப் போவதாகச் சொல்லியிருந்தாள், கீதா போவதைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை, சில நேரம் அவளும் போய் பிரண்டோடை போயிருக்கலாம்’ என்றவளிடம் ,இண்டைக்கு காலமை நாங்கள் வரேக்கிலையும் அவை இருக்கவில்லையே’ என்றதற்கு, „ நீங்கள் வரேக்கிலை அவையிரண்டு பேரும் காய்கறி இறைச்சி வாங்க மார்கற்றுக்கு போயிருந்தினம், அதைவிடுங்கோ அவை என்னென்றாலும் செய்யட்டும், தேத்தண்ணி போடுறன் குடியுங்கள் என்றாள்.

தேத்தண்ணியைப் போட்டுத் தந்து அதற்கு பிஸ்கட்டும் தந்தவள்,’இருங்கோ சித்தப்பா உடுப்பு மாத்திக் கொண்டு வாறன்,வந்து உங்களோடை நிறையக் கதைக்க வேண்டி இருக்கு’ என்றவள் குளியலறைக்குள் போய் சோற்றி என்ற வீட்டு உடுப்பை மாற்றிக் கொண்டு வந்து மேசையோடு இருந்த கதிரையில் சுவரோடு சாய்ந்து உட்கார்ந்தவள்’ சித்தப்பா மனச்சாட்சியின்படி சொல்லுங்கள் நீங்கள் செய்யிறதெல்லாம் சரியோ’ என்றாள்.

நான் „எதைச் சொல்றியள் „என்று கேட்டன்.நீங்கள் அந்தக் கேர்ளோடை பழகிற விதத்தைத்தான் சொல்றன், அது சரி அவளுக்கு என்ன பெயர் „என்று கேட்க,

நான் „யோகமலர் „என்றன்.’யோகமலரா’ என்று ஆச்சரியத்துடன் கேட்டவள் „யோகாவின் பெயரும் யோகமலர்தானே „என்றாள்.

யோகா என்பது மச்சாளின் மகளின் தங்கச்சியார்.அவளும் சிங்கப்பூரில் ஒரு கொம்பனியில் வேலை செய்து கொண்டிருந்தாள்.அவள் ரேப்பன்கார்டன் என்ற இடத்தில் இருக்கிறாள்.

மச்சாளுக்கு இரண்டு பொம்பிளைப் பிள்ளைகள்.நான் இதை எழுதிக் கொண்டிருக்கும் போது மூத்தவள் இலண்டனிலும் யோகா என்றவள் ஜேர்மனியிலும் இருக்கினம்.

„நீங்கள் அவளின் தோளில் சாய்ந்து படுப்பதும், அவள் உங்கள் தலைமயிரை நீவி விடுவதும் பிறகு அவளை நீங்கள் இறுக்கி அணைப்பதுமாக ஏதோ புது லவ்வேர்ஸ் மாதிரி நடந்து கொண்டது பார்க்கச் சகிக்கவில்லை.

„உங்களுக்கு இடது பக்கத்திலை பொம்பிளைப் பிள்ளையள் இருக்கிறார்கள் என்றோ நான் இருக்கிறேன் என்றோ எந்தக் கூச்சமும் இல்லாமல் எப்படி உங்களால் நடக்க முடிஞ்சது என்பது எனக்கு வியப்பாக இருக்கிறது’.

„சித்தப்பா எனக்கு ஒரு விசயம் நல்லாய் விளங்குது அவளிட்டை நீங்கள் மயங்கிப் போய்க் கிடக்கிறியள்,இல்லாட்:டி சித்திக்கு தைச்சு அனுப்பிய கம்பாயம் போல அவளுக்கும் தைச்சுக் கொடுத்திருக்கிறீர்கள் என்றால் அதிலை ஏதோ விசயமிருக்குது என்றுதான் நான் நினைக்கிறன்’

அவள் சொல்லிக் கொண்டிருந்தாள், அவள் எனக்கு புத்திமதி சொல்வது கொஞ்சமும் பிடிக்கவில்லை, அவளோடு வாக்குவாதப்பட விரும்பாமல் கோபத்தை அடக்கிக் கொண்டு கேட்டுக் கொண்டிருந்தன்.

மச்சாளின் மகள் அதிகளவு உரிமை எடுத்துக் கொள்வதாகவே நினைச்சன்.நான் கல்யாணம் செய்ய முந்தி தனியனாக இருந்த போது கிழமையிலை ஒரு முறையாவது இவர்களின் வீட்டுக்குப் போழுது போக்குவதற்காக போவன்.

போகும் போதெல்லாம் பளிச்சென்று மினுக்கிய பித்தளை மூக்குப்: போணியில் சின்ன மச்சாள் தேத்தண்ணி போட்டுத் தருவார்.சில வேளைகளில் உழுந்து வடையோ கடலை வடையோ அல்லது எள்ளுத் துவையலோ தந்து உபசரிப்பார்.

நான் தனியாக இருப்பதால் என்மீது இரக்கப்பட்டு இதையெல்லாம் தந்து உபசரிப்பார்’மச்சானார் மத்தியானம் சாப்பிட்டனீங்களோ „என்று கேட்பார்.நான் சாப்பிடாவிட்டாலும் சாப்பிட்டனான் என்று பொய் சொல்லுவன்.அவர் எனது கண்களின் சோர்வை வைச்சு கண்டு பிடிச்சு விடுவார்.

„பொய் சொல்ல வேண்டாம், கண்கள் இரண்டுமே சொல்லுதே சாப்பிடவில்லையென்று என்பவர் பொழுதுபட வீட்டுக்குப் போகும் போது இடியப்பமோ புட்டோ தோசையோ கட்டித் தந்துவிடுவார்.

இளந்தாரியில் நான் சாப்பிடாமல் தண்ணியை மட்டுமே குடிச்சுக் கொண்டு இரண்டு மூன்று நாட்கள் இருந்ததையும், பசியினால் உடம்பு வெக்கையாகும் போது, வெக்கையைப் போக்குவதற்காக ஒரு நாளைக்கு ஐஞ்சுமுறை குளிச்சதையும்,பசியைப் போக்குவதற்காக மாங்காயையும் தேங்காயையும் சாப்பிட்ட நாட்களில் எனது பசி உணர்ந்து தங்களுக்கு சமைச்சதில் எதோ கொஞ்சமாவது தந்து பசி போக்கினாரோ என்பதற்காக மச்சாளின் மகள் அதிகளவு உரிமை எடுத்துப் பேசியதையும் யோகமலரை அடிக்கொரு தடவை அவள் அவள் எனச் சொல்லிக் கதைச்சதையும் பொறத்துக் கொண்டன்.

„எப்படித்தான் சித்திக்குத் துரோகம் செய்ய உங்களால் முடிகிறது’ என்று அவள் சொல்யலியதும் „எனக்கு யோகமலர் அப்பப்ப சமைச்சுக் கொண்டு வந்து தந்ததை மனைவிக்கு எழுதியதையும், அதற்கு மனைவி யோகமலரின் சுகம் விசாரிச்சு கடிதம் எழுதியதை இவளிடம் சொல்ல நான் விரும்பவில்லை.

„இன்னொரு கோப்பை தேத்தண்ணி தரவா’ என்று கேட்க, வேண்டாமென்று சொன்னன்.

கொஞ்ச நேரம் அமைதியாகவிருந்தவள்’ அண்டைக்கு கோவில்ல வைச்சு அவளுக்கு குங்குமம் வைச்சு விட்டனீங்கள்,நாளைக்கு கழுத்திலை தாலியைக் கட்டச் சொல்லுவாள் கட்டத்தான் போறியள், எனக்கு என்னமோ அதுவும் நடக்கத்தான் போகுது என்று தெரியுது’ என்றவள், அடுத்துச் சொன்ன வார்த்iதான் எனக்குக் கோபத்தை உண்டாக்கியது.

„அவளின்ரை உடம்பிலை ஆசைப்பட்டு வைப்பாட்டியாக அவளை வைச்சிருக்கிறதென்றால் வைச்சிருங்கள், ஆனால் அவளுக்கு தாலி கட்டி சித்திக்கு துரோகம் செய்யாதையுங்கோ, „நீங்கள் கோபிச்சாலும் பரவாயில்லை, உங்கடை கூத்தைப் பற்றி அம்மாவுக்கு கட்டாயம் கடிதம் எழுதுவன் „ என்றவுடன்,’விசர்க்கதை ஒன்றும் கதைக்க வேண்டாம், நான் ஏன் அவளுக்கு தாலி கட்டிறன் என்று மழுப்பி பொய் சொன்னன்.

வாற கிழமைக்கு அடுத்த கிழமை சாய்ச்சியிலிருக்கும் என்எம்பியில் நானும் யோகமலரும் ஒன்றாக வேலை செய்யப் போவதையோ,ஒன்றாக ஒரே வீட்டில் இருக்கப் போவதையோ நான் சொல்லவில்லை.

நான் கதைச்சுக் கொண்டிருக்கும் போதே சிங்களப் பொம்பிளைப் பிள்ளைகளும் அவர்களுடைய போய் பிரண்டுகளும் வீட்டுக்குள் வந்தனர்.

என்னைக் கண்டதும் கைலாகு தந்து சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் சுகம் விசாரித்தனர்.படத்துக்குப் போகப் போறம் என்பதை ஏற்கனவே அவர்களுக்கு மச்சாளின் மகள் சொல்லியிருந்ததால் எப்படிப் படம் யாருடைய படம் என்று கேட்டனர்.

கமலகாசனின்ரை படம் நல்ல படம் ஆனால் சித்தப்பாதான் அடிக்கடி நித்திரையாகிக் கொண்டிருந்தார்.இரவு வேலையும் செய்து போட்டு வந்ததால் அதுதான் அவர் நித்திரை கொண்டவர் என்று சொல்லிச் சிரித்தாள்.

நேரம் பின்னேரம் ஆறு மணியானதைக் கண்ட நான் „சரி நான் வாறன்’ என்று எழ, „சித்தப்பா கொண்டு வந்த றொட்டியை இங்கை வைச்சுச் சாப்பிட்டிட்டுப் போங்கள் „ என்றாள்.

நான் கொண்டு வந்த நான்கு றொட்டிகளையும், மச்சாளின் மகள் கொண்டு வந்த மூன்று றொட்டிகளையும், மச்சாளின் மகளின் தோழிகள் வாங்கிக் கொண்டு வந்த பாணையும் பகிர்ந்து ஆறு பேரும் சாப்பிட்டோம்.நான் ஒரு றொட்டியும் இரண்டு பாண் துண்டுகளையும் சாப்பிட்டன்.

சிங்கள பொம்பிளைப் பிள்ளைகளும் அவர்களின் ஆண் நண்பர்களும் அன்னியோன்னியமாக சிரிச்சுக் கதைச்சு சாப்பிட்ட போது,நிமால் என்ற சிங்கள இளைஞன் கனிவோடும் விரக்தியோடும் „சிங்களவர்களும் தமிழர்களும் இலஙகையின் பிள்ளைகள்,நாங்கள் சகோதரர்கள் எங்களைக் குழப்புபவர்களே தங்கள் சுயநலத்திற்கா இருபக்கமும் உள்ள அரசியல்வாதிகளே’ என்று சொன்னது இப்பொழுதும் பசுமரத்தாணி போல பசுமையாக இருக்கின்றது.

நாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது கதவு தட்டும் சத்தம் கேட்கவே,மச்சாளின் மகளின் தோழி ஒருத்தி போய்க் கதவைத் திறந்தாள்.

அங்கே ஒரு தமிழ் இளைஞன் நின்றிருந்தான்.அவள் „பிளீஸ் கம் இன்’ என்று அழைக்க அவனைப் பார்த்தன்….அவன்…

அவன் யாராக இருக்கும்,நிச்சயமாக மச்சாளின் மகளைப் பார்க்கத்தான் வந்திருப்பான்,அவளின் பிரண்டாகக்கூட இருக்கலாம் என்று நினைத்து கலோ சொல்வதுடன் நிறுத்திக் கொண்டன்.

„சித்தப்பா இவரும் சுண்ணாகந்தான்.கந்தரோடையிலைதான் இருக்கிறவர்.ஒரு நாள் மாக்கற்றிலை கண்ட போது,தனக்குத் தெல்லிப்பழை ரயில்வே ஸ்ரேசனடியில் சொந்தக்காரர்கள் இருபபதாகச் சொன்னார்.யாரென்று கேட்ட போது பொன்னுத்துரை என்று அவர் சொல்ல „அவர் என்னுடைய அப்பா’ என்றன்.அதுக்குப் பிறகுதான் எனக்கு இவருடன் பழக்கம் ஏற்பட்டது.எப்பவாவது ஒருமுறை வந்து கதைச்சிட்டுப் போவார்.இவர் செம்பவான் சிப்யாட்டில் வேலை செய்கிறார்’.

„என்னோடை வேலை செய்யிற சுமதியின்ரை சொந்தக்காரர் என்று விளக்கமாகச் சொன்னவள். „இவர் அம்மாவின்ரை சொந்த மச்சான்,அம்மா வழியில முதல் இரத்த உறவு இவர்தான், எனக்குச் சித்தப்பா முறை „ என்று என்னைப் பற்றி அந்த இளைஞனுக்குச் சொனனவர்.சித்தப்பாவின் பெண்சாதி பிள்ளைகள் ஊரிலை இருக்கினம்.

„அவையை நினைச்சு சித்தப்பா நிம்மதியில்லாமல் இருக்கிறார்.பார்க்கப் பாவமாக இருக்குது’ என்று அவள் எள்ளலாகச் சொன்னதை நான் புரிஞ்சு கொண்டன்’

„சரி வாறன் என்று வெளிக்கிட்ட நான் வாசலடி வரையும் வந்த நான் மச்சாளின் மகளை வரு;படி சைகை செய்ய அவளும் வந்தாள்’உங்களோடை ஒரு கதை „ என்று சொல்ல கதவை மூடிவிட்டு வந்தவளைக் கொஞ்சம் தள்ளிக் கூட்டிக் கொண்டு போய் „அடிக்கடி இப்படி பொடியங்களை வீட்டுக்கு வரச் செய்யாதை….’ ஏன்று சொல்லி முடிக்கு முந்தி’ சித்தப்பா அது எனக்குத் தெரியும்,முதலிலை உங்கடை முதுகிலை கிடக்கிற ஊத்தையைக் கழுவுங்கோ…..’ என்று அவள் சொன்னதும்,அது எனக்குச் சுருக்கென்றது.

நான் எதுவுமே பேசிக் கொள்ளாமல் அங்கிருந்து போய்க் கொண்டிருந்தன்…

 

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *