கதைகள்

நடுகைக்காரி!…. தொடர் 13….. (குறுநாவல் ) ……. ஏலையா க.முருகதாசன்.

தொடர் 13.

ஆனந்தா பேக்கறி முதலாளியின் மகள் பாணந்துறையிலிருந்து வரும் போது கொண்டு வந்த சிங்களமொழி பாடப்புத்தகங்களை ஞானத்திடம் ஏற்கனவே குடுத்திருந்தாள்.

ஞானம் வீட்டுக்குக் கொண்டு போய் கொண்டு வந்த சிங்களப் பாடப்புத்தகங்களை பைக்குள்ளிருந்து எடுத்து பேக்கறி முதலாளியின் மகள் முன்னால் வைச்சான்.

ஒரு அகலமான மேசையில் ஞானமும் பாறுவும் கொஞ்ச இடைவெளியில் அருகருகாக உட்கார்ந்திருக்க ஞானத்துக்கு வலது பக்கத்தில் பேக்கறி முதலாளியின் மகள் கீதாஞ்சலி உட்கார்ந்திருந்தாள்.

சிங்களத்தில் வசனங்களைச் சொல்லிவிட்டு தனித்தனிச் சொல்லாக அவற்றுக்கான ஆங்கில வார்த்தைகளை சொல்லிக் குடுத்துக் கொண்டிருந்தாள் கீதாஞ்சலி.

ஞானம் சிங்கள உச்சரிப்புக்களைத் தெளிவாக சொல்லிய போதெல்:லாம் வெரிகுட் என்று ஆங்கிலத்திலும் கொந்தாய் என்று சிங்களத்திலும் சொல்லிப் பாராட்டி உற்சாகப்படுத்தினாள்.

அதே வேளை கீதாஞ்சலி பாறுவை அடிக்கடி பார்த்துக் கொணடாள்.பேக்கறி முதலாளியின் மகள் பெயரை இதுவரை ஞானம் கேட்கவில்லை.ஆனால் பாறு அதை அறிய விரும்பினால், பேக்கறி முதலாளியின் மகளிடம் இப் யூ டோண்ட் மைன் யுவர் நேம் பிளீஸ் (If you dont mind your name please)என்று பாறு கேட்டதும் மை நேம் இஸ் கீதாஞ்சலி (My Name is Geethanjali)என்று அவள் சொன்னாள்.தாங்யூ என்று சொன்ன பாறு கீதாஞ்சலி ஞானத்திற்கு பாடம் சொல்லிக் குடுப்பதை அவதானித்துக் கொண்டே இருந்தாள்.

ஒரு உதாரணத்திற்கு ஐ லவ் யூ (I love you) என்பதை சிங்களத்தில் மம ஒயாட்ட ஆதரேய்(මම ඔයාට ආදරෙයි) என்றுசொல்ல வேண்டும்.அது போல என்னை நீ காதலிக்கிறாயா என்பதை ஒய மட்ட ஆதரேய் த (ඔය මට ආදරෙයි ද ?)என்று சொல்ல வேண்டும் என்று கீதாஞ்சலி சொல்லிக் கொடுத்து சில விநாடிகள் சென்ற பின் „பிளீஸ் டோண்ட் மிஸ் அண்டர்ஸராண்ட் மி,இஸ் தியர் இஸ் எனி வேர்ட் அதர் தான் திஸ் „ (Please dont misunderstand me,is there is any word other than this?)என்று பாறு கேட்க கீதாஞ்சலிக்கு அவளின் ஆங்கில உச்சரிப்பு மகிழ்ச்சியையும் திகைப்பையும் தர, இற் இஸ் ஒன்லி போர் எக்சாம்பிள், ஆர் யு எபிரைட்( It is only for example ,are you afraid) „ என்று கீதாஞ்சலி கேட்கிறாள்.

No,but..this is my opinion,Ok please continue… என்று சொன்ன பாறு அமைதியாகிறாள்.இவள் என்னில் சந்தேகப்படுகிறாளோ’ என நினைத்த கீதாஞ்சலி பாறுவைப் பார்த்து புன்னகைக்கிறாள்.

படிச்சு முடிஞ்சதும் ஞானம்,பாறு,கீதாஞ்சலி மூவரும் வெளியே வருகின்றனர்.பேக்கறி காசுப்பட்டடையில் பேக்கறி முதலாளி நிற்கிறார்.பேக்கறியில் வேலை செய்யும் இருவருடனும் அவர் கதைச்சுக் கொண்டிருந்தார்.

போயிட்டு வாறன் என்பதற்கு கீதாஞ்சலியிடம் கேட்டுத் தெரிந்து கொண்ட ஞானம் பேக்கறியைவிட்டு வீதியில் காலடி எடுத்து வைக்கும் போது „கிகில என்னங்’ என்று எல்லாரையும் பார்த்து சிங்களத்தில் சொல்ல கீதாஞ்சலி சிரித்துக் கொணடே கையைக் காட்டுகிறாள்.

பாறுவும் கீதாஞ்சலிக்கு குட்பை என்று சொல்லி காங்கேசன்துறை வீதியில் நடக்க,’யார் இந்தப் பிள்ளை தெரியுமா உங்களுக்கு „என்று பேக்கறி முதலாளி அங்கு நின்றவர்களிடம் கேட்க, அவர்களில் ஒருவர் சிங்களத்தில்

மேசன் தவசியின்ரை மகள்,அதோடை தவசி கள்ளு இறக்கி ரொடிக் கோப்பிறேசனுக்குக் குடுக்கிறவர்.நான் அளவெட்டிக்கு பாண் கொண்டு போகும் போது வேற நடுகைக்காரிகளோடை இந்தப் பிள்ளையும் தோட்ட வேலைக்குப் போறதைப் பார்த்திருக்கிறன்’ என்று சிங்களத்தில் சொல்ல, அதைக் கேட்டுக் கொண்டிருந்த கீதாஞ்சலி’ உண்மையாகவா தோட்ட வேலைக்குப் போறவளா,சரளமாக ஸ்ரைலாக இங்கிலீஸ் பேசுறாளே „என்று அவள் வியப்புடன் சொல்ல’ இங்கைதான் அந்தப் பிள்ளை படிச்சிருக்க வேணடும் „ என்று எதிரே இருக்கும் யூனியன் கல்லூரியைக் காட்டுகிறார்.

ஞானம் சைக்கிளை உருட்டிக் கொண்டு போக அவனருகில் பாறு காங்கேசன்துறை வீதியில் வடக்கு நோக்கி போய்க் கொண்டிருந்தார்கள்.கொஞ்ச தூரம் போனதும் சைக்கிளிலை ஏறுங்கள் சைக்கிளிலேயே போவம் „ என்கிறான் ஞானம்.

அதற்கு பாறு’ வேண்டாம் இதாலை நெடுக எங்கடை சொந்தக்கார் வந்து போகிறவை ஏன் வில்லங்கத்தை விலைக்கு வாங்குவான்’ என்று சொல்ல, சூழ்நிலையைப் பொறுத்துந்தான் நடக்க வேண்டும் என்றெண்ணி அவளுடன் நடந்து கொண்டிருந்தவன் „ நீங்கள் வெள்ளிக்கிழமைகளில் கோவிலுக்குப் போவீர்களா’ என்று கேட்க,’ம் போவன்’ என்று பாறு சொல்ல,’ எந்தக் கோவிலுக்கு’ என்று ஞானம் கேட்க, „இதோ இந்தக் கோவிலுக்குத்தான்’ என்று தெல்லிப்பழை தபால் அலுவலகத்திற்கு கிட்டவாகவும், பெற்றோல் நிலையத்திற்கு அருகாகவும் வீதிக்கு மேற்குப் பக்கத்திலுள்ள புளியடி வைரவர் கோவிலைக் காட்டுகிறாள்.சொல்லிக் கொண்டிருக்கும் போது கோவிலுக்கு முன்பாக அவர்களிருவரும் வந்துவிட்டனர்.

„இங்கேயா’ என்று கேட்டுக் கொண்டே கோவிலைத் திரும்பிப் பார்க்க, அங்கே பூசகர் கோவிலுக்குள்ளே உள்ள பகுதியைச் சுத்தம் செய்வதையும், கோவிலுக்கு வடக்குப் பக்கத்து

தரையில் சிலர் பொங்குவதற்காக கற்களை எடுத்து வைச்சு ஆயத்தம் செய்வதையும் காண்கிறான்.

„ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பொங்குவார்களா’ என்று ஞானம் கேட்க,’பெரும்பாலும் நடக்கும் „ என்று அவள் சொல்ல’ நீங்கள் இன்றைக்குக் கோவிலுக்குப் போகவில்லையா’ என்று ஞானம் கேட்க’ இல்லை இனிப் போய்க் குளிச்சிட்டு வரவேணும், நேரம் போயிடும், இன்னொரு நாளைக்குப் போகலாம் என்றவள்,’சைக்கிளை நான் உருட்டவா’ என்று ஞானத்திடமிருந்து சைக்கிளை வாங்கி உருட்டிக் கொண்டே ஞானத்துடன் நடந்து வந்தவள் மேற்கு பக்கத்து ஒழுங்கைப் பக்கமாகத் திரும்பியவள் „இதாலும் போகலாம்’ என்று சொல்ல’ இதாலையும் கனதடவை நானும் போயிருக்கிறன்’ என்று ஞானம் சொல்ல’ இந்தாங்க என்னை ஏற்றிக் கொண்டு போய், எங்கடை வீட்டுப் படலையடியில் இறக்குங்கள்’ என்று பாறு சொல்ல,மறுபேச்சின்றி அவளை பாரில் ஏறச் சொல்லி ஏற்றிக் கொண்டு போக கொஞ்ச நேரத்தில் அவளின் வீடு வர „நிற்பாட்டுங்கள் இதுதான் வீடு’ என்கிறாள்.

வீட்டுப் படலையடியில் நிற்பாட்ட, சைக்கிளைவிட்டு இறங்கியவள்’உள்ள வாருங்கள்’என்று கூப்பிட, ஞானம் எவ்வித தயக்கமும் இன்றி அவளுடன் போக,அறைக்குள் இருந்து வெளியே வந்த தாய் „இவ்வளவு நேரமாய் தோட்டத்திலையா’ நின்றாய் என்று கேட்டுக் கொண்டே ஞானத்தைப் பார்த்தவள் யாராக இருக்கும் என்று யோசிக்க’ அம்மா இவர்தான் ஞானம், என்னை பிரைவேட்டாக எஸ்.எஸ்.சி எடுக்கச் சொன்னவர், படிப்பிக்கிறன் என்று சொன்னவரம்மா’என்கிறாள்.

„தோட்ட வேலை முடிய நேரம் போயிட்டதால் தனியாப் போக வேண்டாம் என்று கூட்டிக் கொண்டு வந்தவர்’ என்று சொல்வதை கவனித்த ஞானம், தான் சிங்களம் படிக்கப் போகும் போது தன்னுடன் வந்ததைச் சொல்லாமல் பொய் சொல்கிறாள் எனத் திகைக்க அவள் கண்ணைக் காட்டுகிறாள்.

„வாங்க தம்பி இருங்கோ „ என்று விறாந்தையில்இருந்த கதிரையைக் காட்டுகிறாள் தாய்.விறாந்தையில் ஏறி அங்கிருந்த கதிரையில் உட்காருகிறான் ஞானம்.பாறுவின் தாய் அடுப்படிக்குள் போகிறாள்.

வீட்டு வளவுக்குள் வரும் போதே அந்த வளவையும் வீட்டையும் உற்றுக் கவனித்தவன் வளவு மிகத் துப்பரவாக இருப்பதைக் கவனித்து மகிழ்ச்சியடைகிறான்.

இரண்டு அறைகளையும் அரைச் சுவர் கொண்ட விறாந்தையுமாக அந்த வீடும் துப்பரவாக இருப்பதைக் கவனித்த ஞானம் உங்களுடைய வீட்டையும் வளவையும் பார்க்கும் போது சந்தோசமாக இருக்கிறது என்று சுவரோடு சாய்ந்து நின்ற பாறுவிடம் சொல்கிறான் ஞானம்.

வீட்டோடு ஒரு பந்தி இறக்கப்பட்டிருந்தது.அங்கிருந்து புகை வந்து கொண்படிருந்ததால் „ அதுதான் அடுப்படியா’ என்று கேட்க,’ம்’ என்று பதிலளித்த பாறு „இந்த வீட்டை அப்பா கொஞ்சம் கொஞ்சமாகத்தான் கட்டினவர்.அவர் மேசன் என்பதால் நாங்கள் எல்லாரும் அப்பாவுடன் சேர்ந்து சல்லி அரித்து, நாங்களே கல்லரிந்து கட்டியதுதான் இந்த வீடு’ என்கிறாள்.

„அடுப்படி கட்ட காசு வேணும்.அதைக் கட்ட கொஞ்சநாள் செல்லும்.எங்கடை வளவுக்குள்ளை ஒரு சிறு கல்லையும் பொறுக்க முடியாது.எல்லாக் கல்லையும் சல்லிக் கல்லுக்காக பொறுக்கி எடுத்துவிட்டோம்’

„அப்பா மேசன் வேலையோடு கள்ளு இறக்கி கள்ளுக் கோப்பரேசனுக்கும் குடுக்கிறவர். இந்த சின்ன வளவுக்குள்ளை ஆறு பனைகள் இருக்கின்றன. அதிலையிருந்து கள் இறக்குகிறவர்’.

„அப்பா இரவில் மட்டும் ஒரு கிளாஸ் கள்ளுக் குடிப்பார்.அப்பா சொல்வார் கள்ளு ஒரு மூலிகையாம், அப்பாவும் அம்மாவும் புத்தகங்கள் வாசிக்கிறவைதான்,எங்களிட்டை மூலிகை முன்னூறு என்ற புத்தகம் இருக்கு, அதிலைதான் கள்ளின் பெறுமதி பற்றி’ இருக்குது …என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே’இப்ப வீட்டிலை கள் இருக்குதா’ என்று ஞானம் கேட்க „பாறு இ;ஞ்சை வா „என்று தாய் அடுப்படிக்குள் இருந்து கூப்பிடுவது கேட்கவே’இருங்கோ அம்மா கூப்பிடுறா „என்று சொல்லிக் கொண்டு போனவள்’ என்னம்மா ஏனம்மா கூப்பிட்டனீங்கள் „என்று பாறு கேட்க,’அந்தத் தம்பி எங்கடை வீட்டிலை; தேத்தண்ணி குடிப்பாரா’ என்று தாய் மெதுவாகக் கேட்பதும்,’ குடிப்பார், அம்மா அவர் ஒன்றும் பார்ப்பது இல்லை எல்லா இடமும் தேத்தண்ணி கோப்பி குடிப்பார் சாப்பிடுவாரும் கூட’ என்று பாறு சொல்வதையும் கேட்ட ஞானம், „அம்மா ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம், தேத்தண்ணியைக் குடுத்துவிடுங்கோ „ என்று சொல்ல பாறு ஒரு வெள்ளிக் கோப்பையில் தேத்தண்ணியைக் பித்தளைத் தட்டம் ஒன்றில் வைச்சுக் கொண்டு வந்து ஞானத்திடம் குடுக்கிறாள்.

தேத்தண்ணியைக் குடிச்சுப் பார்த்த ஞானம் „அருமையாக இருக்கு இஞ்சியும் ஏலக்காயும் போட்டு ரின்பாலும் விட்டு சுவையாக போட்ட தேத்தண்ணியை இரசித்துக் குடிச்சுக் கொண்டிருந்தவன் „கள்ளுக் கேட்டனான்,குடிச்சுப் பார்க்க வேண்டும் ஆசையாகவிருக்கின்றது,கள்ளு இருந்தால் சோடாப் போத்தலிலை விட்டுத் தந்தா, போகேக்கை சோடா குடிச்ச மாதிரி குடிச்சுக் கொண்டே போகலாம்’ என்று அவன் சாதரணமாக யதார்த்தமாகச் சொல்ல,’ ஐயோ எனக்குப் பயமா இருக்கு நான் அம்மாட்டை கள்ளுத்தரச் சொல்லி கேட்க மாட்டன்,அம்மா என்ன நினைப்பா,நீங்கள் அந்தப் பழக்கத்தை பழக வேண்டாம்…என்ன இது புதுப் பழக்கம்’ என்று சொல்ல,’அப்பா ஒவ்வொரு நாளும் இரவில ஒரு பெரிய கிளாசில கள்ளுக் குடிக்கிறவர், கனவருசமாக குடிக்கிறவர். ஆனால் ஒருநாளும் அவர் குடிச்சதற்கான வெறி அவரிடம்

இருந்ததில்லை,அப்பாவும் அது மூலிகை என்றுதான் சொல்கிறவர் எனக்கும் அது தெரியும்’.

„அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது இந்தத் தேத்தண்ணியில போட்டிருக்கிற சீனி மிதமிஞ்சினால்கூட அதுவும் நஞ்சுதான்.

கள்ளை அளவாகக் குடிக்க வேணும்.அளவாக குடிச்சால் அதுவும் உடம்பைப் பாதுகாக்கும்.ஆனால் தமது சந்தோசத்திற்காகக் குடிக்கிறவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் தம்முடனேயே அந்தச் சந்தோசத்தை வைச்சிருப்பதில்லை, வெறி வந்ததும் மற்றவர்களுக்கு தொல்லை கொடுப்பார்கள், அதனாலை குடிகாரன் என்று பெயரெடுக்கிறார்கள்……..’ என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே „ என்ன நீங்கள் குடிக்கப் போகிறியளா நான் அதற்குச் சம்மதிக்க மாட்டன்…’ என்று சொல்லிக் கொண்டிருப்பதைக் கேட்டுக் கொண்டிருந்த பாறுவின் தாய் தனது மகளுக்கும் ஞானத்திற்குமிடையில் அறிமுகத்திற்கப்பால் ஏதோ இருப்பதாக உணருகிறாள்.

ஆனால் அதனை மகளிடம் கேட்க முடியவில்லை. „பாறு இஞ்சை வா’ என்று அடுப்படிக்குள் இருந்து கூப்பிட, „ஏன் அம்மா எப்பவும் அடுப்படிக்குள்ளேயே இருக்கிறா, இஞ்சை வந்து இருக்கச் சொல்லுங்கள்’ என்று ஞானம் சொல்ல,’ அம்மா அடுப்படியைவிட்டு வரட்டாம், வாருங்கோ „ என்று பாறு கூப்பிட பாறுவின் தாய் செல்லாச்சி அடுப்படியிலிருந்து வந்து விறாந்தையில் ஏறி மகளுக்குப் பக்கத்தில் நிற்க, „ஏன் இரண்டு பேரும் நிற்கிறியள் தயவு செய்து இருங்கோ, அம்மா’ என்று சொல்ல பாறுவும் அவளின் தாயும் விறாந்தையிலிருந்த மற்றக் கதிரைகளில் உட்காருகின்றனர்.

„ நான் வரேக்கை பார்த்தன் உங்கடை ஒழுங்கை ஒரே புல்பூண்டுகளும் பேப்பர்த் துண்டுகளும் கஞ்சலுமாக இருக்குது,எல்லாரும் தங்கடை தங்கடை வீட்டையும் முற்றத்தையும், வளவுகளையும் கூட்டித் துப்பரவாக்கினம்,

ஆனால் நாளாந்தம் பாவிக்கும் ஓழுங்கை துப்பரவாக இருக்க வேண்டும்’ என்று நினைப்பது இல்லை.

„எங்கடை ஒழுங்கையும் இப்படித்தான் இருந்தது.யாரையம் எதிர்பார்க்காமல்,யார் என்ன நினைப்பார்களோ என்று நினைக்காமல் நான் விளக்குமாற்றைத் தூக்கி ஒழுங்கையைக் கூட்டத் தொடங்கினன்,போவோர் வருவோர் எல்லாம் இதென்னடா கூத்து இவனுக்கு வேற வேலையில்லை என்று கிண்டலடிச்சார்கள், ஆனால் நான் மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்ற எதைப்பற்றியும் யோசிக்கவில்லை.’

„மாதத்தில் ஒருக்கா கூட்டத் தொடங்கினன் படிப்படியாக எல்லாரும் இணையத் தொடங்கச்சினம்;.நல்லதை ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் செய்யத் தொடங்கினால் நாள் செல்லச் செல்ல எல்லேர்ரும் இணைவார்கள்’.

„வீட்டைக் கூட்டி கழுவிப் போட்டும்,முற்றத்தை வளவைக் கூட்டிப் போட்டுப் பார்த்தால் கண்ணுக்கு அழகாகவும் சுகமாகவும் இருக்கும்.அப்படித்தான் ஒழுங்கையும்,பாறு நீங்கள் விளக்கமாற்றைத் தூக்கிக் கூட்டத் தொடங்குங்கள், எல்லாரும் சேருவினம்…’ என்று சொல்லி முடிச்சவன்,சரி நான் வாறன் நாளைக்கு நீங்களும் இன்னும் இரண்டு பேர் வந்தால் போதும்’ என்று எழும்பிய ஞானம் முற்றத்தில் நின்ற சைக்கிளை எடுத்துக் கொண்டு வெளிக்கிட பாறுவும் அவனுடன் போக எத்தனிக்கையில் „பாறு இந்தச் சோடாப் போத்தலை தம்பியிட்டைக் குடு „என்று சொல்லிக் குடுக்கிறாள் பாறுவின் தாய்.

பாறுவுக்கு அது என்னவென்று விளங்கிவிட்டது.சோடாப் போத்தலையும் ஏலக்காயையும் தாயிடம் வாங்கிக் கொண்டு படலைவரையம் போகிறாள்.

„இந்தாங்க சோடா, பாதுகாப்புக்கு ஏலக்காய்.நீங்கள் என்னைக் கேட்டது அம்மாவுக்கு கேட்டிட்டுது அதுதான்’ என்று சோடாப் போத்தலைக் குடுக்கிறாள்.

படலையடியில் கும்மிருட்டில் இருவரும் கதைச்சுக் கொண்டிருந்தனர்.ஞானம் பாறுவை இறுக்கி அணைச்சுக் கொண்டு…….அதைக் கொடுக்க..„போதும் விடுங்கோ ஆரேன் பார்த்தாலும் பார்ப்பார்கள்’ என்று அவள் வெட்கப்பட „சரி நாளைக்குச் சந்திப்பம் „ என்று சோடாப் போத்தலை வாங்கிக் கொண்டும் ஏலக்காயை சட்டைப் பைக்குள் போட்டபடி போகிறான்’

 

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *