கதைகள்

நடுகைக்காரி!…..தொடர் 11 ….. ( குறுநாவல் ) …. ஏலையா க.முருகதாசன்.

                                                         

தொடர் 11

சிங்களம் படிக்க ஆனந்தா பேக்கறிக்கு இன்றைக்கு பின்னேரம் தான் போகப் போவதாக அவளுடன் நடந்து வந்து கொண்டிருக்கும் போதே ஞானம் சொல்லியதும் வேலை முடிஞ்சு வயலைவிட்டு வெளியே வந்ததும் தன்னையும் கூட்டிக் கொண்டு போகும்படி பார்வதி சொல்ல அதற்கு ஞானம் சம்மதிக்கிறான்.

அது அவனுக்குப் பிரச்சினையாகத் தெரியவில்லை.ஆனால் பார்வதியைச் சந்திப்பதற்காக மார்க்கண்டுவின் தோட்டத்திற்கு என்ன சாட்டைச் சொல்லிப் போவது என்பதைப் பற்றி யோசித்தவாறு பார்வதியுடன் நடந்து வந்து கொண்டிருந்தவன், மார்க்கண்டுவின் தோட்டத்திற்குப் போகும் வரம்புப் பாதையைக் கண்டதும், „நீங்கள் போங்கள் நான் அங்கை மத்தியானத்திற்குப் பிறகு வாறன் என்று அவன் சொல்ல’ம்’ என்று அரைகுறை மனதுடன் பாறு மற்றைய நடுகைக்காரிகளுக்குப் பின்னால் கொஞ்சம் இடைவெளி விட்டு நடக்கத் தொடங்கியவள், சைக்கிளை தனது இடுப்பில் சாத்தி வைச்சபடியே நின்ற ஞானத்தைத் திரும்பிப் பார்த்து சில விநாடிகள் நின்றவள் திரும்பி ஞானம் நின்ற இடத்துக்கு வேகமாக வந்து’ போக மனமில்லாமல் கிடக்குது, கட்டாயம் நீங்கள் அங்கை வரவேணும் „ என்றவள், வீதியால் போவோர் வருவோர் யாராவது தங்களைப் பார்க்கிறார்களா என அங்குமிங்கும் பார்த்தவள்,ஞானத்தின் கைகளைப் பிடித்து அவனை ஏக்கத்துடன் பார்த்து„ எத்தனை நாளைக்குத்தான் நான் உங்களைச் சந்திப்பதும் வீட்டுக்குப் போவதுமாக இருக்கப் போகிறன், நிரந்தரமாக உங்களுடன் இருக்க ஏதாவது வழிபண்ணுங்கள்’ என்றவள் சைக்கிள் காண்டிலில் செருகியிருந்த சஞ்சிகையை எடுத்துக் கொண்டே ; „சரி நான் வாறன் மார்கண்டற்றை தோட்டத்திற்கு கட்டாயம் வாருங்கள் என்று சொல்லியவாறு வெள்ளவாய்க்காலுக்குள் இறங்கி மார்க்கண்டுவின் தோட்டத்திற்குப் போகும் வரம்பில் நடக்கத் தொடங்கினாள்.

அவளுடன் வந்தவர்கள் தூரத்தில் நடந்து கொண்டிருந்தார்கள்.அவள் அவன் கண்ணைவிட்டு மறையும் வரை ஞானம் பார்வதி வரம்பினில் அழகாக கம்பீராமாக நடந்து போவதையே இரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஞானமும் பாறுவும் காதலிக்கத் தொடங்கி கிட்டத்தட்ட நான்கு நாட்கள்கூட ஆகவில்லை.அதற்குள் அவர்களால் ஒரு நாள்கூட பிரிந்திருக்க முடியவில்லை.கெதியிலை ஞானத்தோடை சேர்ந்தவிட வேண்டுமென்று பாறு துடித்தாள்.

மதகில் இருந்து அரட்டை அடித்து சிரித்துக் கொண்டிருந்தவன்.சீனியம்மான் கடையில் தோசை சுண்டலுடன் இரசித்துச் சாப்பிட்டும் அதற்குப் பதமாக நன்னாரித் தேத்தண்ணியை குடிச்சும்,லிங்கம் கபேயில் முறுகல் கடலை வடையும் பால் தேத்தண்ணியும் குடிச்சு ஒரு கப்பல் வாழைப்பழத்தை வாங்கிக் கொண்டு வந்து மகாஜனாக் கல்லூரியின் மேற்குப்புறத்து ஒழுங்கை ஆரம்பிக்குமிடத்தில் உள்ள மதகில் இரசித்து இரசித்து சாப்பிட்டு செல்லப்பிள்ளையாக இருந்த ஞானம் பாறுவை எப்பொழுது சந்திச்சானோ அன்றிலிருந்து ஒரு நாளைக்கு ஒரு முறையாவது அவளைச் சந்திக்காமல் அவனால் இருக்க முடியவில்லை.

அவளைப் பார்த்துவிட்டால் அவனின் உடலில் புது இரத்தம் பெருக்கெடுத்து ஓடுவது போல உணர்ந்தான்.

பாறுக்குப் பிறகுதான் எல்லாம் என்பதாக அவன்; மனநிலை இருந்தது.பாறுவை பார்த்து கதைச்சுவிட்டு வந்ததனால் மதகில் அவன் மிகுந்த உற்சாகத்துடன் இருந்தான்.ஒரு பேரரசனாக தன்னை உணர்ந்தான்.

தனது நண்பர்களுடன் வழமைக்கு மாறான உற்சாகத்தில் கதைச்சுக் கொண்படிருப்பான்.ஞானத்தின் மூன்று நண்பர்களுக்கும் ஞானம் நடுகைக்காரி ஒருத்தியைக் காதலிக்கிறான் என்பது மெல்ல மெல்ல தெரிய வந்த போது’ ஞானம் உன்னுடைய காதல் வெற்றியடைந்து கல்யாணத்தில் போய் முடியுமா இல்லாட்டி பொழுது போக்காக காதலுடன் முடிந்துவிடுமா „ என்று கேட்ட போது „விசர்க்கதை

கதையாதையுங்கோ, அவள்தான் என்னுடைய மனைவி என்று அவளைப் பார்த்தவுடனேயே முடிவெடுத்துவிட்டன்

,நீங்கள் நினைக்கிறியளா மதகிலை இருந்து போவோர் வருவோரைக் கிண்டலடிப்பவன் சீனியம்மானின் தேத்தண்ணிக் கடையிலும் லிங்கம் கபேயிலும் பொழுதைக் கழிப்பவன் பொழுதைக் கழிப்பதற்காகத்தான் அவளைக் காதலிக்கிறன் என்று நினைச்சீர்களா’என்று அவன் கோபத்துடன் சொன்னதும் நண்பர்கள் அமைதியாவார்கள்.

ஆனால் நண்பர்கள்’இல்லை நீங்கள் யாரென்று உனக்குத் தெரியும், உன்னுடைய லவ்வரும் ஆரென்று தெரியும், ஒரே ஆட்களுக்குள்ளேயே காதல் என்றால், காதலாவது கத்தரிக்காயவது என்று நெருப்பில கால் வைச்ச மாதிரி தாய் தகப்பன் சொந்தபந்தங்கள் எல்லாம் துள்ளிக்; குதிப்பினம்„ என்று அவனின் நண்பர்களில் ஒருவன் சொல்லி முடிக்குமுன், ஞானம் கோபமாக „சீரியசாகத்தான் சொல்றன், நீங்கள் என்னோட தொடர்ந்தும் நண்பர்களாக இருக்க வேண்டுமென்றால் என்னுடைய சொந்த விசயத்திலை தலையிடாதீர்கள்,என்னுடைய சொந்த விசயம் தவிர்த்து இலக்கியம் பற்றியோ, அரசியல் பற்றியோ, கலைகள் பற்றியோ, சமூகம் சார்ந்த விசயங்கள் பற்றியோ இல்லாட்டி வாசித்த கதைகள் பற்றியோ கட்டுரைகள் பற்றியோ, இல்லாட்டில் ஆங்கிலக் கட்டுரைகள் பற்றியோ காத்திரமான கருத்துக்களை முன் வைத்து விவாதிப்போம், அதனால் நுட்பமான, தர்க்கமுறையான அறிவு வளரும்.அது சுவையாகவும் இருக்கும்.ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ள ஆங்கிலத்திலேயே விவாதிப்பம்,மீண்டும் சொல்கிறன் தயவு செய்து எனது காதல் விவகாரத்தில் நீங்கள் எவருமே கதைக்க வேண்டாம்’ என்று ஞானம் கோபமாகவும் உறுதியாகவும் சொன்னதால் அவனுடைய நண்பர்கள் மௌனமானார்கள்.

மௌனத்தை ஞானமே கலைச்சான்.நான் என்ன ஆள்,என்னுடைய பாறு என்ன ஆள் என்பதற்கு நான் வைச்சிருக்கும் வரைவிலக்கணம் இதுதான்’நாங்கள்

மனிதர்கள் என்ற உயிரினத்துக்குள் நானும் அவளும் அடங்கிறம்.இயற்கை பாலியல் ரீதியாக ஆண்பாலினரையும் பெண்பாலினரையும் படைத்திருக்கிறது.

பாறு பெண், நான் ஆண்.ஒரு ஆணுக்குப் பெண் தேவை.பெண்ணுக்கு ஆண் தேவை.இது போதும் என்று அவன் சொன்னதும் அவனுடைய நண்பர்கள் ஞானம் இப்படியெல்லாம் கதைப்பான் என அவர்கள் எதிர்பார்க்கவில்லையாதலால் கொஞ்சம் அதிர்ச்சியடைந்தார்கள்.

ஆனால் ஞானம் சொன்னதை அவர்கள் அமைதியாக யோசித்த போது அவன் சொன்னது அவர்களுக்கு நியாயமாகவே தெரிஞ்சது.அதற்குப் பிறகு அவனுடைய நண்பர்கள் யாருமே ஞானத்தின் காதல் விசயத்தை வாய்தவறிக்கூட கதைக்கவில்லை.

பாறுவை சந்திச்ச அடுத்த நாளே நண்பர்களுக்கு அதைச் சொல்லியிருந்தான்.காதல் விவகாரத்தை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வது என்பது கணவன் மனைவிக்கிடையிலான படுக்கையறை இரகசியங்களை பகிர்ந்து கொள்வதற்குச் சமன் என்பதை ஞானம் தெளிவாக உணர்ந்திருந்ததனால், நண்பர்கள் தனது காதல் விவகாரத்தை தவிர்ந்து எதையும் பேசலாம் என வலியுறத்திச் சொல்லியிருந்தான்.

தன்னுடைய காதலை ஒரு கிள்ளுக்கீரை போல யாருமே நினைக்கக்கூடாது என்பதில் உறுதியாகவிருந்தான்.உரிமை என்பதற்குகூட எல்லை உண்டு.உரிமை என்ற ஒன்றினை வைச்சு யாருமே தனது தோள் மீது ஏறி நடக்க அனுமதிக்கக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தான்.

இன்று வெள்ளிக்கிழமை,வெள்ளிக்கிழமைகளில் பாறு ஏதாவது கோவில்களுக்கு கும்பிடப் போவதுண்டா, அவள் வெள்ளிக்கிழமைகளில் எந்தக் கோவிலுக்கு போவாள் என்பதை அறிய வேண்டுமென்று யோசித்தவன் பாறு மார்க்கண்டுவின் தோடட்த்திற்கு போகும்வரை காத்திருந்துவிட்டு,சீனியம்மானின் தேத்தண்ணிக் கடையில்

ஒரு நன்னாரித் தேத்தண்ணிiயும் வாங்கிக் குடிச்சு பொழுதைப் போக்கியவன் வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றான்.

வீட்டுக்குப் பக்கத்து வளவில் வெற்றிலைத் தோட்டமிருப்பதால் தகப்பன் அங்கு வெற்றிலை ஆய்ஞ்சு கொண்டிருப்பதை தாய் மூலம் அறிந்த ஞானம், வெற்றிலைத் தோட்டத்திற்குப் போய் தந்தையுடன் வெற்றிலை ஆயத் தொடங்குகிறான்.

வழமையாகவே ஞானம் சுறுசுறுப்பானவன்தான்.இப்ப பாறுவுடனான காதலும் அவளின் பார்வையும் அவனுக்குள் பெரும் உற்சாகத்தைக் கொடுத்திருந்தது.

ஞானம் தோட்டத்திற்குள் வந்ததும் தகப்பன் ஆய்ஞ்ச வெற்றிலைகளுடன் வீட்டுக்குப் போய் விடுகிறார்.ஞானம் வெற்றிலைத் தோட்டத்திற்குள்ளிருந்த மாற்று வெற்றிலைகளையும் ஆய்ஞ்சு முடித்து விடுகிறான்.வெற்றிலைக்கூடையோடு வீட்டிலை கொண்டு போய் வைச்சிட்டு குளிச்சு மத்தியானச் சாப்பாட்டைச் சாப்பிட்டவன்,கையில் ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு கதிரையில் உட்கார்ந்து படிக்கத் தொடங்குகிறான்.அப்படியே கண்ணயர்ந்து விடுகிறான்.

கண்ணயர்விற்கும் பாறுவின் நினைப்பிற்குமிடையில் அவன் எண்ணமிருந்ததால், செருமல் ஒன்று வரவே திடுக்கிட்டுக் கண்விழித்தவன் நேரம் மூன்று மணியாகிவிட்டதை சுவரிலிருந்தn மணிக்கூடு காட்ட, பாறுவோடு தெல்லிப்பழைக்கு போக வேண்டுமே என்ற அவசரத்தில் முகத்தை கழுவிப் போட்டு சிங்களம் படிப்பதற்கான புத்தகம் கொப்பியை எடுத்தவன்’ அம்மா நான் சிங்களம் படிக்கப் போயிட்டு வாறனம்மா அப்பாட்டைச் சொல்லுங்கோ’ என்று அவன் வெளிக்கிட „’ஞானம் தேத்தண்ணி வைக்கிறன், பகோடாவும் இருக்குது தேத்தண்ணியோடை பகோடாவைச் சாப்பிட்டுப் போ’என்று தாய் சொல்ல, தேத்தண்ணி வேண்டாமம்மா, பகோடாவைச் சுற்றித்தாம்மா நேரம் போயிட்டுது „என்றவன் தாய் பகோடாவை பேப்பரில் சுற்றித்தரும்வரை காத்திருக்காமல், தானே பேப்பரில்

போட்டு பார்சலாக்கி அதையும் சிங்களப் புத்தகம் கொப்பியையும் ஒரு சாக்குத்துணிப் பைக்குள் போட்டு காண்டிலில் கொழுவிக் கொண்டு பாறு வேலை செய்யும் தோட்டத்திற்கு புறப்படுகிறான்.ஞானம் வெற்றிலைத் தோட்டத்திற்குள் வெற்றிலை ஆய்ஞ்ச வேகத்தையும் இப்ப அரக்கப்பரக்க பகோடாவையும் கொண்டு போன வேகத்தையும் கவனித்த தாய் மகனின் நடவடிக்கையிலிருந்த மாற்றத்தைக் கவனிக்கத் தொடங்கினாள்.

மார்க்கண்டுவின் தோட்டத்தில் பார்வதி புல்லுப் பிடுங்குவதும் தலையைத் திருப்பி ஞானம் வருகிறானா எனப் பார்ப்பதுமாக இருப்பதைக் கண்ட நடுகைக்காரிகளில் ஒருத்தியான பூரணி „என்னடி உன்ரை ஆளை கண் தேடுதோ….கவலைப்படாதை காலமை வடைப் பாரசல் கொண்டு வந்து தந்த மாதிரி இப்ப பகோடாவோடை வந்தாலும் வருவார்….இனத்p திண்பண்டத்திற்கு…அவர் உனக்கு ஒரு குறையும் விடார்….நீதான் எப்ப பார் அணில் கொறிச்ச மாதிரி ஏதையாவது கொறிச்சுக் கொண்டிருக்கிறனி….உன்ரை வீட்டுப்படலையடி ஒழுங்கையிலை கச்சான் கடலைக் கோதுகள் இருக்குமே.. „என்று சொல்லிக் கொண்டே தற்செயலாக பூரணியும் திரும்பிப் பார்க்க ஞானம் சைக்கிளில் வருவதும்,கையில் பார்சல் இருப்பதையும் கண்டு விடுகிறாள்.

„ஏய் பாறு காளை வருகிறார் நான் சொன்ன மாதிரி பையிலை போட்டு ஏதோ கொண்டு வாறாரடி „ என்று பூரணி சொல்ல பாறு மட்டுமல்ல நடுகைக்காரிகள் எல்லோரும் திரும்பிப் பார்க்கிறார்கள்.

பாறுவின் முகம் சூரியகாந்திப் பூப்போல பிரகாசமாகிறது.’அவர் இண்டைக்கு ஆனந்தா பேக்கறி முதலாளியின்ரை பொம்பிளைப் பிள்ளையிட்டை சிங்களம் படிக்கப் போறார் பையிலை புத்தகங்களை கொண்டு வருகிறார் என நினைக்கிறன் „ என்று பாறு சொல்லிக்

கொண்டிருக்கும் போதே, ஞானம் சைக்கிளை ஆடுகால் மரத்தோடு சாத்திவிட்டு, நடுகைக்காரிகளை நோக்கிப் போக,இவ்வளவு நேரமும் குண்டி தெரியவும் மண்ணிறக் கோவணம் தெரியவும் வேட்டியை உயர்த்திவிட்டு பிடுங்கின புற்களை அள்ளிக் கொண்டு போய் ஒரே இடத்தில் குவித்துக் கொண்டிருந்த மார்க்கண்டு ஞானத்தைக் கண்டதும் வேட்டியை கீழே இறக்கிவிட்டதை நடுகைக்காரிகள் கவனித்துவிடுகிறார்கள்.

தோடட்டத்தில் வேலை செய்யும் போது ஆண்கள் வெக்கை காரணமாகவும்,வேலை செய்வதற்கு வசதியாகவும் குண்டிக்கு மேலே வேட்டியைச் சிரைத்துவிடடு; வேலை செய்வது வழக்கந்தான்.ஆனால் சில தோட்டக்காரர்கள்; தமது மனைவியுடன் வேலை செய்யும் போது மட்டுமே அப்படிச் செய்வார்கள்.நடுகைக்காரிகள் முன் அப்படிச் செய்ய மாட்டார்கள். சில தோட்டக்காரர் நடுகைக்காரிகள் முன்னால் இப்படி உடையை மேல சிரைத்துவிடுவதும் மட்டுமல்ல நடுகைக்காரிகள் படிக்காதவர்கள் என நினைச்சுக் கொண்டு இரட்டை அர்த்தத்தில் கதைப்பதுமுண்டு.அதைக் கவனிக்கும் நடுகைக்காரிகள் கோபப்படுவதுமுண்டு.மார்க்கண்டுவுக்கு நடுகைக்காரிகள் வைச்ச பெயர் வெருளி மார்க்கண்டு

 

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *