சிங்கப்பூரில் சிலகாலம்!… 20 … (உண்மைக் கதை ) …. ஏலையா க.முருகதாசன்.

சுண்ணாக வம்சாவழிப் பிள்ளை அப்படி என்னதான் கேட்கப் போகிறாள் என்று திகைப்புடனும் ஆவலுடனும் அவளைப் பார்க்க,சொறி, நீங்க உங்க மலேசியன் கேர்ள் பிரண்டை தாலி கட்டி மனைவியாக்கப் போறீங்களாமே, உண்மை லா என்று அவள் கேட்டதும் திகைச்சுப் போயிட்டன்.

இந்த விசயம் இவளுக்கு எப்படித் தெரிந்திருக்கும் என்று மெனமாகி,’இது எப்படி உங்களுக்குத் தெரியுமென்று கேட்க,’ „இன்னைக்கு இன்ரேவல்ல மகேந்திரன் கொபி மிசின்கிட்ட அந்த இரண்டு யங்ஸோட நின்னு பேசிகிட்டு இருக்கப்போ லா உங்களக் காட்டி ஜீஇல வேல செய்யிற அவரோட றிலேசன் கேர்ள் உங்கள கல்யாணம் பண்ணிக்கப் போறான்னு சொன்னார்.லீடர் மகேந்திரனும் ஜோகூர்பாருல இருந்துதான் வர்றவரு லா’.
„நான் நம்பல லா.ஆனால் உங்களுக்கு சாப்பாடு செய்து கொடுக்கிற ஜோகூர்பாரு கேர்ள்தானு கெஸ் பண்ணிட்டன்.எனக்கு ஒன்னும் புரியலை.உங்களுக்கு ஊரில மனைவி பிள்ளைங்க இருக்கத்தக்கதா நீங்க இன்னொரு பெண்ணுக்க தாலி கட்டிறது சரியில்லீங்க லா’.
„இன்னொன்னு அம்மா சொன்னா தெல்லிப்பழை ஊரில மகாஜன கொலிஜ் கிழக்குப் பக்கத்தில எங்களோட றிலேசன் இருங்காங்குன்னு, அதான் நீங்ககூட எங்களோட றிலேசனா இருக்கலாமோன்னு நினைக்கிறாங்க லா’.
„இத நான் எப்படி அம்மாகிட்ட சொல்றதுன்னு தெரியல.நீங்க என்ன நினைக்கிறீங்களோ தெரியாது.ஆனா என்னோட ஒப்பினீயன் நீங்க தப்புப் பண்றீங்கன்னு தோனுது என்றாள்’.
என்னால் எந்தப் பதிலும் சொல்ல முடியவில்லை.அமைதியாக இருந்தன்.பஸ் வர மூவரும் பஸ்ஸில ஏறினோம்.யூரோங் இன்ரர்சேன்ஜ் போய்ச் சேரும் வரை அந்தப் பிள்ளை என்னைத் திரும்பிப் பார்க்கவும் இல்லை
மனித வாழ்க்கையில் பல எதிர்பாராத சம்பவங்கள் நடப்பது உண்டு.சில சம்பவங்கள் இரண்டு மூன்று தலைமுறைகளுக்குப் பின்னரும்கூட ஒரே விதமான ஒத்த சம்பவங்கள் நடப்பதுண்டு என்று சிலர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறன்.
நான் யோகமலருக்கு தாலிகட்டப் போகிறன் என்ற விடயம் எவர் எவருக்கெல்லாம் தெரிந்திருக்கின்றது. ஐந்து நாட்களில் மட்டுமே பழக்கத்திற்கு உட்பட்ட சுண்ணாக வம்சாவழிப்: பெண்ணுக்கே தெரியும் என்ற நிலைக்கு வந்துவிட்டது.
எற்கனவே யோகமலருக்குத் தாலிகட்டப் போகிறேனே எனக் குழம்பியும்,நடக்கிறது நடக்கட்டும் என்ற இரு மனநிலையிலிருக்கும் எனக்கு
மொலக்கசில் வேலை செய்கிற மலேசியனான மகேந்திரனுக்கும் தெரிந்திருக்கிறதே, அப்படியானால் யோகமலரின் உறவினர்களுக்கிடையில் இது ஆலோசிக்கப்பட்டிருக்குமோ என எண்ணினன்.
சுண்ணாக வம்சாவழிப் பெண்ணின் தாய் தங்களுடைய உறவினனாக நானிருப்பேனோ என ஊகிக்கத் தொடங்கியுள்ளார்.
இந்தப் பிள்ளையும் யோகமலருக்கு தாலிகட்டும் விடயத்தை தாயாருக்குச் சொன்னாலும் சொல்லலாம். நான் கல்யாணம் செய்து மனைவி பிள்ளைகள் ஊரிலிருக்கிறார்கள் என்ற விபரத்தையும் சொல்வாளானால் அவர் நமக்கென்ன என்று பேசாமலும் இருக்கலாம்,இல்லாதுவிட்டால் சுண்ணாகத்தில் உள்ள உறவினர்களுடன் தொடர்பு கொண்டு என்னைப் பற்றிய விபரத்தையும் அறிய முற்படலாம்.
நான் சிங்கப்பூருக்கு வந்தது.யோகமலர் என்னை விரும்பியது.அவளிடமிருந்து விலகுவதற்காக ஜிஇயே என்னிடம் ஏதாவது பிழையைக் கண்டுபிடித்து என்னை ஊருக்கு அனுப்பி வைக்காத என ஏங்கியது, நாளடைவில் அவளின் விடாப்பிடியான காதல் என்னையும் அவளைக் காதலிக்க வைச்சது.புருசன் பெண்டாட்டி என்ற நிலைக்கு எங்கள் இருவரையும் கொண்டு சென்றது, இப்பொழுது மொலக்சில் லீடராக இருக்கும் மகேந்திரனுக்குக்கூட இது தெரிஞ்சிருக்கிறதே என்று எண்ணிய போது நாளடைவில் சிங்கப்பூரில் நான் ஒரு பெண்ணுடன் வாழும் வாழ்க்கையை மனைவி அறிந்துவிடுவாளோ என்ற பயம் அச்சமாக மாறியது.
பலவிதமான யோசனையில் மூழ்கியிருந்த நான் யூறோங் இன்ரர்சேன்ஜ்ஜை பஸ் வந்தடைந்ததும் இறங்குவதற்காக எழுந்த போது குட்பை என்று என்னைப் பார்த்து சொன்ன அந்த இருபிள்ளைகளும் பஸ்ஸைவிட்டு இறங்க நானும் அவர்கள் பின்னால் இறங்கினன்.
அவர்கள் தாம் அடுத்து எடுக்க வேண்டிய பஸ்ஸை நோக்கிப் போனார்கள்.சுண்ணாக வம்சாவழிப் பிள்ளை ஒருமுறை திரும்பிப் பார்த்துக் கையைக் காட்டியபடியே தோழியுடன் நடந்து கொண்டிருந்தாள்.
பூன்லேறைவுக்குப் போக வேண்டிய பஸ் புறப்படுவதற்குத் தயாரா நின்ற போது ஓடிப் போய் ஏறினேன்.மீண்டும் யோசனைச் சுழிக்குள் அகப்பட்டுக் கொண்டன்.
நீங்கள் விரும்பினால் எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து தொடர்ந்து வேலை செய்யலாம் அதைப்பற்றி யோசியுங்கள் என இருமுறை மகேந்திரன் சொன்னது தனது உறவுக்காரப் பெண்ணுக்கு தாலி கட்டுவதுன் மூலம் தனக்கு நான் உறவாகிறேன் என்ற நலன் சார்ந்துதான் அப்படிக் கேட்டாரா எனவும் மனம் யோசித்தது.
குழப்பமான யோசனை ஒருபுறம் இருந்தாலும் யோகமலர் ஜோகூர்பாருவிலிருந்து அவள் சொன்ன பஸ்தரிப்பு நிலையத்தில் அவள் வந்து
இறங்கு முன்பு அங்கு போய்விட வேண்டும் என்ற எண்ணத்தடன் பூன்லேறைவ்வைச் சென்றடைந்த நான் பஸ்ஸைவிட்டு இறங்கி வேகமாக வீட்டை நோக்கி நடந்து கொண்டிருந்தன்.
மனதை ஒருநிலைப்படுத்த முயற்சித்து இனி நடக்கிறது நடக்கட்டும் எல்லாத்துக்கும் பயந்து கொண்டிருக்கக்கூடாது.
முழுக்க நனைஞ்சதற்குப் பிறகு முக்காடு போட்டென்ன விட்டென்ன, எவர் எது கேட்டாலும் அதுதான் என்னுடைய விதி நான் என்ன செய்யிறது என்று விதியின் மேல் பழியைப் போட வேண்டியதுதான் என மனதைச் சமாதானப்படுத்தினன்.
வீட்டுக்குப் போனதும் வேகமாக குளிக்கத் தொடங்கினன்.குளித்துக் கொண்டிருக்கும் போது ஒருவருக்கு எத்தனை மனைவி அமைவார்கள் என்பதை வலது கையில் உள்ள சின்னிவிரல் வரம்பில் அறியலாம் எனச் சிலர் சொல்வதை அப்பப்ப கேள்விப்பட்டிருந்தன்.அது ஞாபகத்துக்க வரவே சின்னிவிரல் வரம்பைப் பார்த்தன் இரண்டு கோடுகள் தடிப்பாகவும் ஆழமாகவும்; தெரிந்தன. அதைவிட மூன்று கோடுகள் மிக மெலிதாகத் தெரிந்தன.
ஒரு வேளை இந்த தடிச்ச இரண்டு கோடுகளும் மனைவியும் யோகமலருமோ என யோசித்த நான் ஒருவேளை இருக்கலாம் எனக்கு இரண்டு மனைவிகள் என்பது விதியென்றால் அதை யாராலைதான் மாற்றமுடியும் இனி இதைப் பற்றி மனதைப் போட்டு குழப்பத் தேவையில்லை நடக்கிறது நடக்கட்டும் என்று எண்ணிக் கொண்டன்.
குளித்திட்டு வந்து உடுப்பை மாற்றும் போதுதான், நேற்றிரவு மகேந்திரன் என்வலப்போடு தந்த பணத்தை எடுத்து எண்ணிப் பார்த்தன் ஐந்நூறு சிங்கப்பூர் டொலர்கள் இருந்தன.
எனது கணிப்பின்படி முன்னூற்றி ஐம்பது சிங்கப்பூர் டொலர்களே சம்பளமாக கிடைக்குமென்று நினைத்திருந்தன்.ஒரு வேளை மகேந்திரன்தான் இதற்கும் காரணமாக இருக்குமோ என்று நினைத்த நான் எனக்கு மொலக்ஸ் வேலைக்கு சிபார்சு செய்து உதவிய ஜிஇ லீடரான சைனீஸ் நண்பரை நினைத்து அவருக்கு மனதால் நன்றி செலத்தினன்.
எப்படியும் இன்று படத்துக்கும் சாப்பாட்டுக்குமாக நாலு பேருக்கும் நூறு டொலராவது செலவு ஏற்படலாம் என்று நினைத்த நான் மிகுதி நானூறு டொலரையும் மனைவிக்கு அனுப்பிவிட வேண்டுமென்ற முடிவான எண்ணத்துடன் யோகமலர் வந்திறங்குவதாகச் சொன்ன பஸ்தரிப்பு நிலையம் இருக்கும் இடத்துக்குப் போவதற்கு முதலில் யூரோங் இன்ரர்சேன்ஜ் பஸ் தரிப்பு நிலையத்துக்குப் போய் அங்கிருந்து இன்னொரு பஸ்ஸை எடுக்க வேண்டும் என்ற யோசனையுடன் பஸ் தரிப்பு நிலையத்தை நோக்கி நடக்கத் தொடங்கினன்.
சில நாட்களுக்கு முந்தி, உங்களுடைய சலறி முழுவதையும் அக்காவுக்கு அனுப்புங்கள். அதிலையிருந்து ஒரு சதமும் உங்களுடைய செலவுக்கென்று எடுக்க வேண்டாம் உங்களுடைய செலவுக்கு நான் பொறுப்பு என்றவள் எனது பேர்சை வாங்கி அதற்குள் முன்னூறு டொலர்களை வைச்சுவிட்டிருந்தாள்.
பேர்சைப் பார்த்த போது அந்தக் காசில் மிகுதி இன்னும் இருநூறு டொலர்கள் இருந்தன.அந்தக் காசு பட டிக்கற்றுக்கும் சாப்பாட்டுக்கும் போதுமென்று நினைச்சக் கொண்டே நடந்து யூரோங் இன்ரர்சேன்ஜ்யுக்கு போகும் பஸ் தரிப்பு நிலையத்துக்குப் போய் அங்கு நிற்க அந்த இடத்தால் வந்த நாங்கள் இருந்த பில்டிங்கு எதிர் பில்டிங்கில் இருக்கும் விமலா „ எங்கை போறீங்கள் „ என்று கேட்க படத்துக்குப் போறன் என்று நான் சொல்ல, தனியாகவா போறியள் என்று கேட்டாள்.
மச்சாளின் மகளுடன் போறன் என்று சொல்ல, எனக்கு முன்னமே தெரிஞ்சு இருந்தால் நானும் உங்களுடன் வந்து மச்சாளின் மகளையும் கூட்டிக் கொண்டு போகலாம் ஆனால் எனக்குத் தெரியாமல் போச்சுது என்றாள்.
பிரச்சினை இல்லை இப்பவும் வரலாந்தானே என்றன். நான் வரேலை வேறை ஒரு இடத்துக்குப் போறன் என்றாள்,அது சரி மச்சாளின் மகளென்றது அன்றைக்கு வந்தவதானே என்று விமலா கேட்டார்.அவாதான்; என பதில் சொல்ல உங்களைப் பற்றி ஒரு கதை அடிபடுது நீங்கள் கோயில்ல வைச்சு யாரோ மலேசியன் கேர்ளுக்கு குங்குமம் வைச்சுவிட்டனீங்களாம்,அந்தக் கேர்ளைக் கல்யாணம் பண்ணி மலேசியாவிலிருக்கப் போறியளாம் உண்மையா என விமலா கேட்க அது கட்டுக்கதை அப்படி ஒன்றுமில்லை என்று முகத்தில் எந்த மாற்றத்தையும் காட்டிக் கொள்ளாமல் சொன்னன்.
நாமிருவரும் பேசிக் கொண்டிருக்கும் போதே பஸ் வர ஏறிக் கொண்டோம்.இன்ரர்சேன்ஜில் இரண்டு பேரும் இறங்கி வாறன் என்று விமலாவுக்கு சொல்லிவிட்டு நான் போக வேண்டிய பஸ் நிற்கும் இடத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தன்.விமலா எந்த பஸ்சுக்குப் போறார் என்பதை நான் கவனிக்கவில்லை.
அடுத்து பஸ்ஸை எடுத்து யோகமலர் சொல்லியிருந்த பஸ்தரிப்பு நிலையத்தில் இறங்கி நின்றன்.ஐஞ்சு நிமிசம் சென்றிருக்கும் ஜோகூர்பாருவிலிருந்து வரும் பஸ் வந்து நின்றது.அதிலிருந்து யோகமலரும் இன்னொரு பெண்ணும் இறங்கினார்கள்.அந்தப் பெண் யோகமலரின் தோழியாக இருக்க வேண்டும்.அவரை முதன்முதலாக அனறைக்குத்தான் பார்த்தன்.ஜிஇயில் வேலை செய்கிற தோழிகள் அல்ல இவர்.
சிரித்த முகத்துடன் வந்த யோகமலர் நான் கொடுத்த கம்பாயத்தைப் போட்டிருந்தாள்.அந்த உடையில் மிக அழகாக இருந்தாள்.தனது தோழியை „இவள் என்னோட சின்ன அண்ணியோட மருமகள் படிச்சுக் கொண்டிருக்கிறாள் என்று அறிமுகம் செய்து வைக்க, அந்தப் பிள்ளையும் கலோ சொல்லி கைலாகு தந்தாள்.
யோகமலர் தனது கைப்பைக்குள்ளிருந்து கம்பாயம் உடுத்து எடுத்த எனது மனைவியின் புகைப்படத்தை எடுத்து எனது மனைவி தனது தலைமயிரை ஒருபக்கமாக முன்னுக்கு எடுத்துவிட்டது போன்று தனது தலைமயிரை முன்னுக்கு விட்டிட்டு „ இங்க பாருங்க அக்காமாதிரி இருக்கேனா’ என்று ஆசையாக கேட்டாள், „அப்படித்தான் இருக்கிறீர்கள்’ என பதில் சொல்ல அவள் பூரிப்படைவது முகத்தில் தெரிந்தது.
யோகமலரின் தோழி எங்களிருவரையும் ஒன்றாக நிற்கச் சொல்ல யோகமலர் வழமை போல தனது கைகளை எனது கைக்குள் செருகி மற்றக் கையால் எனது மனைவியின் படத்தை தனது மார்போடு வைத்து பிடித்தபடி தலையை எனது தோளோடு சாய்த்து நிற்க அவளுடைய தோழி தனது பொக்கற் கமராவால் படம் எடுத்தாள்.
ரோப்பாயோவில்தான் மச்சாளின் மகள் இருப்பதால் ரோப்பாயோ போகும் பஸ்ஸில் ஏறிப் போய்க் கொண்டிருந்தோம்.பஸ்ஸிக்குள் எனக்கருகில் இருந்த யோகமலரிடம் „நான் உங்களுக்குத் தாலிகட்டப் போற விசயம் மொலக்ஸ் லீடர் மகேந்திரனுக்கும் தெரிந்திருக்கிறதே எப்படி அவருக்குத் தெரியும்’ என்று கேட்டன்.
அவளும், „அப்படியா எனக்கும் எங்க றிலேசன் எல்லாரையும் தெரியாதுங்க,சத்தியமாக தெரியாதுங்க என்ன நம்புங்க என்று தோளில் சாய்ந்தவள், விட்டுடுங்க அதைப் போய் மனதில போட்டு குழப்பாதீங்க „என்றாள்.
மொலக்சில் ஐந்நூறு டொலர் சலறியாகக் கிடைத்ததைச் சொல்ல, முழுச்சலறியையும் அக்காவுக்கு அனுப்புங்க என்றவள் என்னைக் கேட்காமலே எனது காற்சட்டைப் பின் பொக்கற்றுக்குள்ளிருந்து பேர்சை எடுத்து தனது கைப்பையைத் திறந்து அதிலிருந்து டொலர்களை எடுத்து பேர்சுக்குள் திணித்தாள்.
உங்களுடைய சலறியை வீட்டுக் குடுக்க மாட்டீங்களா என்று கேட்க,இல்லைங்க கொடுப்பதில்லை. என்னுடைய மன நிம்மதிக்காக நான் வேலைக்குப் போறதால சலறியைப் பற்றி அப்பா அம்மா எதுவும் கேட்பதில்லை.உங்களைச் சந்திச்சதற்குப் பிறகு எனது போக்கே மாறியதால அவங்க நிம்மதியானாங்க ,அம்மா சொன்னாங்க உன்னோட ஆளோட சலறியிலை உனக்குச் செலவு செய்ய விடாதை, அதை அவரு ஊருக்கு அவரோட மனைவி பிள்ளைங்களுக்கு அனுப்பட்டும்.
உன்னோட சலறியிலிருந்து அவரோட செலவுக்கு கொடு,அதுவும் நீ கொடுத்து அவர் கைநீட்டி வாங்குவது போல நடந்து கொள்ளாதை அவரோட பேர்சை வாங்கி அதற்குள் வை என்றாங்க’
ஏன்னா ஒரு பெண்ணிடம் பணம் கைநீட்டி வாங்க அவரு விரும்பமாட்டாரு என்றவளின் கண்கள் கலங்க எனக்கு மட்டுமே கேட்கத்தக்கதாக என்னோட இருபத்தேழாவது வயதில கடவுள் உங்களை எனக்குக் காட்டியிருக்கிறார் என
முகம் சிவந்தவள்,உங்கள் தோளில சாய்ந்திருக்கிற இந்த நிமிடம் எனது உயிர் போக வேண்டுமென்று ஆசைப்படுறங்க.ஆனா உங்களுக்கு என்னால தரக்கூடிய சந்தோசத்தை தந்திட்டு அடுத்த நிமிடமே இறக்க ஆசைப்படுகிறேங்க என்றவளின் கண்ணீரைத் துடைத்து ஆறுதல் படுத்தினன்.
பத்து நிமடங்களில் பஸ் ரோபாயோவில் மச்சாளின் மகளிருக்கும் கட்டிடத்துக்கு முன்னால் உள்ள பஸ்தரிப்பு நிலையத்தில் நிற்க, நாங்கள் மூவரும் இறங்கி இரணடாவது மாடியில் உள்ள அவளின் வீட்டுக்கு லிப்டில் போய் அறைக் கதவைத் தட்ட அவள் திறந்தாள்.
என்னோடு யோகமலரும் அவளின் தோழியும் வருவாள் என்பதை அவள் எதிர்பார்க்கவில்லையாதலால் கம்பாயம் போட்டிருந்த யோகமலரைப் பார்த்தவள் ஆச்சரியத்துடன் „உள்ளை வாங்கள் „ என்றாள்.மச்சாளின் மகள் கறுப்பு ரைற் ஸ்கேர்ட்டும் பிங் கலர் பிளவுசும் போட்டிருந்தாள்.கைகீல்சுடன் நின்றிருந்தாள்.
இருங்கள் என்றவள் ரீ குடிச்சிட்டு போவம் என்று அடுப்படிக்குள் போனாள்.எனது காதில் யோகமலர் „உங்க மச்சாளின் மகள் வெறி ஸ்மார்ட் கேர்ள்’ என்றாள்.அவள் கேர்ள் இல்லை பமிலி வுமன் என்றன்.
„யாரு இவங்க என்று யோகமலரின் தோழி கேட்க என் புருசனோட கசினோட மகள்’ என்றாள் யோகமலர்.அது அவளுக்கு அப்படியே கேட்க என்னையே உற்றுப் பார்த்தபடியே கோப்பிக் கோப்பைகளை தந்தவளிடம்’ நீங்க ரொம்ப சிமார்ட்டா இருக்கிறீங்க „ என்று மச்சாளின் மகளைப் பார்த்து யோகமலர் சொல்ல அப்படியா என்று குதூகலித்தாள் மச்சாளின் மகள்’ நீங்களும் கம்பாயத்தில் சுப்பராயிருக்கீங்க’ என்றவள் யோகமலர் தனது உச்சிநெற்றியிலும் நடு நெற்றியிலும் குங்குமம் வைச்சிருப்பதை குத்திட்டுப் பார்த்து என்னையும் பார்த்தாள்.
மச்சாளின் மகள் தனது நெற்றியைக் கவனித்த யோகமலர் எனது மனைவி அனுப்பிய புகைப்படத்தை தனது கைப்பைக்குள்ளிருந்து எடுத்து „ அக்காவும் என்னோட கம்பாயம் மாதிரித்தான் போட்டிருக்கா’ என்று சொல்லி மச்சாளின் மகளுக்கு யோகமலர் காட்டினாள்.
(தொடரும்)
![]()