கதைகள்

பாலை_நிலா!…. 01….. ( நாவல் )….. க. ஷியா.

பொத்தி வைத்த இருளில் நாற்சுவர் ஊரும் மின்மினிகளாக மின் விளக்குகள் வான் நிலவை பாலையில் பரப்பி வைத்த பகல் போல காட்சி தருகிறது. கையிலொரு பையும், கண் நிறைந்த தூக்கமும், கூடவே தரந்தரமாகக் குமரிகளும், குடுகுடுக்காக் கிழவிகளும் நாற்பது, நாற்பத்தைந்தைத் தாண்டிய வயதிருக்கும். ஆடு மாடுகளைச் சாய்ப்பதைப் போல் சாய்த்துக் கொண்டு ஒரு அறையில் தள்ளி இரு பெண் காவலாளிகள் வாயிலில் நின்று கொண்டு காவல் காக்க மணி எப்படியும் நள்ளிரவு மூன்று, மூன்றரை இருக்கும். நீண்டதொரு நெடும் அறையது. உள்ளே நுழைகிறாள் கதீஜா. அங்கு பல வகையான பெண்கள். பல மொழிகளில் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அங்கு போடப்பட்டிருந்த படுக்கைகளில் பலர் இடம் பிடித்துத் தூங்கிக்கொண்டிருந்தனர்.
மலசலகூடம் செல்ல வேண்டிய தேவையேற்படவே கதீஜா உடன் வந்த ஒரு பெண்ணின் உதவியோடு அங்கு செல்கிறாள். சென்றதும் அங்கு இருந்த அசிங்கங்களைப் பார்த்து வாந்தி எடுத்தபடி ஓடி வருகிறாள். ஓடி வந்தவளோ
“” என்டல்லா இதென்ன ஆடு மாடு அடைக்கிறமாதிரி அடைத்து வைத்திருக்கிறார்கள். இவ்வளவு நரகலாக் கிடக்கு மனுசன் எப்படி இதுக்குள்ள இரிக்கிறது இன்னும் எவ்வளவு நேரம் இங்கு இருக்கனும் சகோதரி “””
என்று உடன் வந்தவளிடம் கேட்கவே அவளும்.
“”” உரியவர்கள் வரும் வரை இங்கு தான் கிடக்கனும் தங்கச்சி ஏதாவது சாப்பிட்டிங்களா இரவு”””
என்று கேட்டாள். அதற்கு கதீஜாவோ
“” நேற்று காலையில் ஃபிளைட் எனக்கு பின்நேரம் என்று நினைக்கிறேன் ஓமானில் இறக்கி விட்டான். நாங்கள் மூன்று பெயர் அதில் கட்டார் போறவங்க ரெண்டு பேர் இலங்கை காசு ஆயிரம் ரூபாய் கெடுத்தேன் ஒரு கும்பச் சாப்பாடு தந்து மிச்சம் இந்த சதமும் தந்தான் அப்ப சாப்பிட்டதுதான் பிறகு இன்னும் இல்லை””””
என்று கதீஜா கூறவே
“”” அது சரி “””
என்றாள் உடனிருந்தவள். இப்படியே சிறிது நேரம் கழிந்தது. வாயிலில் காவலுக்கு இருந்து இரு காவலாளிப் பெண்களும் சில வினாடிகளுக்கு ஒரு முறை பெயர்களை அழைத்து ஒவ்வொருவராக வெளியே விட்டனர். அப்போது பக்கத்தில் இருந்தவர்களிடம் கதீஜா ஏன் என்று விபரம் கேட்கவே. உடனிருந்தவள்
“” தங்கச்சி இதுதான் முதல் தடவையா “”
என்றாள் அவளுக்கு பதில் தரும் விதமாக கதீஜா
“” ஓம் அக்கா இப்பதான் முதல்முதலாக வருகிறேன் கொஞ்சம் பயமாகத்தானிருக்கிறது””””
என்றாள். அதற்கு உடனிருந்தவர்களோ….
“”” அது ஒன்றும் இல்லை தங்கச்சி உரியவங்கட பாஸ் கூட்டிப் போக வந்து இருப்பார்கள் அதுதான் உரிய உரியவர்களைப் பெயர் கூப்பிட்டு அனுப்பி வைக்கிறாங்க உங்கட பாஸ் வந்தால் உங்களையும் கூப்பிடுவாங்க”””
என்றார்கள். அங்கிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களில் கதீஜாவும் ஒரு சிறுவயதுப் பெண் முதல்முறையாக வெளிநாடு செல்கிறாள் ஆகையால் எல்லோரும் அவளோடு அன்பாகப் பேசினார். பல நகைச்சுவைகள் அரங்கேறியது. பல சிரிப்பொலிகள் அடைக்கப்பட்டிருந்த சுவர்களில் மோதித் தெரித்தது. அதில் ஒரு பெண் சொல்கிறாள்.
“”இங்க பாருங்க பிள்ளைகள் தாய் மண்ணை விட்டு வந்தாச்சு இனிச் சிரிக்கிற கதைக்கிற எல்லாத்தையும் இங்கயே செய்துக்கோங்க இனிச் சந்தர்ப்பம் கிடைக்குமோ தெரியாது”””
என்கிறாள். கதீஜாவுக்கோ பக்கென்றாகிறது. ஏனிப்படிச் சொல்கிறார் இந்தப் பெண் என்று அவள் அப்படிக் கூறியதற்குக் கதீஜாவுக்கோ அப்போது அர்த்தம் புரியவில்லை. இப்படியே சில மணி நேரங்கள் அந்த விமான நிலைய அடைபட்ட அறையினுள் கழிகிறது. பலரும் அங்கிருந்து விடைபெற்ற நிலையில் காவலாளிகள் ஒருவளான அந்த அரபியப் பெண் அழைக்கிறாள்.
“”” கலந்தர் கதீஜா சிறிலங்கி, கலந்தர் கதீஜா சிறிலங்கி”””
என்று அதற்கு கதீஜா எழுந்து நிற்கவே உடனிருந்தவள் உன்னை அழைக்கிறார்கள் உங்கள் முதலாளி வந்துட்டார் போல என்று கூறும் போதே மீண்டும்
“”” யா….. உம்பறி தாலி சுறா “””
என்று ஒரு சத்தம் வருகிறது கதீஜா பாஷை தெரியாமல் முழிக்க உடனிருந்தவள்
“”” உசிரே சீக்கிரம் வா என்று கூப்பிடுகிறார்கள் போங்க பாக்கச் சின்னப் பிள்ளையா இருக்கிங்கதானே அதுதான் அவளுக்கு இரக்கத்துல இப்படி கூப்பிடுறாள் நல்ல படியாக போய் வாங்க”””
என்று கூற அவர்களிடம் விடைபெற்றவளாக அந்த அறையில் இருந்து வெளியேறிய கதீஜாவை சோதனை செய்வோர் சோதித்து அரபியில் ஏதோ சொல்லி ஒருவரைக் காட்டவே அவள் நின்று முழுசுகிறாள். அதற்கு அங்குள்ள பொலிஸ்.
“”” யா….. கதீஜா ஹாதா இந்தி பாபா, பாபா மாபி மாலும் பாஸ் பாஸ்
( அது உன்னுடைய பாஸ்) go go”””
என்கிறார். பின்னர் அங்கு செக்கச்செவெனு நின்றிருந்த ஒரு அரபியிடம் கதீஜாவின் கடவுச்சீட்டுப் புத்தகம் ஒப்படைக்கப்பட்டது. உடல் பாஷையால் அந்த நபர் கதீஜாவைத் தனது வாகனத்தின் அருகே கூட்டிச் சென்று வாகனக் கதவைத் திறந்தார்.
ஓங்கி உயர்ந்த வெள்ளையான கொஞ்சம் மாறு கண்கள் கொண்ட தாடியும் தலைப்பாகையுமாக முழு நீள வெள்ளை ஆடையில் காட்சியளித்த அந்த அரபி கதீஜாவை வாகனத்தருகே அழைத்துச் சென்று கதவுகளைத் திறந்து விட்டதும் கதீஜா சற்று நிலை குலைந்து ஆற்றங்கரைச் சதுர்ப்பு நிலம் போலானாள். அவள் மனது அச்சதுர்ப்பு நிலத்தில் ஆடு மாடுகள் நடந்து துவைத்து விட்ட தொம்பல் போலானது. திகைப்பின் உச்சியில் நின்றவளிடம் அந்த அரபி தனது வாய் மேலும் கை வைத்து
“”” ஊஸ்………””””
என்றபடி அமைதியாக உள்ளே ஏறிக் கொள் என்று செய்கை காட்டவே வைக்கோல் பரவி விட்டது போல் கம்பளங்களைப் பரவி வைத்திருந்த அந்த வண்டியினுள் ஏறச் சென்றாள். அப்போது அந்த அரபி அவளை அழைத்து உன்னுடைய எஜமானி இருக்கிறார் அவருக்கு வந்து சலாம் சொல்லிவிட்டு வண்டியில் ஏறு என்று புரிந்தும் புரியாத ஆங்கிலத்தில் அவளிடம் சொல்லவே வண்டியின் முன் பக்கக் கதவினுள் நுழைகிறாள் கதீஜா அப்போது முழுதாக கறுப்பு அங்கியில் போர்த்திய படி அந்த எஜமானி அமர்ந்து இருந்தாள் அவளுக்கு சலாம் கூறிக் கைகளை நீட்டவே அவளும் பதில் சொல்லி வரவேற்றவளாக வண்டியில் ஏறும்படி செய்கை செய்தாள்.
கதீஜாவும் பின் பக்கக் கதவுகளால் அந்தக் கருப்பு நிற வண்டியில் ஏறினாள். அப்போது அங்கு வைக்கோல் கட்டுகளைப் பிரித்துப் போட்டது போல் கிடந்த கம்பளிகளுக்குள் ஊற்றையும் அழுக்கும் பூசிய முகங்களோடு ஒரு ஒரு வயதால் சிறிதும், பெரிதுமாக ஐந்து குழந்தைகள் உறங்கிக்கொண்டு இருந்தது. கண்டு கதீஜா திமிர்த்துப் போனாள். அப்போது அவள் மனதுக்குள் ஊரில் உள்ளவர்கள் சொன்ன கதைகள் எல்லாம் நினைவுக்கு வருகிறது.
“”” என்டல்லா இதென்ன சோதனை ஐந்து பிள்ளைகளா அதுவும் பத்து வயசுக்கு கீழதானே எல்லாம் இருக்கும் ஊருல எல்லாரும் சொல்லுவாங்களே அரபிட பிள்ளைகள் மிகவும் கொடுமைக்காரப் பிள்ளைகள் என்று எனக்கு ஐந்து பிள்ளைகளைப் பார்த்துக் கொள்ளும் வேலையா இப்ப இறங்கிட்டு ஓடி விட முடியாதா என்னால் “”””
என்று மனதிற்குள் அடித்துக் கொள்கிறாள் இத்தனைக்கும் அவளுக்கு வயது இருபத்து ஆறு ஆகிறது. குழந்தைகள் வளர்ப்பதில் அவ்வளவு அனுபவசாலி எல்லாம் இல்லை. ஆனாலும் குழந்தைகள் மீதான அவளது அன்பு தனிரகம்தான்.
பலதையும், பத்தையும் யோசித்துக்கொண்டு சிந்தனைச் சிறகில் கண்ணீர் பனித்தவளிடம் அவளது அரபி கேட்கிறார் கதீஜா உன் வீட்டுக்கு சொல்லிவிட்டாயா நீ வந்து சேர்ந்து விட்டாய் என்று. என்றது அவளுக்கு புரியாமல் முழித்தாள் அப்போது அந்த அரபி
“”” யு நொட் அந்தர்ஸ்தன்ந் அரபிக் “””
என்று கேட்டபடி தனது தொலைபேசியை நீட்டி சிறிலங்காவில் உள்ள உறவுகளுக்கு கோள் பண்ணி பேசு என்று நீட்டவே அவளும் ஆவலோடு வாங்கி தனது சகோதரிக்கு அழைப்பு எடுத்து தான் வந்து சேர்ந்து விட்டதாகவும் தற்போது முதலாளியுடன் காரில் பயணத்தில் இருப்பதாகவும், சொல்லி மீண்டும் அழைப்புத் தருகிறேன் என்று தொடர்பைத் துண்டித்தாள் கதீஜா.
சிறிது நேரம் கழித்து அவள் அருகில் தூங்கிக் கொண்டிருந்த அந்த அரபியின் கடைசிக் குழந்தை எழுந்து அழ ஆரம்பித்தது. உடனே அந்தக் குழந்தையை நோக்கி கைகளை நீட்டினாள் கதீஜா அதுவும் அவளிடம் ஒட்டிக் கொண்டது. அதனைப் பார்த்து அவளது எஜமானி சிரித்தபடி எஜமானனிடம் காட்டி ஏதோ பேசிக் கொண்டாள் வண்டியும் ரியாத்தில் இருந்து அல் கத்தானி நோக்கி ஓடிக் கொண்டிருந்தது. அது ஓடும் வேகத்தை முந்திக்கொண்டு கதீஜாவின் மனதிற்குள் பயமும் புகுந்து கொண்டது.
ஒளிரும்…….
க.ஷியா

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button