கதைகள்

நடுகைக்காரி!…..தொடர் 9 ….. ( குறுநாவல் ) …. ஏலையா க.முருகதாசன்.

தொடர் 9

ஞானத்தின் பெற்றோருக்கு பிள்ளைகளின் குணாம்சங்கள் நன்றாகவே தெரியும்.அவர்களில் கடைசிப் பிள்ளையான ஞானசெல்வத்தின் குணத்தை யாராலுமே இவன் இதுதான் என்று எடை போட முடியாது.

மதகில் இருந்து அரட்டை அடிக்கும் போது வாய்விட்டுப் பலமாகச் சிரிக்கும் ஞானத்தை சீனியம்மானின் தேத்தண்ணிக் கடையில் தோசையும் சுண்டலும் நன்னாரித் தேத்தண்ணியும் குடிக்கும் போது பார்க்க முடியாது.

நூல்களையும், சஞ்சிகைகளையும் பத்திரிகைகளையும் வாசிப்பதில் அவன் காட்டும் ஈடுபாடும் ஆர்வமும் அவனுடைய நண்பர்கள் பலரை வாசகர்களாக மாற்றியிருக்கின்றது.

ஆங்கில மொழியிலேயே முழுப் பாடங்களையும் படித்து, அவனின் தந்தை வயதிலிருக்கும் ஆசிரியர்கள் மற்றும் அரசாங்கப் பணிகளில் இருப்போரால்கூட அவனைப் போல ஆங்கிலத்தை அழகாக உச்சரிக்கவே முடியாது.

சீனியம்மானின் தேத்தண்ணிக் கடையில் வலது கையால் சாப்பிட்டுக் கொண்டே இடது கையால் டெயிலிநியூஸ் பத்திரிகைச் செய்திகளை வாசித்துவிட்டு அதன் விளக்கத்தைச் சீனியம்மானுக்குச் சொல்லுவான்.

அவன் தான் மட்டுமல்ல தனக்கிருக்கும் மூன்று நண்பர்களும் ஆங்கிலம் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதற்காக கிழமைக்கு ஒருநாள் தனது வீட்டில் வைத்து ஆங்கிலம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தான்.

அவனோடு அவனுடைய நண்பர்கள் ஒன்றாக இருந்து தேத்தண்ணிக் கடைகளில் தேத்தண்ணி குடிக்கும் போது

அவர்களுடன் ஆங்கிலத்தில் உரையாடி காரசாரமாக விவதிப்பான்.

நீங்கள் பேசும் ஆங்கிலம் சரியா பிழையா இலக்கணச் சுத்தமாக இருக்கின்றதா இல்லையா என்பதைவிட கூச்சப்படாமலும் பயப்படாமலும் மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்ற தயக்கமோ தாழ்வு மனப்பான்மையோ இருக்கவே கூடாதென்பான்.அவன் கொடுத்த உற்சாகமான வார்த்தைகளால் அவனுடைய நண்பர்களையும் ஆங்கிலத்தில் பேச வைத்தான்.

நாங்கள் விலாசத்திற்காக ஆங்கிலத்தில் கதைக்கவில்லை.அந்த மொழி எமக்குப் பரிச்சயமாக வேண்டும் என்பதற்காகவே கதைக்கிறோம் என்பான்.

அவனுக்குச் சிங்களமும் தெரிந்திருக்க வேண்டுமென்று ஆசைப்பட்ட போதுதான் அம்பனைச் சந்தியடியில் உள்ள அம்பனை ரியூட்டோரியில் சிங்களம் தெரிந்த பத்மசேகரம் என்பவர் சிங்களம் சொல்லிக் கொடுக்கிறார் என்பது தெரிய வர அவரிடம் சிங்களம் படிக்கத் தொடங்கினான்.

தெல்லிப்பழைக் கிராமசபையில் வேலை செய்கின்ற சிலரும் பத்மசேகரம் அவர்களிடம் சிங்களம் படித்தனர்.பத்மசேகரம் இராணுவத்தில் வேலை செய்து அதிலிருந்து ஓய்வு பெற்று பிறகு யாழ்ப்பாணத்தில் உள்ள கல்விக் கந்தோரில் வேலை செய்து கொண்டிருந்தவர்.இப்பாழுது அம்பனை ரியூட்டோரியலில் சிங்களம் படிப்பித்துக் கொண்டிருந்தார்.

அவரிடந்தான் ஞானம் சிங்களம் படிக்கத் தொடங்கினான்.சிங்களத்தைப் பேச வேண்டுமென்ற ஆவலில் பத்மசேகரத்துடன் அவள் சிங்களத்தில் கதைக்கத் தொடங்கியமை அவருக்கே ஆச்சரியமாகவிருந்தது.

நாளடைவில் சிங்களத்தைச் சிங்களவர் போல சரளமாக பேசியதை அவனுடைய நண்பர்கள் ஆச்சிரியத்துடன் பார்த்தனர்.

தெல்லிப்பழைச் சந்தியிலிருந்து வடக்காகப் போகும் காங்கேசன்துறை வீதியில் யூனியன் கல்லூரிக்கு எதிர்ப்பக்கமான கிழக்குப் பக்கத்தில் இருக்கும் ஆனந்தா பேக்கறி ஒரு சிங்களவரால் நடத்தப்பட்டு வந்தது.அவர் பாணந்துறையைச் சேர்ந்தவர்.

சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம் என்பது சுத்தமான செந்தமிழைப் பேச வேண்டுமெனில் தமிழின் வசனக் கோர்வைகளில் காணப்படும் எழுத்துக்களை அழுத்த வேண்டிய இடத்தில் அழுத்தியும் மென்மைத்தன்மையான இடத்தில் மென்மையாகவும் குறில் நெடில் என தமிழ் மொழியைப் பேசும் போதுதான் அது செந்தமிழாக நிலைத்து நிற்கும் என்பதை பலமுறை நண்பர்களிடம் சொல்லியிருக்கிறான்.

தமிழுக்கு மட்டுமல்ல எல்லா மொழிக்கும் நாப்பழக்கம் மிக முக்கியம் என்பதை உணர்ந்தவன் ஞானம்.மொழிகளின் கம்பீரமே உச்சரிப்பில்தான் உண்டு என்பதும் அவனுக்குத் தெரியும்.

ஆனந்தா பேக்கறியின் முதலாளி உட்பட அங்கு வேலை செய்பவர்கள் அனைவருக்குமே தமிழ் நன்றாகக் கதைக்கத் தெரியும்.அந்த பேக்கறிக்கு கேக் பிஸ்கட் வாங்கவென்று அப்பப்ப போய்வரும் ஞானம் சிங்களம் படிக்கத் தொடங்கியதும், அந்த பேக்கறிக்கு போகும் போதெல்லாம் சிங்களத்தில் அவர்களுடன் கதைக்கத் தொடங்கினான்.

ஞானம் சிங்களத்தில் கதைப்பதைப் பார்த்த முதலாளியும் அங்கு வேலை செய்பவர்களும் மகிழ்ச்சியடைந்தார்கள்.உச்சரிப்புகளை திருத்திக் கதைக்கச் சொல்லிக் கொடுத்தார்கள்.பேக்கறியில்

விற்பனைக்காக வைத்திருக்கும் பொருட்களைச் சிங்களத்தில் எப்படிச் சொல்வது என்பதை அவர்களிடமிருந்து தெரிந்து கொண்ட ஞானம்,கிழமைக்கு ஒருமுறை மட்டும் சிங்களம் படித்தால் போதாது என்றுணர்ந்தவன் பேக்கறி முதலாளியிடம்’ நான் சிங்களத்தைச் சரியாக உச்சரித்து கதைக்க ஆசைப்படுகிறன் கிழமையிலை இரண்டு நாளைக்குச் சொல்லித் தருவீர்களா என்று கேட்ட போது, அவர் மறு பேச்சின்றி நிச்சயமாகச் சொல்லித் தருகிறன் பின்னேரத்திலை வாருங்கள், பேக்கறியின்ரை பின்பக்கத்திலை ஒரு அறைமாதிரி இடம் இருக்கிறது அங்கையிருந்து சொல்லித் தாறன் என்று சொல்லியிருந்தார்.

அத்துடன் அவர் நில்லாது பாணந்துறையிலிருக்கும் மனைவிக்கு தெல்லிப்பழைக்கு வரும்போது சிங்களப் பாடப்புத்தகங்களையும் வாங்கிவருமாறு கடிதம் எழுதி அனுப்பினார்.

பேக்கறி முதலாளியின் மனைவி வருடத்தில் நான்கைந்து முறையாவது கணவனிடம் வந்து போகிறவர்.சிங்களம் படிக்க வேண்டுமென்ற ஆர்வப்படுகிற ஞானத்திற்கு பேக்கறி முதலாளியும்; ஆர்வமாகச் சொல்லிக் கொடுக்கிறார்.

ஞானம் ஆனந்தா பேக்கறி முதலாளியிடம் சிங்களம் படிக்கத் தொடங்கிய அடுத்த கிழமையே அவரின் மனைவி பாணந்துறையிலிருந்து வந்திருந்தார்.வரும் போது சிங்கள மொழிப் பாடப்புத்தகங்களையும் வாங்கிக் கொண்டுவர அதை ஞானத்திடம் அவர் கொடுத்து பாடசாலையில் படிப்பது போன்று இலக்கணச் சுத்தமாக படிப்பிக்க விரும்பினார்.

ஆனந்தா பேக்கறி முதலாளிக்கு இரண்டு அழகான பொம்பிளைப் பிள்ளைகள் இருந்தார்கள்.தாயுடன் அவர்களும் வந்திருந்தார்கள்.பேக்கறி முதலாளி அவரின் மனைவி அவர்களின் இரண்டு பொம்பிளைப் பிள்ளைகளுடன் பேக்கறியில் காசு வாங்கும் கவுண்டரின் உள் பக்கத்தில் நின்ற போது ஞானம் சிங்களம் படிக்கவென வர முதலாளி

இந்தத் தம்பிதான் சிங்களம் படிக்க வருகிறவர் என்று சிங்களத்தில் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் சொல்ல மனைவியும் பிள்ளைகளும் புன்னகைக்கிறார்கள்.

பேக்கறி முதலாளி மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் சிங்களத்தில் இவருக்குச் சிங்களத்தைச் சொல்லிக் கொடுக்கங்கள் என்று சொல்ல ஞானத்தை அழைத்துக் கொண்டு பேக்கறி முதலாளியின் மனைவியும் பிள்ளைகளும் உள்ளே செல்கிறார்கள்.

பேக்கறி முதலாளிக்குத் தமிழ் தெரியும்.அவரின் மனைவிக்கோ பிள்ளைகளுக்கோ தமிழ் தெரியாது ஆனால் பேக்கறி முதலாளியின் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் நன்றாகவே ஆங்கிலத்தில் கதைக்கத் தெரிந்ததால் அது ஞானத்திற்கு சுலபமாகப் போய்விட்டது.

தாயாரும் இரண்டாவது மகளும் அறையின் ஒரு மூலையில் உட்கார்ந்து ஏதோ கதைத்துக் கொண்டிருக்க மூத்த மகள் ஆங்கிலத்தில் விளங்கப்படுத்திச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.அவள் ஞானத்தை வைத்த கண் வாங்காமல் பார்ப்பதும் சொல்லிக் கொடுப்பதுமாக இருந்தாள்.

ஞானத்தின் ஆங்கில உச்சரிப்பு அவளை ஆச்சரிப்படுத்தியது.எப்படி உங்களாலை இப்படிக் கதைக்க முடிகிறது என்று அவள் கேட்க, உங்களுக்குச் சிங்கள மொழியின் உச்சரிப்புக்கு ஏற்றவாறு உங்களுடைய நாக்குப் பழகிவிட்டது.அது போலத்தான் எனது நாக்கும் தமிழ்மொழி உச்சரிப்புக்குத் தக்கதாக பழகிவிட்டது.

அதனால் ஆங்கிலம் பேசும் போது உங்களுக்கு உங்கள் மொழி தொனியும் எனக்கு எங்களுடைய மொழி தொனியும் வரப் பார்க்கின்றது.நாங்கள் அதைப் புறக்கணித்துவிட்டு ஆங்கிலேயரிடம் எப்படி உச்சரிப்புத் தொனி வருகின்றதோ அப்படி உச்சரிக்க வேண்டுமென்கிறான்.

பேக்கறி முதலாளியின் மகள் அவன் சொன்ன விளக்கத்தை இரசித்துக் கேட்டவள்,நாங்கள் ஒரு மாதம் வரையும் இங்கைதான் நிற்பம் நீங்கள் பின்னேரத்திலை ஒவ்வொரு நாளும் வரலாம், நான் சொல்லித்தாறன் என்கிறாள்.மொழிகளைப் படிக்க வேண்டுமென்ற அவனிடம் காணப்பட்ட தீராத ஆர்வம், நூல்கள் பத்திரிகைகள் சஞ்சிகைகளை வாசித்தல் ஆகியவை அவனை ஒரு தர்க்கவாதியாதகவும் சிந்தனைவாதியாகவும் வளர்த்துவிட்டது.

ஞானத்திடம் காணப்பட்ட புத்திசாலித்தனத்தை அறிந்த அவனின் தாயாரின் மனதின் ஓர் மூலையில் இவன் பார்வதியில் விருப்பப்படுகிறானோ என ஊகிப்பதும், அப்படி இருக்காது அவன் அப்படிச் செய்ய மாட்டான் என்று இரண்டு மனநிலைகளுக்கிடையில் தடுமாறி, அது எப்படிச் சரிவரும் அவனுக்கும் அது தெரியுந்தானே என தன்னைத் தானே திருப்திப் படுத்திக் கொண்டாள் தாய்.

பிரைவேட்டாக எஸ்.எஸ்.சிப் பரீட்சை எடுக்கச் சொல்லி பார்வதிக்குச் சொன்னதும் அவன், படிப்பிக்கிறன் என்று அவளுக்குச் சொன்னதும் அவன்,ஆனால் தகப்பனிடம் பார்வதி பரீட்சை எடுப்பதற்கு தன்னை உதவி கேட்டது போலத்தான் அவன் தகப்பனாருக்கு வியூகம் அமைத்து விளங்கப்படுத்தினான்.

காரைநகர் கல்யாண வீட்டுக்குப் போவதைத் தவிர்த்து பார்வதியுடன் முழுநாளையும் கழிக்க வேண்டும் என்பதற்காக, தங்களுடைய தோட்டத்து வெங்காயப் பயிருக்குள் மீண்டும் புற்கள் முளைத்துவிட்டன, அறுகம்புல்லு படரத் தொடங்கினால் வெங்காயத்தை சுற்றி மூடி படரத் தொடங்கிவிடும் என்று தகப்பனுக்குச் சொல்லி நடுகைக்காரிகளைக் கூட்டிக் கொண்டு வந்து பிடுங்கிக்கிறன் என்று சொன்னான்.அதற்குத் தகப்பனும் ஒப்புக் கொண்டுவிட்டார்.

தான் சிங்களம் படிப்பதையோ தெல்லிப்பழை ஆனந்தா பேக்கறி முதலாளியின் மகள் தனக்குச் சிங்களம் சொல்லித் தருவதையோ இதுவரை அவன் பார்வதிக்குச் சொல்லவில்லை.நாளைக்கு சிங்களம் படிக்கும் நாள்.பார்வதி அவனுடன் போவாளா?

ஏன் அவனுடன் பார்வதி போக விரும்பினாள்?

 

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *