வெண்பனித் தாவணி உடுத்து!…. ( கவிதை ) …… ஏலையா க.முருகதாசன்.

விண்ணில் குளிர்க் கருக்கொண்ட முகில்குவியல்கள்
கனத்து அடிமடிகொள்ளா வாய்விரிந்து கட்டவிழ்ந்த
மலர்ப் பொதியென மண்ணோக்கி உதிர
அவை பெயர் கொண்டன வெண்பனியென
வானத்து தண்ணீர்த் தோட்டம்
இயற்பியல் மாற்றம் கண்டதனால் தரையின் தோற்றம்
வெண்பனிக் கோலமானது
பூகோளத்தில் குளிர்ப்பருவம் கண்ட நர்டுகள் சில
வெண்பனித் தாவணி உடுத்தின
பச்சையிலை காணாது பட்டமரம் போல
நின்ற நிலை கண்ட பறவைகள் தம்முறைவிடம்
மறைவிடமில்லா வெறும் இடமாய்க் கண்டு தவித்தன
இலையுடை நெகிழ்ந்தவிழ்ந்து நிர்வாண
மரக்கோலம் கண்ட இயற்கை பதைபதைத்து
வானத்து தண்ணீர்த்தறியில் வெண்பனியுடை நெய்து
உடுத்திப் போர்த்து மரங்களின் மானம் காத்தாள்
வெண்பனி உடை போர்த்திய கிளைகளில் தூங்கிய
பனிமுத்துக்கள் ஊஞ்சலாட பட்டமரம் துளிர்த்து
வெண்பூககள்; கொண்டனவோ உறைவிடம் கிடைத்ததே – என
பறவைகள் மகிழ்ந்து கிளகளில் அமர உதிர்ந்த
வெண்பனித் துகள்கள் கண்டு ஏமாந் தவை
பரிதவித்துப் பறந்தன உறைவிடம் விட்டகன்று
மலைகள் , ஏரிகள்,காடுகள் வீடுகள் – என
எங்கும் வெண்பனி விரிப்பு
குளிர்காலம் இங்கு குதூகலக் காலம்
வெண்பனிப் பூக்கள் தரையிறங்கும் கோலம் கோலாகலம்
தூசிபோல் தூவானம் போல் துகள்கள் போல்
திரள்திரளாய் பஞ்சுபோல் தூவிடும் வெண்பனி கண்டு
விண்ணோக்கி மண்ணோக்கி பார்த்து மகிழ்ந்திடுவர்
வெண்பனிக்கால நினைவு மீட்டலில்
மூழ்கிடுவோர் ஒப்பிட்டு ஓசோன் மண்டல
ஓட்டைகள் பற்றியம் பேசிடுவர்
சறுக்கி விழுதலும் வாகன விபத்துண்டெனிலும்
உறைய வைக்கும் குளிரெனிலும்
வெறுத்தொதுக்கார் வெண்பனிக் கோலத்தின் காலத்தை
அள்ளி அளைந்து எடுத்துத் திரட்டி பந்தாக்கி
எறிந்து விளையாடி மகிழ்ந்திடுவர் சிறவர் பெரியவர்
தொடர் மலைகளிலும் தொடர்ந்திருக்கும்
பள்ளத்தாக்குகளிலும் அடர்ந்து பரந்திருக்கும்
பனிப்படுக்கை மடிதனில் சறுக்கியோடும் விளையாட்டு
உலகப் பந்தயமாய் ஓங்கிடும் இக்காலத்தில்
பனிச்சறுக்கல் விளையாட்டில் விருப்பம் கொள்பலர்
இருப்பிடம் விட்டு அவ்விடம் நோக்கிப் பயணிப்பர்
மலைச்சரிவுப் பனிப்புதரில் அமிழ்ந்து சிக்குண்டு
உயிரிழந்தோர் பலரெனிலும் தவிர்க்கார்
வெண்பனியினைச் சாவினைக் கண்டு
ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் அமிழந்தமிழ்ந்து
ஆழமாய் அமிழந்துருமாறிய தாவர சங்கமங்கள்
எண்ணற்ற ஆண்டுகளாய் உறைபனி உணவுண்டு ![]()
உறங்கி இறுகி மூலக்கூறுகளாய் கரி இரும்பென
உடல் கொண்டன வெ;ணபனியின் கொடையினால்.

அக்கினிக்குஞ்சு இணையத்தள பிரதம ஆசிரியர் , ஆக்கதாரர்கள் மற்றும் வாசகர்கள் அனைவருக்கும் காதலர்தின வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன்.
![]()