கதைகள்

ஒரு பேராசிரியரும் அவரின் பேராசிரியை மனைவியும்!…. ( சிறுகதை ) … தெல்லி.அம்பனையூரான்.

„நிர்மலா’

„ம்’

„நாளைக்கு நான் இலண்டனுக்குப் போகிறன்.திரும்பி வர ஐஞ்சு நாளாகும்’

„ஏன் என்ன விசயம்’

„அங்கை செமினார் இருக்கு’

„ம் சரி’

„என்ன நீங்கள் ம் சரி என்று மட்டும் சொல்றியள்’

„வேற எப்படிச் சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறியள்’

„கொஞ்சம் கனிவா அப்படியா என வியப்புக் கலந்த சந்தோசமாய்ச் சொன்னா குறைஞ்சா போய்விடுவீங்கள்’

„மனசில இருக்கிறதுதான் வார்த்தையிலை வரும்’

„அப்படி என்னதான் உங்கடை மனசில இருக்கு’

„சொன்னால் இலண்டனுக்கு போகாமல் நின்றுவிடுவீர்களா’

„சொன்னால் அதன் போகாமல் நிற்க வேண்டிய காரணத்தைப் பற்றி யோசித்து முடிவெடுக்கலாம்’

„அப்படியா சரி….வாழ்க்கையென்றால் என்ன சொல்லுங்கள்’

„இது என்ன முட்டாள்தனமான கேள்வி வாழ்வியலின் சமூகக் கூறுகள் பற்றி அறிந்த பேராசிரியரிடம் வேதியல் படித்த பேராசிரியை கேட்கிற கேள்வியா இது’

„நீட்டி முழக்கி சுற்றி வளைச்சு கேள்விக்கு கேள்வி கேட்காதீங்கள்.வாழ்க்கை என்றால் என்ன?.சுருக்கமாகச் சொல்லுங்க’

„வாழ்க்கையென்றால் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை கிடைச்ச வாழ்க்கையை அமைதியாக மனநிறைவோடும் மகிழ்ச்சியோடும் வாழ்வதுதான்’

„அப்படியென்றால் நாங்கள் இரண்டு பேரும் மகிழ்ச்சியோடும் அமைதியாகவும் வாழ்கிறோமா?’

„நிச்சயமாக இரண்டு பேருமே பேராசிரியர்கள்.பல்கலைக் கழகத்தில் படிப்பிக்கிறம்.தேவைக்கு அதிகமான சம்பளம் கிடைக்குது.போக்குவரத்துக்கு கார், அழகான வீடு இவையெல்லாந்தான் அமைதியையும் சந்தோசத்தையும் தருபவை’

„நீங்கள் சொன்ன இவை மட்டுந்தான் வாழ்க்கையா’

„வேறென்ன’

„தெரியாமல் கேட்கிறியளா இல்லை தெரியாத மாதிரி நடிக்கிறியளா’

„புரியவில்லை’

„புரியவில்லையா….நீங்கள் படிச்சுத்தானே பட்டம் வாங்கினனீங்கள்’

„என்னிடமிருந்து நீங்கள் எதை எதிர்பார்க்கிறியள்’

„எல்லாத்தையும்….எல்லாத்தையும்…..சரி கல்வி என்றால் என்ன?’

„என்ன நீங்கள் பல்கலைக் கழகத்திலை மாணவனைக் கேட்கிற மாதிரிக் கேட்கிறியள்’

„பல்கலைக்கழகத்தில் மட்டுந்தான் நீங்கள் பேராசிரியர்.வீட்டிலை அல்ல.வீட்டிலை என்னுடைய கணவன்.நீங்கள் மனைவி என்ற பெண்ணுக்கு கணவன் என்ற ஆண் துணை எல்லாத்துக்குமாக’

„கல்வியினால் கிடைக்கும் பெருமை புகழ் கற்றோர் என்று சமூகம் எம்மைப் பார்த்து விளித்தல் இவை போதாதா மகிழ்ச்சியாக வாழ்வதற்கு’

„போதாது போதவே போதாது கல்வி என்றால் பேராசிரியரே அதன் மறுபெயர் என்ன’

„அறிதல்’

„அறிதல் என்றால், அறிந்து புரிதல் மனைவியை அறிந்து புரிதல் பிள்ளைகளை அறிந்து புரிதல் சமூகத்தை அறிந்து புரிதல் மாணவர்களை அறிந்து புரிதல் இப்படி எல்லாமே இருக்கு…நிறைய நிறைய இருக்கு…’

„என்ன நீ ஒரு புரொபசருக்கே லெக்சர் பண்றியா’

„பார்த்தியளா இதுவரையும் நீங்கள் என்று என்னை விளித்துக் கதைத்தீர்கள்.இப்ப எனது கேள்விகள் உங்களைச் சுடத் தொடங்கியதும் நீ என ஆத்திரத்துடன் கதைக்கிறீர்கள்’

„நான் இலண்டனுக்கு போவதுதான் உன்….உங்களுக்கு பிரச்சினையா அல்லது விருப்பமில்லையா’

„வெளிப்படையாகவே கேட்கிறன்,நாங்கள் இரண்டு பேரும் பல்கலைக்கழகத்தில் காதலிச்சு படிப்பு முடிஞ்சு கல்யாணம் நடந்து இப்ப இரண்டு வருசமாச்சுது’.

 

„இந்த இரண்டு வருசத்திலை லீவு நாட்களிலை நீங்கள் என்னோடை இருந்த நாட்கள் எத்தனை என்று சொல்ல முடியுமா’

„….’

„நூல் ஒன்று எழுதுகிறன் சனி ஞாயிறுகளில் எனக்குத் தொந்தரவு தரவேண்டாம் என்று அதில் ஒரு வருசம் போச்சுது’.

„பல்கலைக் கழகத்தால் வந்தால் களை அது இது என்று கிழமை நாட்களும் போச்சுது.நானும் பேராசியரியராக இருக்கிறதாலை அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கிழமை நாட்கள் எங்களிருவருக்கும் ஒரே மாதிரித்தானே என்று பேசாமல் இருந்தன்’.

 

„மிகுதி இருப்பது சனி ஞாயிறுகள்தான்.ஆனால் நீங்கள் அவர்கள் கூப்பிடுகிறார்கள் இவர்கள் கூப்பிடுகிறார்கள் என்று அங்குமிங்குமாகத் திரிகிறீர்கள்.அங்கை புகழ்ந்தார்கள் இங்கை புகழ்ந்தார்கள் பொன்னாடை போர்த்தினார்கள் என்று எப்பவாவது கிடைக்கும் சனி ஞாயிறுகளில் உங்களைப் புகழ்ந்துரைப்பதில் காலம் கழிகிறது’.

‘நீங்கள் சொல்வதை நான் கேட்டுக் கொண்டிருக்கிறன்;.பகலிலை சொல்றியள் பரவாயில்லை என்று கேட்கிறன்.ஆனால் நீங்கள் இரவில் ஒரே படுக்கையில் படுத்திருக்கும் போது, மனைவி உங்களிடமிருந்து என்ன எதிர்பார்ப்பாள் அவளின் விருப்பம் என்ன என்று உணராது திரும்பவும் பகலில் சொன்னதை அசை போடுகிறீர்கள்’

„நான் பல்கலைக்கழகத்தில் படிப்பிக்கிறதை மாணவர்களுடன் குதூகலமாக கதைப்பதை அங்கேயே விட்டிட்டு வருகிறன்’.

„வீட்டுக்கு அந்த நினைப்புகளைக் கொண்டு வருவதில்லை.வீடு வேறு பல்கலைக் கழகம் வேறு’.

‘பல்கலைக்கழகம் என்பது கல்வி சார்ந்தது.அந்தச் சூழல் வேறு வீடு என்பது தனிமனித உணர்வும் உணர்ச்சியும் கலந்த வாழ்வு சார்ந்தது.இந்த வீட்டில் கணவன் மனைவி என்ற குடும்பச் சுட்டலுடன் ஆண் பெண்ணாகிய நாங்களிருவருமே இருக்கிறோம்’.

 

„நீ என்ன சொல்ல வருகிறாய் என்று எனக்குப் புரிகிறது.ஆனால் இவ்வளவு தரந்தாழ்ந்து உன்…உங்களுடைய உடல் சார்ந்து தேவை மட்டுந்தான் வாழ்வு என்று சொல்லுவாய் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை’

„பொறுங்கள் நான் இப்ப என்ன சொல்லிப் போட்டன் என்று நான் சொன்னதைப் புரிந்து கொள்ளாமல் பிழையாக அர்த்தப்படுத்திப் பேசுகிறீர்கள்.நான் கெமிஸ்ரி பேராசரியை எலிமண்ட்ஸ் கூறுகளால் உருவாக்கப்பாட்ட உடல்களின் எலிமண்ட்ஸ் நிறைவு நிலை அல்லது சமன்நிலை எமது உடலின் இறுதி முடிவு வரை ஒரே அளவில் இருக்காது என்பது எனக்குத் தெரியும்’

„என்னைப் பொறுத்தவரையில் கல்வியும் அறிவுந்தான் எனது இலட்சியமும் இலக்கும்.அதற்குப் பிறகுதான் மற்றைய எல்லாம்.உடம்பின் தேவைகூட இரண்டாம் பட்சமே’என்றான் கணவன் சூரியகாந்தன்

„நீங்கள் சொல்றதில் கல்விதான் முக்கியம் என்பதை உடம்பை நிராகரித்துவிட்டு கல்விதான் என்பது தவறு என்கிறன்.கல்வி முக்கியமே.ஆனால் கல்வியாகட்டும் அறிவாகட்டும் அதன் தோற்றுவாயின் இடம் உடம்புதானே.உடம்பு இல்லாமல் அறிவு எங்கிருந்து வரும்.மனம் என்ற கற்பிதம் எங்கிருந்து வரும்.பல்கலைக் கழகத்தில் உங்களைப் பற்றிக் பெரும் குற்றச்சாட்டேயிருக்கின்றது.பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் எனப் பலபேர் அங்கிருக்க எந்தச் செமினாராக இருந்தாலும் உங்களைப் பற்றி நிர்வாகம் யோசிக்காமல் மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுக்க வேணுமென்ற யோசனையை அவரைப் பிடித்து இவரைப் பிடித்து உங்களுக்கானதாக அதை மாற்றுகிறீர்களாம்.வெளிநாடுகளுக்குகூட மற்றவர்களுடைய சந்தர்ப்பங்களை விழுங்கித்தான் போகிறீர்களாம்.வெளிநாடுகளில் போன வேலை முடிஞ்சதும் குடித்துக் கும்மாளம் அடிக்கிறீர்களாம்.நீங்கள் கல்வி,அறிவு, அறிதல் என்பதற்கப்பால் புகழின் பேராசைக்குள் சென்று கொண்டிருக்கிறீர்கள்.பொன்னாடைக்கும் புகழுக்கும் வெறிபிடித்து நிற்கிறீர்கள்’

„நீ…தேவையில்லாமல் அலம்பிக் கொண்டிருக்கிறாய்’

„நான் அலம்பவில்லை.உடல்தான் கருவி.அதன் திருப்தியும் அதன் மகிழ்ச்சியுந்தான் வாழ்விற்கான அர்த்தத்தைக் கொடுக்கும்.எம்மிருவருக்கும் ஓய்வையும் மன அறுதலையும் உடலின் தேவைக்கான சந்தர்ப்பத்தையும் தருவது படுக்கைதான்.அந்தப் படுக்கையை முழுமையாக பயன்படுத்த வேண்டும்.அங்கேயும் செமினாருக்கு போவோமா அந்த நாட்டுக்குப் போவோமா இந்த நாட்டுக்குப் போவோமா என்று யோசித்தால் நாமிருவரும் கல்யாணம் செய்திருக்கத் தேவையே இல்லை’

„நீ என்ன சொல்ல வருகிறாய் என்றால் வெட்கங்கெட்டு எந்தக் கூச்சமுமில்லாமல் செக்ஸ் முக்கியம் என்று சொல்ல வருகிறாய்’

„இதில் என்ன கூச்சப்பட இருக்கிறது.கணவனிடம் மனைவி அதுவும் ஒரு வேதியல் பேராசிரியை தனிமனித அலகின் குழுத்தன்மைதான் சமூகம் என்ற துறைசார் கல்வியான சமூகவியல் கல்விப் பேராசிரியரிடம் வெளிப்படையாக கதைக்கிறன். செக்ஸ் அதுவும் தேவை என்று சொல்ல வருகிறன்.செக்ஸை அனுபவித்தல் ஒப்புக்கு அனுபவித்தல் அல்ல.கணவன் என்ற ஆணின் உடம்பின் வெப்பத்தையம் அவனின் மனதையும்,மனைவி என்ற பெண்ணின் வெப்பத்தையும் அவளின் மனதையும் தழுவுதல் அரவணைத்தல் ஸ்பரிசித்தல் என்ற அனைத்தையும் கொண்டு ஒருவரோடு ஒருவர் இணைவதுதான் காமத்தின் சுவையை உணர்வதுதான் உடலுறவு.இந்த உடலுறவில்தான் ஆரோக்கியமான விந்து வெளிப்பாடும் மனைவியின் மனநிறைவில்தான் அவளின் கருமுட்டைகூட ஆரோக்கியம் பெறும்.இன்னும் வெளிப்படையாகச் சொல்லப் போனால் கல்வியை கல்வியாகவும் காமத்தைக் காமமாகவும் பார்க்க வேண்டும்.உறவின் போது வேறு நினைவு வருமாயின் விந்தின் வெளிப்பாடு நீர்த்தன்மையாக மாறும்.கருத்தரித்தல் தடுமாறும்.ஆரோக்கியமான பிள்ளைகள் பிறப்பது மிக அரிதாகும்.விந்தென்பது மரபணு.படுக்கையில் ஒரு புள்ளியில் இணைக்கப்பட வேண்டும்.நான் வேதியல் பேராசிரியை திரவ- திட வேதியல் மூலக்கூறுகளால் ஆக்கப்பட்ட உடலின் தேவை வயதுக்கு தக்கதாக வேறுபடும என்பதை அறிந்தவள்;.எங்களுக்கு கல்யாணமாகி இரண்டு வருடங்கள் முடியப் போகுது.இன்னும் எங்களுக்கு வாரிசு எதுவும் இல்லை.ஒவ்வொரு முறையும் மாதவிடாய் தள்ளிப் போவதும் மகிழ்வதும் பிறகு நான் ஏமாறுவதும், நான்; ஏமாறுவதற்கான காரணம் தெரிந்தும் பொறுத்திருந்தன்.கிழமை நாட்களல்லாத நாட்கள் எங்களுக்கானதாய் எங்களுக்கு மட்டுமானதாய் வேண்டும்.அந்நாட்கள் நாமிருவரும் பேராசிரியர்களல்லாத நாட்களாக வேண்டும்’

மனைவி வாழ்க்கையென்றால் உடம்பிலிருந்துதான் ஆரம்பிப்பது என்பதை பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு விரிவுரை நடத்துவது போலச் சொன்னதைக் கேட்டு சூரியகாந்தன் உறைந்து போய் உட்கார்ந்திருந்தன்.அமைதியாகச் சில விநாடிகள் இருந்தவன் எழுந்து போய் தொலைபேசியை எடுத்தான்’ மன்னிக்கவும் நான் லண்டன் செமினாருக்குப் போகவில்லை.லண்டன் செமினார் மட்டுமல்ல இனி எங்கும் வேண்டாம்.இதுவரை ஐந்து நூல்கள் எழுதிவிட்டன்.அது போதும்.சனி ஞாயிறுகளில் நானும் மனைவியும் படம் பீச் ரெஸ்ரோறன்ற் என்று திரியப் போகிறோம்.சொல்லப் போனால் நானும் மனைவியும் சனி ஞாயிறுகளிலாவது பேராசிரியர்கள் என்ற பட்டத்தை தூர வைச்சுவிட்டு வீட்டையே சொர்க்கபுரியாக்கப் போகிறம்.இனிமேல் நீங்களும் கேட்க வேண்டாம்.நானும் கேட்க மாட்டன்’தொலைபேசியை வைத்த சூரியகாந்தன் அடுப்படிக்குள் சமைத்துக் கொண்டிருந்த மனைவி நிர்மலாவை பின்னால் நின்று அணைத்தவன், அவளின் காதுக்குள் நான் இப்ப உங்களைக் காதலிச்ச போதிருந்த காதலன் சூரியகாந்தன் என்றான்.

அவனின் முகத்தை நோக்கி அவள் முகத்தைத் திருப்ப முத்தப் பரிமாற்றத்தால் அவளின் கைதட்டி, வெட்டி தண்ணீருக்குள் போட்டு வைத்த கத்தரிக்காய்ச் சட்டி கவிழ்ந்து நிலத்தில் விழுகிறது.

இருவருக்கும் இரவுகள் இனி இனிய இரவுகளாகும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *