நடுகைக்காரி!…..தொடர் 7 ….. ( குறுநாவல் ) …. ஏலையா க.முருகதாசன்.

![]()
தொடர் 7…
„அப்பா எங்களுடைய கல்லூரியில் எற்ற தாழ்வு பார்த்து எல்லாப் பிள்ளைகளையும்
சேர்ப்பதில்லை.எங்களுடைய கல்லூரியில் படிப்பிக்க வேண்டும் ஆசையில் போய்க் கேட்கும் பெற்றோருக்கு எல்லா டிவிசனிலும் அளவுக்கதிகமான பிள்ளைகள் இருக்கிறார்கள் என்று தட்டிக் கழிக்கிறார்கள்’.

„ஆனால் யூனியன் கல்லூரியில் எந்த வித்தியாசமுமின்றி எல்லாப் பிள்கைளையும் சேர்க்கிறார்கள் அப்பா.கல்வியில் பாரபட்சம் காட்டலாமா’ என ஞானசெல்வம் கேட்டதும் அவனுடைய நியாயமான கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் குழம்பிப் போன தந்தை’ நீ சொல்வது உண்மைதான் என்னதான் அது எமது பிரியமான பள்ளிக்கூடமாக இருந்தாலும் அப்பள்ளியில் சில ஆசிரியர்கள் ஏற்ற தாழ்வு பார்த்து அனைத்துப் பிள்ளைகளையும் சேர்த்துக் கொள்வதைத் தடுக்கிறார்கள் என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
„எங்கடை பிறின்சிப்பல் இந்த விசயத்தில் அவ்வளவு பிழையாக நடக்கிறவர் அல்ல, ஆனால் அங்கை படிப்பிக்கிற ஆசிரியர்கள் சிலர்தான் அவருக்கு புத்தி சொல்கிறார்கள் போல….’ என அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, தாயார் „அண்டைக்கு தங்காச்சி என்னோடை கதைக்கேக்கை சொல்றா தங்கடை வீட்டை மாவிடிச்சுக் குடுக்க வந்த அகத்தன்ரை மனுசிக்காரி தன்னைக் கேட்டவாவாம் தன்ரை பிள்ளையை எங்கடை பள்ளிக்கூடத்திலை சேர்க்கப் போறெனென்று, பாரன் அவளவைக்கு வந்த யோசனையை, இப்படிப் போனால் எங்கடை வீட்டு விறாந்தையிலை ஏறி எங்களுக்கு முன்னாலை கதிரையிலை காலுக்கு மேல கால் போட்டு இருப்பினம் போல’ என்று சொல்ல நானும் விடேலை,நான்
கேட்டன் அந்தப் பிள்ளை படிச்சால் உங்களுக்கு என்ன குறைஞ்சு போச்சுது அவை என்ன உங்கடை தலைக்கு மேலேயே ஏறிப் படிக்கப் போயினம்…..’என்று நான் சூடாகக் கேட்க, அவாவும் என்னோடை வாய் குடுத்துத் தப்ப ஏலாது என்று கதையை நிற்பாட்டிப் போட்டா’ என்று சொல்லி கொண்டிருக்கும் போதே, „அதுதானம்மா எங்கடை கொலிஜ்ஜிற்கு கொஞ்சம் தள்ளி இருக்கிற அன்னப்பிள்ளையும் கதிரமலையும் யூனியன் கொலிஜ்ஜில போய் படிக்கினம், அவை இரண்டு பேரும் நடந்து போறதை நானே கவனிச்சிருக்கிறன்…..கல்வியிலைகூட இப்படிப் பார்க்கினமே கேவலமாக இருக்குது என்று சொல்லி முடிக்கிறான்.
இரவுச் சாப்பாட்டை தாய் தகப்பனுடன் ஒன்றாக இருந்துதான் ஞானசெல்வம் சாப்பிடுவான்.காலைச் சாப்பாட்டையும் மத்தியானச் சாப்பாட்டையும் அவன் மட்டுமல்ல தாய் தகப்பனும்கூட ஒன்றாக இருந்து சாப்பிடுவதில்லை.,
சில நாட்களின் காலை வேளைகளில் தகப்பனுடன் சேர்ந்து தாயும் தோட்டத்துக்கு போவது வழக்கம்.ஆரம்ப காலங்களில் அவர்களின் தோட்டத்திற்கு துலா மிதித்து பட்டை பிடித்து இறைத்து தண்ணி கட்டுவதுதான் வழக்கம்.
அப்பொழுது ஒவ்வொரு இறைப்புக்கும் மூன்று பேராவது வேணும்.அவர்களின் இரண்டு பொம்பிளைப் பிள்ளைகளும் சிறுமிகளாக இருந்த போது அவர்களும் தோட்டத்துக்கு வந்து உதவி செய்து கொண்டிருந்தார்கள்.
கிழமை நாட்களில் பள்ளிக்கூடம் போவதால் அவர்களை தோட்ட வேலைக்கு தாயும் தகப்பனும் கூட்டிக் கொண்டு போவதில்லை.சனி ஞாயிறுகளில் மட்டும் தோட்டத்திற்கு போய் உதவி செய்வார்கள்.
பொம்பிளைப் பிள்ளையள் இருவரும் ஒருவர் மாறி ஒருவர் பூப்பெய்தியதும் அவர்கள் தோட்டத்திற்கே வருவதில்லை.சில
வேளைகளில் தாயுடன் வந்து போவார்கள்.பொம்பிளைப் பிள்ளையள் இருவரும் குமர்ப்பிள்ளைகளானதால் அதிக நாட்கள் தாயார் வீட்டிலேயே இருப்பார்.
அம்பனை வயல்வெளியில் காலையில் பெரும்பாலும் எல்லாத் தோட்டங்களிலும் இறைப்பு நடக்கும்.அப்பொழுது மகாஜனாவில் படிக்கும் மாணவர்களில் தோட்டக்காரர்களின் பிள்ளைகளாக இருப்பவர்கள் பெற்றோருக்கு துலா மிதித்தோ பட்டை பிடிச்சு இறைச்சோ தண்ணி கட்டியோ உதவி செய்வார்கள்.
அவர்களில்; சிலர் வீட்டிலிருந்து கொண்டு வந்த பாடப் புத்தகங்களையும்,சீருடைகளையும் அட்டாளையில் வைத்திருப்பார்கள்.
இறைப்பு முடிந்ததன் பின்பு அங்கேயே குளித்துவிட்டு சீருடையை அணிந்து கொள்ள இறைப்பு முடியும் நேரம் தாயார் கொண்டு வந்து கொடுக்கும் இடியப்பத்தையோ புட்டையோ சாப்பிட்டுவிட்டுப் பள்ளிக்கூடம் போய்விடுவார்கள்.
இன்னும் சிலர் அவசரம் அவசரமாக வீட்டுக்குப் போய்க குளித்து சாபபிட்டவிட்டு பள்ளிக்கூடம் போவார்கள்.ஞானசெல்வத்தின் அண்ணன்மார் இருவரும் இறைப்பு முடிந்ததும் அங்கேயே குளித்து சீருடையை அணிந்து தாயார் கொண்டு வந்து கொடுக்கும் சாப்பாட்டைச் சாப்பிட்டவிட்டு பள்ளிக்கூடம் போவார்கள்.
ஞானசெல்வத்தின் தந்தை பலவிதமான பயிர்களை நட்டிருப்பதால் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பயிருக்கு இறைப்பு உண்டு.ஞானசெல்வம் சிறுவனானபடியால் காலையில் தோட்டத்திற்கு வருவதில்லை, தமக்கைமாருடன் பள்ளிக்கூடம் போய்க் கொண்டிருந்தான்.
ஆம்பிளைப் பிள்ளைகள் இருவருக்கும் பொம்பிளைப் பிள்ளைகள் இருவருக்கும் கல்யாணம் கட்டிக் கொடுத்துவிட்டார்கள்.துலா மிதித்து பட்டை இறைப்பு இப்பொழுது இல்லை.தண்ணீர் இறைக்கும் மிசினொன்றை வாங்கியபடியால் இறைப்பதற்கு மூன்று பேர் தேவையில்லாமல் போய்விட்டது.
ஆனால் சுப்பையா தண்ணீர் இறைக்க மிசினை வாங்கிவிட்டோமே என்று நினைத்து ஆடுகால் மரங்களையோ துலாவையோ பராமரிப்பு இல்லாமல் விடவில்லை.பட்டையைக்கூட அட்டாளையில் பாதுகாத்து வைத்திருந்தார்.
அவர்கள் வீட்டில் ஞானசெல்வமும் தாயும் தகப்பனுமே இருந்தார்கள். ஞானசெல்வம் படித்துக் கொண்டிருக்கும் போதே அதிகாலை மூன்று மணிக்கே மிசினை அம்பனை வயலுக்கு இழுத்துக் கொண்டு போய் அதை இயக்கித் தண்ணீர் கட்டிக் கொண்டிருப்பான்.
தகப்பன் காலை ஐந்து மணிக்கு தோட்டத்துக்கு வந்து தகப்பன் தண்ணி கட்ட அவன் வீட்டுக்குப் போய் பள்ளிக்கூட சீருடைக்கு தேங்காய்ச் சிரட்டை போட்டு எரிக்கும் அயேன் பெட்டிக்குள் சிரட்டை போட்டு எரித்து சூடாக்கி சீருடையை மினுக்கி வைச்சிட்டு அதற்குப் பிறகு குளித்துக் காலைச் சாப்பாடு சாப்பிட்டிட்டு தகப்பனுக்கென்று தாய்தரும் சாப்பாட்டை வாங்கிக் கொண்டு போய் தகப்பனிடம் கொடுத்துவிட்டு பள்ளிக்கூடம் போய்விடுவான்.அவனுடைய வாகனமே சைக்கிள்தான்.
எந்தக் குறுகிய வரம்பிலும் நிதானமாக சைக்கிளை அவனால் ஓட்ட முடியும். தொடர்ந்து உயர்தர வகுப்பைப் படிக்காமல் ஏதாவது வேலைக்குப் போவமா என்ற எண்ணத்துடன் இருந்த ஞானசெல்வம் தொடர்ந்து உயரதரத்தில் படிக்கவா விடவா என்ற குழப்பத்திலும் படித்தால் பல்கலைக்கழகத்திற்கு
போகலாம் என்ற அரைகுறை மனதில் இருந்த போதுதான் அவன் பார்வதியைச் சந்திக்கிறான்.
அவள் மீதான காதலும்; அவளைச் சந்திக்கும் போது எற்படும் அருகிருக்கைச் சுகமும் உயர்தர வகுப்பில் படிக்க வேண்டுமென்ற எண்ணத்தையும் பல்கலைக்கழகத்திற்கு போக வேண்டுமென்ற எண்ணத்தையும் இல்லாமல் செய்துவிட்டது.
ஒரு நாளில் அரை நாளை மதகில் இருப்பதையே பொழுது போக்காகக் கொண்ட அவனைப் பற்றியும் காவாலி விடுகாலி என்று ஊர் கதைக்கத்தான் செய்தது.அந்தக் கதை தாய் தகப்பனின் காதிலும் விழவே செய்தது.
ஆனால் அவர்கள் அதை ஒரு காதால் கேட்டு இன்னொரு காதால் விட்டிட்டுப் பேசாமலிருந்தார்கள்.ஒவ்வொரு தாய் தகப்பனும் இளம் வயதைக் கடந்து வந்தவர்களே.இளம் வயதுச் சேட்டைகளை அவர்கள் உணர்ந்ததால் அதைப் பெரிது படுத்தவில்லை.
அம்பனை வயல்வெளியில் தோட்டம் வைத்திருப்பவர்களில் பெரும்பாலான தோட்டக்காரர்கள் அம்பனைச் சந்தியிலுள்ள சீனியம்மானின் தேத்தண்ணிக் கடையில் தேத்தண்ணி குடிக்காமல் இருப்பதம் இல்லை, அம்பனைச் சந்தி மதகில் கொஞ்ச நேரமாவது இருக்காமல் விடுவதுமில்லை.
அதைப் போல அளவெட்டி பன்னாலை என்று இணைந்து நிற்கும் இடத்திலிருக்கும் மதகில் இருக்காமல் விடுவதுமில்லை.இன்னொரு மதகாக மகாஜனாவுக்கு பக்கத்திலிருக்கும் மதகில் லிங்கம் கபேயில் தேத்தண்ணி குடித்துப் போட்டு தோட்டக்காரரரும் இருப்பதுண்டு.
அதைவிட இன்னொரு மதகு மகாஜனாவின் கிழக்குப் பக்கத்தில் உண்டு.அருகில் எந்தவொரு தேத்தண்ணிக்
கடையுமில்லை.ஆனால் அதிலும் தோட்டக்காரர் இருப்பதுமுண்டு.
மகாஜனாவிற்கு அருகிலுள்ள மதகில் அங்கு படிக்கும் மாணவர்களில் சிலர் பள்ளிக்கூடம் முடிந்து வீட்டுக்குப் போகும் போது இருப்பதும் சிரித்து அரட்டை அடித்து மாணவிகளைக் கேலி செய்வதும்,ஆசிரியர்களைக் கண்டதும் எழுந்து ஒடுவதும் உண்டு.மதகில் இருப்பது மாபெரும் குற்றமேயல்ல.
ஞானசெல்வத்தின் சகோதர சகோதரிகள் கல்யாணம் செய்யாமல் இருந்த போது இரவு சாப்பாட்டை ஒன்றாக இருந்துதான் சாப்பிடுவார்கள் அப்பொழுதெல்லாம் தாய் தகப்பன் பிள்ளைகள் என எல்லாரும் சமூகப் பிரச்சினைகளையும் ஏன் அரசியல் பிரச்சினைகளைக்கூடக் கதைப்பார்கள்.
ஆனால் ஞானசெல்வம் தகப்பனுடன் கதைக்கும் விடயங்களோ சமூகத்தில் காணப்படும் ஏற்ற தாழ்வுகள் பற்றியதாகவே இருக்கும்.
அன்றும் அப்படித்தான் அவன் கதைத்துக் கொண்டிருந்தான்.இலங்கை பூராவும் தெரிந்து கொள்ளக்கூடிய தெல்லிப்பழையிலுள்ள இரண்டு பெரிய பள்ளிக்கூடங்களில் யூனியன் கல்லூரியில் எந்த ஏற்ற தாழ்வுமில்லாது எல்லாப் பிள்ளைகளையும் சேர்க்கும் போது தான் படித்த மகாஜனாவில் இந்த நடைமுறை இல்லை என்ற போது அவனுக்கு கோபம் ஏற்பட்டது.
தான் வாசித்த புத்தகங்களிலிருந்து அவன் பெற்றுக் கொண்ட அறிவு அவனைச் சிந்தனையாளனாக மாற்றியது மட்டுமல்ல அந்த சிந்தனைதான் சமூகத்தை சல்லடை போட்டு அரிக்க வைத்து அவனுக்கு கோபத்தையும் கொடுத்தது.
அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருந்த இருந்த ஞானசெல்வம் „ அப்பா எங்கடை பள்ளிக்கூடத்திற்கு பக்கத்தில் அதுவும் அரைமைலுக்குள்ளை இருக்கும் பிள்ளைகளுக்கு சாக்குப் போக்குச் சொல்லி இடம் கொடுக்காமல் விட்டிட்டு கட்டுவன், குரும்பசிட்டி, வசாவிளான், காங்கேசன்துறை, என்ற இடங்களில் உள்ள பிள்ளைகளுக்கு அதுவும் அங்கும்கூட தரமான பள்ளிக்கூடங்கள் இருந்த போதும் இடம் கொடுத்தமையில் என்ன நியாயம் இருக்குது அப்பா.
நான் அந்தந்த இடங்களில் உள்ள மாணவர்கள் எங்களுடைய பள்ளிக்கூடத்தில் படிப்பதை குறை சொல்லவில்லை.ஆனால் எங்கடை பள்ளிக்கூடத்திற்கு கிட்டவுள்ள பிள்ளைகளுக்கு ஏற்ற தாழ்வு பார்த்து இடம் குடுக்காமல் விட்டது கல்வியறம் இல்லையப்பா….
அதற்கு தகப்பன் „நீ சொல்வது உண்மைதான் எங்கடை சமூகத்திலிருக்கும் சில சாதிமான்கள் இதற்குத் தூண்டுதலாக இருக்கிறார்கள்,மிகக் கேவலமான செயல் அதை இழிவான செயலென்றுகூடச் சொல்லலாம் „ என்று தகப்பனும் அவனின் ஆதங்கத்தை ஆதரிக்கிறார்.
(தொடரும்)
![]()