கதைகள்

சிங்கப்பூரில் சிலகாலம்!…. 17…… (உண்மைக் கதை) ஏலையா க.முருகதாசன்.

மொலக்சில் நிம்மதியாகக வேலை செய்ய முடியவில்லை.கவலைப்படாமல் இரு உனது கௌரவத்திற்காக உனது கழுத்தில் தாலி கட்டிறன் என்று நான் யோகமலரிடம் சொன்ன போதிலும் நான் செய்யப் போவது சரியா மனதில் குழப்பமாகவே இருந்தது.

எப்பொழுது யார் முன்னிலையில்; தாலி கட்டுவது என்றும் தெரியவில்லை.யோகமலரின் அப்பா அம்மா அண்ணன்மார் அண்ணிமார் என எல்லார் முன்னிலையிலும் இது நடக்கப் போகின்றதா என மனம் அல்லாடிக் கொண்டிருந்தது.

கை இயந்திரம் போல வேலை செய்து கொண்டிருக்க மனம் ஒரு நிலையில்லாது தவித்தது.கிட்டத்தட்ட மூவாயிரம் கிலோமீற்றருக்கு அப்பால் இருக்கின்ற மனைவி பிள்ளைகளை நினைத்தன்.வீடு வாசலை நினைத்தன்.இப்ப சிங்கப்பூரிலை இரவு பன்னிரண்டரை மணியாகின்றது.ஊரிலை நேரம் கிட்டத்தட்ட இரவு பத்து மணியாயிருக்கும்.இப்ப ஊரிலை மனைவியும் பிள்ளைகளும் மைத்துனிகளும் மனைவியின் அப்பாவும் எங்கள் வீட்டிலேயே இருப்பர்;.எல்லாரும் நித்திரை கொண்டிருப்பினமோ இல்லாட்டி கதைச்சுக் கொண்டிருப்பினமோ.மனைவியின் அப்பா சிலநேரம் பத்திரிகை வாசித்துக் கொண்டிருப்பார்.மனைவியின் பேரன் சுருட்டுச் சுற்றுபவர் அவர் இம்மட்டைக்கு நித்திரை கொண்டிருப்பார்.இப்படிப் பல யோசனைகளுடன் வேலை செய்து கொண்டிருந்தன்.

நான் இரவு வேலைக்குப் போவதாக மனைவிக்கு எழுதியிருந்தேன்.கம்பாயத்தை உடுத்து படம் எடுத்து அனுப்பச் சொன்னதாகவும் எழுதியிருந்தன்.நாளைக்கு மனைவியின் கடிதத்துடன் படமும் வரும். அக்கா கம்பாயம் உடுத்து படம் எடுத்து அனுப்பியதற்குப் பிறகே தான்

கம்பாயம் உடுத்து படம் எடுப்பன் என்று யோகமலர் சொல்லியிருந்தார்.

கைகள் வேலை செய்ய தாலி கட்டுதல்,மனைவி பிள்ளைகள் என மனம் அங்குமிங்குமாக அலைக்கழிந்து கொண்டிருந்தது.வேலை செய்யாமல் வீட்டுக்குப் போய்விடலாமா என மனம் யோசித்த போதும்,அப்படிப் போவதற்குரிய சூழ்நிலை இல்லவேயில்லை.

ஆரம்ப நாட்களில் யோகமலர் என்மீது தீவிரமான காதலில் இருக்கிறாள் நீ சிக்கலில் அகப்பட்டிருக்கிறாய் என்று அகமட் சொன்ன போது உடனடியாகவே சிறீலங்காவுக்குப் போய்விட வேண்டுமென்று எனது மனம் எண்ணியது.ஆனால் அவளின் உண்மையான அக்கறையும் பாசமும் அவள் மீது எனக்கும் காதலை ஏற்படுத்தியது.அவளைப் பார்க்காமலும் அவளுடன் கதைக்காமலும் என்னால் இருக்க முடியாத நிலையில் நானிருந்தன்,அதை நான் விரும்பினன்.

அதைப் போலத்தான் அவள் தனக்கு தாலி கட்டிவிடுங்கள் என்று சொன்னதும் நான் குழம்பிப் போய்விட்டன்.அவளின் விருப்பத்துக்கு நான் சம்மதித்த போதும் சரியா பிழையா என மனம் தடுமாறத்தான் செய்கிறது.

முடிவெடுத்துவிட்டு எடுத்த முடிவு சரியா பிழையா எனச் சிந்திப்பதுகூட மனித மனங்களில் இருக்கும் ஒரு தடுமாற்றந்தான்.சரி நடக்கிறது நடக்கட்டும் என்று மனதை ஒரு நிலைப்படுத்த முயற்சித்தன்.

சாப்பாட்டு இடைவேளையில் நான் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது சிங்கப்பூரியனான அந்தத் தமிழப் பிள்ளை எனக்கருகில் வந்து நின்று குட்டே என்று சொல்ல பதிலுக்கு நானும் சொன்னன்.

நானிருந்த மேசையோடு தள்ளி இருந்த இன்னொரு கதிரையில் உட்கார்ந்த அந்தப் பிள்ளை என்ன உங்க முகம்

கவலையாயிருக்கு லா ஊரிலேருந்து லெட்டர் வரேலையா என்று கேட்க „நாளைக்கு லெட்டர் வரும் „ என்று சொல்ல, சில விநாடிகள் பேசாமலிருந்தாள்.

என்றுமில்லாதவாறு இந்தப் பிள்ளை ஏன் பக்கத்திலிருந்து விசாரித்துக் கொண்டிருக்கிறாள் என்று யோசித்த நான் „சாப்பிட்டீங்களா’ என்றுஉ கேட்க „பிரட் பீஸ்கள் கொண்டு வந்தனான் லா சாப்பிட்டன்,ஆமா உங்க கேர்ள் பிரண்டோட ஏதாவது புரப்பளமா,முகம் சரியில்லீங்க உங்க மனைவிக்கு உங்களுக்கு கேர்ள் பிரண்ட் இருப்பது இதுவெல்லாம் தெரியுமா’ என்றாள்.

„அவளோட ஒரு புரபளமும் இல்லை,இங்கை பாருங்கள் அவள் கொண்டு வந்து கொடுத்த சாப்பாட்டைத்தான் சாப்பிடுகிறன் என்று சொல்லிக் கொண்டே சிறிய பிளாஸ்ரிக் பெட்டியைத் திறந்து அப்பிள் பீஸை எடுங்கள் என்றன்.

ஒரு அப்பிள் துண்டை எடுத்தவள் தாங்ஸ்லா என்று சொல்லிக் கொண்டே நாளையோட இங்க உங்க வேலை முடிஞ்சிடும் இல்லையா அப்புறம் நீங்க நெக்ஸ் வீக்குக்கு அடுத்த வீக் சாய்ச்சி என்எம்பிக்கு போய் விடுவீங்க, இந்தாங்க எங்க வீட்டு அட்ரஸ் லா அம்மாதான் கொடுக்கச் சொன்னாங்க, நேரம் கிடைக்கிற போது எங்க வீட்டுக்கு வாங்கன்னாங்க அம்மா என்றாள்.

எங்க றிலேசன்ஸ் சிறிலங்கா சுண்ணாகத்தில இருக்காங்க லா , நீங்க வந்தீங்கன்னா அவங்கள உங்களுக்குத் தெரியுமான்னு கேட்கத்தான் என்றவள் ஏற்கனவே முகவரியை எழுதிக் கொண்டு வந்த தாளை என்னிடம் தந்துவிட்டு எழுந்து போய்விட்டாள்.

முகவரி எழுதிய தாளை வாசிக்காமலே எனது காற்சட்டை பின் பொக்கற்றுக்குள் செருகிவிட்டு சாப்பிடுவதைத் தொடர்ந்தன்.

அடுத்த நாள் காலை வேலை முடிந்து பூன்லேறைவ்வில் உள்ள வீட்டுக்குப் போவதற்காக பஸ் ஸ்ராண்டில் காவலிருந்தன்.அப்பொழுது அந்த இரண்டு சிறீலங்கன் பிள்ளைகளும் பஸ் ஸ்ராண்டை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள்.

நான் வேலைக்குப் போன நாளிலிருந்து அவர்கள் காலையில் வேலை முடிந்து எந்த பஸ்ஸில் போனார்கள் என்பதுகூட எனக்குத் தெரியாது.அதை அறியும் ஆர்வமும் எனக்கு ஏற்பட்டதில்லை.ஆனால் அவளின் தாத்தா சுண்ணாகம் என்று சொன்னதும் அவள் உறவுக்காரப் பெண்ணாக இருப்பாளோ என்ற ஒரு எண்ணம் மனதின் மூலையில் எழுந்தது உண்மைதான்.

ஒரு மனிதனின் மூளையில் ஒரு விநாடியில் பல எண்ணங்கள் நினைவுகள் தோன்றும். எனது மூளையில் மனைவி பிள்ளைகள் யோகமலர் இந்தப் பெண் உறவக்காரவப் பெண்ணாக இருக்குமோ என்று என்று பல யோசனைகள் தோன்றின.

பஸ் தூரத்தில் வருவது தெரிய அவர்களிருவரும் ஓடிவந்து பஸ் ஸ்ராண்டில் நிற்க பஸ் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

அவளும் அவளின் தோழியும் புன்னகைத்தார்கள்.பஸ்ஸில் மூவரும் ஏறிக் கொண்டோம்.

நானிருந்த இருக்கையின் வலதுபுற இருக்கையில் அவர்களிருவரும் உட்கார்ந்திருந்தார்கள்.

„நீங்கள் இந்த பஸ்ஸில போவீங்களா’ என்று கேட்க, ஆமாங்க ஆனா நாங்க லேட்டாகத்தான் லா மொலக்சிலேருந்து வருவோம் இன்னைக்கு ஏழியாக வந்திட்டம் லா அதான் இந்தப் பஸ்ஸில வர முடிந்தது என்றாள் அவள்.

அதற்குப் பிறகு நான் எதுவுமே பேசவில்லை.கண்ணை மூடிக் கொண்டாலும் நித்திரை கொள்ளக்கூடாது என்று தீர்மானித்தன்.

எனது தோளில் மெதுவாகத் தட்டி „இன்ரசேன்ஜ் வந்திட்டி லா இறங்குங்க’ என்று சொல்வது எனக்குக் கேட்க கண்ணைத் திறந்து பார்த்தேன், அந்த சிறீலங்கன் பிள்ளைதான் தோளில் தட்டியிருக்கிறாள் என உணர்ந்த நான், பஸ் யூரோங் இன்ரர்சேன்ஜில் நிற்பதையும் பஸ்ஸிலிருந்து அவர்கள் இறங்குவதையும் கண்ட நான் வேகமாக எழுந்து இறங்கி அவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு எனது பஸ் நிற்கும் இடத்தை நோக்கி நடந்தன்.

வீட்டுக்குப் போயச் சேர்ந்த நான் புதியமனப் பாரத்துடன் இருந்தன்.குளித்த நான் ரீ போட்டுக் குடிச்சிட்டு படுக்கையில் படுத்தபடி யோசித்துக் கொண்டிருந்தன்.படுத்தால் நித்திரையாகவிடுவன் என்று நினைத்துக் கொண்டு மனைவிக்கு கடிதத்தை எழுதினன்.கடிதத்தில் நான் இரவு வேலை செய்யிற இடத்தில சுண்ணாகத்தைச் சேர்ந்த பிள்ளையொன்று வேலை செய்வதாகவும், இன்றைளேயாடு இரவு வேலை முடிஞ்சுவிடும், அடுத்த கிழமையிலிருந்து வேற கொம்பனிக்கு வேலைக்குப் போவதால் அங்கு போயச் சேர்ந்ததும் முகவரியை எழுதுகிறன் அதுவரையும் கடிதம் போட வேண்டாம் என்று விபரமாக எழுதின நான் இங்கை ஒருத்திக்கு தாலி கட்டப் போகிறேனே என்பதை யோசித்து குற்ற உணர்வில் கண்கள் கலங்கியது.

கடிதத்தை எழுதி முடிச்ச நான் திரும்பவும் படுத்தால் நித்திரையாகி விடுவன் என்பதால் கடிதத்தை உடனடியாகவே போஸ்ட் பண்ண வேண்டுமே என்று எமது கட்டிடத்துக்கு அருகில் உள்ள போஸ்ட் ஒபீசிலை கொண்டு போய் கொடுத்துவிட்டு திரும்பி வந்து கட்டிடத்துக்கு கீழே உள்ள குடியிருப்பாளர்களுக்காக வரும் கடிதங்களைப் போடும் பெட்டிகளில் எமது வீட்டு எண் பெட்டியைத் திறந்தன்.

பெட்டிக்குள் மூன்று கடிதங்கள் இருந்தன.அவற்றில் மனைவி அனுப்பிய கடிதமும் இருந்தது.சரியான சந்தோசமாக இருந்தது. அந்த இடத்திலேயே என்வலப்பை கிழித்து கடிதத்தை எடுத்த போது கடிதத்துடன் மனைவி கம்பாயம் போட்டு எடுத்த புகைப்படமும் இருந்தது.மனைவிக்கு கம்பாயம் மிக அழகாக இருந்தது.

வழமையான சுக விசாரிப்புகளுடன், இங்கை எல்லாரும் நீங்கள் அனுப்பிய கம்பாயம் பற்றியே கதைக்கினம்.பேபியும் ராதாவும் போட்டுப் பார்ப்பம் தரச் சொல்லியும் நான் கொடுக்கவில்லை.இப்படி ஒரு புருசன் கிடைக்க நீ குடுத்து வைச்சனி என்று சொன்ன அன்ரி என்னைக் கோபப்பட வைக்க வேண்டும் என்பதற்காக வேணுமெண்டே இந்தக் கம்பாயத்தைப் போல அங்கையும் யாரேன் சைனீஸ் பொம்பிளைக்கு தைச்சுக் கொடுத்திருப்பார் என்று கேலி பண்ணினார்.

அன்ரியின் குணம் உங்களுக்குத் தெரியுந்தானே.அன்ரி அடிக்கடி வீட்டுக்கு வந்து அம்மாவிடம் பேச்சு வாங்குவார்.நீங்கள் உங்குள்ள பழ வகைகளை வாங்கிச் சாப்பிடுங்கோ.

இரவு வேலைக்குப் போக வேண்டாம்.காசு தேவை என்பதற்காக உடம்பைக் கெடுக்காதையுங்கோ.நீங்கள் பம்பாய் இனிப்பு சாப்பிடறது இல்லை என்று எழுதியிருந்தீர்கள். நாங்கள் சாப்பிடவில்லை என்பதற்காக நீங்கள் சாப்பிடாமல் இருக்க வேண்டாம் வாங்கிச் சாப்பிடுங்க.யோகமலர் இப்பொழுதும் சாப்பாடு தருகிறவரா.அவருக்கு நன்றி சொன்னதாகச் சொல்லுங்க.

சிங்ககப்பூரிலையிருந்து வரும் போது அந்தப் பிள்ளைக்கு ஏதாவது அன்பளிப்பு வாங்கிக் கொடுங்கள் என்று எழதியிருந்தாள்.

மனைவி கம்பாயம் உடுத்து எடுத்த படத்தை யோகமலருக்குக் காட்ட வேண்டும் என்ற ஆர்வத்துடன் வீட்டுக்குள் போன நான் அறை நண்பர்களுக்கு வந்த கடிதங்களை மேசையில் வைச்சுவிட்டு கொஞ்ச நேரம் நித்திரை கொண்டன்.

ஜிஇக்குப் போனதும் யோகமலருக்கு மனைவி கம்பாயம் உடுத்து எடுத்த படத்தைக் காட்ட வேண்டுமென்ற எண்ணத்துடன் அவளுக்காகக் காத்திருந்தன்.

யோகமலர் வேகமாக என்னை நோக்கி வந்து கொண்டிருநதாள்.அவள் முகம் பிரகாசமாகவிருந்தது.அவளின் கையில் புகைப்படத்தைக் கொடுத்தன்.கண்கள் அகல விரிய படத்தைப் பார்;த்தவள் ஆகா சுப்பர் அக்கா கம்பாயத்தில் அருமையாக இருங்கிறாங்க, அக்கா மாதிரி ஒரு பெண்டாட்டி கிடைக்க நீங்க கொடுத்து வைச்சிருக்க வேண்டும் என்று உற்சாகமாகச் சொல்லி சந்தோசப்பட்டாள்.

 

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *