கதைகள்

சிங்கப்பூரில் சிலகாலம்!…. 16…… (உண்மைக் கதை) ஏலையா க.முருகதாசன்.

அவளுடைய இதழ்கள் நடுங்க உங்களிடம் ஒரு வேண்டுகோள் தயவு செய்து மாட்டன் என்று சொல்லாதீர்கள், அக்காவுக்கு இதனால் எந்தப் பாதிப்பும் வராது என்றவளின் கண்களிலிருந்து கண்ணீர் வரத் தொடங்க, நீங்கள் எனக்கு என்று தயங்கியவள் தனது கைகள் இரண்டையும் தனது கழுத்தின் இரண்டு பக்கமும் கொண்டு போய் பிறகு கழுத்தின் பின்பக்கம் நிறுத்தி முடிச்சுப் போடுவது போலக் காட்ட,அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பதைப் புரிஞ்சு கொண்ட நான் அதிர்ச்சியடைந்து அமைதியாக இருக்க என்னை ஏக்கத்துடன் பார்த்தவள் „இந்தப் பெண்டாட்டிக்கு இதைச் செய்ய மாட்டீர்களா நீங்கள் ஊருக்கு போகும் முன்பே இறந்திடுவேனுங்க,நீங்க கட்டின தாலியோட இறக்கும் வரத்தைத் தாங்க „ என்று விம்மி அழுதாள்.

யோகமலர் தனது கழுத்தில் தாலி கட்டுங்கள் என்று கேட்பாள் என்பதை நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.அதிர்ச்சியாகவிருந்தது,மீண்டும் மீண்டும் தவறு விடுகிறேனோ அவள் இழுத்த இழுப்புக்கெல்லாம் போய்க் கொண்டிருக்கிறேனோ இது எங்கை போய் முடியப் போகுதோ தெரியவில்லையே என்று யோசித்துக் கொண்டிருக்க அவள் தனது வீட்டிலை நடந்த விசயத்தைச் சொல்லத் தொடங்கினாள்.

„உங்களை நான் காதலிச்சது அப்புறம் உங்களை மனதளவிலை புருசனாக்கி வாழ்வதும்,உங்களுக்கு நான் ஒரு பெண்டாட்டியாக சாப்பாடு கொண்டு வந்து தருவதும் இப்ப இரவு வேலைக்கு நீங்க போவதால் அதுகென்னு ஸ்பெசலாக சமைச்சுக் கொண்டு தருவதும் என்னோட அப்பா அம்மாவுக்கும் அண்ணாக்கள் இரண்டு பேருக்கும், அண்ணிமாருக்கம் ரொம்ப நன்றாகவே தெரியும்.என்னோட விருப்பத்துக்கு எதிராக அவங்க யாருமே எதுவும் சொல்லல.

ஆனா நான் அடுத்த வாரத்திலேருந்து உங்களோட ஒரே வீட்டில இருக்கப் போறேன்னு சொன்னதும்,அப்பா அம்மாவுக்காகவும் அண்ணாக்களுக்காகவும் அண்ணிமார்கள் என்னோட பேசினாங்க.

நான் அவங்களோட பேசும் போது, அவரோட வாழ்க்கையை நான் குழப்ப மாட்டன், அவருக்கு வேர்க் பெமிற் முடிஞ்சதும் அவர் ஊருக்குப் போகனும், அக்காவுக்கு ஒரு போதும் துரோகம் செய்ய மாட்டன் என்று அவங்களுக்கு உறுதியாகச் சொன்னதும், மூத்த அண்ணி „அப்படின்னா ஒரே வீட்டில் இரண்டு பேரும் ஒன்னா இருந்தா நீ கருத்தரிச்சா என்ன செய்யிறதுன்ன கேட்டாங்க.

அதுக்கு நான் சொன்னேங்க நான் கருத்தரிக்காம பார்த்துக் கொள்வேன் அதுக்குத்தான் மெடிசின் இருக்கேன்னு சொன்னேங்க.ஆமா நீ அவரோட ஒன்னா இருந்திட்டு அவரு ஊருக்குப் போக ,நீ இங்க வர சிங்கப்பூரில யாரோ ஒருத்தரோட திருட்டு வாழ்க்கை வாழ்ந்திட்டு அபோசன் செய்திட்டு வந்திருக்கா என்று உன்னப் பற்றி மோசமாக கதைப்பாங்களே என்றவுடன் நான் சொன்னேங்க „ ஆமா சொல்லட்டுமே அப்பத்தான் நான் வாழ்ந்த வாழ்க்கையைத் தெரியாதவங்க புறப்போசல் கொண்டு வரமாட்டாங்க என்றவள், நான் திமிர்க்காரியாக,ஆணவக்காரியாக,கோபக்காரியாக ஆண்களை மதிக்காதவளாக இருந்த எனக்குள் வந்தவர் அவர்.

ஆனா அவர் ஒரு பெண் வலிய வந்து பேசுறாளே, இரண்டரை வருசம் தனியாக பெண் துணையில்லாம சிங்கப்பூரில இருக்கப் போறேனே அனுபவிச்சிட்டுப் போவம்னு நினைக்காம தன்னோட சிற்றுவேசனை புரிய வைச்சும், மறுத்தும் இருந்த அவர் எனக்கு புருசனாக கொஞ்ச நாளாவது அவரோட வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டது நான், எனக்கு வரப்போற கெட்ட பெயரப் பற்றி நான் கவலப்படல, அவரு ஊருக்குப் போனாப்புறம் மிகுதி நாள அவர் நினப்பிலே

வாழ்வன்,இல்லாட்டி அவரு போக முன்னாடி அவர் மடியில என்னுயிர் போயிடும்னு சொன்னதும் அவங்க இரண்டு பேரும் கண்கலங்கி சொக்காயிட்டாங்க.

அப்ப அவங்க சொன்னாங்க,அவரோட ஒரே வீட்ல வாழ்றதுன்னு முடிவெடுத்திட்டாய் இனி மாத்தமாட்டாய் உறுதியா இருக்கான்னு புரியுது,அவரு ஊருக்குப் போனப்புறம் நீ திருட்டு வாழ்க்கை வாழாம அவரோட வாழ்ந்த வாழ்க்கைக்கு அவரக் கொண்டு தாலி கட்டினா கௌரவம்.

அவரக் கேட்டுப் பார்,அவர் சம்மதிச்சா நல்லது இல்லேன்னா உங்க ரெண்டு பேரோட முடிவுக்கு நாம குறுக்க நிற்க மாட்டம்னு சொன்னாங்க.

அடுத்த வாரம் வெள்ளிக்கிழைமையும் அதற்கடுத்த திங்கட்கிழைமையும் இங்க சிங்கப்பூரில பப்ளிக் கொலிடே எங்க இரண்டு பேருக்கும் ரியூஸ்டேதான் வேல ஆரம்பிக்கும்.அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை அண்ணாக்களும் அண்ணிமாரும்; வந்து உங்களைச் சந்திப்பதாக சொன்னாங்க என்றாள் யோகமலர்.

அவளுக்கு என்ன பதில் சொல்றதுன்னு முடிவெடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தன். அவள் கழுத்தில தாலிய கட்டினால் மனைவிக்குச் செய்யும் துரோகம் என்று மனம் சொல்லியது.

அதே வேளை எனக்காக பல வருடங்கள் ஒன்றாக வாழும் மனைவி போல இந்தக் கொஞ்ச நாட்களுக்குள்ளேயே பாசமுள்ள மனைவியாக வாழும் அவளின் ஆசையை நிராகரிக்கவும் முடியவில்லை.

தாலி கட்டாமலே ஒன்றாகவே வாழலாம்,வாழ்வோம் என அவளிடம் சொல்லவும் முடியவில்லை.அது சுயநலமானது என நினைச்ச நான் நடக்கிறது நடக்கட்டும் அவளை எனக்குக்

காட்டிய கடவுள் ஏதோ ஒரு காரணத்திற்காகத்தான் நாடகம் ஆடுகிறான் என நினைச்சு அவளின் தலையை எனது மார்போடு அணைச்சு அவளின் கண்ணீரைச் துடைச்சுக் கொண்டே தாலி கட்டிறன் அழ வேண்டாம் என்று சொன்னதும் அவளால் சந்தோசத்தை தாங்க முடியவில்லை உடல் நடுங்க தாங்ஸ்ங்க இது போதும் உங்களுக்காக என்னுயிரை இப்பவே கொடுப்பன் என்றவள் சூழ்நிலை சுற்றுப்புறத்தை மறந்து கட்டி அணைச்சாள்.

 

அவள் என்னிடம் வேண்டுகோள் விட்டமையும் நான் எதுசரி எது பிழை என்று யோசிக்காமல் வாக்குக் கொடுத்தமையும் எனக்கு ஒரு கனவு போலத் தோன்றியது.

எப்பொழுது உங்கடை அண்ணிமார்கள் தாலி கட்டிறதைப் பற்றிக் கதைச்சார்கள் என்று கேட்டன். இராத்திரி இங்கிருந்து பஸ்ஸில் போய்ச் சேர்ந்த போது வீட்டிலே அண்ணாக்களும் அண்ணிமாரும் இருந்தாங்க.

என்னை எனது அறைக்குள்ளே அழைச்சிட்டுப் போய் நிறைய நேரம் பேசினாங்க,அவங்கதான் உங்கள கேட்கச் சொன்னாங்க என்று அவள் சோர்வாகச் சொன்னாள்.

அவர்கள் அப்படிக் கதைச்சது பிழையில்லை.என்னதான் உங்களுடைய சுதந்திரத்தை அவர்கள் ஏற்றுக் கொண்டாலும் பொம்பிளைப் பிள்ளைகள் பற்றி எல்லாத் தாய்தகப்பனும் பயப்படுவது இயற்கைதான் என நான் சொன்னதும், நிறையத்தரம் அவள் சொன்ன நீங்க பச்சுலராக ஏங்க வரேலன்னு மீண்டும் மீண்டும் சொல்வதைச் சொல்லியவள், „நான் எதிர்பார்க்கவேயில்லங்க நீங்கள் எனக்குத் தாலிகட்டச் சம்மதிப்பீர்கள் என்றவளின் முகம் ஏதோ குற்ற உணர்வில் சங்கடப்படுவது போல இருந்தது.

தாலிகட்டிய உங்க மனைவி அக்கா இருக்கத்தக்கதாக எனக்கும் தாலிகட்டச் சொல்லிக் கேட்டது மனசெல்லாம் வலிக்குதுங்க என்னை மன்னிப்பீங்களா என்றாள்.

ஒரு முடிவு எடுக்கத் தடுமாறுவதுதான் பெரும் மன உளைச்சலைத் தரும்.யோகமலர் மட்டுமே இந்த முடிவுக்குப் பொறுப்பு அல்ல, நானுந்தான் என நினைச்சுக் கொண்டன்.முடிவெடுத்த பின் எடுத்த முடிவு சரியா பிழையா என தடுமாறத் தேவையில்லை அவளுக்கு தாலி கட்டுவது என்று உறுதியாக முடிவெடுத்தன்.

„ஒன்றுக்கும் கவலைப்பட வேண்டாம் யோசிக்கவும் வேணடாம்.உங்களுக்குச் சந்தோசமாகத்தான் தாலிகட்டப் போகிறன் என்று சொன்னன்.

என் தோள் மீது சாய்ந்தபடியே இருந்தாள்.கண்களை அடிக்கடி துடைத்துக் கொண்டாள்.கண்களை மூடியபடி இருந்தவள்.என்ன மன்னிச்சிடுங்க.உங்களை ஒரு இக்கட்டான நிலமக்கு கொண்டு வந்திட்டேனுங்க, என்னை மன்னிச்சிடுங்க என்றவள் திரும்பத் திரும்ப என்னை மன்னிச்சிடுங்க என்றாள்.

சாப்பாட்டு நேரம் முடிஞ்சு எல்லாரும் எழுந்து போக அவளுடைய தோழிகள் எங்களுக்ருகில் வந்து அவளிடம் „ யோகி „ ஓகேயா என்று கேட்க யோகமலர் என் புருசனிடமே கேளுங்க எனச் சொல்ல அவர்கள் எதைப் பற்றிக் கேட்கிறார்கள் என ஊகிச்ச நான், யோகமலரை அணைச்சுக் கொண்டே „ஓகே’ என்றன்.

அவளுடைய தோழிகள் தாங்ஸ் என்று சொல்லிவிட்டு, „பஸ்ஸில வரப்போ பயந்து அழுது கொண்டே வந்தாள் நீங்க சம்மதிப்பீங்களா இல்லையான்னு, நாங்க சொன்னோம் அவர் நல்லவரடி உனக்கு தாலி கட்டுவார் என்று சொன்னோம் என்றனர்.

நாங்க போறோம் நீங்க இரண்டு பேரும் வாங்க என்று சொல்லிக் கொண்டே மிசின்கள் இருக்கும் பகுதிக்குள் நுழைந்தனர்.

உற்சாகமில்லாமல் எழுந்தவள் நூடில்ஸ் முழுவதையும் சாப்பிடுங்க.இன்னைக்கு நான் கேட்டதை மனதில போட்டுக் குழம்பிச் சாப்பிடாம விடாதீங்க என்றாள்.

எல்லாரும் உள்ளே போனதன்பின் அவள் என் நெஞ்சில் தலைவைச்சு அழுதாள்.என்னை மன்னிச்சிடுங்க என்றாள்.இருவரும் உள்ளே போனோம்.

அவளின் வேண்டுகோள் என்னையும் அவளையும் மனச்சங்கடப்படுத்தியதால் அவளின் முகத்தில் ஒரு சோர்வு இருந்தது. அவள் மிசினடியில் உட்கார்ந்து வேலை செய்யத் தொடங்கியதும் யாராவது பார்க்கிறார்களா எனச் சுற்று முற்றும் நான் பார்த்துக் கொண்டே அவளின் முதுகை மெதுவாக தடவிக் கொடுத்துக் கொண்டே யோசிக்காமல் சிரித்துக் கொண்டே வேலையைச் செய்யுங்கள் என்றேன்.

நான் வேல செய்றன்,ஆனா நீங்க யோசிக்காதீங்க நம்ம விதிங்க இது.நூடில்ஸை சாப்பிடாம விடாதீங்க என்றாள்.வழமையான வேலை நடந்து முடிய அவளுடன் அவள் கையைப் பிடிச்சவாறு அவளின் பஸ் நிற்கும் இடம்வரையும் கொண்டு போய் விட அவள் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தாள்.

நான் வேகமாக அவளின் பஸ்ஸிற்குள் ஏறி அவளின் தலையைத் தடவி யோசிக்காமல் போயிட்டு வாங்க என்று சொல்ல நான் பஸ்ஸிற்குள் ஏறுவன் என்று எதிர்பார்க்காதபடியால் எனது கைகளை பிடித்து முத்தமிட்டாள்.அவள் அப்படிச் செய்வதை பஸ்ஸிற்குள் இருந்த எல்லாரும் பார்த்து புன்முறுவள் செய்தார்கள்.

பஸ் சாரதிக்கு தாங்ஸ் என்று சொல்லிக் கொண்டே இறங்கி அவளுக்கு கையைக் காட்ட அவளும் சிரித்துக் கொண்டே கையைக் காட்டினாள்.நான் இரவு வேலைக்காக மொலக்ஸை நோக்கி நடந்தேன்.

மனசில் ஆயிரம் கேள்விகள் எழுந்தன.

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button