நடுகைக்காரி!…..தொடர் 5 ….. ( குறுநாவல் ) …. ஏலையா க.முருகதாசன்.

பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கும் எனின்!
தொடர் 5.
„சந்தையடி ஒழுங்கையாலை எங்கை போனனி’ என்று தாய் கேட்ட கேள்விக்கு பதில் எதுவுமே சொல்லாமல் அறைக்குள் போனவன் தாய்க்கு உண்மைகளை மெது மெதுவாகச் சொல்லித்தான் ஆக வேண்டும்,தனக்கும் பார்வதிக்கும் இடையில் உள்ள காதல் விவகாரம் என்றோ ஒரு நாள் எல்லாருக்கும் தெரியவரத்தானே போகுது…..
இப்போதிருந்தே பார்வதியும் நானும் காதலர்கள் என்பதைத் தெரியப்படுத்தி கணவன் மனைவியாவதற்குரிய எதிர்காலத் திட்டத்தை மெதுவாக நகர்த்த வேண்டுமெனில் அதற்குச் சாதகமான சூழ்நிலையைக் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் ஏற்படுத்த வேண்டும், முழுமையாகப் பொய் சொல்லாமல் உண்மைக்குள் யாரையும் பாதிக்காத வகையில் கொஞ்சம் பொய் சொல்வதில் தவறு இல்லை என்று நினைச்சுக் கொண்டவன் குளிப்பதற்காக துவாயை எடுத்துக் கொண்டு விறாந்தைப் படியிறங்கி கிணத்தடியை நோக்கிப் போகையில் தாய்’ நான் கேட்டதற்கு நீ இன்னும் பதில் சொல்லேலையே’ என்றவளுக்கு’ குளிச்சிட்டு வந்து சொல்றனம்மா, அம்மா ரீக்கு என்ன வடையா சுண்டலா செய்து வைச்சிருக்கிறியள்’ என்றவனுக்கு சுண்டல் தாளிச்சு வைச்சிருக்கிறன் என்ற தாய்’ நீ ஒரு நாளைக்கு எத்தனைதரமடா குளிப்பாய் காலமையிலை ஐஞ்சு மணிக்குக் குளிக்கிறாய்,பிறகு மத்தியானம் சாப்பிட முந்தி குளிக்கிறாய், பின்னேரத்திலும் குளிக்கிறாய் சில நேரம் இரவிலும் குளிக்கிறாய்…..என்று தாய் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அம்மா எங்கடை நாடு வெக்கை நாடம்மா,சுத்தம் சுகம் தருமம்மா குளிச்சால்தான் உடம்பு சுகமாயிருக்குமம்மா ‘ என்று தாய்க்குப் பதில் சொல்லிக்
கொண்டே கிணத்தடிக்கு போய் துலாக்கயிற்றில் கட்டியிருந்த வாளியை பிடித்து தண்ணீர் அள்ள கிணற்றுக்குள் விடுகிறான்.
ஞானசெல்வத்தின் வீட்டில் மின்சார இயந்திரம் வழியாக நீர் இறைச்சு தொட்டிக்குள் நிரப்பிக் குளிக்கும் வசதி உண்டு.
தொட்டியோடு சேர்த்து அறையொன்றும் கட்டியிருக்கிறார்கள்.அறைக்குள் நின்று குளித்துவிட்டு, அங்கேயே உடைமாற்றக்கூடிய வசதியுண்டெனிலும்,ஞானசல்வமும் தகப்பனும் எப்பொழுதும் துலா மூலம் அள்ளித்தான் குளிப்பார்கள்.தாயும் சில நாட்களில் துலா மூலமும் குளிப்பதுண்டு.
ஞானசெல்வம் குளிப்பதற்கு ஒரு முக்கிய காரணமும் உண்டு.தண்ணீரை கலக்கி அள்ளிக் குளிப்பதால் பாசிகள் தண்ணீரோடு கலக்கப்பட்டு வெளிவருவதும் ஒரு காரணம்.அப்படிப் பாசிகள் வெளிவருவதால் தண்ணீர் எப்பொழுதம் சுத்தமாகவும் ருசியாகவும் இருந்து கொண்டே இருக்கும் என்று அவன் சொல்லுவான்.
அவனுக்கு விருப்பமான சவர்க்காரங்கள், கோம்பா,லைப்போய், நைட் அண்ட் டேய். ஆனால் கோம்பா சவர்க்காரம் போட்டுக் குளிப்பதில்தான் அதிக விருப்பம் அவனுக்கு.
உள்ளாடையான சஸ்பெண்டருடன் குளிக்கும் அவன் உடம்பு முழுவதும் சவரக்;காரத்தை போட்டு தென்னம்பொச்சுத் தும்பால் உடம்பு முழுவதையும் உரஞ்சி தண்ணீரை வார்த்ததன் பின் தண்ணீர் துளிகள் துளி துளியாக உருண்டு கொண்டிருந்தால் திருப்திப்பட்டுக் கொள்வான்.
இல்லையென்றால் இரண்டாவது முறையும் சவர்க்காரம் போட்டுக் குளித்து உடம்பில் தண்ணீர்த் துளிகள் உருண்டோடுவதை இரசித்து மகிழ்வான்.
அவன் குளிச்சுக் கொண்டிருக்கும் போது பார்வதியைப் பற்றி நினைச்சவன்,பார்வதியில் தான் வைச்சிருக்கும் காதலையும், பார்வதி தன்மீது வைச்சிருக்கும் காதலையும் எவ்வாறு தாயிடம் சொல்வதென யோசித்துக் கொண்டிருந்தான்.
குளித்து முடிந்த அவன் உள்ளாடையை தோய்க்கும் கல்லில் வைத்து சன்லைட் சவர்க்காரம் போட்டுக் கசக்கி அதை அலம்பிக் காயவிட்டவன், துவாயைக் கட்டிக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்து சாரத்தை மாற்றி, சுவாமிப் படங்களுக்கு முன்னால் நின்று திருநீறைப் பூசிக் கும்பிட்டவன்,அடுப்படிக்குள் போய் தாயாரிடம் தேத்தண்ணியையும் ஒரு குண்டாளன் மாபிள் கோப்பையில் சுண்டலையும் வாங்கிக் கொண்டு கதிரையில் உட்காராமல் விறாந்தைச் சுவரோடு சாய்ந்து உட்கார,தாயாரும் அவனுக்கருகில் உட்காருகிறாள்.
தாய் தேத்தண்ணியைக் குடிச்சுக் கொண்டே அவனை திரும்பி உற்றுப் பார்த்தவள் „நான் அப்போதை கேட்ட கேள்விக்கு இன்னும் நீ மறுமொழி சொல்லேலை, நீ எங்கை போனாலும் பரவாயில்லை நீ என்ன சின்ப்பிள்ளையே,எதுவாயிருந்தாலும் எங்கை போறன் வாறன் என்று சொன்னால் எனக்கும் கொப்பாவுக்கும் நிம்மதியாயிருக்கும்’ என்று தாய் சொல்லி முடிக்குமுன்’அம்மா நான் உங்களுக்குச் சொல்லாமல் விடுவேனேயம்மா,எப்பவெண்டாலும் சொல்லத்தானே போறன்,நீங்கள் சுண்டல் சாப்பிடேலையா சாப்பிடுங்கம்மா’ என்றவனின் சுத்திச் சுத்திக் கதைக்கிறதைக் கவனித்த தாய் இவன் ஏதோ பாரதூரமான விசயத்தை மூடிமறைக்கிறான் என்பதை உணர்ந்தவள் சுண்டலை எடுத்து வாயில் போட்டு தேத்தண்ணியையும் குடிச்சவள் இவனிடம் இருந்து எப்படி உண்மையை வரவழைப்பது என்று யோசித்தவள்,
„சண்முகத்தார் இஞ்சை வந்திருந்தார், நீ சந்தையடிப் பாலத்தாலை சைக்கிளை உருட்டிக் கொண்டு போனதை அவர் கண்டிருக்கிறார்,பூதவராயர் கோவில் கொடியேற்றத் திருவிழா நடக்கப் போகுதல்லே அதுக்கு இண்டைக்கு கோவில் நிர்வாகக்குழுக் கூட்டம் கொப்பாவும் கோவில் நிர்வாகத்தில் இருக்கிறார் அவரைக் கூட்டிக் கொண்டு போகவென வந்திருந்த போது உன்னை அங்கை கண்டதாகச் சொல்ல, கொப்பா திரும்பி வந்து செல்வத்தை கேள் ஏன் அந்த ஒழுங்கையாலை போனதென்று சொல்லிவிட்டுத்தான் போனவர்’ என்றாள்.
ஞானசெல்வத்தை தாய் „ஞானம்’ என்றும் தகப்பன்’ செல்வம்’ என்றுதான் கூப்பிடுவது வழக்கம்.
தாயார் விபரமாச் சொன்னதும்,தான் எப்படிச் சண்முகத்தாரைக் கவனிக்காமல் விட்டனான்,நான் எங்கை போனாலும் எந்தப் பொருளையோ அல்லது மனிதர்களையோ பார்த்தால் அந்தப் பொருளின் வடிவத்தையும் அந்த மனிதர்கள் என்ன உடை போட்டிருந்தார்கள், அவர்கள் போட்டிருக்கும் சட்டைகள் அரைக்கைச் சட்டையா முழுக்கைச் சட்டையா என்பதையும் அவர்கள் எப்படிக் கையை மடிச்சுவிட்டிருப்பார்கள் என்பதையும், வேட்டி கட்டி சால்வை போட்டிருப்பவர்கள் என்ன நிறக் கரைவேட்டி கட்டியிருப்பார்கள் என்பதையும், சால்வையைக்கூட தோளில் போட்டிருப்பார்களா அல்லது கழுத்தைச் சுற்றி போட்டிருக்கிறார்களா என்;பதையும், தலைப்பா கட்டியிருப்பதையும்,வயலுக்குள் எவர் தோட்டத்தில் என்னென்ன பயிர்கள் எந்தெந்தப் பயிர்களுக்கு அருகில் இருக்கிறது என்பதையும்;;, ஒழுங்கையில் வீதியில் போவோர் வருவோரை ஞாபாகத்தில் வைச்சிருப்பது மட்டுமல்ல அதே அவர்களைச் மீண்டும் சந்திக்கும் போது முன்பு சந்தித்த திகதி நாட்களைக்கூட ஞாபகத்தில் வைச்சு எவ்வளவு மாதங்கள் சென்றாலும் சொல்லக்கூடிய தான் எப்படிச் சண்முகத்ததாரை கவனிக்காமல் விட்டனான் என்று குழம்பியவன் அப்படியென்றால் பார்வதி என்மீது கொண்ட![]()
காதலும் நான் அவள் மீது கொண்ட காதலும் அவளின் அழகிய மண்ணிற உடலும் எடுப்பான மூக்கும் நீளமான தலைமயிரும், அருகருகே இருவரும் நடக்கையில் அவள் அடிக்கடி காதலுடன் பார்த்த பார்வையும், நர்னும் அவளை அதே காதல்காமம் கலந்த உணர்வுடன் பார்த்தமையும் என்னை மறந்து அவள்தான் எல்லாம் என்ற நிலையில் சுற்றுப்புறத்தையே மறந்தமைக்கு காதலுக்கு இருக்கும் சக்திதானே காரணம் என…அவன் யோசனைக்குள் மூழ்கியிருத்தலை „ என்ன நான் கேட்கிறன் நீ மௌனமாகப் பேசாமல் இருக்கிறாய் „ என்ற தாயின் கேள்விக்கு வாழைப்பழத்தில் ஊசி எற்றுவது போல எப்படிப் பதில் சொல்வதென்று யோசித்தவன் அதற்கான கால அவகாசத்தை எடுப்பதற்காக பிடிவாதமாக நின்ற தாயின் மனநிலையை திசைதிருப்ப எண்ணி „ எப்பவம்மா எங்கடை கோவில் கொடியேறப் போகுது என்றவன், அம்மா இந்தச் சுண்டலுக்கு இன்னும் இரண்டொரு செத்தல் மிளகாயும் கருகப்பிலையும் போட்டிருந்தால் இன்னும் ருசியாக இருந்திருக்கும் என்றவனைப் பார்த்து’ நான் கேட்டது சந்தையடிப் பாலத்தாலை ஏன் போனனி என்றுதானே, அதுக்கு மறுமொழி சொல்ல ஏன் பயப்படுகிறாய் ,அங்கை இங்கை ஏன் கதையை மாற்றிக் கொண்டு போகிறாய் என்று தாயின் குரல் தடிக்க……..பொறுமையாகவிருந்தவன்……
அம்மா இன்றைக்கு விடமாட்டார் போலிருக்கு என்று நிiயோசிச்சுக் கொண்டு „அம்மா நான் பாலத்தாலை ஏன் போனனான் என்று பதில் சொல்றன் அம்மா, ஆனால் அதுக்கு முன்னாடி நான் கனநாளாய்க் உங்களிட்டை கேட்க வேண்டும் என்று நினைச்ச கேள்விக்கு பதில் சொல்லுங்கள் அம்மா’ என்றவன், தாய்க்கு வாய் திறக்கச் சந்தர்ப்பம் கொடுக்காமல்’ எங்கள் குடும்பத்திலை அண்ணாக்களில் சின்னண்ணா அக்காக்கள் அத்தான்கள் உட்பட ஐஞ்சு ஆசிரியர்கள் இருக்கினம், ஏன் நீங்களும் அப்பாவும்,அண்ணாக்களில் ஒருதத்தரையோ அக்காக்களில் ஒருத்தியையோ டொக்ரகாவோ இல்லாட்டில் இனஜினியராகவோ படிப்பிக்கேலை என்று கேட்டதும்,
அதற்குத் தாய் எழுத்தறிவித்தவன் இறைவனுக்குச் சமம்;,தாய் தகப்பனுக்குப் பிறகு கல்விக்கு முதலிடம் கொடுத்து மாதா பிதா குரு தெய்வம் என்று சான்றோர் சொல்லியிருக்கிறார்கள்.
அதனாலதான் எங்கடை குடும்பத்திலையிருந்து மூன்று பிள்ளைகளை ஆசிரியராகப் படிப்பிச்சனாங்கள்’ என்று பதில் சொன்னவள்,இவன் ஏன் நானொன்று கேட்க இவனொரு கேள்வியைக் கேட்கிறான் எனத் தாய் யோசித்த போதும் படிப்பிப்பது என்பது எல்லாருக்கும் கிடைக்காத வரம், பாடம் சொல்லிக் கொடுப்பதே இறைவனுக்கு பூசை செய்வதைக் காட்டிலும் சிறந்தது என்று சொல்லி முடிக்கிறாள்.
அம்மா உங்களையும் அப்பாவையும் நினைச்சால் பெருமையாக இருக்குதம்மா என்று தாயைப் பார்த்துச் சொன்னவன் தனது காதல் வெற்றிக்கு தாயே பச்சை விளக்கு காட்டிவிட்டாள் என்று உள்ளுக்குள்; மகிழ்ந்து கொண்டே அம்மா இண்டைக்கு மாணிக்க மாமாவின்ரை தோட்டத்திற்கு சும்மா போயிருந்தன்.
அங்கை நாலு நடுகைக்காரிகள் வெங்காயத்துக்குள்ளை புல்லுப் பிடுங்கிக் கொண்டிருந்தினம், அதிலை ஒருத்தியை இதுவரை எந்தத் தோட்டத்திலையும் காணவேயில்லை.
இளம் பிள்ளையாயிருந்தாள்,மற்றவையப் போல சீலை உடுக்கவில்லை,முழுச்சட்டை போட்டிருந்தாள்.யாராக இருந்தால் எனக்கென்ன என்று நினைச்சு கொண்டு மாணிக்க மாமாவுடன் கதைச்சுப் போட்டு வரேக்கிலை கிணத்தடிக்கு தண்ணி குடிக்கவென்று வந்த அந்தப் பிள்ளை,கிணத்தடி ஆடுகால் மரத்தோடை சாத்தியிருந்த என்னுடைய சைக்கிள் காண்டிலில் செருகியிருந்த டெயிலி நியூஸ் பேப்பரை எடுத்து படிச்சுக் கொண்டு நின்றதைக் கண்டதும்,நடுகைக்காரி இங்கிலீஸ் பேப்பர் படிக்கிறாளோ சும்மா பார்க்கிறாளோ என்று நினைச்சுக் கொண்டு அவளுக்குக் கிட்டப் போய் „ உங்களுக்கு இங்கிலீஸ் பேப்பர் படிக்கத் தெரியுமா „என்று கேட்க,ஒழுங்கான உச்சரிப்பில் செய்திகளை வாசிச்சுக்
காட்டியவள் அதற்கான விளக்கத்தையும் சொன்னாள்.தான் யூனியன் கொலிஜ்ஜில் படிச்சு எஸ்.எஸ்.சி சோதனை எடுத்து இங்கிலீஸ் உட்பட மூன்று பாடங்களிலை மட்டுந்தான் பாஸ் பண்ணினது என்று சொன்னாள்.
நடுகைக்காரிகள் என்றாள் அவர்கள் படிக்காதவர்கள் எனப் பலர் நினைக்கிறார்கள்.அந்தப் பிள்ளை அப்படிச் சொன்னதும் நான் திகைச்சுப் போனன்.
அதற்குப் பிறகு…
(தொடரும்)
![]()