கதைகள்

உன்னைச் சொல்லி குற்றமில்லை!… ( சிறுகதை ) …. சங்கர சுப்பிரமணியன்.

நெல்லை காமராசர் மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறான் ராமானுஜம். பள்ளியின் சீருடையான காக்கி கால்சட்டையும் வெள்ளை மேல் சட்டையும்தான் அவனுக்கு வெளியிலும. பள்ளி மாணவர்களுக்குள் வித்தியாச மனப்பான்மையை வேரறுக்கவே சீருடை. ஆனால் வித்தியாசம் வேறூன்றும் முறையில் மாணவர்கள் மத அடையாளங்களுடன் வருவதை யாரும் கண்டு கொள்வதில்லை. மத அடையாளங்களை வழிபாட்டு இடங்களில் காண்பிக்கலாம் தவறில்லை. கல்வி கற்கும் இடங்களிலுமா?

ராமானுஜத்தின் விஞ்ஞான ஆசிரியர் வேணுகோபால் மாணவர்களை அழைத்துக் கொண்டு சோதனைச்சாலை சென்றார். அங்குள்ள உபகரணத்தின் மூலம் பூமி, சூரியன், சந்திரன் எல்லாம் எப்படி சுற்றி வருகின்றன என்று விளக்கமாக கற்றுத் தந்தபின் எவ்வாறு அமாவாசையும் பௌர்ணமியும் தோன்றுகிறது என்பதனை விவரித்தார். கடைசியாக இப்படித்தான் பௌர்ணமியும் அமாவாசையும் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை மாறிமாறி வருகிறதென்று சொன்னவர் யாருக்காவது சந்தேகம் இருக்கிறதா என்று  கேட்க ராமானூஜன் கையை தூக்கினான்.

“என்ன சந்தேகம் ராமானூஜா?” என்றார் ஆசிரியர்.

“எப்பவாவது ஒருமுறை அமாவாசை அன்று பௌர்ணமி வரும். வந்துமிருக்கிறது” என்றான் ராமானூஜன்.

“என்ன நடக்க முடியாதை நடந்ததாக சொல்கிறாய்?”

“இதற்கு முன் நடந்த வகுப்பில் தமிழாசிரியர் தனபால் அபிராமி பட்டர் என்பவர் அமாவாசையன்று பௌர்ணமியை வரச்செய்து காண்பித்தார் என்று பாடம் நடத்தினார்.”

“ராஜா, ராமானூஜா அது கதை. நான் சொல்வது உண்மை, விஞ்ஞானம். இப்போது இந்தியாவிலேயே பெரிய சுவாமிகள் யாரையாவது அழைத்து அதுபோல்செய்யச்
சொன்னால் அவரால் நிச்சயம் முடியாது” என்றார்.

விஞ்ஞான ஆசிரியர் விளக்கமாக கூறியும் ராமானூஜன் ஏற்றுக் கொள்ளவில்லை. அவனைச் சொல்லியும் குற்றமுல்லை. சிறு குழந்தைகள் களிமண்ணைப் போன்றவர்கள். அவர்களை எப்படி பிடிக்கிறோமோ அப்படியே ஆகிவிடுவார்கள். அவர்களுக்கு உண்மையை சொல்லிக் கொடுத்தும் வளர்க்கலாம். வளர்ந்தபின் அவர்களாக தெரிந்து கொள்ளட்டும் என்று நம்புவதற்கு கடினமானவைகளை புகுத்தாமலும் வளர்க்கலாம். அதனால் அவன் விஞ்ஞான ஆசிரியரிடம் அவரும் தமிழாசிரியரும் வெவ்வேறு விதமாக சொல்லித் தருவதைப் பற்றிச் சொன்னான். ஒருவர் சொல்வது உண்மை என்றால் மற்றவர் சொல்வது பொய்யாகத்தான் இருக்கும் என்றும் சொன்னான்.

ராமானூஜன் அவ்வாறு சொல்லவே விஞ்ஞான ஆசிரியர் நிலைமை சங்கடத்துக்குள்ளானது. அவரால் தமிழாசிரியர் பொய் சொல்கிறார் என்று மாணவனிடம் சொல்லமுடியாது. அதேவேளையில் அதுவும் சரி இதுவும் சரி என்று சமாளிக்கவும் முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கும்போது வகுப்பு முடியும்நேர மணி அடிக்கவே தப்பித்தோம் பிழைத்தோம் என்று வகுப்பறையை விட்டு வெளியேறினார்.
வகுப்பறையை விட்டு வெளியேறினாலும் விஞ்ஞான ஆசிரியரின் மனதில் ஒரு போராட்டமே நடந்து கொண்டிருந்தது.

எல்லாவற்றுக்கும் காரணம் அபிராமி பட்டரும் சரபோஜி மன்னனும் தான். இருவரும் அவரவர் கௌரவத்தை இழக்க விரும்பவில்லை. முற்றும் துறந்த மகானுக்கு கௌரவத்தை துறக்க முடியவில்லை. அரசரிடம் மன்னிப்பு கேட்டிருக்கலாம். மக்களைக் காக்கும் மன்னனாவது பட்டரின் நிலைமையை உணர்ந்து மன்னித்திருக்கலாம்.

அன்று சுமுகமாக தீர்த்துக் கொள்ளாத ஒரு சிறு பிரச்சினை இன்று இருபத்தோராம் நூற்றாண்டிலும் மதத்தையும் விஞ்ஞானத்தையும் குழப்பி ராமானூஜத்தையும் குழப்புகிறது என்று எண்ணினார். கல்விக் கொள்கையை நொந்துகொண்டார். என்ன கல்விக் கொள்கையோ என்ன பாடத்திட்டமோ மாணவர்களின் அறிவுக் கண்ணை திறந்து விடுவதற்கு பதிலாக சந்தேகத்தையும் நம்பமுடியாத் தன்மையையும் தோற்றுவிக்கிறதே என்ற ஆதங்கம் அவர் மனதை ஆட்கொண்டது.

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button