கதைகள்

காதலர் விமானம்!…. 41…… (காதலர் விமானம் தரையிறங்கியது) ஏலையா க.முருகதாசன்.

குரு அர்ச்சனா,சந்திரன் சாந்தினி,சாகித்தியன் சிவகாமி ஆகிய காதலர்களுக்குச் சுதந்திரம் கிடைத்துவிட்டதால்.மூன்று காதல் சோடிகளும் பரமேஸ்வராக் கல்லூரிக்கும் ஸ்கந்தவரோதயாக் கல்லூரிக்கும் நடக்கின்ற நட்பு ரீதியிலான உதைபந்தாட்டப் போட்டியைப் பார்ப்பதற்காக கிருட்டினற்றை வானிலை போய் பரமேஸ்வராக் கல்லூரியடியில் இறங்கிய போது,ஸ்கந்தாப் பொடியங்கள்,மகாஜனா வானில் குருவும் சாகித்தியனும் சாந்தினியும் வந்து இறங்குவதைக் கண்டதும் கேள்விக் குறியுடன் பார்க்கிறார்கள்.

அதில் ஒருத்தன் சொன்னான் இப்ப எல்லாரும் மச்சான்மாராயும் அண்ணீக்களாயும் மாறிவிட்டார்கள். மே மாதம் மூன்று சோடிகளுக்கும் கல்யாணமே நடக்கப் போகுதாம் என்று சொல்ல, இன்னொருத்தன் அட கடவுளே பாரடா கதை எப்படி எல்லாம் போகுது என்றான்.

உதைபந்தாட்டம் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது.இரண்டு உதைபந்தாட்டக் குழுவும் ஒன்றை ஒன்று மிஞ்சி நீயா நானா என விளையாடிக் கொண்டிருந்தன.

கிருட்டினர் அன்று வானை ஓட்டிக் கொண்டு வரவில்லையாதலால் அவரின் மகன் கிளியண்ணைதான் வானை ஓட்டிக் கொண்டு வந்தவர்.மகாஜனா விளையாட்டு உதவியாளர் கிருஸ்ணபிள்ளையும் வந்திருந்தார்.

சந்திரன், சிவகாமி,அர்ச்சனா மகாஜனா மாணவர்கள்.கிளியண்ணை மகாஜனாவுக்கு வான் ஓடுபவர். கிருஸ்ணபிள்ளை மகாஜனா விளையாட்டுப் பகுதி உதவியாளர்.

குரு, சாகித்தியன் ஸ்கந்தவரோதயா பழைய மாணவர்கள்.சாந்தினி ஸ்கந்தவரோதயா மாணவி.

உதைபந்தாட்டம் நடக்கும் போது ஸ்கந்தாவை ஆதரிப்பது என்று சந்திரன், சிவகாமி,அர்ச்சனா முடிவெடுத்து ஸ்கந்தாவுக்குச் சார்பாக அவர்கள் மூவரும் அரவாரிக்க கிளியண்ணையும் கிருஸ்ணபிள்ளையும்கூட ஸ்கந்தாவுக்குச் சார்பாக விசிலடித்து ஆரவாரித்தனர்.

ஒரு கூட்டமாக நின்ற பரமேஸ்வராக் கல்லூரி மாணவர்களில் ஒருத்தன் டேய் அங்கை பாரடா மகாஜனா பெஸ்ற் பிளேயர் சந்திரன் ஸ்கந்தாவுக்குச் சப்போட் பண்றான்.அந்தக் கேர்ள்சும் அவைக்குச் சப்போர்ட் பண்ணினம்.வான் றைவரும் மற்றவரும் ஸ்கந்தாவுக்குச் சார்பாக விசிலடிக்கினம் ஒன்றுமே விளங்கேலையோ .ஏதேன் சம்மந்தம் கிம்மந்தம் கலந்திட்டினமோ என்று கேலியும் கிண்டலுமாகச் சொல்லிச் சிரித்தது எல்லோருடைய காதிலும் விழுந்தது.

உதைபந்தாட்டம் நாலுக்கு நாலு என்று றோவில் முடிய,இரண்டு பக்க உதைபந்தாட்ட பிரியர்களும் முடியுமா…..முடியாது என்று கத்த,மற்றவர்களும் முடிந்ததே ….திமிர் கவிழ்ந்ததே என்று சொல்ல இருபக்க பிரியர்களுக்குமிடையில் வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாற ஸ்கந்தாவுக்குச் சார்பாக சாகித்தியன் ஓட, சாகித்தியனுக்காக சந்திரனும் குருவும் ஓட தள்ளுமுள்ளுப்பட சாகித்தியனும் சந்திரனும் சைக்கிள் கொட்டகைக்குள் விழ,சைக்கிள் கொட்டகை வேலித் தகரம் இருவரின் கைகளிலும் கீறிவிடுகிறது.

குரு, சாந்தினி, சிவகாமி, அர்ச்சனா பதட்டமடைந்து கண்கலங்க ஒன்றுமில்லையென்று குருவும் கிருஸ்ணபிள்ளையும் கிளியண்ணையும் அவர்களை ஆறுதல் படுத்தினர்.

இதற்கிடையில் பரமேஸ்வராக் கல்லூரி விளையாட்டுப் பொறுப்பு ஆசிரியர் முதலுதவியாக சந்திரனுக்கும் சாகித்தியனுக்கும் கட்டுப் போட்டிட்டு பரமேஸ்வராக் கல்லூரிக்குப் பக்கத்திலிருக்கும் மருத்துவர் வைத்தீஸ்வரனிடம் போகச் சொல்கிறார்.

குரு, சாகித்தியன்,சந்திரன்,சாந்தினி, சிவகாமி,அர்ச்சனா, கிருஸ்ணபிள்ளை,கிளியண்ணை எல்லோருமாக மருத்துவர் வைத்தீஸ்வரனின் டிஸ்பென்சரிக்குப்; போக அவரே கேட்டார் என்ன மார்ச் நடந்ததோ என்றவர் இரண்டு பேருக்கும் இரண்டிரண்டு இழைகளைப் போட்டு ஊசியும் போட்டுவிட சுண்ணாகத்தை நோக்கி வான் போய்க் கொண்டிருந்தது.

குரு எப்பொழுதுமே அமைதியானவன்.கோபம் வந்தால் இரண்டு வார்த்தைகள் பேசினாலும் மற்றவைக்கு உறைக்கத்தக்கதாகச் சொல்பவன்.

சாகித்தியனைப் பார்த்து அவங்கள் இரண்டு பகுதியும் திமிருல தள்ளுப்பட்டதுக்கு நீ ஏன் அங்கை போனனி, இப்ப பார் உனக்கும் அத்தானுக்கும் காயம் என்று சொல்ல சாகித்தியன் எதுவுமே பேசவில்லை.

வானுக்குள் சாந்தினிக்கும் அர்ச்சனாவுகு;கும் இடையிலிருந்த சிவகாமியின் கண்களிலிருந்து கண்ணீர் வந்ததைக் கண்ட அர்ச்சனாவும் சாந்தினியும் திகைத்து சின்ணண்ணி ஏன் அழுகிறியள் அழாதையுங்கள், இதுவரையில் நீங்கள் அழுது நான் பார்த்ததே இல்லை……

அது சின்னக்காயம் மாறிவிடும் என்று தனது தோளோடு அணைத்துக் கொண்டு அது சரி இப்ப யாருக்காக அழுகிறியள் என்ரை அத்தானுக்காக அழுகிறியளா இல்லை என்ரை சின்னண்ணைக்காக அழுகிறியளா என்று சாந்தினி கேட்க, அண்ணி நான் ஏன் என்ரை அண்ணைக்காக அழுகிறன்அவருக்;காக அழ நீங்கள் இருக்கிறியளே, நான் அவருக்காக அழுகிறன் என்றதும், நான் அத்தானுக்காக ஏன் அழுகிறன் இரண்டு பேரும் லூசுத்தனமாக போய் காயத்தை வாங்கிட்டு வந்து நிற்கிதுகள் என்று சொன்னவள் சிவகாமியின் காதில் மட்டுமே கேட்கத்தக்கதாக „சின்னண்ணி சின்னண்ணையிலை இவ்வளவு காதலா எனக் கேட்க, அவர் என் உயிர் என்கிறாள் சிவகாமி…….

வானை சந்திரசேகரத்தின் வீட்டுக் கேற்றுக்கு முன்னால் நிற்பாட்டியதும் வேகமாக இறங்கிய சிவகாமி வாங்க என்று சாகித்தியனை இழுக்காத குறையாக பிடித்துக் கொண்டு வீட்டுக் கூடத்தில் நிற்பாட்டி வைத்துவிட்டு மாமா மாமி இரண்டு பேரும் இஞ்சை வாங்க இவருக்கு எப்படி இந்தக் காயம் வந்தது என்று கேளுங்கள்……..

இவர் இப்படித்தான் அடிதடிக்காரனாக நெடுக இருக்கப் போகிறாரா என உரத்த குரலில் சொல்லியதும் சந்திரசேகரும் செல்லம்மாவும் திகைத்து நிற்க,சந்திரனும் கையில் காயத்துடன் வர அங்கை வாறாரோ இன்னொருத்தர் உங்களுடைய மருமகனையும் கேளுங்கள் என்ன நடந்தது என்று சொல்ல,சின்னண்ணி இது சின்னக்: காயம் விடுங்கள் அது நாளைக்கே மாறிவிடும் என்று சாந்தினி சொல்ல, அது சரி இதுக்குப் போய் நீ ஏன் ஊரைக் கூட்டுறாய் என்று தங்கச்சியாரைப் பார்த்து சந்திரன் சொல்ல அவங்கள் இரண்டு பகுதியும் உங்கள் இரண்டு பேரையும் தள்ளிவிடேக்கிலை கறல் பிடித்த தகரம் கண்ணிலை கிழிச்சிருந்தால் என்ன நடந்திருக்கும் என்று சிவகாமி கத்த,மார்ச்சடியில் என்ன நடந்திருக்கும் என்பதை ஊகித்துக் கொண்ட சந்திரசேகரம் சரி சரி விடு பிள்ளை நடந்தது நடந்து போச்சுது இனி அவை இரண்டு பேரும் எந்தச் சோழி சுறட்டுக்கும் போக மாட்டினம் என்றவுடன் சமாதனமாகிறாள் சிவகாமி.

சமாதானம் அடைந்த அவள் மாமி நான் இன்றைக்கு மட்டும் இங்கை நிற்கவா என்று கேட்க, இன்றைக்கு மட்டுமல்ல இங்கையே நிற்கலாம் என்கிறாள் செல்லம்மா.

எந்தப் பதிலுமே சொல்லாமல் அர்ச்சனாவும் குருவும் நிற்கிறார்கள்.சரி மாமா மாமி வான் வெளிக்கிடப் போகுது நான் வாறன் என்று சந்திரன் வெளிக்கிட அர்ச்சனா குருவுக்கும் மாமன் மாமிக்கும் சொல்லிப் போட்டு வெளிக்கிட அம்மா நான் அவரோடை போயிட்டு காலமைக்கு வாறன் என்று சொல்லி சாந்தினி சந்திரனுடனும் அர்ச்சனாவுடனும் வெளிக்கிட „நீ எங்கை காலமைக்கு வரப் போகிறாய் சரி போயிட்டு வா என தாயார் சாந்தினியை அனுப்பிவிட,வீட்டை வந்து அந்த வெங்காயத் தங்கச்சி மாதிரி அம்மாவுக்கு ஏதேன் சொல்லி பிரச்சினை பண்ண வேண்டாம் என்று சொல்லி கூட்டிக் கொண்டு போய் வானில் ஏறுகிறார்கள்.

வான் போய்க் கொண்டிருக்கும் போது எனக்குத் எதிர்காலத்தில் பெரிய பிரச்சினையிருக்கு என்று அர்ச்சனா சொல்ல, என்ன பிரச்சினை பெரியண்ணி என்று சாந்தினி கேட்க சிவகாமியையும் உங்களையும் மூத்த மருமகளாக நான் எப்படித்தான் சமாளிக்கப் போகிறேனோ தெரியவில்லை ஐயனாரப்பா அதுக்கு நீதான் வழிகாட்ட வேண்டும் என்று அர்ச்சனா சொல்ல, அட கடவுளே சந்திரசேகரத்தின் குடும்ப பார்லிமெண்ட் அதிகாரத்தை கையில் எடுத்திட்டியள் போலவிருக்கு என்று சொல்லிவிட்டு சாந்தினி மெதுவாகச் சிரித்தால்.நேற்றுவரை தோழியாக இருந்தவள் இனி பெரியண்ணியாகப் போகிறாளே என்றுதான் சாந்தினி சிரித்தாள்.

வான் சச்சிதானந்தம் வீட்டடியில் நின்றதும் அர்ச்சனா இறங்கித் தனது வீட்டுக்குப் போக சந்திரன் சாந்தினியைக் கூட்டிக் கொண்டு தனது வீட்டுக்குப் போகிறான். சந்திரனின் கையில் கட்டிருப்பதைக் கண்டதும் என்ன நடந்தது என்று சச்சிதானந்தம் கேட்க, மாமா கேளுங்கோ இவரும் சின்னண்ணையும் என்ன செய்தவை என்று சாந்தினி சொல்ல நடந்தவற்றைச் சொல்கிறான் சந்திரன்.

நெடுக இப்படி நடக்கேலாது மாமா.தாலி கட்டினதுக்குப் பிறகும் இவர் இப்படி நடந்தாரென்றால் இவருக்கு மூஞ்சையிலை குத்துவன் என்ற சாந்தினி சின்னண்ணியிடம் நல்ல பேச்சு வாங்கிப் போட்டார் சின்னண்ணை என்று சொல்லிக் கொண்டே மாமி சரியாய்ப் பசிக்குது என்ன கிடக்குது சாப்பிட என்று சொல்லிக் கொண்டே அடுப்படிக்குள் போகிறாள்.

அடுத்த நாள் காலை செல்லம்மா எழும்பி கிணத்தடியைப் பார்க்கிறாள்.சாகித்தியன் காயம் உள்ள கையை உயர்த்தியபடி இருக்க சிவகாமி அவனுக்குக் குளிக்க வார்த்துக் கொண்டிருப்பதைக் காண்கிறாள்.

நல்லவை நடக்கும் போது சிலரின் வாழ்வில் தொடர்ந்து நல்லது நடக்கும் என்பார்களே அது போல சந்திரன் கிளறிக்கல் சேவன்ற் வேலைக்காக கல்வித்திணைக்கள யாழ்ப்பாணக் கிளையில் காலியாக இருக்கும் இடத்துக்கு விண்ணப்பித்திருந்தான்.

அவனுடைய அதிர்ஸ்டம் அவனுடைய கல்வித்தராதரம் விளையாட்டு ஈடுபாடு ஆகியவற்றுக்காக அவனுக்கு யாழ்ப்பாணம் கல்விப் பணியகத்தில் வேலையும் கிடைத்துவிட்டது.

ஒரு நாள் சந்திரசேகரம் செல்லம்மா என இருவரும் சச்சிதானந்தம் வீட்டுக்கு வந்து „சாகி அரசாங்க வேலைக்குத்தான் போவன் என்று அடம்பிடித்துக் கொண்டிருக்கிறான்.

அதுவும் விளையாட்டுத் திணைக்களத்தில்தான் வேலை செய்வன் என்று விடாப்பிடியாக நிற்கிறான்,அந்த வேலை கிடைக்கும்; வரையுமாவது கடையிலை வந்து நில் நிர்வாகத்தைப் பார்த்துக் கொள் என்றால் கடைப் பக்கமே வருகிறான் இல்லை, இவனை எப்படி வழிக்குக் கொண்டு வருவது என்று தெரியவில்லை’ என்று மச்சானுக்கும் தங்கச்சியாருக்கும் சிவகாமிக்கும் சொல்லிக் கொண்டிருந்தவர் சிவகாமியைப் பார்த்து மருமோளே நீ ஒருக்கா சொல்லிப் பாரன், நீ சொன்னால் அவன் கேட்பான் என்று சொன்னதும், மாமா நீங்கள் கவலைப்படாதையுங்கோ நான் அவரைக் கடைக்கு அனுப்பி வைக்கிறன் என்றவள் நீங்கள் வீட்டுக்குப் போகும் போது என்னையும் கூட்டிக் கொண்டு போங்கள் என்கிறாள்.

அன்றிரவு சாகித்தியனின் அறையில் வைத்து சிவகாமி மயக்கிற பொடி போட்டாளோ என்னவோ தெரியவில்லை அடுத்த நாள் நேரத்தோடு சாகித்தியன் குளிச்சு வெளிக்கிட,ஐந்து மணிக்கே சாந்தினியையும் எழுப்ப ஏன் என்று அவள் கேட்க இடியப்பம் அவிக்க வேணும் வாங்கோ என்று அவளையும் கூட்டிக் கொண்டு போய் இடியப்பம் அவிச்சு சொதியும் வைச்சு அதைக் கொர்லிக்ஸ் போத்தலில் விட்டு,சம்பல் அரைச்சு அதையும் கட்டி வைக்க சின்னண்ணி என்ன செய்யிறியள் இதெல்லாம் யாருக்கு எனக்கு ஒன்றுமே புரியவில்லை என்கிறாள் சாந்தினி

எல்லாம் செய்து முடிக்க காலமை ஏழரை மணியாகிவிட்டது.கொஞ்சம் பொறுங்கள் அண்ணி என்ற சிவகாமி போய் சாகித்தியனின் கதவைத் தட்டி வெளிக்கிட்டாச்சா என்று கேட்க,அவனே கதவைத் திறந்து கொண்டு வர இது என்ன கலர் சேர்ட்டு பரவாயில்லை இன்றைக்கு இதோடை போங்கள் கறுப்பு லோங்ஸ்தான் நல்லாயிருக்கும் மார்ச்சுக்கு போட்டுக் கொண்டு போற லோங்ஸோடு கடைக்குப் போகக்கூடாது.கடைக்கு எப்பவும் நேர்த்தியான உடுப்ப போட வேணும்…..ஆனால் இந்த லோங்ஸையும் சேர்ட்டையும் இனிமேல் கடைக்குப் போட வேண்டாம்…..

கடைக்கு வாறவை வேலை செய்யிறவையின்ரை தோற்றத்தையும் கவனிப்பார்கள்.

இந்த பைக்குள்ளை இடியப்பம் சொதி சம்பல் எல்லாமிருக்கு.மத்தியானத்துக்கு இதைச் சாப்பிடுங்கள் என்றவுடன் நான் மலாயன் கபேயிலை சோறு சாப்பிடுறன் என்று சாகித்தியன் சொல்ல, அங்கை சாப்பிடத் தேவையில்லை இடியப்பம் சாப்பிட்டால் ஒன்றும் குறைஞ்சு போகாது கொண்டு போங்கள் என்று சொன்னதும் சந்திரசேகரமும் செல்லம்மாவும் சாந்தினியும் திகைத்துப் போய் நிற்கிறார்கள்….

அப்பா வரேலையோ என்று சாகித்தியன் கேட்க மாமா வரமாட்டார் அவர் இடைக்கிடைதான் வருவார்.அவர் றெஸ்ட் எடுக்கட்டும்.மாமாவுக்கு எங்கடை கல்யாண வேலை நிறைய இருக்குது….

கடையாலை வந்து காரிலை என்னை வீட்டிலை கொண்டு போய் விட வேணும்.காரை விறுக்காக ஓட்டம் ஓட வேண்டாம் சரியோ கவனமாகப் போயிட்டு வாங்கோ கடைக்கு வாற பொட்டையளோடை பல்லிழிச்சுக் கொண்டு நிற்க வேண்டாம் என்று சொல்ல சாகித்தியனும் வீட்டைவிட்டு இறங்க அவனை அனுப்பிவிட்டுத் திரும்பிய சிவகாமி சாந்தினி செல்லம்மா சந்திரசேகரம் பூரிப்பில் நிற்பதைக் காண்கிறாள்;.

சின்னண்ணி கொஞ்ச நாளைக்கு முந்திப் பார்த்த சிவகாமியா நீங்கள் நம்பவே முடியவில்லை என்று அவளைக் கட்டி அணைத்தாள்.

மூன்று சோடிக் காதலர்களும் நாட்களைச் சுதந்திரத்தின் எல்லை வரை கழிக்க கல்யாண நாளும் வந்து சேருகின்றது.எல்லாம் ஒன்றுக்குள்ளை ஒன்று என்பதால் அளவான உறவினர்களுடன் ஆடம்பரம் இல்லாமல் எளிமையான முறையில் மூன்று சோடிகளுக்கும் சுண்ணாகம் ஐயனார்

கோவிலில் கல்யானத்தைச் செய்து வைக்கின்றனர் மூன்று சோடிகளின் பெற்றோர்களும்.

முதன்முறையாக சுண்ணாகத்தில் ஒரே நாளில் மூன்று சோடிகளுக்கும் பக்கம் பக்கமாக மூன்று மணவறைகள் வைத்து நடந்த கல்யாணம் இதுதான் முதல் என ஊர் பேசிக் கொள்கிறது.

கல்யாண ஆரவாரம் முடிய அடுத்த நாள் காலை ஐந்து மணிக்கு மூன்று சோடிகளும் வேறு வேறு கார்களில் அவரவர் பெற்றோருடன் வெளிக்கிட்டு பகல் இரண்டு மணிக்கு கட்டுநாயக்கா விமான நிலையத்தைச் சென்றடைகிறார்கள்.இரவு ஏழு மணிக்கு எயர் லங்கா விமானத்தில் மூன்று சோடிகளும் சிங்கப்பூருக்கு புறப்படுகின்றனர்.

ஒரு கிழமை இடைவெளி நாட்களில் சச்சசிதானந்தம் மகேஸ்வரி தம்பதிகளும் சந்திரசேகரம் செல்லம்மா தம்பதிகளும் அங்கும் இங்குமாகத் தங்கிவிட்டுப் போகின்றனர். சிவகுரு வசந்தமாலா தம்பதிகள் சந்திரசேகரம் வீடடுக்குப் போனாலும் இரவில் வீட்டுக்குத் திரும்பிவிடுகின்றனர்.அதற்கு அவரின் வேலைதான் காரணம்.

ஒரு கிழமை முடிவில் வெள்pக்கிழமை சிங்கப்பூரிலிருந்து வரும் புதுத் தம்பதிகளுக்காக கட்டுநாயக்கா விமான நிலையத்தில் மூன்று சோடிகளின் பெற்றோரும் காத்திருக்கின்றனர்.

வழமைக்கு மாறாக விமான நிலையத்தில் ஒரு அறிவிப்பு சொல்லப்படுகின்றது.இங்கிருந்து தேனிலவுக்காக சிஙகப்பூர் சென்ற தம்பதிகளும், சிங்கப்பூரில் வேலை செய்ததுடன் காதலர்களாகி திருமண முடிவுடன் வரும் காதலர்களையம் தாங்கி காதலர் விமானம் என்ற பெயருடன் விமானம் தரையிறங்கி பயணிகள் இறங்கி வெளியே செல்லும் கதவை நோக்கி வந்து கொண்டிருக்கிறது என்ற அறிவிப்பைக் கேட்டதும் அத்தனை விமான நிலையப் பணியாளர்களும் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்கிறார்கள்.

சிங்களவர் தமிழர் என சிங்கப்பூரில் காதல் வசப்பட்டு வரும் சோடிகளையும் தேனிலவுக்குச் சென்ற சிங்கள தமிழ் தம்பதியினரையும் வரவேற்கவென காத்திருப்போர் இடத்தில் பலர் பூச்செண்டுகளுடன் காத்திருக்கின்றனர்.

சோடி சோடியாக வந்து கொண்டிருந்தவர்களை பயணிகளும் பணியாளர்களும் முகமலர்ச்சியோடு பார்க்கின்றனர்.கடவுட் சீட்டுப் பரிசோதனை முடிந்து வரும் தேனிலவுத் தம்பதியினருக்கும் காதல் சோடிகளுக்கும் அழகான உடையில் நின்ற விமானநிலையப் பணிப்

பெண்கள் இரண்டு இரண்டு சிவப்பு றோஜாப் பூக்கள் கொடுத்தும் கைலாகு கொடுத்தும் வாழ்த்தி வழியனுப்பிக் கொண்டேயிருந்தனர்.

சிங்கப்பூரிலிருந்து விமானம் புறப்படும் முன்பே தேனிலவுத் தம்பதியினருடைய விபரங்களையும் திருமணத்திற்குத் தயாரான காதல் சோடிகளையும் விசாரித்துப் பெற்றுக் கொண்ட விபரங்களையும் கட்டுநாயக்கா விமான நிலையத்துக்கு அனுப்பி வைத்ததுடன் ஒவ்வொரு சோடிகளின் சட்டைகளிலும் காதல் சின்னமான இதயத்தைக் குத்தியுமிருந்தார்கள்.

காதலுக்கு மரியாதை எங்கும் கிடைக்கும் என்பதற்கு அனைவரின் கைகளிலும் பூக்கொத்துக்கள் இருந்தன.

தேனிலவு முடிந்து முகம் நிறைந்த புன்னகையுடன் வந்த குரு அர்ச்சனா தம்பதிகளையும், சந்திரன் சாந்தினி தம்பதிகளையும், சாகித்தியன் சிவகாமி தம்பதிகளையும் கண்ட பெற்றோர்கள் பரவசமடைகின்றனர்.

அந்தப் பரவச நிலையிலும் இவர்கள் எப்பொழுது பேரன் பேத்திகளை பெற்றுத்; தருவார்கள் என அவர்களின் கற்பனையும் அதில் கலக்கின்றது.நேற்றைய காதலர்கள் இன்றைய காதல் தம்பதிகளிடம் அதனை எதிர்பார்க்கின்றனர்.

அடுத்த நாள் சனிக்கிழமை சுண்ணாகம் பட்டினசபை மண்டபத்தில் புதுமணத் தம்பகதிகளுக்கான விருந்துபசாரம் தடல்புடலாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது

அதுவும் அளவான உறவினர்கள் நண்பர்களுடனேயே நடைபெற்றுக் பெற்றுக் கொண்டிருக்கிறது. விருந்தில் கலந்து கொண்டவர்களில் இளம் ஆண் பெண்கள் தம்பதிகளிடம் எப்படிச் சிங்கப்பூர்த் தேனிலவு எல்லாம்…………………ஓகேயா எனக் கிண்டலும் கேலியும் செய்து கொண்டிருக்க, மேடையில் ஒருவர் ஒலிவாங்கியை எடுத்து புதுமணத் தம்பதிகளை வாழ்த்திவிட்டு, மூன்று சோடிகளின் பெயர்களைச் சொல்லி அவர்கள் இதுவரை பயணித்த பயணத்தை காதலர் விமானம் என்று பெயரிட்டு நூலாக இந்த மேடையில் வெளியிடுகிறோம் எனச் சொல்கிறார.;

அதற்கு முன்னராக நான் பெல்ஜியம் பல்கலைக்கழகம் ஆயிரம் காதல் சோடிகளை ஆய்வு செய்து வெளியிட்ட அறிக்கை ஒன்றை உங்களுக்கு அறியத்தருகின்றேன் என்றவர், அந்த ஆயிரம் காதல் சோடிகளிடமும்இருந்து ஒரு பதுவகையான உணர்ச்சியும் உணர்வும் கலந்த திரவகம் மூளையில் ஊறி அந்திரவகம் சுவாசப்பைகளின்

நுண்ணிய அறைகளில் இரத்தத்துடன் கலந்து நிற்கையில் ஒக்சிஜன் என்று சொல்கின்ற பிராணவாயுவுடனும்; கலந்து நிற்பதாலேய காதலர்கள் காதலிக்கும் போது பரவசமடைகிறர்கள், சுவாசப்பை விரிவடைவதனால் அதிகளவு பிராணவாயுவை உட்கொள்கின்றது…

இம்மாற்றமானது ஆயுளை நீடிக்க வைக்கின்றது. இந்த திரவ பிளஸ் ஒக்சிஜன் என்ற பிராணவாயுவுக்கு பெல்ஜியம் பல்கலைக்கழகம் பிராணவாயு பிளஸ் எல் என்ற பெயரை வைத்துள்ளது.பிராணவாய்வு ஒரு வேதியல் எலிமென்ற் என்ற மூலக்கூறாகும்…..

எனவே அனைவரும் காதல் செயவீர் என முடித்த அவர் முதலில் அழைப்பது குரு சாகித்தியன் தம்பதியினரை என்று சொல்லியவர் அர்ச்சனாவைப் பார்த்து உங்கள் காதல் சின்னத்தையும் மேடைக்குக் கொண்டு வாருங்கள் என்றவுடன் குரு அர்ச்சனா மேடையில் ஏறுகிறார்கள்.

அவர்களிடம் முன்மட்டையின் மத்தியில் பிராணவாயு பிளஸ் எல் என்று குறிப்பிட்ட காதலர் விமானம் என்ற நூலை ஒப்படைத்தவர் அர்ச்சனாவிடம் கள்ளச் சிரிப்புடன் கைநீட்ட கைக்குட்டையில் பத்திரமாக வைத்திருந்த கசுவறினா கடற்கரையிலிருந்து கொண்டு வந்த காய்ந்து போன பூவரசம் பூவைக் கொடுக்க அதைக் கையில் எடுத்து இந்தப்பூதான் இவர்களின் காதல் சின்னம் என்று சொல்ல மண்டபத்தில் இருந்த அனைவரும் கைதட்டியும் விசிலடித்தும் ஆரவாரம் செய்கிறார்கள்.

அடுத்து சந்திரன் சாந்தினி தம்பதியினரை அழைத்து காதலர் விமானம் நூலைக் கொடுத்துவிட்டு இருவரிடமும் கையை நீட்ட சாந்தினி தனது நெற்றிக் காயத்துக்கு சந்திரன் கிழித்துக் கட்டிய சட்டைத் துண்டுத்துணியை அழகாக கைக்குட்டை போல தைத்து வைத்திருந்ததையும் தனக்கு ஸ்கந்தா மைதானத்தில் வைத்து சாந்தினி வியர்வை துடைக்கவென கொடுத்த கைக்குட்டையையும்; சந்திரன் கொடுக்கிறான்.

அவற்றை மண்டபத்தில் உள்ளவர்களிடம் காட்டி இவையிரண்டுந்தான் இவர்களின் காதல் சின்னங்கள் மடடுமல்ல இங்கிருந்துதான் காதலர் விமானம் பயணிக்கத் தொடங்கியது என்று சொல்ல மீண்டும் அனைவரும் கைதட்டி விசிலடித்து தமது மகிழ்ச்சியைத் தெரிவிக்கின்றனர்.

அடுத்து சாகித்தியன் சிவகாமி தம்பதியினரிடம் காதலர் விமானம் நூலைக் கொடுத்தவர் சிவகாமியிடம் கைநீட்ட தபால்

உறையொன்றுக்குள் வைத்துக் கொண்டு வந்த காய்ந்து போன இரண்டு சிவப்பு ரோஜாப்பூக்களை எடுத்துக் கொடுக்க அதை சபையோருக்கு காட்டியவர் இந்த ரோஜாப் பூக்களின் கதை தெரியுமா என்றவர் தனது தாய்க்கு விருப்பம் என்று பொய் சொல்லி மகாஜனாவிலிருந்து கொண்டு வந்து தனது காதலி பார்க்கும்படியாக வைத்துவிட சிவகாமியும் அதை எடுத்து தலையில் செருகிட வைத்த பூக்களைக் காணவில்லையே என்று இவர் நடித்த இவர்களின் காதல் சின்னம் இதுதான் எனச் சொல்ல மண்டபத்தில் இருந்தவர்கள் பெரும் ஆரவாரம் செய்து கைதட்டி விசிலும் அடித்தனர்.

தொடர்ந்து அவர் ஒரு காதல் நிறைவேறி கல்யாணம் வரை வரவேண்டுமானால் எத்தனை பொய் சொல்ல வேண்டியிருக்கு எத்தனை நடிப்பு நடிக்க வேண்டியிருக்கு வாய்க்குள்ளை விரலை வைத்தால் கடிக்கத் தெரியாத குழந்தையாக இருக்க வேண்டியிருக்கு ஒன்றுமே விளங்காத கல்லுளி மங்கனாகவும் இருக்க வேண்டியுள்ளது……அப்பப்பா…

எனவே காதல் அணுசக்தியைவிட அதிக சக்தி வாய்ந்தது.அது பிராணவாயு பிளஸ் எல் வேதியல் எலிமெண்ட் (O+l ch element)

ஆதலால் காதல் செய்வீர்……..

 

(பயண நிறைவுடன் வணக்கம். யாவும் கற்பனையல்ல.மீண்டும் சந்திப்போம் )

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *