கதைகள்

சிங்கப்பூரில் சிலகாலம்!….பகுதி9….. (உண்மைக் கதை)….. ஏலையா க.முருகதாசன்.

(யோகமலரின் சந்திப்புக்கு முந்தி நானும் அங்கு போய் படம் பார்த்திருக்கிறன்.ஒரு நாள் படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது காட்சியொன்றில் குழந்தையொன்றை அநாதை இல்லத்துக்கு முன்னால் ஒரு பெண் வளர்த்திவிட்டுப் போக மழை பெய்ய அந்தக் குழந்தை மழையில் நனைந்து அழுவதைப் பார்த்ததும் அதைப் பார்க்கவப் பொறுக்க முடியாமல் கண்கலங்க,’விசரன்கள் ஒரு குழந்தையை மழையிலை நனைய விட்டு அழ வைத்து படம் எடுக்கிறான்களே’ என்று கோபத்துடன் பாதியிலேயே எழுந்து வந்திட்டன்.)

 

முன்பு அவள் வேலை முடிந்து போகும் போது என்னை அடுத்த நாள் சந்திக்கும் வரை எப்படி உங்களைப் பார்க்காமல் இருப்பன் என அழுவாள்.

ஆனால் இப்ப அவள் தனது ஆழமான காதலால் என்னைக் கண்கலங்க வைக்கிறாள்.

என்னதான் தமிழர்களாக இருந்தாலும் தமிழகத் தமிழர்களும் இலங்கையில் உள்ள அதுவும் யாழ்ப்பாணத் தமிழர்களும் கல்யாணச்; சம்பந்தம் வைத்துக் கொள்வது சிக்கலானது என்பதைப் பலர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறன்.

தமிழகத் தமிழர்களின் பழக்கவழங்களும் இலங்கையில் யாழ்ப்பாணத் தமிழர்களின் பழக்க வழக்கங்களும் வித்தியாசமானவை எப்பவுமே ஒத்து வராது என்று பொதுவாகச் சொல்வார்கள்.

நான் இலங்கை யாழ் மாவட்டத்தில் உள்ள கிராமமான தெல்லிப்பழையில் உள்ள அம்பனைக் குறிச்சியிலிருந்து வந்தவன்.யோகமலர் அடிப்படையில் தமிழகம்

திருநெல்வேலியிலிருந்து வந்த அவளின் பேரனிலிருந்து வந்த பரம்பரையைச் சேர்ந்தவள்.

அவள் மலேசியா ஜோகூர்பாருவில் பிறந்து அங்கேயே படிச்சவள் என்றாலும் தமிழக திருநெல்வேலி மக்களின் பழக்கவழக்கச் சாயல் அவளிடம் இல்லமலிருக்காது.

கதைப்பதில்கூட நிறைய வித்தியாசங்கள் இருக்கும்.ஆனால் அவள் என் மீது எந்த வித்தியாசமும் இல்லாமல் காதலித்து நீங்கள்தான் எனது வாழ்கைக்கு கணவன் என்று தீர்மானமாக முடிவெடுத்தது மட்டுமல்ல நான் சிறீலங்காவிற்கு போவதற்கு முன்னர் எனக்கு மனைவியாக வாழ்ந்து எனது மடியிலேயே சாக வேண்டும் என்று உறுதியுடன் வாழ்கிறாள்.

எனக்கு மனைவியும் மூன்று பிள்ளைகளும்; இருக்கின்றனர் என்பதைத் தெரிந்து கொண்ட பின்னரும் நான் குடும்பஸ்தன் என்பதுகூட தனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை நீங்கள்தான் தனக்குரியவர் என்பதில் எந்தத் தளர்வுமே இல்லாமல் என்மீது அளவுக்கு மீறிய காதலை பாசத்தை வைத்து வாழ்கிறாள்.

எனக்கும் அவள் இந்திய வம்சாவழியைச் சேர்ந்தவள் என்ற எந்த வேற்றுமையும் எனது மனதில் தோன்றவே இல்லை.

நீண்ட நாட்கள் பழகிய ஒருவர் போலவும் இலங்கையிலிருந்து வந்து வேலை செய்கிற பெண் போலவுமே என் மனதில் ஆழமாகிவிட்டாள் என பலவாறான எண்ணங்களுடன் செரங்கூனிலிருந்து யூரோங் இன்ரர்சேன்ஜை நோக்கிப் போகும் பஸ்ஸில் போய்க் கொண்டிருந்தேன்.

அவள் கதைக்கும் போது காணும் வித்தியாசம் எனக்குப் பெரிசாகப் படவில்லை.செரங்கூனிலிருந்து யூரோங் இன்ரர்சேன்ஜ் வரையும் வந்து அங்கிருந்து எனது வீட்டிலிருந்து பூன்லேடிரைவ் என்ற இடத்திற்கு வெறொரு பஸ்ஸில் போக வேண்டும்.

சிங்கப்பூரின் எல்லாக் குறிப்பிட்ட இடங்களிலும் இன்ரர்சேனஜ் என்ற ஒருங்கிணைக்கும் மத்திய பஸ் நிலையங்கள் உண்டு.

பஸ் சாரதிகளாக எல்லா இனத்தவர்களும் இருப்பார்கள்.நான் வந்து கொண்டிருந்த பஸ்ஸின் சாரதியாக தலைப்பா கட்டிய ஒரு பஞ்சாப்காரர் இருந்தார்.

பஸ் நடத்துனராக ஒரு சீனப் பெண் இருந்தார்.பஸ் ஓடிக் கொண்டிருக்கும் போதே எதையுமே பிடிக்காமல் விழுந்து போகாமல் சமநிலையில் நின்று பயணச் சீட்டைக்; கிழித்துக் கொடுக்கும் திறமையை பல நடத்துனர்கள் கற்று வைத்திருக்கிறார்கள்.

யூரோங் இன்ரர் சேன்ஜ் வரைக்கான பயணச் சீட்டை அந்தப் பெண்மணி கிழித்துத் தந்தார்.பயணச் சீட்டுக் கொடுக்காமல் காசைப் போட்டு பயணத்தைச் செய்யக்கூடிய பஸ் சேவைகளும் அங்குண்டு.

இத்தகு பஸ்கள் ஒரு நகரத்திலுள்ள ஒரு குறிப்பிட்ட வீதிகளின் ஊடாக அங்கங்கு உள்ள பஸ் தரிப்பிடங்களில் நின்று மீண்டும் யூரோங் நகரத்தின் மத்திய பஸ் நிலையத்திற்கு வரும். இப்படியாக அந்த பஸ் சுற்றிக் கொண்டேயிருக்கும்.சாரதிக்குப் பக்கத்தில் வெளியே காசு போடுவது தெரியக்கூடிய விதத்தில் ஒரு வன்வலு பிளாஸ்ரிக் பெட்டி இருக்கும் .

பஸ்ஸில் ஏறுவதென்றால் முன் கதவு வழியாகவே ஏற வேண்டும்.ஏறும் பயணி 15 சதத்தை அந்தப் பெட்டிக்குள் போட, சாரதி சரியாகத்தான் போட்டிருக்கிறாரா எனப் பார்த்துவிட்டு ஒரு லிவர் போன்ற ஒன்றை அமத்த போடப்பட்ட காசு கீழ் பெட்டிக்குள் போய்விழும்.

ஒரு சுற்று சுற்றி வர பயணப்பணம் 15 சதங்கள் மட்டுமே.தாள் காசு போட முடியாது.15 சதங்களைச் சரியாகப் போட

வேணடும்.15 சதம் இல்லாத போது 20 சதமோ அதற்கும் மேலேயோ போட்டாலும் மிகுதி வராது.

அதற்காகப் பயணிகள் 15 சதத்தை மாற்றி வைத்திருப்பார்கள்.சிலர் சில்லறைக் காசு இல்லாத போது 15 சதத்திற்கு மேலேயும் போடுவார்கள்.

செரங்கூனிலிருந்து யோகமலரைப் பற்றியே எண்ணிக் கொண்டு வந்த நான் யூரோங் இன்ரர்சேன்ஜில் பஸ் நின்று சில விநாடிகள் சென்றதன் பின்னரே அவசரம் அவசரமாக இறங்கி அங்கிருந்த சீன பேக்கரியில் இரண்டு பனிஸ்களை வாங்கிக் கொண்டு எனது இடத்திற்குப் போவதற்கான 15 சதம் போடும் பஸ்ஸில் ஏறினேன்.

காசைப் போட்டுவிட்டு இருக்கையில் உட்கார்ந்ததும் அவளையே நினைத்துக் கொண்டிருந்தேன்.எனக்குள் என்ன நடக்கின்றது.

நான் ஏன் இப்படி ஆனேன்.சிங்கப்பூருக்குப் போக முன்பு ஒருத்திக்கு ஒருத்தனே நல்ல வாழ்க்கை அடையாளம் என அடிச்சுக் கதைச்சிருக்கிறன்.இப்ப நானே சகுணம் சொல்ற பல்லி தனக்குச் சகுணம் தெரியாமல் கூழ் பானைக்குள் விழுந்த கதையாக எனது வாழ்வு இருக்கிறது.

போகிற போக்கைப் பார்த்தால் யோகமலர் என்னை மலேசியாவிற்கே கூட்டிக் கொண்டு போய்விடுவாளோ என்ற பயம் ஏற்பட்டது.ஆனால் அவள் அப்படிச் செய்யமாட்டாள்.இதுவரை அவளோடு பழகியதிலிருந்து அவள் தனது காதலை வெளிப்படுத்தி தன்னை எனது மனைவியாக்கிய விடாப்பிடியான மனநிலையில் அவளுடையு வெளிப்படையான நேர்மையைக் கண்டுவிட்டேன்.ஒரு நேரம் பயமும் இன்னொரு நேரம் தெளிவு பெற்றவனாகவும் இரண்டும் கெட்டான் நிலையில் நானிருந்தேன்.

முன்னால் உள்ள பில்டிங்கில் இருந்த பொம்பிளைப் பிள்ளைகளைப் பார்த்துக் கொள்ளும்படி எங்களைச் சிங்கப்பூருக்கு வரவழைத்த முகவரும் பரமேஸ்வரனும் என்னிடம் சொல்லியிருந்தார்கள்.

கிழமையில் இரண்டு முறையாவது அங்கு போய் வந்த என்னிடம் சிலர் வீட்டுக்கு காசு அனுப்புவதற்காக வங்கியிலிருந்து றாப் எடுத்து கொண்டு வந்து தரும்படி கேட்பார்கள் அந்த உதவியைச் செய்து கொடுத்தேன்.

நீங்கள் கவனமாக இருங்கள் பொடியங்களுடன் எச்சரிக்கையாக பழகுங்கள் என்று புத்திமதி சொன்ன நானே என்னை இழந்து நிற்கிறேன்.அவர்களின் காதில் இன்னும் எட்டவில்லை.எட்டினால் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்.

ஒரே குழப்பமாக இருந்தது.எனக்கு எனது ரூமுக்குப் போகவே பிடிக்கவில்லை.யோகமலருடன் வீடெடுத்து இருந்துவிட வேண்டுமென்று மனம் தவித்தது.ஜிஇயின் பேர்சனல் மனேஜர் நீங்கள் இரண்டு பேரும் என்எம்பி பக்ரறியில் வேலை செய்யத் தொடங்கியதும் ஒரே வீட்டில்தான் தங்குவீர்கள் என்று சொல்லிவிட்டார்.

வேலை அனுமதிப் பத்திரத்துடன் வந்த எனக்கோ யோகமலருக்கோ சட்ட ரீதியாக ஒரே வீட்டில் தங்கி அங்கேயே வாழ முடியாது.ஆனால் பேர்சனல் மனேஜர் தனிப்பட்ட தனது செல்வாக்கினால் செய்கிறாரோ என நினைத்தேன்.அதற்குக் காரணம் யோகமலர் என்மீது வைத்திருநத காதலுக்கு யோகமலர் கொடுத்த விளக்கந்தான்.

மலேய் இனத்தவரான அகமட் ஒரு தமிழ் இஸ்லாமியப் பெண்ணையே காதலித்துக் கல்யாணம் செய்திருந்தபடியால் அவருக்கும் காதலின் உறுதிபற்றித் தெரிந்ததால் அவரின் ஆலோசனையும் பேர்சனல் மனேஜருக்குக் கிடைத்திருக்கலாம்.

இதைவிட யோகமலரின் அண்ணன்கள் இருவரும் ஜோகூர்பாருவிலிருந்து வந்து என்எம்பி பேர்சனல் மனேஜரைச் சந்தித்து தங்கையின் மனநிலையைச் சொல்லியிருக்கிறார்கள்.அதற்கு அவர் ஏற்கனவே ஜிஇ பேர்சனல் மனேஜரின் வேண்டுகோளுக்காக ஒரே வீட்டில் தங்குவதற்கான ஏற்பாட்டைச் செய்திருக்கிறோம் எனத் தமையன்மாருக்குச் சொல்லியிருக்கிறார்.

பலவிதமான யோசனைகளுடன் பஸ்ஸைவிட்டு இறங்கி எனது பில்டிங்கை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.கோவிலுக்கு போன விடயமும் யோகமலருக்கு குங்குமம் வைத்த விடயமும் என்னை ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டது.

மறந்தால்தானே நினைப்பதற்கு என்பதைப் போல சதா மனைவி பிள்ளைகளின் நினைப்பும் அவர்களின் முகங்களும், இந்த நேரம் மனைவி என்ன செய்து கொண்டிருப்பாள்.மூத்த மகனை மகாஜனாவில் இந்த வருசம் சேர்க்க வேண்டும் அதை மனைவி செய்யத் தொடங்கியிருப்பாள் என்ற நினைப்புடனும் யோகமலரின் நினைப்புடனும் லிப்டில் சென்று ஒன்பதாவது மாடியிலிருக்கும் எமது வீட்டுக் கதவைத் திறந்து உள்ளே போன போது அங்கு யாரையுமே காணவில்லை.

சனிக்கிழமையாதலால் சில நேரம் நண்பர்களை பார்க்கப் போயிருக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன்.

எங்களுடைய பில்டிங்கிலிருந்து கிட்டத்தட்ட ஐந்நூறு மீற்றர் தூரத்தில் உள்ள பில்டிங்கில் பெல்மெக் என்ற ஜப்பான் பக்ரறியில் வேலை செய்த பொடியங்கள் இருந்தார்கள்.

இரண்டு காரணத்திற்காக பொடியங்கள் வருவதுண்டு.முதலாவது காரணம் அவர்களிடம் ரெலிவிசன் இருந்தது. ஒவ்வொரு சனிக்கிழமையும் சிங்கப்பூரின் தமிழத்

தொலைக்காட்சிப் பிரிவு தமிழ் படமொன்றை ஒளிபரப்புவார்கள்.அதைப் பார்ப்பதற்காக வருவார்கள்.இன்னொரு காரணம் சுண்ணாகத்தைச் சேர்ந்த நாதன் என்பவர் உண்டியல் சேவை போன்று செய்து வருபவர்.

பொடியங்களிடம் பொம்பிளைப் பிள்ளைகளிடம் பணத்தை வாங்கி அவரின் அண்ணனுக்கு அனுப்ப அவர் தனக்குரிய கொமிசனை எடுத்துக் கொண்டு பொடியங்களின் அல்லது பொம்பிளைப் பிள்ளைகளின் வீடுகளுக்கு கொண்டு போய் பணத்தைக் கொடுத்து வந்தார்.பொடியங்கள் நாதனிடம் பணம் கொடுப்பதற்காக வருவார்கள். நாதனும் நேர்மையானவர்.பணம் கொடுத்து இரண்டு நாட்களுக்குள் சேர வேண்டிய இடத்திற்கு பணம் போய்ச் சேர்ந்துவிடும்.வங்கியில் டிராப் எடுத்து அனுப்பி அங்கிருப்பவர்கள் வங்கிக்கு போக வேண்டிய தேவை இருக்காது.

ஆரம்பத்தில் நானும் கொங்கொங் சங்காய் வங்கியில் டிராப் எடுத்துத்தான் அனுப்பிக் கொண்டிருந்தேன்.மனைவி அலையக் கூடாது என்பதற்காக உண்டியல் மூலமாக பிறகு அனுப்பத்; தொடங்கினேன்.

யோகமலரின் சந்திப்புக்கு முந்தி நானும் அங்கு போய் படம் பார்த்திருக்கிறன்.ஒரு நாள் படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது காட்சியொன்றில் குழந்தையொன்றை அநாதை இல்லத்துக்கு முன்னால் ஒரு பெண் வளர்த்திவிட்டுப் போக மழை பெய்ய அந்தக் குழந்தை மழையில் நனைந்து அழுவதைப் பார்த்ததும் அதைப் பார்க்க பொறுக்க முடியாமல் நான் கண்கலங்கி,விசரன்கள் ஒரு குழந்தையை மழையிலை நனைய விட்டு அழ வைத்து படம் எடுக்கிறான்களே என்று கோபத்துடன் தொடர்ந்து படம் பார்க்காமல் பாதியிலேயே எழுந்து வந்துவிட்டன்.

இப்பவும் குழந்தைகள் சிறுவர்கள் அழும் காட்சிகளை நான் சகிக்க மாட்டன்.பஸ்ஸிலோ ரயிலிலோ போகும் போது

குழந்தைகள் அழுதால் ஏன் அழ விடுகிறார்கள் எனக் கோபம் வரும்.

ஓரளவு ஈரமனமும் மனச்சாட்சியின் வழி நடக்க வேண்டுமென்று நினைக்கும் என்னை யோகமலர் மீது வைத்த காதல் என்னைச் சிப்பிலியாட்டத் தொடங்கியது.

வீட்டுக்குள் வந்த நான் முதலிலை முகத்தை கழுவி விபூதி பூசி கும்பிட்டிட்டு தேத்ண்ணியைப் போட்டுக் கொண்டு அறைக்குள் வைத்து ஒரு வடையையும், பேக்கரியில் வாங்கிக் கொண்டு வந்த பணிஸ் இரண்டையும் சாப்பிட்டு முடித்த நான் மிகுதி மூன்று வடைகளையும் மேசையில் சுற்றி வைத்துவிட்டு படுக்கையில் படுத்தபடி யோசித்துக் கொண்டிருந்தன்.

இன்னும் இரண்டு கிழமைகளே ஜிஇ யில் வேலை.அந்த இரண்டு கிழமைகளும் கெதியில் போக வேண்டும் என்று அவதிப்பட்டது மனம்.எனக்கு மட்டுமல்ல ஜிஇயில் வேலை செய்தவர்களில் இரண்டொருவரைத் தவிர மிகுதிப் பேரை வேறு வேறு பக்ரறிகளுக்கு மாற்றியிருந்தார்கள்.

நேரம்சென்றதே தவிர நித்திரை வரவேயில்லை.தலைகணியை கட்டில் சட்டத்துடன் சரித்துப் போட்டிட்டு நெற்றியில் கையை வைத்துக் கொண்டு படுத்திருந்தேன்.

ஓவ்வொருவராக வீட்டுக்குள் வரத் தொடங்கியவர்களில் ஞானசேகரன் மேசையில் கிடந்த வடைப் பார்சலைப் பார்த்ததும் „பொஸ் செரங்கூனுக்குப் போயிருக்கிறார் போல எனச் சொல்லிக் கொண்டே அறையை எட்டிப் பார்த்தவன், பொஸ் நீங்களா வடை கொண்டு வந்தனீங்கள் என்று கேட்க நான் ஓம் என்பது போல தலையாட்டினேன்.

எனது அறையில் இருந்த கனகேஸ்வரன் ஞானசேகரன் அடுத்த அறையில் இருந்த சச்சி, இராஜரட்ணம்

ஞானேஸ்வரன் சூரியகுமார் எல்லாரும் சிறு சிறு துண்டுகளாகப் பிய்த்துச் சாப்பிட்டார்கள்.

பிராமண இளைஞரான கரனை யாருமே கேட்கவில்லை.ஞானசேகரத்திடம் கண்ணைக் காட்டினேன் கேட்கச் சொல்லி.கரன் வடை ஒரு துண்டு சாப்பிடுங்கோ என்று கேட்க அவர் முகத்தில் அடித்த மாதிரி தேவையில்லை என்று சொன்னார்.

கரனை, சச்சியை என்னையும் வைத்து ஜிஇயில் விசாரணை நடத்தியதற்குப் பிறகு யாருடனுமே கரன் பேசுவதில்லை.

அதைவிட பெண்கள் ஆண்களைப் போல மேல் சட்டை இல்லாமல் கோவிலுக்குப் போக வைக்க வேண்டும் என்று சொல்லிய மிக மிக மோசமான வக்கிரம் பிடித்த வார்த்தையாலும் அழுக்கான மனத்தாலும் அவர் அவமானப்பட்டதும் ஒரு காரணம்.

படுக்கையில் யோசித்துக் கொண்டிருந்த போது திடீரென்று ஒரு எண்ணம் ஏற்பட்டது.இன்றைக்கு கோவிலில் கண்ட மச்சாளின் மகளான மணியுடன் வேலை செய்த பொம்பிளைப் பிள்ளைகள் இருவரும் நான் யோகமலருடன் கோவிலுக்கு வந்ததையும்,அவளுக்கு குங்குமம் வைத்ததையும் தங்களிடமே நான் அவருடைய மனைவி என்று சொன்னதையும், நானும் யோகமலர் எனது மனைவிதான் என்று சொன்னதையும் சொல்வார்களோ என்ற எண்ணம் வந்த போதும், அதைப் போய் யாராவது சொல்வார்களா என்று என்னை நான் சமாளித்துக் கொண்டேன்.

அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை. நேரத்தோடு நித்திரையை விட்டெழும்பிய நான் குளித்துக் கும்பிட்டிட்டு தேத்தண்ணியையும் போட்டுக் குடித்துவிட்;டு யோகமலருக்கு ரொலிபோன் செய்ய வேண்டுமென்பதற்காக பொதுத்தொலைபேசி நிலையத்திலிருந்து அவளுக்கு ரெலிபோன் எடுத்து உங்களுடைய கஸ்பெண்ட் கதைக்கிறன்

என்றவள், நான்தாங்க உங்க மனைவி பேசுறன், என்னை மன்னிச்சிடுங்க என்றாள்.

எதற்கென்று கேட்டன். நீங்க நேற்றுப் போறப்போ உங்களுக்கு இரவுச் சாப்பாடு வாங்கித்தர மறந்திட்டன், ஆமா டின்னர் என்ன சாப்பிட்டீங்க என்றாள்.பணிஸ் வாங்கிச் சாப்பிட்டனான் என்றேன்.பணிசா அது என்னவென்று கேட்டாள் இனிப்பு பிறட் என்றேன்.ஒ…அதுவா என்றவள் வடையை என்ன செய்தீங்க என்றாள்.ஒரு வடையைச் சாப்பிட்டு மிச்சம் மூன்றையும் பிரண்ட்ஸ்சுக்கு கொடுத்திட்டன் என்றன்.

பரவாயில்லை என்றவள் மாலைல ரெலிபோன் எடுக்கிறீங்களா என்றவள் இராத்திரி நன்றாகத் தூங்கினீங்களா என்றாள்.கொஞ்சந்தான் என்றேன்.நானும் அப்படித்தாங்க.இன்னைக்கு பகல் நன்னா தூங்கிட்டு வந்து ரெலிபோன் எடுங்க என்றவள், அம்மா அப்பாகிட்டச் சொன்னேன் அவரோட அப்பா அம்மா பேரும் உங்க பேரு போலத்தான் என்றேன்.

அவங்களுக்கு ஒரே வியப்புங்க என்றாள்.ரூம்ல இன்னைக்கு சாப்பிடுவீங்கதானே என்றவளுக்கு நான் ஓம் என்று சொல்ல சரிங்க அத இத யோசிக்காம ரூம்ல போய் தூங்குங்க என்று சொல்லி ரெலிபோனை அவள் வைக்க மன நிம்மதியுடன் மீண்டும் அறைக்கு வந்து, சமையலுக்கு உதவி செய்தேன்.

சச்சி பொறுமையாக நன்றாகவே ஆட்டுக்கறி சமைப்பான்.ஆட்டுக்கறியோடு கத்தரிக்காய் கறியும் சமைத்திருந்தான். சரி பிழை எது இருந்தாலும் கரன் தனக்குச் சமைத்து முடிச்சதன் பின்னேதான் சமையுங்கள் என்று சொல்லியிருந்தேன்.

கரனுக்கு என்னுடன் கதைக்க விருப்பமில்லையென்றாலும் நான் ஒரு லீடராகச் சரியாக நடந்து கொள்ள

வேண்டுமென்பதற்காக கரனிடம் நீங்கள் முதலில் சமையுங்கள் என்று சொல்லியிருந்தேன்.

அவரும் தமக்குரிய சைவக்கறிகளை சமைத்துவிட்டார்.அன்று எல்லாரும் வீட்டிலிருந்தபடியால் மத்தியானச் சாப்பாடு சாப்பிட்டு முடிந்ததும் எல்லாரும் நித்திரையாகவிட்டார்கள்.

முதல் நாளிரவு போதியளவு நித்திரையில்லாததால் நானும் அயரத் தொடங்கினன்.கதவு தட்டும் சத்தம் கேட்க எனது அறை நண்பன் கனகேஸ்வரன் எழுந்து போய் கதவைத் திறந்து யாரையோ வாங்க என்று சொன்னவன் என்னிடம் வந்து பொஸ் உங்களிட்டைதான் வந்திருக்கிறா என்றான்.

யாராக இருக்கும் என்று சிந்தித்தவாறு அறையை விட்டு எழுந்து போன எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது….

 

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *