காதலர் விமானம்!….. 39…. ( நாவல் ) …… ஏலையா க.முருகதாசன்.

(என்னதான் பெற்றோர்கள் கண்ணுக்குள்ளை எண்ணையை விட்டுக் கொண்டிருந்தாலும் காதலர்களுக்கு பெரும் மலையும் சிறுசல்லிக் கல்லே என்பதற்கு குரு அர்ச்சனா,சந்திரன் சாந்தினி, சாகித்தியன் சிவகாமி சோடிகளே சாட்சியம்.)
கொஞ்சம் பொறுங்கோ அண்ணி போட்டுத்தாறன்.இஞ்சை ஒருத்தர் தேடுறார் தேடுறார் தேடிக் கொண்டேயிருக்கிறார்.அது சரி இவர் இந்த வீட்டிலை எப்ப தொடக்கம் இருக்கிறார் என்ற சாந்தினி….
எந்தப் பொருள் எங்கை கிடக்குது என்று தெரியவில்லை.பந்தை எப்படித்தான் கண்டுபிடித்து அடிக்கிறாரோ தெரியாது நீங்கள் தேடினது போதும் போய்க் குளியுங்கோ, கிணத்தடி எங்கை கிடக்குது என்று தெரியுமோ என்று சாந்தினி கிண்டலடிக்க, எனக்கும் ஒரு காலம் வரும் கழுத்திலை கட்ட வேண்டியதைக் கட்டிப் போட்டு எல்லாத்துக்குமாக நான் என்ன செய்யிறன் என்று பாருங்கோ என்று சாந்தினியை சீண்டிக் கொண்டு சந்திரன் குளிக்கப் போக,’ அண்ணி இஞ்சை முன்னுக்குக் கிடக்குது இஞ்சிக் கோப்பித்தூள் போத்தல் இரண்டு பேரும் கோப்பித்தூள் போத்தல் தேடினமாதிரி தெரியேலையே ஏதோ நடக்கட்டும் என்ற சிவகாமியிடம், அண்ணி எல்லாருக்கும் இந்தக் கோப்பியையே போடட்டா என்று சாந்தினி கேட்க, எல்லாரும் குடிப்பினம் போடுங்கோ என்று சொல்லியபடி சிவகாமி உடுப்பு மாற்ற தனதறைக்குள் போய்விடுகிறாள்.
சாந்தினி கோப்பியைப் போட்டுக் கொண்டு போய் எல்லாருக்கும் கொடுக்கிறாள்.இனிக்; காலமைச் சாப்பாட்டுக்கு ஆயத்தப்படுத்துவம் என்ற சொல்லிக்
கொண்டே குரு தங்கள் வீட்டிலிருந்து கொண்டு வந்த சொதியை, மாமா மாமி வீட்டிலிருக்கும் சட்டிக்குள் ஊற்றி அடுப்பிலை கொதிக்க வைக்கிறான்.
சாகித்தியன் இருப்புக் கொள்ளாமல் தவிக்கிறான்.வாற சனிக்கிழமை சிவகாமியை படத்துக்கு கூட்டிக் கொண்டு போக வேணும் அதை எப்படி வெட்டி ஆழ்வது என்று யோசிக்க, அப்பொழுது சிவகாமி அடுப்படிக்குள் நுழைய கண்ணால் சைகை செய்து சாகித்தியன் சிவகாமியை அருகில் வரச்சொல்லிக் கூப்பிட தலையில் கிளிப்பைக் குத்திக் கொண்டே „என்ன’ என மெதுவாக சாகித்தியனிடம் குனிந்து கேட்க, வாற சனிக்கிழமை …என்று அவன் இழுக்க, „அந்த இடத்துக்கு வாறன் „ என்று சிவகாமி மெதுவாகச் சொல்ல,அதைக் கேட்டவாறே வந்த சாந்தினி ,மாமி.. அம்மா சிண்ணண்ணையும் அண்ணியும் களவாகப் படத்துக்குப் போகப் போயினமாம், இஞ்சை என்ன நடக்குது என்று தெரியாமல் நீங்கள் உங்கை என்ன கதைச்சுக் கொண்டிருக்கிறியள் என்று தாயையும் மாமியாரையும் கூப்பிடுகிறாள்.
அடுப்படிக்குள் மாமியாரும் தாயும் வருகினமே என்ற எந்தக் கவனிப்புமில்லாமல் தங்கச்சியாரைப் பார்த்து உனக்கேன் கொதியாய்க் கிடக்குது அதுதான் இஞ்சை பார்த்தேனே நீயும் அத்தானும் முன்னுக்கு இருந்த கோப்பிப் போத்தலை தேடின இலட்சணத்தை என்று சாகித்தியன் சொல்ல, சிவகாமி கிளுக்கென்று சிரித்துவிடுகிறாள்.
சாகித்தியன் சூழ்நிலை சாதகமாக இருப்பதைக் கண்டு மகேஸ்வரியிடம் „மாமி வாற சனிக்கிழமை புதுப்படம் வருகுது சிவகாமியைக் கூட்டிக் கொண்டு போறன் சரிதானே உங்களிடம் அனுமதி கேட்டாச்சு,மாமியும் தலையை ஆட்டி ஓமென்று சொல்லிப் போட்டாவென்று சொல்ல, மாமி அப்படிச் சொல்லேலையே என்ற சாந்தினி மாமியாரைப் பார்த்து மாமி ஓமென்று தலையாட்டினனீங்களோ என்று கேட்க ,நாங்கள்
போகவேண்டாமென்று சொன்னால் நிற்கவா போயினம் என்றவர் போகட்டும் என்கிறாள்.
அப்ப சரி நாங்களும் போகிறம் என்று சாந்தினி சொல்லிக் கொண்டிருக்கும் போது அடுப்படிக்குள் நுழைந்த சந்திரன் இன்னொரு கோப்பி குடிச்சால் நல்லாயிருக்கும் போல என்று சொல்ல போட்டுத் தாறன் என்ற சாந்தினி வாற சனிக்கிழமை நீங்களும் நானும் படத்துக்குப் போறம் சரியோ நான் வீட்டிலை ரெடியா நிற்பன் வந்து கூட்டிக் கொண்டு போங்கோ,மாமி சரிதானே என சாந்தினி சொல்ல சொதியைக் கொதிக்க வைத்துக் கொண்டிருந்த குரு நாங்களுந்தான் போறம், நாங்கள்தான் முதலிலை பிளான் பண்ணினனாங்கள் என்று சொல்ல எல்லாருமே திகைத்துவிட்டார்கள்.
பெரியத்தான் நீங்கள் தனியத்தானே பிளான் பண்ணியிருப்பீர்கள்.அதென்ன நாங்கள் பிளான் பண்ணிவிட்டம் என்கிறியள் என்று சிவகாமி கேட்க, சாகித்தியன் தனது சொக்கின் இரண்டு பக்கத்தையும் விரலால் அமத்த சிவகாமியும் சாந்தினியும் புரிந்து கொண்டு,அது சரி அத்தான் அந்தப் பிளான்காரி பக்கத்து வீட்டு கன்னக்குழிக்காரிதானே,அவள் அமசடக்குக் காரி எங்களுக்கு எந்த அசிகையும் இல்லாமல் நடக்கிறாள்.
அண்ணி அது நேற்றுப் படியிலையிருந்து விழுந்த போது தூக்கிவிடும் போதுக்கு முன்னர் இருந்தே சந்திப்புக்கள் நடக்குது என்றாள் சாந்தினி.
எல்லாத்தையும் கவனித்துக் கொண்டிருந்த சந்திரன் என்னையும் எதுவும் கேட்காமல் நீங்களே முடிவெடுத்தால் அதற்கு என்ன அர்த்தம் என்று சாந்தினியைப் பார்த்துக் கேட்க,அதற்கு படத்துக்குப் போறமென்றுதான் அர்த்தம் நான் சொன்னால் மறுபேச்சில்லாமல் நீங்கள் வரவேணடியதுதான் என்ற சாந்தினி நாங்களெல்லாரும் சேர்ந்து போவோமே
என்று சாந்தினி படத்துக்கு போற விசயத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கிறாள்.
எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்த மகேஸ்வரியும் செல்லம்மாவும் நாங்கள் இரண்டு பேரும் இஞ்சை இருப்பதைப் பற்றி கொஞ்சமும் அக்கறைப் படாது நீங்கள் உங்கள் பாட்டுக்கு முடிவெடுத்திட்டியள்…ம்…..நடக்கட்டும்….என்று செல்லம்மா ஆதங்கப்படுவது போல நடித்தார்….
மாமி இது ஒரு பெரிய பிரச்சினையா எல்லாம் அம்மாவிடமும் உங்களிடமும் இருக்கிற மரபணு எங்களிடமும் இருக்கிறது அவ்வளவுதான் என்கிறாள் சிவகாமி….
நீண்ட காலமாக இறுகியிருந்த உறவுகள் என்று எதையுமே அங்கு காணவில்லை.அப்படி ஒன்று இருந்ததற்கான தடயமும் அங்கில்லை.அததூன் நல்லது அப்படித்தான் இருக்க வேண்டும்.
ஒருவரையொருவர் அண்ணி அண்ணியென்று சிவகாமியும் சாந்தினியும் கூப்பிடுவதுமாய் அத்தான் என்று சந்திரனைச் சாந்தினியும், சின்னத்தான் பெரியத்தான் என்று குருவையும் சாகித்தியனையும் சிவகாமியும் சந்திரனும் கூப்பிடுவதுமாய்,அண்ணி மச்சாள் என்று மகேஸ்வரியும் செல்லம்மாவும் ஒருவரையொருவர் கூப்பிடுவதுமாய் அந்த வீடு உறவுமுறை கொண்டாடி குதூகலத்தில் நிறைந்து போய்க் கிடந்தது.
விறாந்தையிலிருந்து கதைச்சுக் கொண்டிருந்த சந்திரசேகரமும் சச்சிதானந்தமும் இதுவரையில் எந்த உறுவு முடிச்சுக்களும் இருந்ததேயில்லை என்பது போலவும் கடந்த இருபத்தைந்து வருடங்களாக கசப்பான விடயங்கள் எதுவுமே நடக்கவில்லை என்பது போலவும் கதைச்சுக் கொண்டிருகு;கும் போது தனக்கு மச்சான் முறையான, சிவகுருவின் மகளான அர்ச்சனாவைக் குருவுக்கு கேட்டுப்
பார்ப்பம் என்று இருவரும் முடிவெடுக்கையில் குருவுக்கும் அர்ச்சனாவுக்கும் இடையில் ஒரு விருப்பம் இருப்பது போல தனது மனதில் படுவதாக சச்சிதானந்தம் சொல்ல எதுக்கும் சிவகாமியைக் கேட்டால் தெரியும் என்று சொல்ல, „பிள்ளை சிவகாமி இஞ்சை ஒருக்கா வா எனக் கூப்பிடுகிறார் சந்திரசேகரம்.
மாமனார் தனது பெயரைச் சொல்லி கூப்பிடுகிறார் என்று அறிந்த சிவகாமி , வாறன் மாமா என்று சொல்லிக் கொண்டே மாமனாரும் தகப்பனும் இருந்த இடத்துக்கு வந்து என்ன மாமா என்று கேட்க’ இன்றைக்கு நல்ல நாள் குருவுக்கு அர்ச்சனாவைக் கேட்கப் போறம் அவைக்கிளை ஏதாவது அறிமுகங்கள் இருக்குதா என்று கேட்கத்தான் கூப்பிட்டனான் என்கிறார் சந்திரசேகரம்.
சில விநாடிகள் அமைதியாகவிருந்தவள், இருக்குது மாமா அவை இரண்டு பேருக்குள்ளும் கனநாளாய் விருப்பமிருக்கு.நேற்றுத்தான் பெரியத்தான் முதன்முதலாய் இஞ்சை வந்தவர் ஆனால் அதற்கு முதலே அவை சந்திச்சிருக்கினம், இஞ்சை பெரியத்தான் வருவதற்கு முன்னமே அவை இரண்டு பேரும் காரைநகரில் உள்ள கசுவறினா பீச்சுக்கு போய்வந்தவை.அர்ச்சனாவிடம் அதன் நினைவாக அங்கை பிடுங்கின பூவரசம் பூவிருக்கு மாமா அர்ச்சனா நல்ல பிள்ளை அவள் எனது தோழியும்கூட எங்கள் குடும்பத்துக்கு வந்தாள் சநதோசம் மாமா கேளுங்கள் என்கிறாள்.
சிவகாமி திரும்பவும் அடுப்படிக்குள் வர சிவகாமியின் தாய் அண்ணை ஏன் கூப்பிட்டவர் என்று கேட்க,அண்ணிக்கு பெரியண்ணியாக பக்கத்து வீட்டுக்காரியை கேட்கப் போயினம் மாமாவும் அப்பாவும் அதுதான் பூவரசம்பூ கதையேதும் இருக்குதோ என்று மாமா கூப்பிட்டுக் கேட்டவர் என்று சிவகாமி பூடகம் வைத்துச் சொல்லுகிறாள்.தனக்கு எதுவுமே தெரியாதது போல குரு இருக்கிறான்.என்னதான் பெற்றோர்கள் கண்ணுக்குள்ளை எண்ணையை விட்டுக்
கொண்டிருந்தாலும் காதலர்களுக்கு பெரும் மலையும் சிறுசல்லிக் கல்லே என்பதற்கு குரு அர்ச்சனா,சந்திரன் சாந்தினி, சாகித்தியன் சிவகாமி சோடிகளே சாட்சியம்.
தங்கள் பிள்ளைகள் எங்களுக்குத் தெரியாமல் எதுவும் செய்ய மாட்டார்கள் என அவர்கள் நினைக்க, அந்தச் சோடிகளோ காதல் பறவைகளாக பறந்து திரிந்ததை அறிந்த போது சச்சிதானந்தம் மகேஸ்வரி சோடியும், சந்திரசேகரம் செல்லம்மா சோடியும் எங்களைப் போலத்தானே அவர்களும் என மகிழ்ந்தனர்.
அனைவரும் காலைச் சாப்பாட்டினை முடித்துக் கொண்டதன் பின் சந்திரசேகரம் சச்சிதானந்தத்தையும் தங்கச்சியாரையும்;மனைவியையும்; கூட்டிக் கொண்டு போய் சிவகுருவின் கேட்டைத் திறந்தார்.அவர்களைக் கண்ட சிவகுருவும் வசந்தமாலாவும் வாங்க வாங்க என்று மனம் நிறைந்து கூப்பிட்டனர்.
(தொடரும்)
![]()