கதைகள்

சிங்கப்பூரில் சில காலம்!…..பகுதி8…… ( உண்மைக் கதை) ….. ஏலையா க.முருகதாசன்!

(யோகமலர் இரண்டு அர்ச்சனைத் தட்டுக்களை வாங்கியிருந்தாள்.என்னிடம் ஒரு தாளைத் தந்து உங்க பேர் உங்க மனைவி பிள்ளைகள் பேரை எழுதச் சொன்னாள்.நான் பிள்ளைகளின் பெயரை முதலில் எழுதி மனைவியின் பெயரையும் அடுத்து யோகமலரின் பெயரையும் இறுதியில் எனது பெயரையும் எழுதிய போது என்னங்க நீங்க ஏங்க என்பெயரை எழுதினீங்க என்று அவள் கேட்டாள்.நீயும் எனது இன்னொரு மனைவியென்றேன்.)

சவுத் பிரிஜ்ட் றோட்டிலிருக்கும் மாரியம்மன் கோவில் மண்டபத்தில் நான் யோகமலர் அவளுடைய தோழிகள் இருவர் பூசை தொடங்க நேரமிருக்கின்ற காரணத்தால் கோவில் ஆதிமூலத்திற்கு முன்னால் உள்ள வெளியான மண்டபத்தில் உட்கார்ந்திருந்தோம்.

அதற்கு முன்னர் நானும் யோகமலரும் கோவிலைச் சுற்றி வந்ததன் பின்னர் அவர் நீட்டிய குங்குமச் சிமிழிலிருந்து குங்குமத்தை எடுத்து தனது உச்சி நெற்றியிலும் நடு நெற்றியிலும் பொட்டு வைக்கச் சொல்லி அவள் கேட்டதால் கணவனாக மகிழ்ச்சியாக பொட்டை வைத்தேன்.

நானும் அவளும் கணவன் மனைவி என்பதை இனி எந்தவொரு நிலையிலும் மறு எண்ணத்திற்கு வழியில்லை என்பதை எனது மனமும் மூளையும் உறுதியாக தீர்மானித்துவிட்டது.

யோகமலரின் இடது பக்கத்தில் அவளின் தோழிகள் இருவரும் உட்கார்ந்திருக்க நான் அவளுக்கு வலது பக்கத்தில் நெருங்கி உட்கார்ந்து தூணொன்றுடன் முதுகை வைத்து ஊட்கார்ந்திருந்தேன்.

யோகமலர் ஒருக்களித்து உட்கார்ந்து பாதம் வரை சீலையை இழுத்து மூடிவிட்டு வலக்கையை ஊன்றியவாறு இருந்தவள் அடிக்கடி தனது தலையை எனது தோள் மீது வைப்பதும் எடுப்பதுமாக இருந்தாள்.

அதைப் பார்த்த தோழிகளில் ஒருத்தி „ ஏய் யோகி இது கோவில் இங்குமா நீ ரொமான்ஸ் செய்கிறாய் „ என அவள் கேட்க’ நான் என் புருசன் தோள் மேலேதானே தலய வைக்கிறன் மாரியம்மா கோவிச்சுக் மாட்டா என்றாள்

அப்பொழுது அடுத்தவள் யோகி அங்க பார் அங்க இருக்கிற கேர்ள்ஸ் இரண்டு பேரும் உன்னட கஸ்பெண்டப் பார்த்து தமக்குள்ள என்னமோ பேசிக்கிறாங்க’ என்றதும் யோகமலரும் அவர்களைப் பார்த்தாள்.

அவளின் தோழி சொன்னது எனக்கும் கேட்டது.தோழி சொன்ன திக்கை யோகமலர் பார்த்துக் கொண்டே யாருங்க அவங்க உங்களைக் காட்டிப் பேசுறாங்க அங்க பாருங்க என்றாள் யோகமலர்.

கோவிலுக்கு வந்து பூசைக்கு காத்திருந்த பலரும் உட்கார்ந்த இடத்தில் எமக்கெதிராக பத்து மீற்றர் இடைவெளியில் உட்கார்ந்தவர்களைப் பார்த்தேன்.அவர்களின் முகம் எனக்கு பரிச்சயமான முகமாகத் தெரிந்தது.

 

கோவிலுக்கு வந்தவர்கள் வண்ண உடைகளில் வந்திருந்தபடியால் உடனடியாக அவர்களைக் கண்டறிய முடியவில்லை.

நான் அவர்களைப் பார்த்ததும் அவர்கள் அறிமுகமானவர்கள் போல முறுவலித்தார்கள்.நான் அவர்களைப் பார்க்கையில் யோகமலரும் பார்த்ததால் அவர்கள் என்னைப் பார்த்து முறுவலித்ததை அவளும் கண்டுவிட்டதால்,அவங்களை உங்களுக்குத் தெரியுமா என்று கேட்டதும், தெரியும் போலதானிருக்கு எங்கேயோ பார்த்திருக்கிறன்

அவையிரண்டு பேரும் சிறீலங்கன் பிள்ளைகள்தான்…என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது எங்க பார்த்தனீங்க அவங்களோட பேசினீங்களா என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனவளுக்கு, ஆ….ஞாபகம் வருது இவையிரண்டு பேரும் என்னுடைய மச்சாளின் மகளான மணியின் பக்ரறியில் வேலை செய்பவர்கள்,ஒரு நாள் மணியின் ரூமில் பார்த்திருக்கிறன் என்றேன்.

நீங்க உங்க மச்சாளின்; மகள் சிங்கப்பூரிலை வேலை செய்வதாகத்தான் சொன்னீங்க ஆனா அவங்க வீட்டுக்குப் போனதைச் சொல்லவே இல்லையே ஏங்க சொல்ல, மறந்திட்டன் என்றேன், மறந்திட்டீங்களா இ;ல்லே மறைச்சிட்டீங்களா என்றவள் கிலுக்கென்று சிரித்துவிட்டு நான் சும்மா, ஆனா புருசனாரே நான் உங்க பெண்டாட்டி எதுவாக இருந்தாலும் ஓபனாக எனக்குச் சொல்லிடனும், நான் உங்களுக்காக உயிர்வாழ்றன் என்றவளின் கண்களில் கண்ணீர் கசியத் தொடங்கியது.

இதுக்குப் போய் அழப் போறீங்களா என்றவுடன் நீங்க எனது உயிர் என்றவள் கோவில்; என்றும் பாராமல் எனது கைகளுக்குள் தனது கைகளைச் செருகி தோளில் தலை வைத்தாள்.

கோவிலுக்கு வந்தவர்கள் நாங்கள் இருக்கும் நிலையை விரும்பவில்லைப் போல எம்மைப் பார்த்துவிட்டு வாய்க்குள் முணுமுணுத்தார்கள்.

உடனே யோகமலர் எனது தோளிலிருந்து தலையை எடுத்ததுடன் செருகியிருந்த கையையும் எடுத்தாள்.

எமக்கு எதிரே உட்கார்ந்திருந்த சிறீலங்கன் பிள்ளைகள் எழுந்து வந்து யோகமலரின் தோழிகளுக்கு அருகில் உட்கார்ந்து கொண்டே என்னையும் யோகமலரையும் மாறி மாறிப் பார்த்தவர்கள், இவரை எங்களுக்குத் தெரியும் இவருடைய மச்சாளின்ரை மகள் மணியுடன்தான் வேலை

செய்கிறம்,ஒருநாள் இவரை மணியின் வீட்டில் பார்த்தனாங்கள் என்று செர்லிவிட்டு, உங்களுக்கு அவர் பொட்டு வைச்சதைப் பார்த்தனாங்கள் நீங்கள் அவருக்கு…….’ என்று இழுக்க, யோகமலர் நான் அவருடைய மனைவி அவர் என்னோட கஸ்பெண்ட் என்றாள் யோகமலர்.

அதில் ஒருத்தி நீங்கள் இவருடைய கஸ்பெண்டா என ஆச்சரியத்துடன் தனது நெற்றியைச் சுருக்கி தேய்த்துக் கொண்டே கேட்க’ ஆமாங்க நான் இவர் மனைவிதாங்க நான் சிங்கப்பூர் போடர் சிற்றியான ஜோகூர்பாருவிலயிருந்து வந்து என்னோட கஸ்பெண்ட் வேல செய்யிற பக்ரறியில் நானும் வேல செய்கிறன் என்று பதிலளித்தாள்.

நானும் அவர்களுக்கு,’இவ என்னுடைய மனைவிதான் „என்று சொல்ல,பதிலுக்கு அவர்களில் ஒருத்தி இவ நல்ல வடிவா இருக்கிறா எனச் சொல்ல, யோகமலர் அப்படியா நான் அழகாகவா இருக்கிறேன் எல்லாரும் நீளமான மூஞ்சி என்று சொல்வாங்க என்றவுடன், ஆனால் அவ்வளவு நீளமில்லையே அது உங்களுக்கு நல்ல வடிவாயிருக்கு அவருக்கு பொருத்தமான மனைவிதான் நீங்கள் என்று சொன்ன அந்தப் பிள்ளைகள் மணிக்கு இவ மனைவி என்பது தெரியுமா என்று கேட்டனர்.நான் இல்லை என்றேன்.

என்னுடனும் யோகமலருடனும் கலகலப்பாக பேசினாலும் ஆனால் அவர்களிருவரும் அதை நம்பத் தயங்கியது அவர்களின் முகபாவனையில் தெரிந்தது.நான் நினைத்தேன் எனக்கு ஊரில் மனைவி பிள்ளைகள் இருப்பதை மணி இவர்களுக்குச் சொல்லியிருப்பாளோ என்று.

அவர்களிருவரும் பழைய இடத்தில் போய் உட்கார்ந்தனர்.பூசை தொடங்கியது எல்லாரும் எழுந்து கும்பிட்டோம்.தீபாரதனை முடிந்து விபூதி தீர்த்தம் சந்தனம் குங்குமத்தை பெற்றுக் கொண்டோம்.

யோகமலர் இரண்டு அர்ச்சனைத் தட்டுக்களை வாங்கியிருந்தாள்.என்னிடம் ஒரு தாளைத் தந்து உங்க பேர் உங்க மனைவி பிள்ளைகள் பேரை எழுதச் சொன்னாள்.நான் பிள்ளைகளின் பெயரை முதலில் எழுதி மனைவியின் பெயரையும் அடுத்து யோகமலரின் பெயரையும் இறுதியில் எனது பெயரையும் எழுதிய போது என்னங்க நீங்க ஏங்க என்பெயரை எழுதினீங்க என்று அவள் கேட்டாள்.நீயும் எனது இன்னொரு மனைவியென்றேன்.

என்னைப் பாசமும் காதலும் கலந்து பார்த்தவளின் முகத்தைப் பார்த்தேன் முகம் சிவக்கத் தொடங்கியது, இனி அவளின் இதழ்கள் நடுங்கப் போகின்றன என்பதை எதிர்பார்த்த நான் கோவிலென்றும் பாராமல் இடுப்பில் கைகொடுத்து இறுக்கி அணைத்தேன்.அவள் நடுக்கம் வராமல் தன்னைச் சமாளித்துக் கொண்டாள்.

இன்னொரு அர்ச்சனைத் தட்டில் அவளே முருகதாசன்,யோகமலர் முருகதாசன் என எழுதி வைத்ததுடன் இன்னொரு தாளையும் மிகச் சிறிய அளவில் மடித்து வைத்து இரண்டு அர்ச்சனைத் தட்டுக்களையும் பூசகரிடம் கொடுத்தாள்.

அர்ச்சனை முடிந்ததும் இரண்டு தட்டுக்களையும் பூசகர் கொண்டு வந்து தந்தார்.அர்ச்சனைத் தட்டுக்களை வாங்கிய நாங்கள் மீண்டும் கோவில் மண்டபத்தில் உட்கார்ந்திருந்தோம்.அர்சனைத் தட்டுக்கள் இரண்டையும் பையொன்றில் வைத்தவள்.விபூதி சந்தனம் குங்குமத்தை ஒரு தாளில் வைச்சு மடிச்சுத் தந்தவள்,கவனமாக கொண்டு போய் ஒவ்வொரு நாள் காலையில பூசுங்க என்றாள்.

அக்காவுக்கும் பிள்ளைங்களுக்கும் சேலையும் உடுப்பும் அனுப்பனும், அப்ப விபூதி சந்தனம் குங்குமமும் சேர்த்து அனுப்பனும், அதை நான் கொண்டு போறேங்க சாய்ச்சிக்கு போனதும் அதைச் செய்வோம்க என்றாள்.

அர்ச்சனைக்கு எழுதிக் கொடுத்த பெயர்த்தாள்களை தட்டிலிருந்து எடுத்த யோகமலர் பரபரப்பாக எதையோ தேடினாள்.என்ன தேடுகிறீர்கள் எனக் கேட்டேன்.

ஒன்றுமில்லையென்றவள் உண்டியலுக்குள் போடவென்று ஒரு வேண்டுதலை எழுதி வைத்து அதையும் வைத்து அர்ச்சனைக்குக் கொடுத்தேங்க அதைக் காணேலங்க என்றாள்.

எங்களுக்குக் கொஞ்சம் தள்ளி ஒரு நடுத்தர வயதுள்ள பெண் குனிந்து மடித்த தாளை எடுத்தவர் அதை விரித்து படித்தவரின் முகம் மாறுவதைத் தொடர்ந்து இதை யாரு கீழே போட்டது என எல்லாரையும் பார்த்துக் கேட்க அதைக் கவனித்த யோகமலர் வேகமாக எழுந்து அந்தப் பெண்ணுக்குக் கிட்டப் போய் அது என்னோடது என அவளிடமிருந்து வாங்க நானும் அங்கே போய்விட , தாளைக் கொடுத்த பெண் யோகமலரைப் பார்த்து இப்படியெல்லாமா வேண்டுதல் செய்வாங்க உங்க கணவர் சிறீலஙகாவிலிருந்து வந்தவரா என்று கேட்டபடியே தாளைக் குடுத்தாள்.

யோகமலரிடமிருந்து பிடுங்காத குறையாக அந்தத் தாளை வாங்கி வாசித்த போது நானே அதிர்ந்து போனேன்.அதில் எழுதியிருந்தது இதுதான் „ என்னுடைய உயிரிலும் மேலான கணவர் சிறீலங்காவிற்குப் போவதற்கு முதல் மாற்ற முடியாத நோய் வந்து நான் அவரின் மடியில் உயிர்விட மாரியம்மா நீ எனக்கு வரம் தர வேண்டும் „ என்று எழுதியிருந்தாள்.

இது என்ன பைத்தியக்காரத்தனமாய் எழுதியிருக்கிறீர்கள் என்று பதட்டத்துடன் கேட்க ஆமாங்க நான் பைத்தியந்தான் நீங்க இல்லாம நான் உயிரோடு இருக்க மாட்டன் என்றவள் கண்ணீர் வழிய வழிய அந்தத் தாளை வாங்கி மடித்து உண்டியலுக்குள் போட்டாள்.

அவளை ஆறுதல் படுத்துவதற்காக மீண்டும் கோவில் மண்டபத்தில் உட்கார்ந்தோம்.

நாங்கள் அர்ச்சனைகள் செய்ததையும் ,விழுந்து கிடந்த தாளை பெண்ணிடம் பதட்டத்துடன் வாங்கிய யோகமலர் கண்ணீர் வழிய வழிய உண்டியலில் அதைப் போட்டதையும் எனது மச்சாளின் மகளுடன் வேலை செய்யும் பிள்ளைகள் பார்த்துக் கொண்டிருந்தனர் மட்டுமல்ல தமக்குள் கதைத்துக் கொண்டுமிருந்தனர்.

மத்தியானப் பூசை முடிய கோவிலுக்கு கும்பிட வந்தவர்கள் ஒவ்வொருவராக வெளியேறத் தொடங்கினர்.

சிறீலங்கன் பிள்ளைகளும் எங்களிடம் சொல்லிவிட்டுப் போய்விட்டனர்.நானும் யோகமலரும் அவளுடைய இரண்டு தோழிகளுமாக கோவிலைவிட்டு பஸ் தரிப்பிடத்தை நோக்கி நடக்கத் தொடங்கினோம்

யோகமலர் வாடிய கொடிபோலிருந்தாள்.வழமைபோல எனது கைகளுக்குள் தனது கைகளைச் செருகி நடந்து வந்தாள்.

நடந்து போய்க் கொண்டிருக்கும் போது அவள்; செரங்கூன் போய் கோமள விலாசில் சாப்பிடுவோமா என்று கேட்டாள்.

இப்பொழுது இந்த நேரம் அங்கை பெரிய கூட்டமாகவிருக்கும்,அதோடை எப்பவும் ரூறிஸ்டுக்கள் குவிந்திருப்பார்கள் இருக்க இடமிருக்காது என்று சொன்ன நான், கோமள விலாசிற்கு கொஞ்சம் தள்ளி இருக்கும் கிருஸ்ண விலாசில் சாப்பிடுவோம்.அங்கையும் நல்ல சாப்பாடுதான் என்றேன்.

சரியென்று ஒப்புக் கொண்டாள்.கோமள விலாசில் எப்பொழுதும் சாப்பிடுவோர் நிறைந்திருப்பார்கள்;.சாப்பிடுபவர்கள் எழுந்திருக்கும் வரை காத்திருந்து சாப்பிடுவோரும் உண்டு.நான் இப்பொழுது எழுதிக் கொண்டிருப்பது 39 வருடங்களுக்கு முன்பு நான்

சிங்கப்பூரில் வாழ்ந்த பொழுது அங்கு எனது வாழ்க்கை நிலையை சொல்வதற்காகவே.

அதுவும் யோகமலர் என்ற ஒருத்தி எனக்காக என்னோடு வாழ்ந்ததை நினைவிற்கு கொண்டுவர வைத்துவிட்டதன் காரணத்தாலேயே.

அப்பொழுதே சிங்கப் பூரின் நவீனத்தைப் பார்த்து வியந்திருக்கிறேன்.இப்ப அது இன்னும் பல மடங்கு நவீனமாக இருப்பதை அறிகிறேன்.சிங்கப்பூரைக் காணக் கிடைத்த வாழ்வும் அங்கு யோகமலரை மனைவியாக ஏற்றுக் கொண்டு வாழ்ந்த வாழ்க்கையும் இன்னமும் நினைவழியாக் காலங்களே.

செரங்கூனில் இறங்கியதும்,அங்குள்ள பலவங்காடிக் கடைத் தொகுதிக்குள் இருக்கும் காசெடுக்கும் தானியங்கி இயந்திரத்தை நோக்கி போவதற்காக இருங்கள் என்று சொல்லிவிட்டு காலடி எடுத்து வைக்க யோகமலர் எங்க போறீங்க என்று கேட்டாள்.

சாப்பிடுவதற்கு காசெடுக்கவென்றேன்.அதற்கு அவள்; அதொன்னும் வேணாம்ங்க உங்க சலறி மொத்தமும் நீங்க அக்கா பிள்ளைகளுக்கு அனுப்ப வேண்டும்.இப்படியான செலவுகளுக்கு நீங்க செலவழிக்க வேணாம்ங்க என்றாள்.

அதிலிருந்து ஒரு சதமும் உங்க பொக்கற் மணிக்குகூட எடுக்க வேண்டாமங்க என்றவள் உங்க மணிப்பேர்சைத் தாருங்கள் என்று வாங்கியவள் தனது கைப்பைக்குள்ளிருந்து சிங்கப்பூர் டொலர்களை வைத்துவிட்டு பேர்சை மூடியபடியே தந்தவள் பொக்கற்றுக்குள் வையுங்கள் என்றாள்.

கிருஸ்ண விலாசை நோக்கி நடக்கும் போது தோழிகள் முன்னே போக தாமதித்து நடந்து கொண்டே சொன்னாள் உங்க தனிப்பட்ட செலவு எதுவோ அதைச் சொல்லுங்கள் நான் தருகிறேன் என்றாள்.

சாய்ச்சி என்ற இடத்துக்குப் போனதும் உங்களுக்கு வேறு செலவு எனக்கு வேறு செலவு என்று ஏதும் இருக்காது.உங்க சலறியிலிருந்து ஒரு சதமும் நீங்க எடுக்க முடியாது கொஞ்ச நாளைக்காவது உங்களுடன் வாழ எனக்குச் சந்தர்ப்பம் தந்த அக்காவுக்கு நான் பெரிய நன்றிக் கடன்பட்டிருக்கிறேன் என்றவள் நன்றி அக்கா என்று தனது நெஞ்சில் கைவைத்துச் சொன்னாள்.

கிருஸ்ண விலாசிற்குள் நுழைந்த போது அங்கும் கூட்டமாக இருந்தாலும் எமது அதிர்ஸ்டம் நான்கு பேர் இருக்கக்கூடிய விதமாக நான்கு கதிரைகள் உள்ள மேசையிருப்பதைப் பார்த்து உட்கார்ந்தோம்.

எமது மேசையை நோக்கி பணியாளர் வந்து நின்றார்.எனக்கருகில் இருந்த யோகமலர் புருசனாரே பெண்டாட்டிக்கும் அவாட தோழிகளுக்கும் சாப்பாட ஓடர் பண்ணுங்க என்றாள்.சோறு நான்கு பேருக்கென்றேன். அவர் வெள்ளித்தட்டில்; அதற்களவான வாழையிலை வைத்துக் கொண்டு வைத்தவுடன் இன்னொருவர் வெள்ளிச் சட்டியொன்றில் சோறும் சிறு சிறு சட்டிகளில் கறிகள் கொண்டு வந்து வைத்தார்கள்.

நான்கு பேருக்கும் தனித்தனியாக சிறிய டிஸ்சில் பாயாசமும் அதற்குள் சிறிய கரண்டியும்.தனியாக ஒரு தட்டில் நான்கு வடைகளையும் கொண்டு வந்து வைத்தார்கள்.உணவுகள் மேசை முழுவதும் பரந்திருந்தன.

நான்கு பேரும் கைகழுவிவிட்டு சாப்பிடத் தொடங்கினோம்.ஊறுகாய், தயிர,; சிறிது சிறிதாக வெட்டிய சிறிய வெங்காயம் என எல்லாம் இருந்தன.

வெட்டிய சிறிய வெங்காயத்தைப் பார்த்த போது 1966 ஆம் ஆண்டு அம்மா கொழும்பு பொது(ஜிஎச்) வைத்தியசாலையில் நோயுற்றிருந்த போது வைத்தமியசாலைக்குக் கொஞ்சம் தள்ளி ஒரு ரவுண்ட் எபவுட்டுக்கு அருகில் இருந்த சைவ

உணவகத்தில் நானும் பெரியம்மாவும் மத்தியானச் சாப்பாடு சாப்பிட்ட ஞாபாகம் வந்தது.

அங்கும் இப்படித்தான் சிறிய வெங்காயத்தை வெட்டி மிகச்சிறிய கிண்ணியில் போட்டுத் தந்திருந்தார்கள்.அன்றுதான் முதலில் இப்படி வெங்காயம் வெட்டி வைப்பதைக் கண்டேன்.

வெங்காயத்தைக் காட்டி யோகமலருக்கு அந்த நாளை ஞாபகப்படுத்திச் சொன்னேன். சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அவள், நான் கேட்க மறந்திட்டேங்க, உங்ககிட்டருந்து உங்க அப்பா அம்மா பிறதர்ஸ் சிஸ்ரேர்ஸைப் பற்றி எல்லாம் கேட்கனும்க, உங்க அப்பா அம்மா பெயர் என்னங்க என்றாள்.

அப்பாவை அப்பு என்றுதான் கூப்பிடுவோம் அப்புவின் பெயர் கந்தையா அம்மாவின் பெயர் வள்ளியம்மை என்றேன்.நான் சொன்னவுடன் வியப்பில் கண்கள் அகல விரிய மகிழ்ச்சியாக அப்படியா என்றவள் உற்சாகமாக எங்க அப்பாவுக்கும் அம்மாவுக்கும் பெயர் கந்தையா வள்ளியம்மை என்றாள்.அவள் சொன்னதும் எனக்கும் தாங்கமுடியாத வியப்பு.தோழிகளுக்கும் வியப்பு.பாரடி உங்கள் இரண்டு பேரையும் கடவுள் எப்படிச் சேர்த்து வைத்திருக்கிறார் என்றார்கள்.

கடவுளே என்னையும் என் கணவரையும் சேர்த்து வைக்க என்னவெல்லாம் நாடகம் போடுகிறாய் என்றவள் வியப்பிலிருந்து மீளவே இல்லை. வீட்டுக்குப் போனதும் முதலிலை அப்பா அம்மாவுக்கு இதைச் சொல்ல வேண்டும் என்றாள்.

எனது அப்புவுக்கு பெயர் கந்தையா அம்மாவுக்குப் பெயர் வள்ளியம்மை.ஊரிலை எங்கள் அயல் வீடாக இருந்த நீலகண்ட ஐயர் அம்மாவின் கல்யாணத்திற்கு வாடாமல்லிகையில் மாலை கட்டினதாகவும் வாடாமல் நீங்கள் இரண்டு பேரும் வாழ வேண்டுமென்பதற்காக

கட்டியதாக நீலகண்ட ஐயர் சொன்னதாக அம்மா பலமுறை சொல்லியிருக்கிறார்.கந்தனுக்கும் வள்ளிக்கும் கட்டிய மாலை என்று அடிக்கடி அவர் சொன்னதாகச் சொல்வார்.

எங்களுடைய மூத்த பெரிய தந்தைக்குப் பெயர் ஆறுப்பிள்ளை பெரியம்மாவுக்குப் பெயர் ஆச்சிமுத்து,அடுத்த பெரிய தந்தைக்குப் பெயர் கணபதிப்பதிப்பிள்ளை பெரிய தாயாருக்குப் பெயர் கைராசி , அடுத்த பெரிய தந்தையாருக்குப் பெயர் சின்னையாபிள்ளை பெரிய தாயாருக்குப பெயர் சிவக்கொழுந்து.இதையெல்லாவற்றையும் அவளுக்குச் சொன்னேன்.

ஆமாங்க ஏதோ எனக்கும் உங்களுக்கும் பூர்வஜென்ம பந்தம் இருக்கும் என்றவள் என்னுடைய பெயரை நீங்க எப்படிப் பார்க்கிறீங்க என்றாள். எனக்கு கிடைத்த மலருக்கு ஒத்த மிருதுவான யோகம்,யோகம் என்றால் அதிர்ஸ்டம் என்றேன்.

அவள் கண்கள் அகல மகிழ்ச்சியில் நான் உங்க அதிர்ஸ்டமா இல்லீங்க நீங்கதாங்க எனது அதிர்ஸ்டம் என்றாள்.இரண்டு பேருமே ஒருத்தருக்கொருத்தர் இறைவன் கொடுத்த வரமென்றன்.சொன்னவுடன் தோளில் சாய்ந்தவள்.வாங்க கையைக் கழுவுவம் என்றாள்.நான்கு பேரும் கையைக் கழுவிப் போட்டு வந்து உட்கார்ந்திருந்தோம்.

சுவையான சாப்பாடு. மனம் நிறைய வயிறு நிறைய நால்வரும் சாப்பிட்டோம். சாப்பிட்டு முடித்துவிட்டோம் என்பதைக் கண்டுகொண்ட பணியாளர் சாப்பிட்டு முடித்த தட்டுக்கள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு போனவர் ஓரிரு நிமிடங்களில் பில்லை ஒரு மூடிய டயறி போன்ற ஒன்றுக்குள் கொண்டு வந்து வைத்தார்.

யோகமலர் புருசனாரே காசைக் கொடுங்க பேர்சிலை நிறைய பணம் இருந்ததைப்; பார்த்தேனே என்றாள்.பேர்சை எடுத்துப் பார்த்தேன் முன்னூறு சிங்கப்பூர் டொலர் இருந்தது.

வியப்புடன் அவளைப் பார்த்தேன்.எனக்கு ஒன்னுமே தெரியாது அது உங்க பணம் என்றாள்.

பில்லில் உள்ள பணத்தைக் கொடுத்து மிகுதியை வாங்கினேன். பொறுங்க எனறவள் நாலு நாலு வடை தனித்தனியாக பார்சல் பண்ணித் தாங்க,நாலு மசாலா ரீ பையில விட்டுத் தாங்க என்றாள், அதற்கும் பணத்தைக் கொடுத்தேன்.

கிருஸ்ண விலாசை விட்டு வரும் போது அவர்கள் தந்த வடைப் பார்சல்களில் ஒன்றை என்னிடம் தந்து நீங்க வீட்டை போய்ச்சேர ஆறு மணியாயிடும் ரீயோட இதைச் சாப்பிடுங்க என்றவள்,மற்ற நாலு வடைப் பார்சல் இருந்த பையை தன்னுடன் வைச்சிருந்தாள்.ரீயை பையில் விட்டு ஸ்ரோ வைச்சுத் தந்திருந்தார்கள்.

ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு பை ரீயை ஸ்ரோவினால் உறிஞ்சியபடியோ பல்அங்காடிக் கட்டிடத்துக்குள் நுழைந்து இருக்கைகளில் இருந்து ரீயைக் குடித்துவிட்டு வெறும் பைகளைக் குப்பைத் தொட்டிக்குள் போட்டோம்.

ஜோகூர் பாருக்கு என தனியான பஸ் உண்டு அது குறிப்பிட்ட மணித்தியாலத்திற்கு ஒருமுறைதான் இருக்கிறபடியால் யோகமலருக்கும் தோழிகளுக்கும் இன்னும் அரை மணித்தியாலங்கள் இருந்தன.

என்னை அனுப்பிட்டுத்தான் நீங்க போகனும் என்றாள் யோகமலர்.இன்னும் அரைமணித்தியாலத்திற்குப் பிறகு இவள் போய்விடுவாளா என்று நினைத்த எனக்கு தாங்க முடியாமல் கண்ணீர் வர அவள் தோளில் சாய்ந்தேன்.

பதறிப் போன அவள் எனது தலையை வருடியபடியே அழாதீங்க என்றவளின் கண்களிலிருந்தும் கண்ணீர் வந்தது.தனது கைலேஞ்சியால் எனது கண்களைத் துடைத்தவள் என்னங்க நீங்க அழாதீங்க, உங்க ரூம்ல நீங்க

மட்டும்னா உங்ககூட இப்பவே வந்திடுவேன்க என்றாள்.நாளைக் காலை ரெலிபோன் எடுங்கள் மறக்காதீங்க. சாகிற போதுகூட உங்க மடியிலதான் சாவன் என்று அவள் சொல்ல போச்சுது இவ்வளவு நாளும் அவள்தான் எப்பவும் அழுதாள் இப்ப நீங்களுமா என்றார்கள் தோழிகள்.

பஸ்ஸிற்கு காசு இருக்குதா என்று கேட்டுக் கொண்டே பேர்சை பொக்கற்றுக்குள் இருந்து வெளியே எடுத்தன்.அதை உள்ள வையுங்க காசு இருக்கு என்று என்னைத் தடுத்தாள்.

இருவரும் ஆறுதலடைந்தோம்.ஜோகூர்பாரு பஸ் நிற்கும் இடத்திற்குப் போய் அவளும் தோழிகளும் ஏறினார்கள்.எனது பார்வையில் படத்தக்கதாக யன்னலோர இருக்கையில் இருந்தவள் கைலேஞ்சியால் தனது கண்களைத் துடைத்தவாறு இருந்தாள்.

பஸ் புறப்பட்டது. அவள் விம்முவது தெரிந்தது. ஒரு கையை காட்டிக் கொண்டே மறு கையில் வைத்திருந்த லேஞ்சியால் கண்களை துடைத்தாள்.

பஸ் கண்களிலிருந்து மறையும் வரை அந்த இடத்திலேயே நின்ற நான் யூரோங் இன்ரர்சேன்ஜ்சுக்கு போகும் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்திருந்தேன்.

எனக்கும் அவளுக்குமிடையிலிருக்கும் பிணைப்பு என்ன பிணைப்பு. அளவுக்கு மீறிய தூய்மையான காதலா, அளவுக்கு மீறி ஒருவரை ஒருவர் நேசிக்கும் நேசிப்பா அல்லது காமம் கலந்த தூய்மையான காதலா.ஒன்றுமே புரியாமல் தவித்தேன்.இருக்கையில் தலையை சாய்த்து வைத்தபடியே நான் நினைத்துப் பார்க்காத ஒரு வாழ்வு கனவு போல எனக்கு இங்கு கிடைத்திருக்கிறதே யோசித்துக் கொண்டிருந்தேன்.

 

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *