சிங்கப்பூரில் சிலகாலம்…..பகுதி 7 ….. (உண்மைக் கதை)…… ஏலையா க.முருகதாசன்

(அம்மனைக் கும்பிட்டுவிட்டு என்னை அன்போடும் கனிவோடும் பார்த்து எனது கையில் திறந்தபடி ஒரு குங்குமச் சிமிழைத் தந்தவள் „உங்களுக்கும் எனக்கும் குலதெய்வமாக இருக்கின்ற இந்த மாரியம்மனைச் சாட்சியாக வைச்சு இந்தக் குங்குமத்தை உங்கட பெண்டாட்டியான எனக்கு உச்சி நெற்றியிலும், நடுநெற்றியிலும் வைச்சுவிடுங்கள் என்றாள்.)![]()
ஒரு நாள் நான் போர்வையை எடுத்து உதறி மடித்த போது விசிறி விழுந்து செட்டை உடைய அடுத்த நாள் வாங்கிப் போடும் வரையும் ஐயையே வெக்கையாயிருக்கு என்று நான் போய்ப்; பக்ரறியில் சொல்லப் போகிறன் என்று கரன் நச்சரித்துக் கொண்டேயிருந்தார் .
அங்கிருந்த பொடியங்களில் சச்சி கோபக்காரன் என்றாலும் நேர்மையானவன்.ஞானசேகரமும் சூரியகுமாரும் டீசன்டானவர்கள்.ஞானசேகரத்தின் தாய் ஆசிரியை.
நானோ நித்திரையில்லாமல் தவித்துக் கொண்டிருக்க, சச்சி கரனுக்கு அடிச்ச விசயம் என்னை இன்னும் குழப்ப அடுத்த நாள் என்ன நடக்கப் போகுதோ தெரியாது என்ற தவிப்புடன் பக்ரறிக்கு போன நான் முதலில் யோகமலரிட்டைப் போய் நடந்த விசயத்தைச் சொல்லி பயப்படாதையுங்கோ என்று சொல்ல அவள் கடவுளே இது என்ன புதுப் பிரச்சினை
என்று ஏங்கியவாறு கைப்பைக்குள்ளிருந்து சின்ன அம்மன் படத்தை எடுத்து உள்ளங்கையில் வைச்சுக் கொண்டு அம்மா தாயே என்ரை புருசனுக்கு ஒரு பிரச்சினையும் வரக்கூடாது என்று நடுங்கி கண்கலங்கினாள் .
ஒரு பிரச்சினையும் வராது அழ வேண்டாம் என்று ஆறுதல் படுத்தினன்;.தன் நெற்றியை விரலால் தொட்டு,விரல் உணர்த்திய கரகரப்பான பகுதி விபூதியை அழுத்தி எடுத்து எனது நெற்றில் தடவினாள்.
நான் பக்ரறிக்குள் நுழையும் போது சச்சியையம் கரனையும் கண்டிட்டன். அவர்கள் வேறு வேறு இடத்தில் நின்றிருந்தார்கள்.அவர்களிருவருக்கும் காலமை வேலை.
சச்சி தூரத்திலிருந்து கையைக் காட்டினான். கரன் பக்ரறிக்குள் நுழையும் வாசலுக்கு மேற்குப்புறமாக ஒரு மலாய்க்காரருடன் கதைச்சுக் கொண்டிருந்தான்.
அவனைக் கடக்கும் போது இருக்குது இவருக்கு இன்றைக்கு என்பது போல ஒரு நரிச் சிரிப்புச் சிரித்தான்.
அவன் மூக்குக் கண்ணாடி போடுபவன்.கண்ணாடிக்கூடாக வன்மமாகப் பார்ப்பதை என் மனம் உணர்ந்தது.
அவர்கள் இருவரையும் கண்ட நான், இன்றைக்கு நிச்சயமாக விசாரணை நடக்கப் போகுது என்று நினைத்துக் கொண்டு படபடப்புடன் இருந்தேன்.
யோகமலர் பயப்படாதீங்க ஒன்னும்; பிரச்சினை வராது, புருசனாரே பயப்படாதீங்க நானிருக்கேன்ல உங்கள இங்க பாதுகாத்து வைச்சிருக்கேன் என்று இதயப் பகுதியைக் காட்டியவள்.
நாங்க இரண்டு மனைவிங்க உங்களை நினைச்சிட்டேயிருக்கோம் பயப்படாதீங்க என்று என்னை ஆறுதல் படுத்தினாளே தவிர அவளும் பயந்து கொண்டுதானிருந்தாள்.
வேலை தொடங்கி பத்து நிமிசத்துக்குள் பேர்சனல் மனேஜரின் செயலாளர் ஸ்ரெபானி வரச் சொன்னதாக அகமட் சொல்ல , யோகமலர் நெஞ்சில் கைவைத்து கூப்பினாள்.
அதைக் கண்ட அகமட் „பயப்படாதீர்கள் அவருக்கு ஒன்றும் நடக்காது, இது அவையின்ரை வீட்டில் என்ன நடந்தது என்று கேட்க மட்டுந்தான் என்றார்..
நான் அவளை ஆறுதல்படுத்திவிட்டு செயலாளரின் அறைக்குள் போனன்.அங்கு சச்சியும் கரனும் இருந்தார்கள்.செயலாளர் என்னை இருக்கச் சொன்னார்.
என்னைப் பார்த்து ஏன் இஞ்சை வரச் சொன்னனான் என்று தெரியுமோ என்றார்.ஓரளவு தெரியும் என்றேன்.நேற்று உங்கடை வீட்டில் நடந்த விசயம் தெரியுமா என்றார்.
தெரியும் இரவு ஒரு மணி போல ஞானசேகரன் சொன்னவர் என்றன்.அதைப்பற்றி லீடர் என்ற நிலையில் என்ன நினைக்கிறீர்கள், யார் பக்கம் பிழையிருக்குது என்று நினைக்கிறீர்கள் என்று ஸ்ரெபானி கேட்டார்.
கரனில் நிறையப் பிழைகளிருந்தாலும் அவருக்குச் சச்சி அடித்ததும் பிழை, அவருடைய கீரைச் சட்டிக்குள் ஆட்டிறைச்சி கறி சமைத்த அகப்பையை வைச்சதும் சச்சியின் பிழைதான்.
கரனின் உடம்பில் கைவைச்சதற்கும் அவரின் மனதை நோகடித்ததற்குமாக கரனிடம் லீடர் என்ற முறையில் மன்னிப்புக் கேட்கிறன் என்று சொல்லி கரனிடம் மன்னிப்புக் கேட்டன்.சச்சியையும் மன்னிப்புக் கேட்கச் சொன்னார், சச்சியும் கரனிடம் மன்னிப்புக் கேட்டார்.
குட் என்று சொன்ன செயலாளர், நீங்கள் விசிறியை உடைச்சீங்களா என்றார், தற்செயலாக தட்டுப்பட்டு உடைஞ்சு போச்சுது அடுத்த நாளே செட்டையை வாங்கிப் போட்டிட்டன் என்றன்
அடுத்த கேள்வி கரனை நோக்கிக் கேட்க கரன் அதை எதிர்பார்க்கவேயில்லை.
கரன், விசிறிக்கு இதுவரை செட்டை போடவில்லை என்று இன்றைக்கு காலமை கொடுத்த புகாரில் சொல்லியிருக்கிறீர்கள் ஆனால் அடுத்த நாளே அந்தப் பாகம் போட்டாச்சே அதை ஏன் புகாரில் சொல்லவில்லை நீங்கள் பொய்தானே
சொன்னனீங்கள் என்று சொன்னதும் தலைகுனிஞ்ச கரன் சச்சியைக் காட்டி இவை புட்டு இடியப்பம் அவிச்சதாலை மின்சாரக் காசு மேலதிகமாகக் கூடி எனது சம்பளத்திலிருந்து பத்து டொலர் வெட்டப்பட்டிருந்தது என்று சொல்ல, என்னைப் பார்த்த ஸ்ரெபானி நீங்கள் மின்சாரத்தை மேலதிகமாக பாவிக்க வேண்டாம் என்று அவர்களுக்குச் சொல்லியிருந்தீர்களா என்றார்.
நான் அவர்களுக்குச் சொன்னனான்,சொன்னதுடன் இடியப்பம் புட்டுச் சாப்பிடாதவர்களுக்கு வெட்டிய பத்து டொலரைக் குடுக்கச் சொல்லி அவர்களும் குடுத்திட்டினம் என்றேன்.
கரனைப் பார்த்து தந்தவையா என்று செயலாளர் கேட்க ,கரன் தந்தவை என்று சொல்ல ,கரனைப் பார்த்து நீங்கள் அதைச் சொல்லவில்லையே என்றார்.
சச்சி விசிறிக் கதையை திரும்பவம் எடுத்தான்.இவர் இன்னும் விசிறிக்குச் செட்டை போடவில்லை என்று இங்கு சொல்லியிருக்கிறார்.
ஆனால் அடுத்த நாள் பொஸ் என்னையும் கூட்டிக் கொண்டு போய்த்தான் வாங்கிக் கொண்டு வந்து பூட்டினவர் என்று சொல்ல, பொஸ் என்றா நீங்கள் இவரைக் கூப்பிடுவியள் என்று ஸ்n;ரபானி கேட்க, அவர் லீடர் என்பதற்கமைய நடக்கிறார் அத்துடன் வயதுக்கு மூத்தவர் எங்களுக்கு அண்ணன் மாதிரி என்று சொல்லி நான் பேப்பர் போட்டுப்படுத்ததிலிருந்து நான் கழுவிநீர் போகும் துவாரத்திற்குள் கைவிட்டுச் சாக்கடையை
எடுத்தது,ரொய்லற்றைக் கழுவினது, பாத்ரூமைக் கழுவினது,குளோரின் போட்டு நிலத்தைக் கழுவினது வரை என்னைப் பற்றிச் சச்சி சொன்னதும் ஸ்ரெபானி என்னைப் பார்த்துப் பெருமிதத்துடன் வெறிகுட் என்று சொல்லிவிட்டு கரனைப் பார்த்து நீங்கள் ஒரு வேலையும் செய்வது இல்லையாமே, விசிறியை உங்களுடைய பக்கம் மட்டுமே திருப்பி விடுவீர்களாமே என்று கரனைப் பார்த்துக் கேட்க என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தலைகுனிஞ்ச கரன்,தலையை நிமிர்த்த இவர்கள் இரண்டு பேரிடமும் நீங்கள் மன்னிப்புக் கேளுங்கள் என்று சொல்ல கரன் நிலை தடுமாறி மன்னிப்புக் கேட்டார்.
மன்னிப்புக் கேட்டுவிட்டு தான் பிராமண சமூகத்திலிருந்து வந்தனான் நான் எந்த வேலையும் செய்யக்கூடாது என்று சொல்ல,ஸ்n;ரபானி புரியாமல் தடுமாற அவர் இந்து மதகுரு சமூகத்திலிருந்து வந்தவர் அதைத்தான் சொல்கிறார் என்று நான் விளங்கப்படுத்த அவருடைய சமூகத்துக்கும் வேலைக்கும் என்ன சம்பந்தம் என்று ஸ்ரெபானி கரனைப் பார்த்துக் கேட்டார்.
அவர் எந்தச் சமூகமாகவும் இருந்திட்டுப் போகட்டும். சிறீலங்காவில் உள்ள சமூக நிலையோ அல்லது மதம் சார்ந்து பார்க்கும் நிலையோ வேறாக இருக்கலாம்.அது எங்களுக்கு முக்கியமல்ல.
ஆனால் சிங்கப்பூரில் எல்லாரும் சமம்.சீனர் தமிழர் மலாயர் என்ற தனித்துவப் பார்வை
கிடையாது.எல்லாரும் சிங்கப்பூரியர்களேதான் என்றார் ஸ்ரெபானி.
இங்கு அனைத்து மதகுருமார்களும் மதத்திற்கான பணியாளர்களே தவிர எந்தவிதமான தனித்துவமான பாகுபாடும் கிடையாது.
அவர்கள் கோவில்களில் வழிபாடுகளை நடத்தும் மதப் பணியாளர்கள்;.அவ்வளவுதான்.கரன் நீங்கள் இந்து மதகுருமார் ; சமூகத்தில் இருந்து வந்தவர் என்பதற்காக வேலை செய்யாமல் இருக்க முடியாது.நீங்கள்; இந்து மதகுரு என்ற அடையாள வேலையான கோவில் அர்ச்சகராக வரவில்லை.
நீங்கள் ஜிஇ தொழிலாளி மட்டுமே என்றவுடன்,அதற்காகவே காத்திருந்தது போல சச்சி கோவிலில் கரன் சொன்னதைச் சொல்லப் போகிறானே என உணர்ந்து கைச்சைகையால் சொல்லாதை என்று காட்ட, அதைக் கவனித்த ஸ்ரெபானி; அவர் சொல்ல வந்ததைத் தடுக்க வேண்டாம் என்று சொல்ல,சச்சி, கரன் பெண்கள் இந்துக் கோவில்களுக்கு மேற்சட்டை போடாமல் போவது பற்றிக் கோவிலில் வைத்துச் சொன்னதுதான் எங்களுடைய கோபத்துக்கு காரணம் என்றவுடன்,செயலாளர் மை கோட் என்று நெற்றியில் கைவைத்து மேசையை நோக்கிக் குனிந்தவர்.அப்படியே கண்களை உயர்த்தி வெறுப்புடன் கரனைப் பார்த்தார் யாருக்குமே தெரியாதவாறு தனது மேல்சட்டையை மேலே இழுத்துவிட்டார். ஏன் சச்சி இப்ப இதைச் சொன்னவன் என்று நெற்றியைத் தேய்த்துக் கொண்டன்.
சச்சியின் வாயிலிருந்து இப்படி வரும் என்று கரன் எதிர்பார்க்கவில்லையாதலால் அவர் நிலைகுலைந்து போனார்.அந்தக் கோபத்தைக் காட்ட கரன் என்னைக் காட்டி இவர் இஞ்சை ஒரு பெண்ணை……..’ என்றவுடன், ஸ்ரெபானி அவர் என்ன சொல்லப் போகிறார் என்பதை உணர்ந்து ஸ்ரொப் அது அவருடைய தனிப்பட்ட விசயம் அதை நீங்கள் குறறச்சாட்டாக வைக்க முடியாது.
கோவிலில் கதைத்த விசயமும்; தனிப்பட்ட விசயம் என்றாலும், அது பெண்களைத் தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் பார்வையாகவும் அவர்களைக் கேவலப்படுத்தும் செயலாகவும் மட்டுமல்லாது என்னையும் அது கோபப்பட வைக்கின்றது.
உங்களுடைய சிந்தனை மிகவும் வக்கிரமானது என்று சொனனவர் சரி நீங்கள் போங்கள் இனிமேல் இப்படி நடக்காதீர்கள்.இதுதான் முதலும் முடிவுமான எச்சரிக்கை என்ற சொல்லி சச்சியையும் கரனையும் அனுப்பியவர் என்னை இருக்கச் சொன்னார்.
ரெலிபோனில் அவர் இங்கை இருக்கிறார் என்று யாருக்கோ சொன்னவர்,ரெலிபோனில் பேசிய பெண்ணின் குரல் ஏதோ கேட்க அவர் வருவார் என்றார்.
ஸ்ரெபானி ரெலிபோனை வைத்ததும் உள்ளே யோகமலர் வந்தார்.அவரை எனக்கருகில் உட்காரச்
சொல்லிவிட்டு என்னையும் அவரையும் மாறி மாறிப் புன்னகையுடன் பார்த்தார்.
யோகமலர் நடுங்கிக் கொண்டிருந்தார்.அவளின் கை நடுங்கியது.அதைக் கவனித்த ஸ்ரெபானி ஏன் கை நடுங்குது அவரைப் பிடிச்சுக் கொள் என்றவளிடம்,மடம் இவருக்கு ஏதாவது பிரச்சினையா என்று கண்கலங்க, நதிங் …நதிங் அவருக்கு ஒரு பிரச்சினையுமில்லை நீங்கள் ஏன் இப்படி…என்று சொல்ல அவளின் கையை வருடிக் கொண்டே நான் நடுங்காதீர்கள் எனக்கு ஒரு பிரச்சினையுமில்லை…என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே பேர்சனல் மனேஜர் உள்ள வந்தவர் எங்கள் இரண்டு பேருக்கும் கைலாகு கொடுத்துவிட்டு யோகமலருக்குப் பக்கத்தில் இருந்து அவளைப் பாசமாகப் பார்த்தார்.
விசாரணை பற்றிக் கேட்டார்.ஸ்ரெபானி விபரமாக சண்டையின் விபரம் பிறகு எங்களை விசாரித்த விபரம் எல்லாவற்றையும் விபரமாகச் சொல்லிவிட்டு, கோவிலில் கரன் சொன்னதையும் சொன்ன போது பேர்சனல் மனேஜரின்; முகம் மாறியது, யோகமலரும் அப்படியா என்பது போல என்னைப் பார்த்தார்.
கரன் சொன்னது பெண்ணுலகத்தையே கேவலப்படுத்தியது மாதிரி இருந்ததை அவர்கள் உணர்ந்தார்கள்.
பேர்சனல் மனேஜர் ,ஓகே என்று அந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தவர்.எங்கள் பக்கம் திரும்பி நான் ஏன் உங்கள் மனைவியை இங்கை கூப்பிட்டனான்
என்றால் என்றவர், யோகமலர் நீங்கள் எங்களைச் சந்தித்த போது மூன்று விடயங்கள் சொன்னீர்கள்.
ஓன்று உங்களுடைய கஸ்பெண்ட் சிறீலாங்காவிற்கு போய்விட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட போது அவர் போகும் முன் அவர் மடியிலேயே செத்துவிடுவேன் என்பது.இரண்டாவது அவர் போயும் சாவு வராவிட்டால் கன்னியாக வாழ்வீர்களா என்று கேட்டது நிச்சயமாக அவருடன் நீங்கள் இருக்கும் போது அவரால் உங்கள் கன்னித்தன்மை நீக்கப்படும் என்பது தெரிந்தும் வேண்டுமென்றெ கன்னியாக வாழ்வீர்களா என்று கேட்டதற்கு கன்னித்தன்மையுடன் வைராக்கியத்துடன் வாழ்வேன் என்று உறுதியாகச் சொன்னீர்கள்.மூன்றாவது பாலியல் தொழிலாளிகளிடம் உங்கள் கணவரைப் போக அனுமதிப்பீர்களா என்று கேட்ட போது விடமாட்டன் அதுக்குத்தான் நானிருக்கிறேனே என்றீர்கள்.
இந்த மூன்று பதில்களும் மூன்று விதமானவை தனது காதலனிடம் அல்லது காதல் மிகுந்த கணவனிடம் வைத்திருக்கும் பெண்ணால் மட்டுமே துணிந்து இப்படி ஒரு பதிலைச் சொல்ல முடியும்.
நானே இந்தப் பதிலால் இப்படியும் ஒரு காதலா என்று நிலைகுலைந்து போனன்.அதனால்தான் நானும் அகமட்டும் கதைத்து எனது தனிப்பட்ட அறிமுகத்தை வைத்து உங்கள் இரண்டு பேருக்கும் உதவி செய்வது என்று முடிவெடுத்து ஒரே பக்ரறியில் வேலை செய்வதற்கும் ஒரே வீட்டில் தங்குவதற்கும் ஏற்பாடு செய்திருந்தோம்.அதற்கும் இந்த ஜிஇ பகரறிக்கும்
எந்தச் சம்பந்தமும் கிடையாது.அது உங்கள் இரண்டு பேரினதும் உண்மையான காதலுக்கு நாங்கள் கொடுத்த மரியாதை.
ஆனால் நாங்கள் உதவி செய்ததை யாருக்குமே சொல்லக்கூடாது..தானாக நடப்பது போலவே எல்லாம் நடக்கும் என்றார்.
நீங்கள் அவரை உங்கள் மிகுதியான அன்பால் காதலால் கட்டிப் போட்டு வைத்திருக்கிறீர்கள்.அவ்வளவு காதல் அவரிடம் உங்களுக்கு என்றவர் நாங்கள் பக்ரறியின் சட்டத்திற்கமைய அவருக்கு எந்தப் பிரச்சினையும் வராமல் பாதுகாப்போம்.அதை மீறி அவரைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு உங்களுடையது என்றவர் இன்றைய விசாரணையில் ஒருவர் மிகவும் விசமானவர் என்பதைக் கண்டிருக்கிறோம்.
கரனிடமிருந்து இவரைப் பாதுகாக்க வேண்டும் என்றவர் உங்களுடைய படங்கள் ஏதாவது அவரிடம் இருந்தால் அதை யார் கண்ணிலும் தட்டுப்படாமல் சூட்கேசிலோ அலுமாரிக்குள்ளோ வைத்து நல்ல பூட்டுப் போட்டு பூட்டி வைக்கச் சொல்லுங்கள் என்றார்.
இன்னும் மூன்றே மூன்று கிழமைகள் மட்டுந்தானிருக்கிறது நீங்கள்; இரண்டு பேரும் வேறொரு பக்ரறியில் வேலை செய்வதற்கும் ஒரே வீட்டில் இருப்பதற்கும் என்றவர் அவரை அதுவரை கவனமாக உங்களுடைய காதலால் பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்றார்.
பிறகு யோகமலரை தனக்கு அந்தப் பக்கமாக வந்து இருக்கச் சொல்லிவிட்டு ஏதோ கேட்க,அது அரைகுறையாகவே எனக்குக் கேட்டது. அதில் அவருக்கு நல்லாய்ப் பசிக்கட்டும் அப்பதான் அவர் நல்லாய்ச் சாப்பிடுவார் என்று யோகமலர் சொல்ல,ஸ்ரெபானி என்னையும் அவளையும் குறும்பாக பார்க்க,அவருக்கு நல்லாய்ப் பசிக்கட்டும் அப்பதான் வயிறு நிறையச் சாப்பிடுவார் என்று யோகமலர் சொன்னதைக் கேட்டு பேர்சனல் மனேஜர் வாய்விட்டுப் பலமாகச் சிரித்தவரிடம் யோகமலர் உங்களுடைய பிரைவேட் போன் நம்பரைத் தயவு செய்து தரமுடியுமா என்றார். உடனே அவர் விசிட்டிங் கார்ட்டை எடுத்துக் கொடுத்தார்.
எங்கள் இரண்டு பேருக்கும் அவர்கள் இரண்டு பேரும்,குட்லக் என்று சிரித்துக் கொண்டே விடை தந்தார்கள்;.
இருவரிடமும் விடைபெற்றுக் கொண்டு யோகமலரையும் கூட்டிக் கொண்டு வெளியே வந்தன்.யோகமலரின் முகம் சிவந்து இருந்தது. பேர்சனல் மனேஜர் பலமாகச் சிரித்தாரே அப்படி என்னதான் சொன்னனீங்கள் என்றேன். பிறகு சொல்கிறேன் முதலில் வேலையைச் செய்யுங்கள் என்றாள்.சாப்பாட்டு நேரம் வந்தது.
இனியாவது சொல்லுங்கள் என்றேன் காதுக்குள் வெட்கத்துடன் சொன்னாள்.நல்லாகப் பசிக்கவிட்டுத்தான்; சாப்பாடு தருவியளோ என்று
நான் அவளைக் குறும்பாகப் பார்த்தேன் வெட்கப்பட்டாள்.
அவளின் தோளில் தலைவைத்தேன். என்னை அணைத்துக் கொண்டே பல்லைக் கடித்துக் கொண்டு இரண்டு கிழமைக்கு பொறுமையாக இருங்கள்.கரனுடன் கவனமாகப் பழகுங்கள் என்றார்.
இரண்டு வருசத்திற்கு பல்லைக் கடிச்சுக் கொண்டு இருந்திட்டு வாருங்கள் என்று மனைவி கடிதத்தில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருப்பார்.எனது மனைவிக்கும் யோகமலருக்கும் பல ஒற்றுமைகள் இருப்பதைக் கவனித்தேன்.
அப்படியும் இப்படியும் பல விசயங்களைக் கதைத்தோம். அவள் சொன்னாள் நான் உங்கள் தோளில் தலை வைக்கப் போறன் என்றாள்.அவளின் தோளிலிருந்து தலையை நிமிர்த்தினேன்.
தனது கையை எனது கை;குள் செருகிக் கொண்டே தோளில் சாய்ந்தவள். இப்பவே எனது உயிர் போச்சுதென்றால் எவ்வளவு நல்லது என்றால்.ஆரம்பிசசிட்டீங்களா என்றேன்.
நாளைக்குச் சவுத் பிறிட்ஜ் றோட்டில் உள்ள மாரியம்மன் கோவிலுக்குப் போக வேணும், வந்து இந்த இடத்தில் நில்லுங்கள் அந்த இடத்திலிருந்து இரண்டு பேரும் கோவிலுக்கு பஸ்ஸில் போவம் என்றாள். நான் நிற்க வேண்டிய முகவரியைத் தந்ததுடன் பஸ் இலக்கத்தையும் தந்தாள்.
அன்று எல்லாப் பாரமும் நீங்கிய மாதிரி மனம் சுகமாக இருந்தது.வேலை முடிய அவளை அணைத்துக் கொண்டு அவள் போகவிருக்கும் பஸ்ஸடியில் விட, குட்பை குட்நைற் என்றவள் நாளைக்குச் சந்திப்பம் என்றாள். பஸ்சுக்குள் தனது தோழிகளுடன் ஏறி உட்கார்ந்து கையைக் காட்டினாள்.
நான் ஓடிப்போய் எனது பஸ்ஸில் ஏறினேன்.அன்றிரவு நல்ல நித்திரை வந்தது.எல்லாப் பிரச்சினைக்கும் தீர்வு கண்டதால் மனம் நிம்மதியாகவிருந்தது.
அடுத்த நாள் சனிக்கிழமை விடியப்புறம் ஐந்து மணிக்கே எழுந்து அவசரம் அவசரமாகக் குளித்து பஸ் எடுத்து யோகமலர் காத்திருக்கச் சொன்ன இடத்திற்கு சென்ற நான் அங்கிருந்த சீன கோப்பிக் கடையில் பால் கோப்பி வாங்கினன்.
கடைக்காரன் பால்கோப்பியை பொலித்தீன் பையில் விட்டு ஸ்ரோ வைத்துத் தந்தான்.(நான் வேலை செய்த காலத்தில் கொண்டு போய்க் குடிக்கும் குளிர்பானத்தையோ கோப்பி தேநீரையோ சிறிய பையில் ஊற்றி ஸ்ரோ வைத்துத் தருவது வழக்கம்.குடித்துவிட்டு பையைக் குப்பைத் தொட்டிக்குள் போட வேண்டும்.)
கோப்பியைக் குடித்துக் கொண்டே கல்லிருக்கையில் இருந்து கொண்டே போய் வரும் பஸ்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
யோகமலரும் அவரின் இரண்டு தோழிகளும் ஜோகூர்பாரு பஸ்ஸிலிருந்து இறங்கி என்னிடம் வந்தார்கள். யோகமலர் அருகில் வந்து புருசனாரே ரீ குடிச்சிட்டியளா என்றார்.இப்பத்தான் குடிச்சேன் என்றேன்.என்னை விட்டிட்:டு குடிச்சிட்டியளா என்றவர் செல்லமாக நான் சும்மாதான் கேட்டன் என்றார்.
யோகமலர் செஞ்சந்தன வண்ணத்தில் சீலை உடுத்தி தலைக்கு மல்லிகைப் பூ வைத்திருந்தாள். தோழிகள் போய் நாலு ரீ வாங்கிக் கொண்டு வந்தார்கள்.தோழிகள் சுடிதார் போட்டிருந்தார்கள்.
அவர்களுடன் சேர்ந்து நானும் ரீ குடிச்சன்.எனக்கருகில் இருந்த யோகமலர் என்னை விட்டிட்டு ஏன் ரீ குடிச்சனீங்கள்.நான் தாகமாக இருந்தது குடிச்சன் என்றன்.
இது உங்களுக்கு முதல் வார்னிங் என்னை விட்டிட்டு எதுவுமே செய்யக்கூடாது என்றவள் நேற்றும் பேர்சனல் மனேஜர் சொன்னது என்னவென்று தெரியுந்தானே என்றவள் முகம் சிவந்தாள்.
ரீயைக் குடிச்சு முடிச்ச நாங்கள் குப்பைத் தொட்டிக்குள் பைகளைப் போட்டுவிட்டு மாரியம்மன் கோவிலுக்குப் போகும் பஸ்ஸில் ஏறினோம்.எனது கைக்குள் தனது கையைச் செருகியபடியே வந்தவளைப் பார்த்தேன் மிக அழகாக இருந்தாள்.நல்ல அழகாக இருக்கிறியள் என்றன். உண்மையாகவா என்றவள் என் புருசனை என்று பாhர்த்தேனோ அன்றிலிருந்து நான் புது
அழகியாகிவிட்டன் என்று சொல்லிக் கொண்டே ஏறினாள்.
தோழிகள் இருவரும் முன்னிருக்கையில் ஊட்கார்ந்தனர். நானும் அவளும் அவர்களுக்குப் பின்னால் இருந்தோம்.
பத்து நிமிசத்துக்குள் கோவிலடிக்குப் போய்விட்டோம்.அது பெரிய கோவில் நானும் யோகமலரும் கோவிலின் உள்வீதியைச் சுற்றி வந்தோம்.
தோழிகள் வரவில்லை. அவர்கள் கோவில் மண்டபத்தில் இருந்துவிட்டார்கள்.பூசை தொடங்க நேரமிருந்தது. கோவிலைச் சுற்றி வந்து முடிந்தவுடன் . கோவில் மண்டபத்தில் ஒரு பக்கமாக நின்று கொண்டு,அம்மனைக் கும்பிட்டுவிட்டு என்னை அன்போடும் கனிவோடும் பார்த்து எனது கையில் திறந்த படி ஒரு குங்குமச் சிமிழைத் தந்தவள் „உங்களுக்கும் எனக்கும் குலதெய்வமாக இருக்கின்ற இந்த மாரியம்மனைச் சாட்சியாக வைச்சு இந்தக் குங்குமத்தை உங்கட பெண்டாட்டியான எனக்கு உச்சி நெற்றியிலும், நடுநெற்றியிலும் வைச்சுவிடுங்கள் என்றாள்.
மகிழ்ச்சியோடு வைச்சுவிட்டன்.நெகிழ்ந்து போய் நின்றாள். வாய் விம்மியது.கண்கள் கலங்கியது.
அவள் அழப் போறாள் என்றதை அறிந்த இரண்டு தோழிகளும் ஓடிவந்து, „இனி ஏன் அழுகிறாய் நீ ஆசைப்பட்ட கணவன் கிடைச்சிட்டார்,நீ ஆசைப்பட்ட
மாதிரி அவர் கையாலை அவர் உனக்கு குங்குமம் வைச்சிட்டார்’ என்றவுடன் அவள் இந்தக் குங்குமமும் அக்காவின் குங்குமமும் அவரைக் காத்து நிற்கும் என்றவள் என்னையும் இருக்கச் சொல்லிவிட்டு இருந்தாள்.என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தவள்.நீங்கள் எனக்குக் கிடைத்த வரம் என்றாள்.
அப்பொழுது…
(உண்மைகள் தொடரும்)
![]()