காதலர் விமானம்!…. 37…. (நாவல்) …. ஏலையா க.முருகதாசன்.

குரு எப்பொழுதுமே நிதானமாகச் சிந்திப்பவன். அவன் வேலையும் நில அளவையாளர் வேலைதான். அந்த வேலை எவ்வாறு நுண்ணிய கணிப்புகளுக்குரியதோ அது போன்றதுதான் அவனுடைய பழக்க வழக்கங்களும் இருந்தன.
தங்களுடைய மாமனார் இவ்வளவு நிதானமானவரா அறிவுபூர்வமானவரா என்பதை அவர் மொழி சார்ந்து சிங்களப் பணியாளர்களுக்கு விபரித்த விதத்தை தந்தை சொன்ன போது அதை இரசித்து வியந்தான்.
வியந்தவன் தகப்பனைப் பார்த்து „அப்பா இதுவரையில் மாமாவைப் பற்றி நீங்கள் சொல்லிய அத்தனை விசயங்களையும்; பார்க்கும் போது, மாமா மாமியை விரும்பியதிலிருந்து,மாமியை மகாஜனாவின் அருகில் உள்ள அவரின் சித்தியின் வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு போய்க் கதைத்தது,கல்யாணத்திற்காக ஒரு வருசம் வரை காத்திருந்தது,அதற்குப் பிறகு இதுதான் வழி,இதைவிட வேறு வழியில்லை என்றதற்குப் பிறகுதான் மாமியை அவர் கூட்டிக் கொண்டு போனது வரை மாமாவின் செயலில் ஒரு காரண காரியம் இருந்திருக்கு.
மாமா செய்தது தவறே இல்லை.மாமி ஓடிப் போனவள் என்பது தவறான பாதை அல்ல.
ஆனால் ஓடிப் போனவள் என்ற சொல்லுக்குள் நீங்கள் நினைத்த அர்த்தமும், அதற்கு நீங்கள் கொடுக்க முயற்சிக்கும் வரைவிலக்கணம் என்ற டிபினிசனும் தவறாக இருக்கின்றது.
ஒரு செயலை விபரிக்கும் போது அச்செயல் மீது நாங்கள் என்ன பார்வையைக் கொண்டிருக்கிறமோ அதையே நாம் வெளிப்படுத்துகிறோம்’ என்று அவன் சொன்னதும் சந்திரசேகரம் திகைத்துவிட்டார்…
குரு சொன்ன விளக்கத்தைக் கேட்டு தாயும் சாகித்தியனும் சாந்தினியும் சந்தோசப்பட்டது மட்டுமல்ல,அதைத் தொடர்ந்து சாகித்தியன் கேட்ட கேள்விதான் சந்திரசேகரத்தை உலுக்கிப் போட்டது.
அவன்,’மாமியை மாமாவை இப்படி அந்தரிக்க விட்ட நீங்கள், நீங்கள் நடந்து கொண்ட விதத்தைப் பற்றி எப்பவாவது சிந்தித்தீர்களா.இரண்டு வருசம் மாமா மாமி கொழும்பிலிருந்த போது ஒரு முறையாவது போய்ப் பார்த்தீர்களா.மாமிதான் தன்னை வளர்த்த அண்ணைக்குத் துரோகம் செய்துவிட்டேனே என்ற குற்ற உணர்ச்சியோடு உங்களிடம் வரவோ உங்களைப் பார்க்கவோ தயங்கியிருக்கலாம்.

ஆனால் ஒரு தாயாக தந்தையாக இருந்த நீங்கள் கோபதாபங்களை மறந்து கடந்து பாசந்தான் பெரிதிலும் பெரிது என்று காட்டியிருக்க வேண்டும்.நீங்கள்தான் அடிக்கடி சொல்வீர்களே பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு என்று.நீங்கள்தானே மாமிக்கு அப்பாவும் அம்மாவும் அப்ப உங்கள் மனம் பித்தாக இல்லையா.
அம்மா உங்களுடைய கடைக்கு வந்த முதல் நாளே அம்மாவின் அழகு மீது, அப்பொழுது உங்களுக்கு இருந்த வயது காரணமாகவும் இளமை காரணமாகவும் உங்களை அறியாமலே அம்மா மீது விருப்பம் ஏற்பட்டதும் தவறு இல்லை.காதலிச்சதும் தவறு இல்லை.
ஆனால் அம்மாவைச் சந்திச்ச முதல் நாளே பல்கனியில் பின்னுக்கும் இருக்கைகள் இருக்கத்தக்கதாக அதில் இருக்காமல் அம்மாவுக்கு அருகில் இருந்து படம் பார்த்திருக்கிறீர்கள்.
ஒரு சில மணித்தியால அறிமுகத்திலேயே அம்மா உங்கள் அருகிருக்க வேண்டும் என்ற விருப்பம்,அம்மாதான் உங்களுடைய எதிர்கால மனைவி என்று அந்தத் தருணத்தில் நீங்கள் முடிவெடுத்திருக்கலாம்.
அல்லது சூழ்நிலையும் காரணமாக இருக்கலாம்.அம்மாவை அருகிலிருத்திய போது உங்கள் மனம் எதையெல்லாம் யோசித்திருக்கும் என்பதை நீங்கள்தான் அறிவீர்கள்.
யாழ்ப்பாணத்தில் உள்ள எல்லாத் தியேட்டர்களுக்கும்; அம்மாவைப் படம் பார்க்க கூட்டிக் கொண்டு போயிருக்கிறீர்கள்,அப்பொழுதும் அம்மா உங்கள் அருகிருப்பதை விரும்பியிருக்கிறீர்கள்.
அம்மாவின் தாய்தகப்பனுக்குத் தெரியாமல்,அம்மா உங்களுடன் படத்துக்கு வந்ததும், கடைகளில் சாப்பிட்டதும், திருவிழாக்களில் சந்திச்சதும் எல்லாவற்றையும் அம்மா அனுமதிச்சதற்குக் காரணம் அம்மா உங்கள் மீது வைச்ச அசைக்க முடியாத காதல் மட்டும் அல்ல அதன் தொடர்ச்சியாக நீங்கள் தன்னைக் கைவிட மாட்டீர்கள் என்ற நம்பிக்கைதான் காரணம்.
அம்மா என்ற இந்தப் பெண்ணைக் கைவிட்டால் இந்தப் பெண்ணின் நிலை என்னவாகும்.ஆனால் அம்மா என்ற இந்தப் பெண் முழுமையாக உங்களை நம்பினார்.அப்படித்தான் உங்கள் தங்கச்சி என்ற பெண் மாமாவை முழுமையாக நம்பினார்.
உங்களுடன் ஒப்பிடும் போது மாமா மாமி சந்திச்சதே மிக மிகக் குறைவு.ஆனால் அவர்கள் இரண்டு பேரிடமும் ஆழமாக வேரூன்றிய காதலுக்கும் மேலான ஏதோ ஒன்றிருந்திருக்கு.
அப்பா,துரியோதனனின் சபையில் பாஞ்சாலியின் சீலையை துச்சாதனன் உரியும் போது ரோசமில்லாத பஞ்சபாண்டவர் மனைவியின் மானத்தைக் காக்காது யாரோ ஒருத்தர் வந்து காப்பாற்றுவார் என்று இருந்தனர்.அந்தக் கேவலமான மனிதர்களை இன்றுவரையும் உலகம் போற்றிக் கொண்டாடுகிறது.ஆனால் மாமியின் யூனிபோமின் பின்புறத்தில் மாமியின் பீரியட் இரத்தத்தைக் கண்ட மாமா துடித்துப் பதறிப்போய் வேகமாகத் தனது சேர்ட்டைக் கழற்றி தன்னால் காதலிக்கப்படுபவள் பல பேர் முன்னிலையில் கேவலப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக சேர்ட்டை மாமியிடம் கொடுத்து எந்தக் கேள்வியும் கேட்காதை கெதியாய் பின்பக்கத்தை மூடி கட்டிக் கொண்டு கெதியிலை போய் காரிலை ஏறச் சொல்லி பெனியனுடன் நின்றாரே அதுதான் ஆண்மை.
அவரின் அந்த பண்பிலிருந்து வந்த மச்சான்தான் தங்கச்சியின் நெற்றியில் கண்ணாடி வெட்டியபோது வானை விட்டு இறங்கி ஓடிவந்து தனது சேர்ட்டை கிழித்துக் கட்டினான்,அவரைக் கட்ட வைச்சது மாமாவின் வழிவந்த பண்புதான்.
அப்பொழுதுதான் சந்திரசேகரத்துக்குத் தெரிந்தது தன்னுடைய தங்கச்சியின் மகன்தான் தனது மகளின் நெற்றிக்கு கட்டுப் போட்டது என்று.சாந்தினி தலையைக் குனிந்து கொண்டிருந்தாள்.அவள் கண்களிலிருந்து கண்ணீர் கன்னத்தில் வழிந்தது.
இறுகிய உறவுகளின் முடிச்சுக்கள் மீது உண்மையான வார்த்தைகளும்,நேர்மையான கண்ணீரும் விழும் போதுதான் நெகிழந்து முடிச்சுக்கள் அவிழத் தொடங்கும்.
பிள்ளைகளின் நேர்மையான வார்த்தைகளால் சந்திரசேகரம் ஆடிப் போனார்.நியாயத் தராசு மகேஸ்வரியின் பக்கமே தாழ்ந்திருந்தது.
கொஞ்ச நேரம் யாருமே பேசவில்லை.அம்மா அப்பா இதுவரையில் நீங்கள் இரண்டு பேரும் சொன்னதிலிருந்து நாங்கள் ஒரு முடிவெடுத்திருக்கிறம்.
அது நாளைக்கு நாங்கள் மூன்று பேரும் மாமா மாமியிடம் போய் மன்னிப்புக் கேட்டிட்டு எல்லாரையும் இங்கை கூட்:டிக் கொண்டு வரப் போகிறம் என்று சென்னவுடன் தாய் சொன்னார் மாமி இஞ்சை வந்தவர், வந்து அழுதழுது திரும்பிப் போனவள்’ என்று சொன்னதும், அது எப்ப நடந்தது என்று குரு கேட்க „நீங்கள் சின்னப்பிள்ளையாக இருந்த போது நடந்தது என்று சொல்லத் தொடங்கினாள் தாய்.
„மாமா அரசாங்க வேலையை விட்டிட்டு மாமியையும் கூட்டிக் கொண்டு கமம் செய்வமென்று வந்து பன்னாலையில் உள்ள அவரின் தாய் தகப்பன் வீட்டிலிருந்தார்’.
„அந்த வீடு மாமாவின் தமக்கைக்கு கொடுத்த வீடு.அதில்தான் தமக்கையின் குடும்பமும் இருந்தது.மூன்று குடும்பங்களும் ஒரே வீட்டிலிருப்பது கஸ்டமானது மட்டுமல்ல, அது ஒவ்வொரு குடும்பத்தின் சுதந்திரத்தையும் பாதிக்கும் என்பதை உணர்ந்து மகாஜனாவிற்கு கிழக்குப் பக்கத்திலிருந்த மாமாவிற்கு சொந்தமான இரண்டு பரப்புக் காணிக்குள் வீடு கட்டியிருப்பம் என்று மாமாவும் மாமியும் முடிவெடுத்து,காசுக்கு யாரிடம் கடன் கேட்பது என்று யோசித்த போது மாமி சொல்லியிருக்கிறார்,ஐயனார் கோவிலடியில் இருக்கிற பத்துப் பரப்பு நெற்காணியிலிருந்து தனக்கு பங்கான ஐந்து பரப்பை அண்ணையிடமிருந்து எழுதி வாங்கி அதை விற்று காசு எடுப்பம் என்று.
அதற்கு மாமா சம்மதிக்காத போதும் , அண்ணை கோபத்தை மறந்து எழுதித் தருவார். ஏன்ன இருந்தாலும் அண்ணை அண்ணைதானே என்று சொல்ல, அரைகுறை மனதுடன் மாமா சம்மதிக்க இரண்டு பேருமாய்,ஒரு ஞாயிற்றுக்கிழமை இஞ்சை வந்தினம்.
மாமாவையும் மாமியையும் கண்ட நான் சந்தோசத்திலை உள்ளை வாங்க என்று கூப்பிட மாமா தான் விறாந்தையிலிருக்கிறன் என்று அங்கை இருந்த கதிரையில் உட்கார்ந்திட்டார்.
மாமி உள்ளே வந்து இப்ப குரு இருக்கிற இடத்திலை இருந்து கொண்டு அண்ணை எங்கை என்று கேட்க, அறைக்குள்ளிருந்து மாமியின் குரலைக் கேட்ட கொப்பா கதவை அடிச்சுச் சாத்தும் சத்தம் கேட்டது.நான் அதைக் கேட்டும் கேளாத மாதிரி தேத்தண்ணி வைக்க கேத்தலில் தண்ணியை வைச்சிட்டுப் போய், கொப்பாவிடம் மச்சாள்
வந்திருக்கிறா என்று கதவைத் திறந்து சொல்ல, இதற்கிடையில் மாமி கதிரையில் இருந்தபடியே கண்ணீர வடித்துக் கொண்டிருந்தவளிடம் போய் அழாதை என்று அவளின் தலையை தடவிவிட்டன்.
அண்ணி என்று அவள் எண்ணைக் கட்டிப் பிடித்தாள்,கொப்பா வந்து அவளுக்கு நேரே உள்ள கதிரையில் உட்கார்ந்ததும் ஓடிப் போய்,கொப்பாவின் காலைப் பிடித்துக் கொண்டு,கதிரையைப் பிடித்தபடி அம்மா என்று சொல்லி எல்லாத்துக்குமாக என்னை மன்னிச்சுவிடுங்கள் அண்ணை என்றதும் கோபமாக எழுந்த அப்பா இப்ப சந்திரசேகரம் செத்துப் போனானோ இல்லாட்டி உயிரோடு இருக்கிறானோ என்று பார்க்கவே வந்தனி என்றவர்.
„நீ எப்ப ஓடுகாலியாக வீட்டை விட்டு ஓடினாயோ அப்பவே நீ எனக்கு கொள்ளி வைச்சிட்டுப் போட்டாய், எனக்கு ஒரு தங்கச்சி இருந்தவள் அவளும் செத்துப் போயிட்டாள் „ என்று கொப்பா சொல்ல, என்னண்ணை சொல்றியள் ஏனண்ணை இப்படிச் சொல்றியள், என்னை மன்னிச்சிடுங்கள் என்று சொல்ல கொப்பா ஊர்உலகத்துக்கு முன்னாலை என்னைத் தலைகுனிய வைச்சிட்டு இப்ப வெக்கமில்லாமல் இஞ்சை வந்து நிற்கிறாய் என்று சொல்ல, மாமி அப்பவும் கொப்பாவை அம்மா என்று சொல்லிக் கூப்பிட்டு ஊர்உலகத்திற்காக கூடப் பிறந்த தங்கச்சியை வெறுக்காதீர்கள் அண்ணை என்றவள், அண்ணை ஐயனார் கோவிலடியிலை எனக்கு இருக்கிற ஐந்து பரப்புக் காணியைத் தயவு செய்து எழுதித் தாருங்கள் அதை விற்று மகாஜனாவடியிலை இருக்கிற காணியிலை சின்ன வீடாய் கட்டி இருக்க கெஞ்சிக் கேட்கிறன் அதை எழுதித் தாங்கோ நான் ஆரிட்டைப் போவன் என்னதான் இருந்தாலும் நீங்கள் என்ரை அம்மா மாதிரி உங்களிட்டைத்தானே வருவன் எல்லாத்தையும் மன்னிச்சிட்டு தயவு செய்து எழுதித் தாருங்கோ என்று கெஞ்சினாள்.நீங்கள் என்னை எப்படி வளர்த்தீர்கள் என்பதை நான் சாகும் வரையும் மறவன் என்று கெஞ்சிக் கொண்டிருந்தாள்.
ஆனால் கொப்பா அவள் மீது இரக்கப்படுவதாயில்லை.நானே பொறுக்க முடியாமல் மச்சாளின்ரை பங்கை எழுதிக் குடுங்கோவன்.அவள் எங்கையாவது போய் சந்தோசமாய் இருக்கட்டும்„ என்று நான் சொல்ல ,நீ வாயை மூடு’ என்று என்னை அதட்டியவர்,’ஓகோ இப்ப காணி தேவைப்படுதோ,அவரோ காணியைக் கேள் என்று சொன்னவர்,’ அது „தேவையென்று ஓடேக்கை யோசிக்கேலை „ என்றவுடன்,அவர் தங்கச்சியாரைப் பார்த்து „அது „தேவைப்படேக்கில என்று நாக்கூசாமல் சொன்னது எனக்கு மண்டைக்குள் என்னவோ செய்தது.
என்ன கதைக்கிறன் என்று தெரிஞ்சுதான் கதைக்கிறியளா,என்னதான் கோபமென்றாலும் கூடப்பிறந்த தங்கச்சியாரைப் பார்த்து கேட்கிற கேள்வியா இது.
இப்படிக் கேட்க எப்படி மனசு வந்தது.’அது’ என்று என்ன அர்த்தத்தில் சொன்னனீங்கள். உங்களுக்கு நாக்கூசவே இல்லையா . நீங்கள் என்ன மனுசன் என்று நான் கொதிக்க இவ்வளவு நேரமும் கெஞ்சிக் கொண்டிருந்த மாமி புலிமாதிரிப் பாஞ்சாள்.
அழுகை அவளிடமிருந்து நின்றுவிட்டது.கோபத்தின் உச்சத்திற்கே போனவள் கொப்பாவின் சேர்ட்டைப் பிடித்தவள் பல்லை நெருமிக் கொண்டு, என்ன சொன்னனீங்கள் இப்ப.’அது „தேவைப்பட்டுத்தான் ஓடினன் என்று என்னைப் பார்த்து வாய்கூசாமல்; சொல்லிட்டியள்.
நீங்கள் எனக்கு ஒரு அண்ணனா.ஒரு வருசமாக அமைதியாகக் காத்திருந்தனாங்கள்.நீங்களும் காதலிச்சுத்தானே கல்யாணம் செய்தனீங்கள்.காதல் என்றால் அது என்ன என்று தெரிஞ்சுதானே நீங்களும் அண்ணியைக் காதலிச்சனீங்கள்.
இந்த வார்த்தை உங்கடை வாயிலிருந்து வந்ததற்குப் பிறகு எனக்கு இனி நீங்கள் அண்ணனே இல்லை.நீங்கள் ஒரு கேவலமான மனுசன். என்ரை மனுசன் உங்களிட்டை காணி கேட்கச் சொல்லவில்லை.அவரைக் கட்டாயப்படுத்தித்தான் கூட்டிக் கொண்டு வந்தனான்.
விறாந்தையிலிருக்கிற என்ரை மனுசன் நீங்கள் கதைச்ச கதையைக் கேட்டும் உள்ளே வரவில்லை.அண்ணனும் தங்கச்சியும் கதைக்கினம் என்று பேசாமலிருக்கிறார்.
மகாஜனாவிலை சேர்ட்டைக் கழற்றித் தந்த போதே அவர் தான் யார் என்பதைக் காட்டிவிட்டார்.இனி இந்த வீட்டுப்படி மிதிக்கமாட்டன்.நான்; செத்தால்கூட யாரோ ஒருத்தி செத்திட்டாள் என்று என்ரை பிணத்தைக்கூட நீங்கள் பார்க்க வரக்கூடாது.
இந்த வீட்டு வாசல் தெருவில் நான் மயங்கிக் கிடந்தாலும், உங்கடை கையாலை ஒரு சொட்டுத் தண்ணியும் குடிக்க மாட்டன்; என்று சொல்லிக் கொண்டே ,வாங்க என்று மாமவையும் கூட்டிக் கொண்டு கோபத்துடன் போய்விட்டாள்.
கோபத்தில் வாயிலிருந்து நிதானமற்று வரும் தவறான வார்த்தைகள் சூறாவளியாக உறவுகளை சின்னாபின்னமாக்கி விடுகிறது.
தாய் அன்று நடந்த சூழ்நிலைக்குள் தன்னை உட்படுத்தியதால் அதிலிருந்து மீண்டு வர நேரமாகியது.
சந்திரசேகரம் தலைகுனிந்து நின்றார்
பிள்ளைகள் „என்னப்பா நீங்கள்’ என்று மட்டுமே கேட்டார்கள்.என்னப்பா நீங்கள் என்ற வார்த்தைகள் ஆயிரமாயிரம் ஈட்டிகளை எறிவது போன்றிருந்தது.
சந்திரசேகரம் வாய் திறந்தார்.நாளைக்குத் தங்கச்சியின் பிறந்த நாள்.எல்லாத்துக்குமாக நான் அவளிடமும் மச்சானிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டும். கேட்டுவிட்டு அவளைத் தோதரை அம்மன் கோவிலுக்கு கூட்டிக் கொண்டு போகப் போறம்.
குருவையும் சாகியையும் பார்த்து நாளைக்கு வேட்டி கட்டிக் கொண்டு வாங்கோ என்றவர். மனைவியிடம் அவளுக்குப் பிடிச்ச கலர் எதுவென்று உங்களுக்குத் தெரியும் புதுச்சாறியாக கொண்டு வாருங்கள் என்றார்.தங்கச்சிக்கு பிறந்தநாள் பரிசு குடுப்பதற்கு என்று…
காலைச் சாப்பாடு நாங்களே கொண்டு போறம்.அப்பொழுது தாய் சொன்னாள் இடியப்பமும் கொழுக்கட்டையும் கொண்டு போவம் என்று.
எல்லாரையும் போய் படுக்கச் சொன்னார்.தங்கச்சி குடும்பம் எழும்ப முந்தி விடிய ஐந்து மணிக்கே அங்கை நிற்க வேண்டும் என்றவர் தவறுகளை உணர்ந்த மனிதனாக நித்திரை கொள்ளப் போனார்.
சாந்தினி தமையன்மாரின் அறைக்குள் கொஞ்ச நேரம் இருந்து கதைச்சுப் போட்டு நித்திரை கொள்ளப் போய்விட்டாள்.ஆனால் செல்லம்மா நித்திரை கொள்ளவில்லை.செல்லம்மாவுக்கு நித்திரையே வரவில்லை.இருபத்தைந்து ஆண்டுகளாக முடிச்சிறுக்கி இருந்த அண்ணன் தங்கை உறவும்,மச்சான் மச்சாள் உறவும்,மருமக்கள் உறவும் அண்ணி உறவும் மீண்டும் பிரிந்த தண்ணீர் ஒன்று சேரப் போவது போல் சேரப் போகிறது என்ற சந்தோசத்தில் கொழுக்கட்டைக்குப் பயறை அவிய விட்டிட்டு தேங்காயை துருவிக் கொண்டிருந்தாள்.
அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை.விடியும் கருக்கல் பொழுது. காலை ஐந்து மணி.சந்திரசேகரத்தின் குடும்பம் சச்சிதானத்தின் வீட்டு விறாந்தையில் நிற்கிறார்கள்.தங்கச்சியாருக்கு கொடுக்கவென சாறியை தட்டத்தில் வைத்தபடியே நிற்கிறார் சந்திரசேகரம்
தங்கச்சியாருக்கு கண்ணைக் காட்டினான் குரு,சந்தோசத்தின் உச்சியிலிருந்த சாந்தினி துள்ளிக் கொண்டு மாமன் மாமி படுத்திருந்த கதவைத் தட்டி மாமிக்கு எங்கள் அன்பான பிறந்த நாள்,மாமா மாமி எழும்பி வெளியே வாங்கோ என்றவள்,சிவகாமியின் அறைக்கதவைத் தட்டி சின்னண்ணி எழும்பி வெளியே வாங்கோ என்றவள், சந்திரன் படுத்திருந்த அறைக் கதவைத் தட்டி அத்தான் உங்கடை ஆள் நானும் வந்திருக்கிறன் எழும்பி வெளியே வாங்கோ என்றவள் வேகமாய்ப் போய் பெற்றோருடனும் அண்ணன்மாருடன் நின்றாள்.
கதவுகள் திறக்கின்றன.
(தொடரும்)
![]()