கவிதைகள்

அவளொடு நீ எறிந்தாய்!…. ( கவிதை ) …… சங்கர சுப்பிரமணியன்.

அவள் இடையில் இழையும் உடையே
அது சிற்றிடை என்று நீ மகிழ்ந்தாயோ
அன்றி பேரிடை என்று வியந்தாயோ
சுற்றிமட்டும் உணர்வின்றி படர்ந்தாயோ

பற்றி இழுத்தது யாரென நீ ஒன்றும்
பதறி எப்போதும் நான் பார்த்ததில்லை
காதலன் களவாக பற்றி இழுத்தாலும்
கணவன் கண்ணியமாய் இழுத்தாலும்

கயவர்கள் காமத்துடன் இழுத்தாலும்
கண்ணன் காதலுக்கே இழுத்தாலும்
கருவறை உருவெடுத்து வெளியான
கைக்குழந்தை பற்றியே இழுத்தாலும்

உனக்கு உண்மையில் உணர்வில்லை
பற்றியது யாரென்றும் பார்க்கவில்லை
அவர்களின் காரணங்களும் புரியவில்லை
ஆனாலும் ஒன்றை மட்டும் நீ புரிந்தாய்

வெந்தணலில் அவளுடம்பு எரியும்போது
விலகி எங்குமே நீயும் சென்றிடாமலே
இழுத்த போதெலாம் விலகிச் சென்ற நீ
இணைந்திருந்து அவளொடு எரிந்தாய்!

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *