மாயை!….. ( சிறுகதை ) ….. சங்கர சுப்பிரமணியன்.

கதிரும் மலரும் நல்ல கடவுள் பக்தர்கள். கடவுள் இல்லை என்று கண்மூடித் தனமாக சொல்லித்திரியும் இராட்சதர்களோ அரக்கர்களோ அல்ல. அவர்களுக்கு திருமணம் ஆகி ஐந்து ஆண்டுகள் ஆகியும் புத்திர கடாட்சபம் இல்லை.
லோகத்திலே பகவான் இப்படி சில நேரம் பக்தாளை பரீட்சிப்பதுண்டு. பாவம் செய்தவாள் எல்லாம் பதவிசாய் இருக்கா. அவன் லீலைக்கு ஆயிரமாயிரம் அர்த்தங்களுண்டு. நம்பளபோன்ற ஞான சூனியங்களுக்கு அதவல்லாம் தெரிந்திருக்க நியாயமில்லை.
புண்ணிய சேத்திரங்கள் எல்லாம் சென்று பகவானை வேண்டி தவமிருந்ததால் பகவான் ஆண்டவன் கண்திறப்பார் என்று சிலர் அறிவுரை வழங்கினர்.
லோகத்துல நல்ல மனுசாளும் நாலுபேர் புத்தி சொல்ல இருப்பதால்தான் சூறாவளியுடன் வந்த மழையும் வீட்டுக்குள் தண்ணீர் வருவதோடு நின்று புயல் கரையை கடந்து செல்கிறது. அப்படியே பெரியவா பேச்சைக்கேட்டு புண்ணிய சேத்திரமெல்லாம் சென்று வேண்டிக் கொண்டதால் ஆண்டவன் கிருபையால் அழகான ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு அருள் என்று பெயர் வைத்து வளர்த்தார்கள்.
குழந்தை பிறந்தாலும் அவர்களுக்கு பெரிதாக மகிழச்சி ஒன்றுமில்லை. மக்கள் குழந்தை இல்லாதவர்கள் என்று அவச்சொல் சொல்வார்களே அதிலிருந்து தப்பிக்க அவர்களுக்கு கிடைத்த நிம்மதி அவ்வளவே. மற்றபடி உலகமே ஒரு நாடகமேடை பகவான் ஆட்டி வைக்க நாம் நடிக்கும் நடிகர்களே என்பது அவர்கள் கருத்து.
சிலசமயங்களில் அவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்வார்கள். யார் யாரோ செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப உன் பெற்றோருக்கு நீயும் என் பெற்றோருக்கு நானும் பிறந்து உள்ளோம். இன்னும் எவரோ செய்த கர்மாவின் விதிப்பயன் நமக்கு அருள் மகனாகப் பிறந்துள்ளான் என்று பேசிக் கொள்வார்கள்.
மகன் அருளுக்கு இறைவனைப்பற்றி மத நூல்கள் எல்லாவற்றையும் கற்பித்து பத்து வயதுக்குள்ளே அவனை ஞானப் பழமாக்கி விட்டார்கள். அவனுக்கு திருமண வயது வந்ததும் தங்களைப் போலவே இறை நம்பிக்கையும் ஆச்சார அனுஷ்டாங்கங்களுடய குடும்பத்திலிருந்து பெண் கிடைக்க அந்த பரமேஸ்வரன் கிருபையால் விவாகம் சுபமாக
நடந்தது.
முதலிரவு அறைக்கு பால்செம்புடன் வந்த கயல் கணவன் அருளின் காலில் விழுந்து வணங்கினாள்.
“பிரிய சகி, யாரோ செய்த வினைப்பயனின் விளைவாக உன் பெற்றோருக்கு நீயும் என் பெற்றோருக்கு நானும் பிறந்து இந்த விவாக பந்தத்தில் ஐக்கியமகியுள்ளோம்” என்றான் அருள்.
“ஆமாம், பிராணநாதா பகவான் சித்தம் எதுவோ அதன்படி அதற்குட்பட்டு வாழ்ந்துதானே ஆகவேண்டும்”
இப்படியே லௌஹீக விஷயங்களை பேசியபடியே இருவரும கண் அயர்ந்தனர்.
அருளின் தாய் போல் இல்லாது பகவான் கிருபையால் கயல் சிலமாதங்களிலேயே கர்ப்பவதியானாள். ஆனால் அருளுக்கோ கயலுக்கோ அதனால் சந்தோஷம் என்று சொல்லிவிட முடியாது. அவர்களுக்கு நன்றாகவே புரியும் யரோ ஒருவனோ அல்ல ஒருத்தியோ அவர்களின் வினைப்பயனை நிறைவேற்றி ஒரு ஆத்மாவை பிறப்பிக்க சாஷ்ஷாத் அந்த பகவான் அவர்களை வாடகைத்தாயாகவும் தந்தையாகவும்
உபயோகப்படுத்துகிறார் என்பது அவர்களுக்கு தெரியாதா என்ன?
அதனால் அவர்கள் கயல் கருவுற்றதை பெரிதாகவே எடுத்துக்கொள்ளவில்லை.
ஆனால் வெளியுலகம் சும்மா இருக்குமா? அருளின் நண்பர்கள் கஜனும் குகனும் அருளைப்பற்றி வருத்தப்பட ஆரம்பித்தார்கள்.
“என்னடா கஜா இந்த அருள் இப்படி இருக்கிறான்? மனைவி குழந்தை உண்டாகியிருந்தும் எந்தவித மகிழ்ச்சியும் இல்லாது இருக்கிறானே” என்றான்.
“யார் கண்டது? இது ஒன்றும் நம் குழந்தை என்று சொந்தம் கொண்டாட முடியாது. ஏதோ ஒரு ஆத்மாவுக்கு அதன் வினைப்பயனை நிறைவேற்ற அவர்களை பகவான் வாடகைக்கு எடுத்துள்ளார் என்பதை உணர்ந்து அவன் அப்படி இருக்கலாம் என்றான்” குகன்.
உடனே என்னவோ போடா கேட்கவே தலை சுற்றுகிறது. ஏதோ பிறந்தோமா நாலுபேருக்கு நல்லதைச் செய்தோமா
எல்லோரும் பேதமின்றி மகிழ்ச்சியாக வாழ்ந்தோமா ஆயுள் முடிந்ததும் போனோமா என்றில்லை. இந்த அருள் நம்மையும் சேர்த்து குழப்புகிறானே என்று ஆதங்கப் பட்டுக்கொண்டே குகனிடம் புலம்பினான் கஜன்.
-சங்கர சுப்பிரமணியன்.
![]()