சிங்கப்பூரில் சிலகாலம்…. பகுதி 6 …… ( உண்மைக் கதை) ….. ஏலையா க.முருகதாசன்.

(அப்படியென்றால் இந்தச் சமூகத்தை நம்பி எப்படி எங்கடை பொம்பிளையளை கோவிலுக்கு அனுப்ப முடியும் இவர்களுடைய கண்களே மோசமான கண்கள்தானே எனக் கொதிச்சுக் கொண்டிருந்தான் சச்சி.) ![]()
ஏலையா க.முருகதாசன்!…..
வேலை முடிந்து வந்து படுத்ததே இரவு 12 மணிக்கு.வேலையின் அசதியால்கூட எனக்கு நித்திரை வரவில்லை.
நாளைக் காலமை வேலைக்குப் போகிறவர்கள் அடுத்த அறையில் அயர்ந்து நித்திரை கொள்கிறார்கள். வேலை முடிந்து என்னோடு வந்த அடுத்த அறையில் இருப்பவனாகிய சூரியகுமாரும் இதுவரை நித்திரை கொண்டிருப்பான்.
என்னுடைய அறையில் இருக்கும் பாஸ்கரன்,கனகேஸ்வரன்,ஞானேசேகரன் எல்லாரும் நல்ல நித்திரை.என்னால் நித்திரை கொள்ள முடியவில்லை.
மனைவி பிள்ளைகளின் முகங்கள் வந்து கொண்டேயிருந்தன.கூடவே யோகமலரின் முகமும் வந்து நின்றது.
எப்பொழுதும் தனது கையை எனது கைக்குள் விட்டுத் தோளோடு சாய்ந்துதான் யோகமலர் பேசுவாள்.
ஒரு நாள்; அவள் குலப்ஜமான், பம்பாய் இனிப்புக்களை பெட்டியில் கொண்டு வந்து எடுத்துச் சாப்பிடுங்கள் என்று நீட்டினாள்.
வேண்டாம் என்றேன்.ஏனென்று கேட்டாள்.இந்த இனிப்புக்களை நாங்கள் இதுவரையில் இன்னும் சாப்பிடவில்லை ஒரு வேளை யாழ்ப்பாணச் சிற்றியில் இருக்கலாம், தெரியவில்லை.அங்கு என்னுடைய மனைவி பிள்ளைகள் சாப்பிடாத அவர்களுக்குக் கிடைக்காத எந்த இனிப்பு வகைகளையும் சாப்பிட்டு அனுபவிக்க விரும்பவில்லை என்று சொன்னேன்.
கண்களில்; கண்ணீர் திரையிட என்னை நிமிர்ந்து பார்த்தவள் மற்றக் கையால் இறுக்கி அணைத்தாள்.
எனக்குக் கிடைக்க வேண்டியவரை கடவுள் சிறீலங்காவில் பிறக்க வைத்து, உங்களுக்குக் கல்யாணமும் செய்து வைத்துவிட்டாரே அக்கா என என்னுடைய மனைவியை நினைத்து ஏங்கி மகிழ்ந்தவள் கொஞ்சம் தள்ளி இருந்த தோழிகளை கைச் சைகையால் வரச் சொன்னாள்.
வந்தவர்களிடம் இனிப்புப் பெட்டியைக் கொடுத்து நீங்களே சாப்பிடுங்கள் என்றாள்.’ ஏன் நீ சாப்பிடேலையா ,உன்னுடைய கஸ்பெண்ட் சாப்பிடேலையா என்றார்கள்.
அவர் வேண்டாமாம், அவருக்கு வேண்டாம்னா எனக்கும் வேணாம்.இனி என்னைக்குமே சாப்பிட மாட்டன்.ஏன் என்று தோழிகள் கேட்டனர்.
என்னோட கஸ்பெண்டோட மனைவி பிள்ளைகள் சாப்பிடக் கிடைக்காத இனிப்பு வகைகள் எதையுமே அவர் சாப்பிட மாட்டாராம்.அக்கா பிள்ளைகளுக்கு கெடைக்காத சுவீட்ஸ்கள் எனக்கும் கெடைக்காத சுவீட்ஸ்களாகவே இருக்கட்டும் மை கஸ்பெண்ட் இஸ் சச்சே ஏ கிறேட் மான் என்று நெகிழ்ந்தாள்.
யோகமலரைப் பார்த்து நீ அதிர்ஸ்டம் கெட்டவளடி இவருடனல்லவா வாழ்நாள் பூராவும் நீ வாழ்ந்திருக்க வேண்டும் என்றார்கள் அவளுடைய தோழிகள். 
கடவுள் அவரை சிறீலங்காவில் பிறக்க வைச்சிட்டாரே .என்னைப் போலத்தான் அக்காவுக்கும் அவர்தான் கணவராக வேண்டும் என்ற விதியோ தெரியாது. அவரை அங்க பிறக்க வைச்சிருக்கார் என்றாள் அவள்.
அன்று பக்ரறியில் நடந்த சம்பவங்களை ஒவ்வொன்றாக நினைத்துக் கொண்டேன்.சிங்கப்பூரில் இப்படி ஒரு வாழ்க்கை கிடைக்கும் என நான் கற்பனைகூட செய்து பார்க்கவில்லை.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் செவ்வாய்க்;கிழமையும் மனைவியிடமிருந்து வரும் கடிதமே எனக்குச் சக்தியைக் கொடுத்து வந்தது.
நான் கலர் பிலிம் றோலை சிங்கப்பூரில் வாங்கித் தபாலில் அனுப்புவதும், பிள்ளைகளின் பிறந்தநாள் படங்களை மனைவி அந்தப் பிலிம் றோலிலிருந்து எடுத்து அனுப்ப அதை கழுவிப் பார்த்து மகிழ்ந்து
எனக்குத் தேவையான படங்களில் ஒன்றிரண்டினை எடுத்து வைத்துக் கொண்டு மிகுதியை மனைவிக்கு அனுப்பிக் கொண்டிருந்தேன்.
மனைவிக்கு அனுப்புவதற்கு முன்னர் முன் பில்டிங்கில் இருக்கும் பொம்பிளைப் பிள்ளைகளுக்கும் பக்ரறியில் ஒரு சிலரிடமும் காட்டி மகிழ்வேன்.
பொம்பிளைப் பிள்ளைகள் ,உங்களைப்; பார்த்தால் மறீஜ் பண்ணின ஆள் மாதிரித் தெரியேலையே யங்போய் மாதிரி இருக்கிறீர்கள் என்பார்கள்.
ஒரு நாள் அவர்களின் லீடர் எங்களுடைய பில்டிங்கிற்கும் அவர்களின் பிலடிங்கிற்கும்; இடையில் உள்ள பூங்காவில் நான் இருப்பதைக் கண்டு விட்டார்.
நேரே என்னிடம் வந்து நானிருந்த அதே பென்சில் உட்கார்ந்து என்னையே உற்றுப் பார்த்தவர் நீங்கள் எத்தனை வயதில் மறீஜ் பண்ணினீங்கள் பதினெட்டு வயதிலேயே மறீஜ் பண்ணியிருப்பியள் போல என்றவர் நான் ஏன் கேட்டன் என்றால் நீங்கள் மறீஜ் பண்ணாதவர் போல யங்கா இருக்கிறியள் என்றார்.
அதற்கு நான் சொன்னன் அதுதான் மனைவி பிள்ளைகளின் படங்களையே உங்களுடைய ரூமில் கொண்டு வந்து காட்டியிருக்கிறேனே என்று.
அதற்கு அவர் இங்கை வந்த சில ஆண்கள் ஊரில் மறீஜ் பண்ணியிருந்தும் மறீஜ் பண்ணவில்லையென்று
பொய் சொல்லி சோடி சேர்ந்து திரியிறாங்கள் தெரியுமோ என்று கேட்டார். நானும் கேள்விப்பட்டிருக்கிறன் என்று சொன்னன்.
யோகமலரும் நான் மறீஜ் பண்ணி மூன்று பிள்ளைகள் இருக்கின்றன என்பதை முதலில் நம்பவில்லை. அதை நம்பிய பிறகும்கூட உங்களை நான் காதலிப்பதை உங்களாலை தடுக்க முடியாது என்று சொல்லி அது அங்குமிங்குமாக வளர்ந்து அவளும் நானும் கணவன் மனைவி என்ற இறுக்கமான நிலைக்கு இன்று வந்து நிற்கின்றோம்.
மனைவி பிள்ளைகளை சதா எனது நினைப்பிற்குள் வைத்திருக்க இங்கை நான்தான் உங்கள் மனைவி என்று அவளும் நினைப்பிற்குள் நிற்கிறாள்.
அவளுடைய மிசினைத் திருத்தும் போது „நீங்க தமிழ்னு எனக்கு ஏங்க சொல்லல’ என்று அவள் கேட்டதும், நான் கேட்டது உங்களுக்குக் கேட்கலையா „ என்று அதட்டிக் கேட்டதும் விதியின் விளையாட்டோ என நினைக்கிறன்.
அங்கிருந்துதான் சிங்கப்பூர் புதுவாழ்வு தொடங்கியதோ என மனம் பரபரத்தது.’ எனக்கு ஏன் சொல்லல என்பதில் எனக்கு என்ற சொல்தான் அவளுக்கும் எனக்கும் போட்ட முடிச்சு.
இப்படி ஒரு வாழ்வு வேறு யாருக்காவது கிடைத்திருக்குமோ தெரியாது.கிடைத்திருந்து அதை மற்றவர்களுக்குச் சொல்லாமல்கூட இருக்கலாம்.
ஆனால் நான் ஒரு எழுத்தாளனாக உருவானதற்குப் பிறகு வெளிப்படையாக எழுதும் பழக்கத்தினால் இதை எழுதிக் கொண்டிருக்கிறன்.
ஐரின் தொலைக்காட்சியில் நான் நேர்காணல் காணும் ஒரு நிகழ்ச்சி மலரும் நினைவுகள். இந்த நிகழ்ச்சியின் தாற்பரியம் இதுதான்.
ஒரு ஆணோ பெண்ணோ நினைவு தெரிந்த சிறு வயதிலிருந்து வளர்ந்து கல்யாண நாள் முடிந்து முதலிரவுக்குப் போகும் வரை,அவர்கள் கடந்து வந்த வாழ்நாட்களில் காதலிப்பது, காதல் கடிதங்களைப் பெற்றோருக்குத் தெரியாமல் பரிமாறுவது, பள்ளிக்கூட வாழ்க்கை,அங்கு ஏற்படும் காதல் வாழ்க்கை, பெற்றோருக்குத் சிகரட் பீடி புகைப்பது, பெற்றோருக்குத் தெரியாமல் கள்ளுச் சாரயம் குடிப்பது. குடித்துவிட்டும் புகைத்துவிட்டும் பசுத்தோல் போர்த்த புலியாக நடிப்பது.
காதலிக்கும் போது உன்னைத்தான் கல்யாணம் செயவேன் எனச் சொல்லிவிட்டு காதலனையோ காதலியையோ ஏமாற்றுவது.
காதலிக்கும் போது கல்யாணம் செய்வோம் என்ற உறுதிப்பாட்டில் எல்லை மீறி நடந்து சிக்கலில் மாட்டி அவசரம் அவசரமாகக் கல்யாணம் செய்வது, பேச்சுக்கால் நடக்கும் போதே இனி இவர்தான் கணவன் இனி இவள்தான் மனைவி என்ற உறுதிப்பாட்டில் பூட்டிய அறையில் சோடிகள் தனியாக இருந்து கதைப்பது கதைக்கும் போது எல்லை மீறுவது, தாலி கட்டும் போது மணமகன்
மணமகளுக்கு ஏற்படும் குதூகலமான மனநிலை,முதலிரவை நினைப்பது அதற்குள் சங்கமிப்பது என எனக்கு நேர்காணல் கொடுக்கும் ஆண் பெண் ஆகியவர்களிடம் கேள்விகளால் கிண்டிக் கிளறிக் கேள்வி கேட்ட போதுதான் தெரிந்தது மனிதர்கள் எத்தனை எத்தனை இரகசியங்களை மூளைக்குள்ளும்; மனதுக்குள்ளும் பூட்டி வைத்துவிட்டு நாங்கள்; பரிசுத்தத்திலும் பார்க்க எங்கு தொட்டாலும் தூசி ஒட்டாத படுசுத்தம் என முகமூடி அணிந்து பவனி வருகிறார்கள் என உணர்ந்தேன்.
இப்ப நானே என்னைக் கேள்வி கேட்டு கிண்டிக் கிளறி எழுதிக் கொண்டிருக்கிறன்.
5.11.54தான் அவளுடைய பிறந்த நாள்.அது நன்றாகவே ஞாபகமிருக்கின்றது.நித்திரையின் போது கனவுமாதிரி என்னை மறந்திட்டீங்களா என்ற குரல் கேட்பது போல இருந்தது. அது 5.11.20 இரவுதான்.
எனது கனவுகளில் நான் தோட்டத்தில் துலா மிதிப்பது போலவும்,பள்ளிக்கூடத்தில் வகுப்பில் இருந்து படிப்பது போலவம் கனவுகள் வருவதுண்டு.வாழ்நாட்களில் ஏற்படுகின்ற நிகழ்வுகள் பின்னர் கனவுகளாக நிழலாடும்.
அது போலத்தான் சிங்கப்பூரில் எனக்காக வாழ்ந்த ஒருத்தியின் நினைவுகள் கனவாக நிழலாடியது என்பதை உணர்ந்தேன்.
அவளை மறக்க முடியாது. ரேக் இட் ஈஸி என்று எடுத்துக் கொள்வதும் அவளுக்குச் செய்யும்
பெருந்துரோகம் .இதை வாசிப்பவர்களால் இப்படியும் நடக்குமா, தனக்குள் நடந்த இரகசியத்தை ஒருவரால் வெளிப்படையாக எழுத முடியுமா என்றுகூட எண்ணத் தோன்றும்.ஆனால் நான் எழுதிக் கொண்டிருக்கிறன்.
ஆரம்பத்தில் அவள் என்னை உண்மையாகத்தான் காதலிக்கிறாளா அல்லது நடிக்கிறாளா என நான் சந்தேகப்பட்டது உண்மைதான்.
அம்மாவின் மூன்று மாமனார்கள் மலாயாவிற்கு வேலை செய்யப் போய் இரண்டு மாமானார்கள் ஊருக்குத் திரும்பிவிட,ஒருவர் அங்கேயே ஒரு தமிழக வம்சாவளிப் பெண்ணை திருமணம் செய்து அங்கேயே இருந்துவிட்டதாக அம்மா அடிக்கடி சொல்வார்.
அதுவும் மழைக்காலங்களில் அதிகமாக அம்மா தனது மாமனாரைப் பற்றிக் கதைப்பார்.அதற்குக் காரணம் எங்கள் வீட்டில் இருந்த நாலு கம்பளிப் போர்வைகள்தான்;.
மூன்று கம்பளிப் போர்வைகளும் தடித்த போர்வைகள்.நான்கு கரைப் பக்கங்களும் பச்சைக் கம்பளி நூலால் சுத்திச் சுத்தித் தைக்கப்பட்டிருக்;கும்.இன்னொன்று மெல்லியது.நான்கு பக்கங்களும் தையலில்லாமல் இருக்கும்.
மழைக் காலங்களில் அந்தக் கம்பளிப் போர்வைகளால் போர்த்திக் கொண்டு படுக்கும்
போது மலாயாவில் தங்கிவிட்ட மாமனாரைப் பற்றிய ஞாபகங்கள்; அம்மாவிற்கு வரும்.
இந்தப் போர்வைகளை சின்ன மருமோளிட்டை மட்டுந்தான் கொடுக்க வேண்டும் என்று தனது தமையனான முத்துவிடம் மலாயாவில் தங்கிவிட்ட அம்மாவின் மாமனார் கொடுத்துவிட்டிருக்கிறார்.
அம்மாவுக்கு முத்துத்தம்பி, தம்பிமுத்து,நாகமுத்து என்றிருந்த நான்கு மாமனார்களில் எனக்குப் பேரன்களான அவர்களில் முத்துத்தம்பியை மட்டுமே எனக்குத் தெரியும்.
தம்பிமுத்துத்தான் மலாயாவில் தங்கிவிட்டவர்.நாகமுத்துப் பேரன் நான் பிறக்கிறதுக்கு முன்னரே இறந்துவிட்டதாக அம்மா சொல்லியிருந்தார்.
முத்துத்தம்பி கனகாலம் இருந்தவர். அம்மா கொழும்பு பொது வைத்தியசாலையில் நோயுற்றுக் கிடக்கையில் முத்துத்தம்பி என்ற பேரன் முறையானவரை நான்தான் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக் கொண்டு போனனான்.
அவரைக் கொச்சிக்கடைக்குக் கூட்டிக் கொண்டு வருவதற்காக,காங்கேசன்துறையிலிருந்து காலமை யாழ்தேவியில் வெளிக்கிட்டு வந்தவரை இரண்டு மணிக்குக் கொழும்பு புறக்கோட்டைக்கு வந்து சேரும் யாழ்தேவியிலிருந்து இறங்கியவரை நான் கூட்டிக் கொண்போய் புறக்கோட்டையிலிருந்த இராஜேஸ்வரி பிராமணாள் கோட்டலுக்கு வைச்சிருக்க
அண்ணையும் மாமாவும் அங்கு வர நமெல்லோரும் ஒன்றாகச் சாப்பிட்ட பின் அண்ணை சொன்னார் கொஞ்ச நேரம் பொறுத்து முத்தப்பாவைக் கூட்டிக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு போ அங்கை நாங்களெல்லாரும் அம்மாவைப் பார்த்திட்டு கொச்சிக்கடைக்குப் போவமென்றார்.

இராஜேஸ்வரி பிராமணாள் கோட்டலில்தான் அண்ணையும் மாமாவும் மத்தியானச் சாப்பாடு சாப்பிடுவார்கள்.அதனால்தான் முத்தப்பாவை அங்கு கூட்டிவரச் சொல்ளலியிருந்தார்கள்.
பேரன் முத்துத்தம்பியை முத்தப்பா என்றுதான் கூப்பிடுவோம்.மாமாவிக்கும் முத்தப்பா தாய்மாமன்.இரண்டு பேருடைய முகச் சாயலும் ஒரே மாதிரி இருக்கும்.
முத்தப்பா உயரமாய் நிறமாயிருப்பார்.மாமா தகப்பனைப் போல கொஞ்சம் நிறம் குறைவு.உங்கடை மாமா தங்களுடைய தகப்பனைப் போல கொஞ்சம் நிறம் குறைஞ்சவர் என்று அம்மா சொல்லியிருக்கிறார்.
முத்தப்பாவின் மூத்தமகளை மாமா கல்யாணம் செய்யவில்லை என்ற கவலை இறுதிவரை முத்தப்பாவுக்கு இருந்தது.
யோகமலர் மலேசியாவையும் சிஙகப்பூiயும் தொடுக்கும் எல்லை நகரமான ஜோகூர்பாருவில் பிறந்தவள்.மலேசியா என்ற அந்தச் சொல்லை எனது அம்மாவழிப் பேரன்களுடன் தொடர்புபடுத்தி
சிந்தனை அங்கை போய் இங்கை போய் இறுதியில் யோகமலரிடம் வந்து நின்றது.
யோகமலர் எனக்காக வாழத் தொடங்கிவிட்டாள், அவள் என்னைத் தன் கணவனாக தனக்குள் ஆழமாக வேரூன்றி வைத்திரு;கிறாள்,
எனது கைகளுக்குள் தனது கைகளைச் செருகி என் தோளில் மீது சாய்ந்திருக்கும் போதெல்லாம், உங்கள் தோள்மீது தலையிருக்கும் போது என் உயிர் போக வேணும் என்று ஒவவொரு நாளும் சொல்லிக் கொண்டெயிருக்கிறாள்;.
இப்படியெல்லாம் சொல்லாதை எனச் சொல்லியும் அவள் கேட்கவேயில்லை.நீங்கள் சிறீலாங்காவிற்குப் போனதன் பின் உயிருள்ள உடலாக நான் வாழ்ந்தாள், உங்களுக்கொரு மனைவி மலேசியாவிலிருக்கிறாள் என்பதை அக்கா அறிந்து தனது கணவருக்கு மலேசியாவில் ஒரு மனைவி இருக்கிறாள் நினைக்கும் போது அக்கா என்று நான் பாசத்தோடு நினைக்கும் உங்க மனைவிக்கு அது நிம்மதியைத் தராது.
ஊர்உலகம் மலேசியாவில் ஒரு பெண்டாட்டி இருக்கிறாள்.வேலைக்குப் போன இடத்தில் தொடுத்திருக்கிறார் எனச் சொல்லும், எனக்கு உங்களோடு இங்கு வாழும் வாழ்க்கை போதும்மென்பவள் நீங்க இங்கு இருக்கும் போதே செத்துவிட வேணுமென்பாள். அப்படி அவள் ஒரு நாளும் சொல்லாமல் விட்டதில்லை.
அவளை நினைக்க பாவமாகவிருக்கும்.எனக்காக இங்கொருத்தியை கடவுள் படைத்திருக்கிறானோ என என் விதியை நினைத்துக் கொண்டன்.
அப்பொழுது பொஸ் நித்திரை வரேலையா என்று மெதுவாக மேல் கட்டிலில் படுத்திருந்த ஞானசேகரம் கேட்டான்.
யோசனையிலை நித்திரை வருகுது இல்லை என்று சொல்ல, அவன் நித்திரையில்லாட்டில் எழும்பி ஒருக்கா வெளிநடை விறாந்தையிலை நின்று ஒரு முக்கியமான விசயம் கதைக்க வேண்டும் வாறியளா என்றான்.ஞானசேககரம் செல்வச்சன்னதிக்கு கிட்ட ஒரு இடத்திலிருந்து வந்தவன்.
வெளிக்கதவுத் திறப்பையும் எடுத்துக் கொண்டு மெதுவாக கதவைச் சாத்திப் போட்டு எங்கடை அறைகள் இருந்த இடத்திற்கு கொஞ்சம் தள்ளி போய் நானும் அவனும் நிற்க, இதற்கிடையில் இவன் யோகமலரின் விசயத்தைத்தான் கதைக்கப் போகிறானோ என யோசித்தவாறு அவனைப் பார்க்க’ பொஸ் இண்டைக்கு இஞ்சை பெரிய பிரச்சனை நடந்திட்டுது „ என்றான்.
நான் என்ன நடந்தது என்று கேட்டன் கரனுக்கு சச்சி செம வெளுவை, அடிச்சுப் போட்டான்.அது மட்டுமல்ல அவற்றை கீரைச் சட்டிக்குள் ஆட்டிறைச்சி சட்டி அகப்பையை சச்சி வைச்சிட்டான் என்றான்.
தொடர்ந்து அவன் சத்தம் கேட்காத மாதிரி சொல்லத் தொடங்கினான்.கரன் சுண்ணாகத்தைச் சேர்ந்த
பிராமண இளைஞன். அவருடைய முழுப்பெயரையும் நான் எழுதவில்லை.அவர் ஜேர்மனியிலிருந்தவர் இப்பொழுது அவுஸ்திரேலியாவில் இருப்பதாக அறிந்தேன்.
அவருடைய தம்பியாரை எனக்குத் தெரியும். அவர் எங்கள் நகரத்திலேயே குடும்பமாக இருக்கிறார். நாங்கள் இருக்கும் வீட்டின் சுத்தப்படுத்தலை அங்கிருக்கும் அனைவருமே பங்கு போட்டு செய்ய வேண்டும் என்பதுடன் எங்களுக்கென்று தண்ணீர் மின்சாரம் போன்றவற்றுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் கட்டணத்திற்கு மேல் பாவித்தால் மேலதிகமான பாவனைக்காக அங்கிருக்கும் எட்டுப் பேரின் சம்பளத்திலிருந்தும் வெட்டப்படும் என்பது பக்ரறியின் விதி.
நாங்கள் வேலைக்குச் சேர்ந்த முதல் நாளே எங்களுக்கு அதனைச் சொல்லியது மட்டுமல்ல எழுத்து மூலமாகவும் பக்ரறி நிர்வாகம் தந்துவிட்டது.
கரன் தான் ஒரு குறிப்பிட்ட சமூகத்திலிருந்து வந்தவர் என்ற காரணத்திலோ அல்லது மற்றையவர்களைவிட தான் உயர்ந்த சாதி என்பதாலோ தெரியாது சுத்தப்படுத்தல் வேலைகள் எதையுமேஅவர் செய்வதில்லை.
அவரவர் அறையைக் கழுவி சுத்தப்படுத்துவதிலிருந்து, சமையல் அடுப்பையோ,கூடத்தையோ, மலசல கூடத்தையோ அல்லது குளியலறையையோ என எதையுமே சுத்தப்படுத்துவதில் அவர் உதவி
செய்வதேயில்லை..செய்வதில்லை என்பதைவிட அவர் அதை விரும்புவதில்லை.
ஒரு சமூகம் சார்ந்த பார்வையுடன் நான் இதைப் பதிவு செய்யவில்லை.
வெளிநாடுகளிலோ அல்லது வேறு எங்கேயாவதாக இருந்தாலும் ஒன்றுகூடி வாழும் இடத்தில், அங்கிருப்பவர்கள் அனைவரும் சமமே என்ற ரீதியில் அனைத்து வேலைகளிலும் சமமாக பங்கு கொள்ள வேண்டும் என்பதுதான் நியாயம் என்ற பார்வையிலேயே இப்பதிவு இடம்பெறுகின்றது.
கரன் தான் சுத்தப்படுத்துவது கௌரவக் குறைச்சலான வேலை என்று நினைத்தாரோ தெரியவில்லை எந்த வேலையுமே செய்வது இல்லை.
வேலையால் வந்ததற்குப் பிறகு கரன் ஒரு கையை தலையில் வைத்து கட்டிலில் படுத்தபடி தனக்கு மட்டுமே காற்றுப்படத் தக்கதாக மேசை விசிறியை நிலை கொள்ளச் செய்து காற்று வாங்கிக் கொண்டுமிருப்பார்.
ஒரு நாள் பொறுத்துக் கொள்ளலாம் இரண்டு நாள் பொறுத்துக் கொள்ளலாம் அல்லது ஒருகிழமைகூடப் பொறுத்துக் கொள்ளலாம் ஆனால் மறறவர்களை முட்டாள்கள் என்று நினைத்துக் கொண்டும் மற்றவர்களைவிட நான் உயர்ந்த சமூகத்தவன் என்று நினைத்துக் கொண்டும் கூடிவாழும் இடத்தில் சுயநலமாக நடந்து கொண்டால் யாருமே பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்.
உங்களுக்கு மட்டுமே காற்றுப்படும்படி விசிறியை வைக்காதீர்கள் என்று எனது அறைப் பொடியங்கள் சொல்லிப் பார்த்தார்கள், அவர் அதைக் கவனத்தில் எடுக்கவேயில்லை.
பொடியங்கள் என்னிடம் நீங்கள்தானே எங்களுக்கு லீடர் அவருக்குச் சொல்லுங்கள் என்றார்கள்.
நான் ஒரு நாள் „கரன் நீங்கள் செய்வது சரியே இல்லை.இந்த மேசை விசிறி இந்த அறைக்குரிய பொது விசிறி.உங்களுக்கு இருக்கும் வெக்கை வியர்வை போலத்தான் மற்றவர்களுக்கும் இருக்கும்.எனவே தயவு செய்து எல்லாருக்கும் காற்றுப்படும்படி சுழலவிடுங்கள், அவர்கள் இல்லாத போது உங்களுக்கு மட்டுமே காற்றுபடும்படி விடுங்கள். அது பிரச்சினை இல்லை என்றேன்.
கரன் அரைகுறை மனத்துடன் ஒப்புக் கொண்டார்.நான் உட்பட மற்றவர்கள் கூட்டிக் கழுவும்போது கரன் கையைக் கட்டிக் கொண்டு நின்று எசமான் மாதிரி அந்த மூலையிலை ஊத்தை கிடக்குது இந்த மூலையிலை ஊத்தை கிடக்குது என்று சொல்லிக் கொண்டிருப்பார்.
இல்லாவிட்டால் நாங்கள் வேலை செய்து கொண்டிருக்கும் போது விசிறியைப் போட்டிட்டுப் படுத்திருப்பார்.இது பொடியளுக்கு கோபத்தைக் கொடுத்திருக்கிறது.
இதைவிட கரன் சொன்ன ஒரு வார்த்தையால் பொடியள் இன்னும் அதிகம் கோபப்பட்டிருந்தார்கள்.
ஒரு வெள்ளிக்கிழமை கரன், சச்சி, சூரியகுமார்,இராசரட்ணம்,ஞானசேகரன் ஆகியோர் சிலோன் றோட்டிலிருக்கும் செண்பக விநாயகர் கோவிலுக்கு போயிருக்கிறார்கள்.
கோவிலுக்குள் நின்று கரன் மற்றவர்களிடம் ஊரிலை ஆம்பிளையள் மேலே சேர்ட்டில்லாமல் கோவிலுக்கு போவதைப் போல பெண்களையும் அப்படி வரச்சொன்னால் நல்லாயிருக்கும் என்றவர் இன்னும் ஒருபடி மேலே போய் வக்கிரமாக கேலியும் கிண்டலுமாக சொல்லியிருக்கிறார்.( கரன் என்ன வர்ணனை சொன்னார் என்று ஞானசேகரன் சொல்லி அது எனக்குதெரிந்தாலும் அதை எழுத எனது மனம் இடம் கொடுக்கவில்லை,அவ்வளவு மோசம்)
கரன் நினைத்திருக்கிறார் தான் சொன்னதைக் கேட்டு மற்றவர்கள் இரசிப்பார்கள் சிரிப்பார்கள் என்று, ஆனால் எல்லாருக்கும் அதிர்ச்சியும் கோபமும் ஏறபட்டுவிட்டது.
சச்சி சொல்லியிருக்கிறார், கரன் இப்ப கோவிலுக்குள்ளை நின்று நான் கதைக்க மாட்டன், வெளியிலை வாருங்கள் கதைப்பம் என்று சொன்னவர். பூசை முடிந்து கும்பிட்டிட்டு வெளியே வந்ததும் பொடியங்கள் அவரைப் பேசத் தொடங்கிவிட்டனர்.
அவரின் சமூகத்தைச் சொல்லி அங்கிருந்து வந்த நீங்களே உங்களுடைய கேவலமான புத்தியைக் காண்பித்துவிட்டீர்கள் என்று சொன்னதுடன் கோபத்தில் நின்ற சச்சி கரன் நீங்கள் சொன்ன மாதிரி சட்டை இல்லாமல் வருவதானால் உங்களுடைய அம்மா அக்கா தங்கச்சி உங்கடை சொந்தக்காரப் பெண்கள் எல்லாருந்தானே வரவேண்டும் என்று சொன்னதால், அவர் விதைத்த வினையே அவருக்கு கேடாக வந்தது போல அவர் எதிர்பார்க்கவில்லை இப்படி ஒரு கேள்வி தன்னை நோக்கி வருமென்று.
இத்தனை நாட்களும் அவர் தங்களுடன் சேர்ந்து வேலை செய்யவில்லை என்ற கோபம்; மட்டுமே கரன் மீது பொடியங்களுக்கு இருந்தது.
கரன் கோவிலில் வைத்து வக்கிரமாகச் சொன்னதற்குப் பிறகு பொடியங்களுக்கு அவர் மீது வெறுப்பும் கோபமும் அதிகரித்து விட்டது.
அடுத்த நாள் சனிக்கிழமை மத்தியானச் சாப்பாடு முடிந்து பின்னேரம் போல எங்களுடைய அறைக்கு வந்த சச்சி, பொஸ் வாறியளே சும்மா வெளியிலை நடந்து போட்டு வருவம் என்று சொல்ல சூரியகுமாரும், ஞானசேகரமும் தாங்களும் வருவதாகச் சொல்ல நாங்கள் எங்கள் பில்டிங்கைவிட்டு வெளியே நடந்து போய் ஒரு கடையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோலா ரின் வாங்கிக் கொண்டு அருகில் இருந்த பூங்காவின் தரையில் மரநிழலின் கீழ் இருந்து கதைத்த போது மேலே குறிப்பிட்ட விசயங்களைச் சொன்ன சச்சி, பொஸ் ஒரு நாளைக்கு கரனுக்கு சாத்துகிறேனோ இல்லையோ பாருங்கள் என்று
சொல்ல நான் அடிக்கிற வேலையைச் செய்யாதீங்கள் அது பிரச்சினையாக மாறி வேலைக்கே உலை வைக்கிறதாக முடியுமென்றேன்,
பொஸ் இவர் எங்களுடன் வேலை செய்கிறாரோ இல்லையோ அது பிரச்சினை இல்லை.ஆனால் எங்கடை பொம்பிளையளைக் கேவலப்படுத்திச் சொன்னதை என்னாலை தாங்க முடியவில்லை என்றான்.
அப்படியென்றால் இந்தச் சமூகத்தை நம்பி எப்படி எங்கடை பொம்பிளையளை கோவிலுக்கு அனுப்ப முடியும் இவர்களுடைய கண்களே மோசமான கண்கள்தானே எனக் கொதிச்சுக் கொண்டிருந்தான் சச்சி.
சச்சி இப்பொழுது பிரான்சில் இருக்கிறான்.அவருடைய மருமகள்தான் நாளைய நாம் தொடர் நாடகத்தில் எனது தங்கையாக நடிப்பவர்.
இரண்டு மூன்று மாதங்களுக்கு முந்தி சச்சி பிரான்சிலிருந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு எப்படிப் பொஸ் இருக்கிறியள் என்று பழைய ஞாபங்களை மீட்டுக் கதைத்தார்.
படப்பிடிப்பக்கு மருமகளுடன் ஒன்றாக காரில் போகும் போது „அண்ணை உங்கடை தெல்லிப்பழைக் கதையும் தெரியும்,சிங்கப்பூர்க் கதையும் தெரியும் பயப்படாதையுங்கோ சிங்கப்பூர் கதையை யாருக்குமே சொல்லமாட்டன் என்பார்.
என்னோடு வந்த சூரியகுமாரும் ஞானசேகரனும் கரன் வேறு என்ன மாதிரி வர்ணித்தார் என்பதைச் சொன்ன போது அட கடவுளே என்று நான் சொன்னதுடன், கரன் மீது எனக்கு வெறுப்பு வந்துவிட்டது.
சச்சிக்குச் சொன்னன் இத்தோடு இந்தக் கதையை விடுங்கள் என்று.ஓம் பொஸ் என்று சொன்னானே தவிர,கோபத்துடன்தான் அவன் இருந்தான்.
மேலே குறிப்பிட்ட சம்பவங்களை ஒட்டித்தான் வாக்குவாதம் முத்தி கோபமாகி கரன்ரை கீரைச் சட்டிக்குள் ஆட்டிறைச்சி அகப்பையை வைக்க அது பெரும் சண்டையாகி விட்டதாக நினைத்;தேன்.
ஞானசேகரம் தொடர்ந்து சொல்கையில், கோவிலில் வைச்சு அப்படிக் கதைச்ச நீ ஒரு மனுசனா என்று சொன்னதற்கு கரன் சொல்லியிருக்கிறார் எங்களை எல்லாரும் ஐயா என்றுதான் கூப்பிடுகிறவை நீங்கள் என்னைப் பெயர் சொல்லிக் கூப்பிடுகிறியள் என்றதற்கு ஏன் உன்னை ஐயா என்று கூப்பிட வேணும் நீயும் எங்களைப் போல வேலைக்கு வந்தவன்தான் என்று மற்றவர்களும் சேர்ந்து சொல்லியிருக்கிறார்கள்.
கரனின் திமிரான போக்கினால் எல்லாருக்கும் அவன் மீது கோபம் அதிகரித்தது.
ஞானசேகரன் சொன்னான், எல்லை மீறி வாக்குவாதம் நடந்த போது பொஸ் உங்களுடைய பெயரையும் கரன் இழுத்தவர் என்றவுடன் நான் கொஞ்சம்
அதிர்ச்சியடைந்து, என்னைப் பற்றி என்ன கதைச்சவன் என்றேன்.
நீங்கள் மலேசியன் கேர்ளை பெண்சாதியாக வைச்சிருக்கிறியள் என்றதுடன் அந்த பில்டிங்கிலை இருக்கிற லீடர் கேர்ளோடை உங்களுக்குத் தொடர்பு இருக்குது அதனால்தான் நூடில்ஸ் கொண் வந்து கொடுக்கிறா என்றவுடன் சச்சிக்கு சரியான கோபம் வந்துவிட்டது என்றான்.
பொஸ்ஸின்ரை தனிப்பட்ட விசயத்தைக் கதைக்க வேண்டாம்.அவற்றை வாழ்க்கையைப் பற்றி அவருக்கு முடிவெடுக்கத் தெரியும்.பொஸ்ஸின் மாமன் மாமி மச்சான் மார் மச்சாள்மார் பற்றி எனக்குத் தெரியும் அவருடைய மச்சாள் ஒருவர் என்னோடை யூனியன் கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்தவர்.
உடுவிலில் வைத்து என்னிடம் எங்கடை அத்தானைக் கவனமாகப் பார் சச்சி.அத்தான் அக்கா பிள்ளைகளை விட்டிட்டு இருக்கமாட்டார் என்று அழுது கொண்டு சொன்னவர் என்று சொன்ன சச்சி நூடில்ஸ் கொண்டு வந்து கொடுத்தால் தொடர்பென்றே அர்த்தம் என்ற சச்சி அடுப்படித் தரையில் இருந்த அழுக்குத்தண்ணீர் போகும் துவாரத்தைக் காட்டி இந்த வீட்டுக்கு வந்த அன்று நிலம் கழுவின தண்ணீர் இதுக்குள்ளை போகாமல் பொங்கிக் கொண்டு நிற்க, நாங்கள் யாருமே கைவைத்து அடைப்பெடுக்க அருவருப்புப்பட்டு கையிலை சொறி வந்திடும் என்று தயங்கித் ஒதுங்கி நிற்க சேர்ட் கையை மேலே மடிச்சு விட்டிட்டு துணிஞ்சு இந்தத் துவாரத்திலை கைவிட்டு
களி களியாகவிருந்த சாக்கடையை வெறுங்கையாலை அள்ளினவர்.
ரொய்லற்றின் சுவரிலும் நிலத்திலும் பாத்ரூம் சுவரிலும் நிலத்திலும் பாசி படர்ந்து இருந்ததை ஸ்பொன்ஜால் உரஞ்சிக் கழுவினது மட்டுமல்ல கிளவுஸைப் போட்டுக் கொண்டு குந்தி இருந்து கொமற்றுக்குள் கைவிட்டுக் கழுவினவர் அவர் எங்களுக்கு அண்ணன் மாதிரியும் லீடர் என்ற தகுதியுடனும்; நடக்கிறார் என்று சச்சி சொன்னவன் என்றான் ஞானசேகரன்.
இந்த வீட்டின் நிலம் முந்தி எண்ணைத் தன்மையுடன் கறுப்பாக இருந்தது.பொஸ்சும் சூரியகுமாரும் கடையிலை குளோரின் வாங்கிக் கொண்டு வந்து கழுவினதாலைதான் வெள்ளையாக பளிச்சென்று இருக்கிறது என்று சச்சி சொன்னதாகவும் சொன்னான்.
சப்பாத்துத் தடயத்தால் நடந்து போகிற அடையாளம் அப்படியே இருந்தது.அதனால் நித்திரை கொள்ள முடியவில்லை.அந்த வீட்டிலை இயல்பாக இருக்க முடியவில்லை.குப்பைக்கு மேல் இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது.
யார் அதைப்பற்றிச் சிந்திப்பது என்பதைவிட, பூனைக்கு யார் மணி கட்டுவது என்பதைவிட நானே செய்ய வேணும் என்று நினைத்துக் கொண்டு சூரியகுமாரையும் கூட்டிக் கொண்டு போய் குளோரின் வாங்கி இரண்டு பேருமாக வீடு முழுவதையும் கழுவியிருந்தோம்.
வந்த முதல் நாள் எங்கள் எல்லாரையும் மெத்தையிலை படுக்கச் சொல்லிப் போட்டு பேப்பரை விரிச்சு நிலத்திலை படுத்தவர். அதாலை அவருக்கு காய்ச்சல் வந்து பாவம் அவர் எவ்வளவு கஸ்டப்பட்டவர் என்று எங்களுக்குத் தெரியும்.
நானும் சூரியகுமாரும் அவருக்கு கொர்லிக்ஸ்சும் தோடம்பழமும் கரைச்சுக் குடுத்தனாங்கள்.
பொஸ் லீடர் என்ற விடயத்தில் சரியாகத்தான் நடக்கிறார்.எங்களைச் செய்யச் சொல்லாமல் தான் முதலில் செய்கிறார் அவரின்ரை பேர்சனல் விசயத்தைக் கதைக்க யாருக்கும் உரிமையில்லை என்று சொல்லி வாக்குவாதப்பட்டுக் கொண்டிருக்க கரன் ஏதோ சொல்ல சச்சி அடிச்சுப் போட்டான் சிலவேளை பக்ரறியில் விசாரணை நடக்கலாம் என்று ஞானசேகரன் சொல்லி முடித்தான்.
(உண்மைகள் தொடரும்)
![]()