கதைகள்

காதலர் விமானம்!….. 36 ….. (நாவல் ) ….. ஏலையா க.முருகதாசன்.

சந்திரசேகரம் சாந்தினியைப் பார்த்து, நீ மாமா மாமி வீட்டிலையிருந்து வருகிற போது தலையிலை கனகாம்பரப் பூச்சரம் வைச்சுக் கொண்டு வந்தாய்.

அது மாதிரித்தான் உங்கடை மாமியும் மாமாவுடன் போவதற்காக வீட்டைவிட்டுப் போகேக்கிலை கனகாம்பர பூச்சரம் வைச்சுக் கொண்டு ஐயனார் கோவில் திருவிழாவுக்கென்று சொல்லிவிட்டுப் போனார்.

அதுதான் அந்தக் கோலத்தில் உன்னைக் கண்டதும் மாமி வீட்டைவிட்டு வெளிக்கிட்டுப் போன அந்த நாள் ஞாபகம் வந்திட்டிது என்றவர் சில விநாடிகள் யோசனையில் ஆழ்ந்தார்…அவரின் முகத்தில் பல ஆண்டு நினைவுகளை ஞாபகத்திற்கு கொண்டு வந்த சோக ரேகைகள் தெரிந்தன.

தங்களுடைய அப்பாவும் அம்மாவும் காதல் கல்யாணம் செய்தவர்கள்.மாமா மாமியும் காதல் கல்யாணம் செய்தவர்கள்.மாமா மாமியின் குடும்பத்துக்குள்ளும் தங்களுடைய குடும்பத்துக்குள்ளும் இதுவரை அறிந்து கொள்ளாத காதல் கோட்டை வரலாற்று இரசியங்கள் இருப்பதை அறிந்த மூன்று பிள்ளைகளும் அப்பா இன்னும் என்ன சொல்லப் போகிறார் என்ன இரகசியங்களைச் சொல்ல வைத்திருக்கிறார் என ஆவலுடன் அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

சந்திரசேகரம் சொல்லத் தொடங்கினார்.உங்களுடைய மாமா சிறந்த பந்தடி வீரன் மட்டுமல்ல படிப்பிலும் கெட்டிக்காரன்.

கொழும்பில் வேலை கிடைச்சு தனியாக அங்கிருந்த ஒரு வருச காலத்துக்குள் மாமா சிங்களம் கதைக்க, எழுதத் தெரிந்து கொண்டது மட்டுமல்ல எஸ்.எஸ்.சி சோதனைப் பாடமாக சிங்கள மொழியை எடுத்து கிறடிட் மார்க்ஸில் பாஸ் பண்ணியுமிருந்தார்.

அவர் வருமான வரித் திணைக்களத்தில் வேலை செய்யிற போது அவரின் நேர்மையான குணத்தாலும் நுட்பமான அறிவாலும் ஒரு வருசத்துக்குள்ளேயே பதவி உயர்வினைப் பெற்றவர்…

 

தனது திணைக்களத்தில் இலஞ்ச ஊழல் இடம்பெறாதவாறு பார்த்துக் கொண்டார். சிங்கள சக பணியாள நண்பர்களுடன் சிங்களத்திலும்,தமிழ்ச் சக பணியாளர்களுடன் தமிழிலும்

தேவையேற்படின் ஆங்கிலத்திலும் அவர் பேசுவார்.மூன்று மொழிகளிலும் இலக்கணப் பிழையில்லாமல் பேசுவதை அவரோடு பழகிய நண்பர்கள் ஊருக்கு வரும்போது என்னிடம் சொல்லியிருக்கிறார்கள்.

அவர் தமிழ்ப்; பற்றாளராக இருந்ததுடன் அரசியல் அறிவு மிக்கவராகவும் இருந்தார்.தமிழ் சிங்களம் ஆங்கிலம் என எல்லாப் பத்திரிகைகளையும் வாசித்து தமிழருக்காக தத்துவார்த்த ரீதியாகவும் தர்க்கரீதியாகவும் சிங்களவருடன் வாதிடுவார்.உங்கட மாமியும் தர்க்கசாஸ்திரமும் எதிக்சும் படித்தவள்தான்…

சிங்களவருடன் வாதிட்டாலும் சிங்கள சக பணியாளர்களுடன் தனிப்பட்ட பகை எதுவும் அவரிடமிருந்தது இல்லை.சிங்களவர்களில் படித்த சிங்களவர்கள் எப்படி இலக்கணச் சுத்தத்துடன் கதைப்பார்களோ அதே போல சிங்களத்தில் கதைப்பார்…….

அவரின் நாக்கில் சிங்களம் சரளாமாக வரும்.மாமா உதைபந்தாட்ட வீரர் என்பதையும் அவர் மகாஜனாவில் படித்தவர் என்ற விபரத்தை அறிந்த வருமானவரித் திணைக்கள அதிகாரிகள்,தமது திணைக்கள உதைபந்தாட்டக் குழுவிற்கு பயிற்சியாளராக நியமித்தனர்……..

மாமா பயிற்சியாளரானதற்குப் பிறகு வருமான வரித்திணைக்கள உதைபந்தாட்டக்குழு அரசாங்க திணைக்களகங்களுக்கு இடையிலான உதைபந்தாட்டப் போட்டிகளில் வெற்றி பெறத் தொடங்கியது……….

மாமா திணைக்களகத்துக்கு வருகை தருவதை குறிக்கும் இடாப்பில் எப்பொழுதும் தமிழிலேயே கையொப்பமிடுவார்.

சிங்களப் பணியாளர்கள் ஆங்கிலத்தில் கையொப்பமிடும் போது இவர் மட்டும் தமிழில் கையொப்பமிடுவதைக் கண்ட மாமாவின் சிங்கள நண்பர்கள் ஏன் ஆங்கிலத்தில் கையொப்பமிடாமல் தமிழில் கையொப்பமிடுகிறீர்கள் எனக் கேட்டதற்கு, தமிழ் எனது தாய்மொழி மட்டுமல்ல எங்கள் நாட்டு மொழிகளில் அதுவும் ஒன்று என்று சொன்னவர் உங்கள் தாய்மொழியாகவும் எங்கள் நாட்டு மொழியாகவும் இருக்கின்ற சிங்களத்தில் கையொப்பம் இடாமல் ஆங்கிலத்தில் கையொப்பமிடுகிறீர்களே என்று மாமா சுட்டிக்காட்டியதால் பல சக சிங்களப் பணியாளர்கள் தாமும் சிங்களத்தில் கையொப்பமிடத் தொடங்கினர்.

மாமாவின் செயல்பாடுகள் பற்றியும் மாமாவும் மாமியும் கொழும்பில் எப்படி வாழ்கிறார்கள் என்பது பற்றியும் அவ்வப்போது அறிந்து கொண்டிருந்தேன்.

இவ்வளவு நேர்மையான மாமா ஏன் மாமியைக் அவசரப்பட்டுக் கூட்டிக் கொண்டு போனார் என்ற கோபம் என்னிடம் இருந்தது.

மாமா வேலை செய்யத் தொடங்கி இரண்டு வருடங்கள் முடிய, அரசாங்க திiணைக்களங்களில் சாதாரண பரீட்சையில் சிங்களம் பாஸ் பண்ணியிருந்தால் மட்டுமே சம்பள அதிகரிப்பு உண்டு என்ற அரசாங்கச் சட்ட அறவிப்பால் மாமா கோபப்பட்டார்.

அது சம்பந்தமாக வருமானவரித் திணைக்கள அதிகாரிகளால் கூட்டப்பட்ட அறிவுறுத்தல் கூட்டத்தில் மாமா கலந்து கொண்டு சிங்களத்தில், சிங்கள மொழியில் புலமை இருந்தால் மட்டுமே சம்பள அதிகரிப்பு என்ற அரசாங்கச் சட்டம் திட்டமிட்டு தமிழர்கள் மீது சிங்கள மொழியைத் திணிக்கும் செயல் மட்டுமல்ல, பல தமிழர்கள் அரசாங்கப் பணிகளை விட்டுச் செல்வதற்கான சதி என வாதிட்ட போது, திணைக்கள சிங்கள அதிகாரி „சச்சி நீங்கள் சிங்களம் படித்து பாஸ் பண்ணி இன்று அழகாக சுத்தமாக சிங்களம்; கதைக்கிறீர்கள் ஆனால் அரசாங்க பணிகளில் சிங்களம் படித்தால்தான் சம்பள உயர்வு என்பதை ஏன் எதிர்க்கிறீர்கள் என்று கேட்ட போது உங்கடை மாமா கொடுத்த விளக்கம் எந்தவொரு அரசியல்வாதியுமே கொடுக்காத விளக்கம்.

நான் சிங்களத்தை விரும்பிப் படித்தவன்.சிங்களம் எங்களுடைய சக மொழி.எங்களுடைய சிங்களச் சகோதரர்களின் மொழி.தமிழர்களாகிய நாங்களும் சிங்களவர்களாகிய நீங்களும் சகோதரர்கN;;ள,அனைவரும் இலங்கையர்கள்;.எனவே சிங்கள மொழியை விரும்பிப் படிப்பது என்பது வேறு திணிப்பது என்பது வேறு.சிங்களச் சகோதரர்களாகிய உங்களை நேசிப்பதற்கும் புரிந்து கொள்வதற்கும் அன்னியோன்னியமாக பழகுவதற்குமே நான் சிங்ளத்தைப் படித்தன்.

நானும் நீங்களும் ஆங்கிலத்தில் பேச வேண்டிய தேவையில்லாத போது ஆங்கிலத்தில் பேசுவதைவிட உங்கள் மொழியில் பேசும் போது நானும் நீங்களும் அண்மித்து நிற்கிறோம்.

இந்த நாட்டில் சிங்களவர் தமிழர் ஐக்கியம் வளர வேண்டுமென்றால் நீங்களும் தமிழை விரும்பிப படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்.அதில் உங்களுக்கு அக்கறையில்லை.தமிழர்கள் ஒரு போதும் சிங்களச் சகோதரர்களையோ சிங்கள மொழியையோ

வெறுக்கவில்லை. சிங்களம் படித்தால்தான் சம்பள உயர்வு என்பது பசியை ஏற்படுத்தி; பணிய வைத்தல் என்ற கருத்துக்குட்பட்ட செயலாகும்.பசியை ஏற்படுத்தி பணிய வைத்து அடிமையாக்குவது அருவருக்கத்தக்க செயலாகும்.

அதாவது அரசாங்க வேலைகளை நம்பியிருக்கும் தமிழர்களை பொருளாதார ரீதியாக அவர்களுக்கு வலிந்து பற்றாக்குறையை ஏற்படுத்துவதுடன்;.அரசாங்கப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் தமிழர்களை பணயக்கைதியாக்கி அவர்களை பொருளாதரா அகதிகளாக்கும் செயல் இது.

மாமா ஒரு விரிவுரை நடத்துவது போலச் சொல்லி முடித்ததும், „சச்சி உங்களுக்குப் பிரச்சினை வராது, அரசாங்கம் எதிர்பார்த்ததைவிட பல படிகள் சிங்கள மொழியில் மேலே நிற்கிறீர்கள், உங்களுக்குச் சம்பள உயர்வு கிடைக்கும் என்று சொன்னவுடனேயே,மாமா எனக்குச் சம்பள உயர்வு சிங்களத்தைக் காரணம் காட்டித்தான் கிடைக்குமென்றால் அந்தச் சம்பள உயர்வு வேண்டவே வேண்டாம்.

பணியின் மீதான எனது ஊழலற்ற உழைப்புக்குக் கிடைக்கும் சம்பள உயர்வானால் அதனை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வேன் என்றவுடன் அதிகாரி, சச்சி நீங்கள் தமிழ்மொழி வெறியன் போன்று கதைக்கிறீர்கள் என்றவுடன் மாமவுக்கு கோபம் வந்துவிட்டது,

கோபத்துடன் மாமா இலங்கையனான நான் தமிழன் என்ற அடையாளம் கொண்டவனாக இருப்பதால்; நான் பேசுகின்ற நியாயங்களை கவனத்தில் எடுக்காது அதற்கு இனவெறிச் சாயம் பூசுகிறீர்கள்.

நீங்கள் மக்களின் பொதுப் பணியாளராகப் பேசவில்லை.தமிழர்களை மொழிமாற்றம் செய்யும் அரசியல்வாதிகளின் பிரதிநிதியாகப் பேசுகிறீர்கள் இப்படியே போகுமானால் எமது நாடு வெளிநாடுகளின் எடுப்பார் கைப்பிள்ளையாக மாறுவது தவிர்க்க முடியாததாகிவிடும் என மாமா சொன்ன போது, அதிகாரிகள் திகைத்துவிட்டார்கள்.

அரசியல் விஞ்ஞானமும் மானுடவியலும் படித்தவருக்குச் சமனாக அவர் விளங்கப்படுத்தியமை அவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

மாமாவிடம் அதிகாரிகள் என்ன முடிவு எடுக்கப் போகிறீர்கள் என்று கேட்ட போது,மற்றைய தமிழ்ப் பணியாளர்கள் என்ன முடிவு எடுக்கிறார்களோ தெரியாது.

அது அவரவர் விருப்பம்.ஆனால் நான் எனது வேலையிலிருந்து விலகிச் செல்கிறேன்.இந்தத் திணைக்களத்துக்கு நான் வரும்போது ஒரு சுதந்திர மனிதனாக வரவிரும்புகிறேன்.அடிமையாக வர என் மனம் இடம் கொடுக்காது.மனதைச் சிதைத்து வாழ்நாள் முழுவதும் எனது இனத்தை விற்றுவிட்டேனே என்ற குற்ற உணர்ச்சியுடன் நான் வாழ விரும்பவில்லை.

உலகத்தில் யாருக்குமே அடிமையில்லாத ஈடிணையற்ற ஒரு அறம் சார்ந்த தொழில் இருக்குது என்றால் அது விவசாயமே.

இந்தப் பூமி பெருமிதத்துடன் தனக்குச் சூட்டிக் கொண்ட கிரீடம் விவசாயமே என்று சொல்லிய மாமா, கூட்டத்தைவிட்டு வெளியேறியதுடன் வீட்டுக்கு வந்து வேலையை விட்டு விலகுவதாக கடிதத்தையும் எழுதி அனுப்பிவிட்டார்.

விலகல் கடிதத்தை தான் ஏன் எழுதுகிறேன் என்பதையும் திணைக்களத்தில் நடந்ததையும் மாமா மாமிக்குச் சொன்ன போது மாமி கோபப்படவுமில்லை கவலைப்படவுமில்லை, சந்தோசப்பட்டு அம்பனை வயலில் தோட்டம் செய்வோம் என்ற முடிவினை மாமியும் ஏற்றுக் கொண்டாள்.

யாருக்கும் பயப்படாமல்,எவரின் முன்னாலும் கூனிக்குறுகி நிற்காமல் நெஞ்சு நிமிர்த்தி வாழ்வதே சுதந்திரமான வாழ்வு என்ற முடிவை மாமாவும் மாமியும் எடுத்துக் கொண்டு விலகல் கடிதம் கொடுத்த ஒரு கிழமைக்குள்கொழும்பிலிருந்து பன்னாலைக்கு வந்தவர்கள் தாய்தகப்பன் வீட்டில் தங்கியிருந்தனர்.

பன்னாலையில் அவர்கள் வீட்டில் இருந்த போது பொன்னையாவை விட்டு விசாரித்தேன்.மாமாவும் மாமியும் எந்தக் கவலையுமில்லாமல் சந்தோசமாகவிருப்பதாக அவர் சொன்னார்.

சந்திரசேகரம் சொல்வதை நிறுத்தியதும் பிள்ளைகள் மூவரும் இதுவரை அறியாத கோணத்தில் தன்மானத்துடன் வாழும் மாமனாரையும் மாமியாரையும் தகப்பனாரின் விபரிப்பில் அறிந்து பெருமையுடன் மகிழ்ந்தனர்.

 

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button