கைம்மாறு!…. ( உருவகக்கதை )….. செங்கதிரோன்.

காட்டில் மேய்ந்து களைத்துபோய்த் தாகம் ஏற்பட்ட மான் நீர் குடிப்பதற்காகக் குளத்தை தேடிச் சென்றது.
நீர் நிரம்பியிருந்த குளத்தைக் கண்டதும் கரையை நாடிச் சென்று குனிந்து நீரின் மேற்பரப்பில் வாயை வைத்துப் பருகத் தொடங்கிற்று.
சற்றுத் தூரத்திலிருந்து மானைக் கண்டுவிட்ட பாரிய முதலை சத்தமில்லாமல் மானை நோக்கி வந்துகொண்டிருந்தது.
இதனைக் கண்டுகொண்ட மீன் மான்மீது இரக்கம் கொண்டு ஓடி வந்து மானைப் பிடிப்பதற்காக முதலை வந்து கொண்டிருக்கும் செய்தியை இரகசியமாகச் சொல்லிற்று. மான் மருண்டுபோய் குளக்கரையை விட்டு ஓட முற்படுகையில் வேகமாக வந்த முதலை மானின் ஒரு காலைக் கவ்விப்பிடித்தது. மானின் உயிரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று எண்ணிய மீன் தாமதிக்காமல் சென்று முதலையின் வயிற்றில் அடிப்பகுதியில் முட்டி முட்டிக் “கீச்சம்” காட்டியது. கூச்சத்;தைத் தாங்க முடியாத முதலை மானைவிட்டது. மறுகணம் மான் காட்டிற்குள் ஓடி மறைந்து உயிர் தப்பியது.
நாட்கள் கடந்தன.
ஒரு நாள் மான் அந்தக் குளத்தின் அருகால் போய்க் கொண்டிருந்தபோது மீனவன் ஒருவன் குளத்தில் வலை வீசிக் கொண்டிருந்தான். அதைக் கண்ட மான் அருகிலிருந்த மரமொன்றின் பின்னால்போய் மறைந்து கொண்டு நடப்பதை அவதானித்துக் கொண்டிருந்தது. குளத்தில் வலையை வீசிய மீனவன் சிறிது நேரத்தின்பின் அதனை மீள இழுத்து அதில் அகப்பட்டிருந்த மீன்களைப் பிடுங்கிக் கரையில் வைத்திருந்த சுரக் கூட்டிற்குள் போட்டு விட்டு ஈரமான வலையை உலர்த்தப் போடுவதற்காக அப்பால் மேட்டுப் பக்கம் பற்றைகள் படர்ந்திருந்த இடத்தை நோக்கிச் சென்றான்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த மான் உடனே ஓடிவந்து மீன்கள் போடப்பட்டிருந்த சுரக் கூட்டினைத் தனது காலால் உதைத்து நிலத்தில் கவிழ்த்தது.
சுரக்கூட்டிற்குள் துடித்துக் கொண்டிருந்த மீன்களெல்லாம் துள்ளிக் குதித்து நீருக்குள் ஓடி மறைந்தன.
முதலையிடமிருந்து தன்னை மீட்ட மீனைத் தான் இப்போது காப்பாற்ற நேர்ந்ததனை எண்ணிய மகிழ்வுடன் மானும் காட்டுக்குள் ஓடி மறைந்தது.
![]()