கதைகள்

காதலர் விமானம்!….. 35 ….. ( நாவல் ) …… ஏலையா க.முருகதாசன்.

„ஒரு நோய்க்கு ஒப்பிறேசன் செய்ய வேண்டுமென்றாள் ஒப்பிறேசன் செய்துதான் ஆக வேண்டும்.பயந்தால் சாவுக்கும் வாழ்வுக்கும் இடையில் நடைப்பிணமாகத்தான் வாழ வேண்டும்.அவளைச் சச்சியுடன் அனுப்பி வைத்த, நான் எடுத்த முடிவு சரியென்று உறுதியாக நம்பினேன.காத்திருத்தல் காலவரையின்றி காத்திருப்பது அல்ல.அதற்கும் ஒரு எல்லையுண்டு.அதனால் கொப்பா மாமியின் நிலை உணராது அவசரப்பட்டு சத்தியம் செய்கிறார் என்று தெரிந்த போதும் நான் அமைதியாக இருந்தேன். 

 

சச்சிதானந்தம் உயர்தர வகுப்பில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டு இருந்தார்.மகேஸ்வரியும் அந்த வகுப்;பிலேயே இருந்தார்.

சச்சிதானந்தம் தொடர்ந்து படிப்பதை கைவிட்டு எஸ்.எஸ்.சியில் தனக்கு கிடைத்த சிறந்த தராதர சான்றிதழுடனும்,நல்லொழுக்கச் சான்றிதழுடனும் அரசாங்க எழுதுவினைஞர் பணிக்காக விண்ணப்பம் செய்திருந்தார்.

பள்ளிக்கூடத்தைவிட்டு விலகிய போது மகேஸ்வரியைச் சந்தித்த அவர் தொடர்ந்து படிக்குமாறு வலியுறுத்தும் போது, நான் இனி உங்களை எப்படிச் சந்திப்பது கதைப்பது என்று மகேஸ்வரி கேட்ட போது, எனக்கு யாழ்ப்பாணம் கச்சேரியிலோ அல்லது யாழ்ப்பாணத்தில் உள்ள கல்வித் திணைக்களத்திலோ வேலை கிடைத்தால் நாமிருவரும் சந்திப்பது சுலபம் என்று சொன்னார்.

வழமையாக மத்தியானச் சாப்பாட்டு இடைவேளையின் போது, மகேஸ்வரி வீட்டிலிருந்து கொண்டுவரும் மத்தியானச் சாப்பாட்டை வகுப்பிலிருந்து சாப்பிட்டுவிட்டு,பள்ளிக்கூடத்தின் கிழக்கு எல்லையோடு இருந்த தண்ணீர்ப் பைப்பில் கைகழுவி தண்ணீர் குடிப்பது வழக்கம்.

ஆனால் சச்சிதானந்தம் பள்ளிக்கூடத்தை விட்டுப் போகும் அன்று, மத்தியான இடைவேளையின் போது சாப்பாட்டையும் கொண்டுவரச் சொல்லி மகேஸ்வரியைக் கூட்டிக் கொண்டு மகாஜனாவின் மேற்குப்புற ஒழுங்கைக்கு மேற்குப்புறமாக இருக்கும் இரண்டாவது வைரகோவிலுக்கு அருகிலுள்ள நவமணியின் வீட்டுக்கு மகேஸ்வரியைக் கூட்டிக் கொண்டு போகும் வழியில், பள்ளிக்கூடத்தில் வைத்து எல்லாவற்றையும் ஒளிஞ்சு மறைஞ்சு கதைக்க முடியாது, அதனால்தான் சொந்தக்காரர் வீட்டில் வைத்து கதைப்பதற்காக கூட்டிக் கொண்டு போகிறன் என்று சச்சிதானந்தம் சொல்ல சம்மதிப்பது போல மகேஸ்வரி தலையாட்டினாலும்’ கொஞ்சம் பயமாக இருக்குது’ என்று அவள் சொல்ல’ நான் இப்ப உன்னைக் கூட்டிக் கொண்டு ஓடவா போகிறன்,

பயப்படாமல் வாருங்கள் „ என சச்சிதானந்தம் நவமணியின் வீட்டுக்கு கூட்டிக் கொண்டு போனார்.

நவமணி வீட்டில், நவமணி சமையலில் ஈடுபட்டிருந்ததால், அவர்களிருவரையும் அறைக்குள் இருந்து கதைக்கச் சொன்னாள்.விறாந்தையிலிருந்து கதைக்கும் போது தற்செயலாகவேணும்,அயல் வீட்டுக்காரர்களில் ஒருவரான சின்னத்தங்கம் வந்து இவர்களைக் கண்டால் புதினம் பரப்பும் அவரால் வீண் பிரச்சினை வரும் என்பதாலேயே அறைக்குள் இருந்து கதைக்கும்படி அறிவுறுத்தியிருந்தார்.

அறைiயின் கதவைக் கொஞ்சம் திறந்துவிட்டு அவர்கள் கதைச்சுக் கொண்டிருந்தனர்.தனது அண்ணன் ஆறு மாதத்திற்குள் தனக்கும் உங்களுக்கும் கல்யாணம் செய்து வைப்பதாகச் சொன்னதாக மகேஸ்வரி சச்சிதானந்தத்திற்குச் சொன்னதும்,அதற்குச் சச்சிதானந்தம் ஒரு வருசம் வரையும் பொறுமையாகவிருப்பம், ஒரு வருசத்துக்குள் எங்களுக்கு கல்யாணம் நடக்கவில்லை என்றால் பிறகு சரியான முடிவெடுப்பம் என்று சொன்ன அவர்,எனக்கு யாழ்ப்பாணத்தில் வேலை கிடைக்காமல் கொழும்பில் வேலை கிடைத்தால் அங்கிருந்து உங்களுடைய வீட்டுக்கு கடிதம் போட்டுக் கொண்டிருப்பன்,நீங்களும் நேரம் கிடைக்கும் போது கடிதம் போடுங்கள் என்று சொன்ன அவர்,நீங்கள் எழுதும் கடிதங்களில் உங்கள் வீட்டுச் சுகங்களையும் , உங்களுடைய படிப்பு, பள்ளிக்கூடத்தி;ல் நடக்கும் உதைபந்தாட்டப் போட்டிகள் பற்றி மட்டுமே எழுதுங்கள், எந்தக் காரணம் கொண்டும் எங்களுடைய கல்யாணம் பற்றி அதில் குறிப்பிட வேணடாம் என்று சொன்னார்.ஆனால் சித்திக்கு அனுப்பி உங்களுக்குக் கொடுக்கச் சொல்லும் கடிதத்தில் எல்லாவற்றையும் நான் எழுதுவேன் என்ற போது  நான்அப்படியென்றால் எனது மனநிலையை எப்படித் தெரிவிப்பது என்று கேட்க,நீங்கள் கடிதத்தை எழுதி சித்தியிடம் கொடுத்தால் அவர் அனுப்பி வைப்பார் என்றார்.

கொண்டு வந்த சாப்பாட்டைச் சாப்பிடச் சொல்ல,’நீங்கள் சாப்பிடேலையா, நிறையப் புட்டுக் கொண்டு வந்தனான் இரண்டு பேருக்கும் போதும், குழைச்சுத் தாறன் சாப்பிடுங்கோ „ என்று மகேஸ்வரி சொல்லிக் கொண்டே புட்டை பொரித்து வைத்த கத்தரிக்காய்க் குழம்புடன் கலந்து குளைத்து சச்சிதானந்தத்தின் உள்ளம் கையில் வைக்க அவர் சாப்பிட மகேஸ்வரியும் சாப்பிட்டாள்.

மகேஸ்வரிக்கு கண்கலங்கத் தொடங்கிவிட்டது.அதைப் பார்த்த சச்சிதானந்தமும் கண்கலங்கினார்.அந்த நேரம் நவமணி கதவைத் தட்டி சமைச்சு முடிஞ்சுது இரண்டு பேரும் சாப்பிட்டிட்டுப் போகலாம் என்று சொல்ல’ இல்லைச் சித்தி நாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறம் வேணடாம் என்று சொல்ல,மெதுவாகக் கதவைத் திறந்த நவமணி அங்கே மகேஸ்வரி புட்டைக் குழைச்சு சச்சிதானந்தத்திற்கு கொடுத்துக் கொண்டிருப்பதைக் கண்டதும், நவமணி என்ன நினைத்தாரோ தெரியாது,’டேய் சச்சி மகேஸ்வரி உனக்கு கிடைச்ச அதிர்ஸ்டமடா,பெண்சாதி மாதிரி உன் பசியறிந்து எவ்வளவு அன்பாய் தனக்குக் கொண்டு வந்த சாப்பாட்டை உனக்கு பகிர்ந்து தாறாள்,

எந்தச் சூழ்நிலையிலும் அவளைக் கைவிட்டிடாதை’ என்று சொல்ல, „சித்தி அவள் என்றோ எனக்கு மனைவியாகிவிட்டாள், பிச்சையெடுத்தாலும் அவளைக் காப்பாற்றுவன் அவள்தான் எனக்கு எல்லாமே’ என்றவுடன் மகேஸ்வரி குலுங்கிக் குலுங்கி அழ, நவமணி தான் அந்த இடத்தில் நிற்கக்கூடாது என்று கதவை மெதுவாகச் சாத்திவிட்டு வெளியே போக,சச்சிதானந்தம் மகேஸ்வரியின் தலையை நிமிர்த்தி கண்ணீரைத் துடைத்துவிட கண்ணீர் திரையிட்ட கண்களுடன் „என்னைக் கைவிட்டு விடாதீர்கள் „ என்பது போல மகேஸ்வரி சச்சிதானந்தத்தைப் பார்க்கிறாள்.

சாப்பிட்டு முடிந்து கைகழுவிவிட்டு,நானும் அவரும் வைரவ கோவிலைத் தாண்டி சிதம்பரப்பிள்ளை வீட்டைக் கடக்கையில், அவர்களின் வீட்டு விறாந்தையில் நின்ற சிதம்பரப் பிள்ளையின் மூன்றாவது மகள் கிளி சச்சியோடை யாரோ ஒரு பெட்டை போகுது என்று சொல்லிக் கொண்டே படலை வரையில் வந்த போது நான் பயந்தேன்.

 

சச்சி சொன்னார் திரும்பிப் பாரக்காமல் நடக்கச் சொல்லி.நான் ஒரு கிழமைக்கு ஒருமுறை நவமணிச் சித்தி வீட்டுக்குப் போவேன் அவரிடமிருந்து எனக்குரிய கடிதம் வந்திருக்கிறதா என்று பார்க்க.

ஒரு நாள் சிதம்பரப்பிள்ளையின் மகள் என்னை மறித்து என்னைப் பற்றி அறிய முயற்சித்தார், நான் பிடி கொடுக்காமல் கதைச்சன்.

மாமியால் நிம்மதியாக இருக்க முடியவில்லை.மாமவின் கடிதம் அவளின் மனநிலையும் அவளை ஒரு முடிவுக்கு வரும் நிலைக்கு உந்தித் தள்ளியது.

இந்தச் சூழ்நிலையிலும் மாமி அட்வான்ஸ் லெவல் இரண்டாம் ஆண்டு இறுதிப் பரீட்சை எழுதி யூனிவேர்சிற்றிக்கு போகுமளவிற்கு மார்க்ஸ் எடுத்திருந்தாள்.ஆனால் யூனிவேர்சிற்றியில் படிக்க வேண்டும் என்ற ஆசைஅவளுக்கு இருக்கவேயில்லை.

இனியும் பொறுக்க ஏலாது,தனது தேவை எது என்பதை மாமா விபரித்து எழுதிய கடிதத்தை எனக்கு மாமி வாசித்துக் காட்டினார்.அதில்,’என்னை மற்றவர்கள் நல்லவன் என்று சொல்வதாலோ அல்லது நேர்மையானவன் என்று சொல்வதாலோ அல்லது அடக்கமானவன் என்று ஊர்உலகம் சொல்வதாலோ அது எனதும் உனதும் வாழ்வாகாது.

ஒழுக்கம் என்பது எம்மை நாமே தீர்மானிக்கும் அளவு கோல்.அதற்காக இளமையை வீணடித்து அதற்குத் தீர்வாக இளமையின் வடிகாலாக தவறான பாதையைத்; தேர்ந்தெடுத்து வாழ்வைச் சீரழிக்க நான் விரும்பவில்லை.

சச்சி என்பவனின் வாழ்வோ மகேஸ்வரி என்பவளின் வாழ்வோ வெறும் நல்ல பிள்ளைகள் என்று ஊரார் சொல்ல,அதைக் கேட்டுச் சகோதரர்களும்,உறவினர்களும் பெருமிதம் கொள்வதுதான் வாழ்க்கையல்ல.

உடல் தனது ஆசையை நியாயமான முறையில் பூர்த்தி செய்யும் போதுதான் ஆன்மா அமைதியடையும்,காலம் கோபங்களைத் தணிய வைக்கும்.நான் ஐயனார் கோவில் திருவிழாவில் வைத்து உன்னைக் கூட்டிக் கொண்டு கொழும்புக்கு போவேன் என்றிருந்த கடிதத்தை என்னிடம் காட்டினாள்.

எவ்வளவு நம்பிக்கை வைத்து எனனிடம் காட்டியிருக்கிறாள் என்பதை உணர்ந்த நான் அவளுக்கு உதவி செய்வதென்று முடிவெடுத்தேன்.

குரு அப்பொழுது கைக்குழந்தை. அவனையும் தூக்கிக் கொண்டு கொப்பாவிடம் திருவிழாவுக்குப் போட்டு வாறம் என்று சொல்லிப் போட்டு மாமியையும் கூட்டிக் கொண்டு திருவிழாவுக்குப் போனோம்.

மாமி அன்று பாவாடை அரைத்தாவணி கட்டி கனகாம்பரப் பூச்சரத்தை தலையில் வைத்திருந்தாள். இரவு ஒன்பது மணிபோல சச்சி சொன்ன இடத்திற்குப் போனோம்.அவரிடம் மாமியை ஒப்படைத்து,’ உங்களை நம்பி வாறாள் கவனமாகப் பாருங்கள்’ என்று சொன்ன நான் „அடிக்கிற புயலில் நிமிர்ந்து நில்’என்று பூடகமாக மாமிக்குச் சொல்லிவிட்டு,எதுவுமே நடக்காதது போல திருவிழாவைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

எங்களைக் கூட்டிக் கொண்டு போகவென கொப்பா வநதார்.மாமி எங்கை என்று கேட்டார்.நானும் அப்ப தொடக்கம் தேடுறன் அவளைக் காணேலை என்றன். கொப்பாவிடம் ஒருவர் வந்து காதில் ஏதோ சொன்னார்.

கொப்பா என்னிடம் வந்து அவள் தன்ரை குணத்தைக் காட்டிப் போட்டாள்.இந்த ஐயனாரிலை சத்தியம் பண்ணிச் சொல்றன் இனி அவளுக்கும் எனக்கும் சாகும் வரையும் உறவும் இல்லை ஒட்டும் என்று கொதித்தார்.

ஒரு நோய்க்கு ஒப்பிறேசன் செய்ய வேண்டுமென்றாள் ஒப்பிறேசன் செய்துதான் ஆக வேண்டும்.பயந்தால் சாவுக்கும் வாழ்வுக்கும் இடையில் நடைப்பிணமாகத்தான் வாழ வேண்டும்.அவளை சச்சியுடன் அனுப்பி வைத்தஎன்; எடுத்த முடிவு சரியென்று உறுதியாக நமபினேன.காத்திருத்தல் காலவரையின்றி காத்திருப்பது அல்ல.அதற்கும் ஒரு எல்லையுண்டு.அதனால் கொப்பா மாமியின் நிலை உணராது அவசரப்பட்டு சத்தியம் செய்கிறார் என்று தெரிந்த போதும் நான் அமைதியாக இருந்தேன்.

இடைமறித்த குரு,அப்பாவிடம் வந்து சொன்னவர் என்ன சொன்னவராம்.

அதற்குச் சந்திரசேகரமே பதில் சொன்னார். „பொன்னையா வந்து உன்ரை தங்கச்சியை ஒரு பொடியன் சைக்கிளில் கூட்டிக் கொண்டு போனதைக் கண்டனான்.அந்தப் பொடியன் பன்னாலையிலிருக்கிற உங்கடை சீனித்தம்பியின் பந்தடிகாற மகனாகததான் இருக்க வேணடும் என்றார்.

அந்தப் பொடியனைத்தான் தங்கச்சி விரும்புகிறாள்,செய்து தாறன் என்று சொன்னனான் அதறகுள் அவசரப்பட்டிட்டாள் என்று சொல்ல,அவர் சரி இதை

அப்படியே விடு, ஒருத்தருக்கும்; தெரியாமல் இருக்கட்டும்,இப்ப என்ன நடந்து போச்சுது விரும்பினவனோடை போயிட்டாள்.இது ஊர்உலகத்திலை நடக்கிறதுதானே என்று சொன்னவர்,சரி ஒருக்கா போய் விசாரிப்பம் என்றார்.

நான் கொம்மாவை வீட்டிலை இறக்கிவிட்டு,தெல்லிப்பழை பன்னாலையிலுள்ள மாமாவின் வீட்டுக்கு பொன்னையாவையும் கூட்டிக் கொண்டு போனன்.மாமாவின் தகப்பன் சீனித்தம்பி ஓரளவில் சொந்தந்தான். பொன்னையாவும் எங்களுக்குச் சொந்தந்தான்.

நான் காரைவிட்டு இறங்கவில்லை.பொன்னையா சீனித்தம்பியின் வீட்டுககுப் போக சீனித்தம்பியும் பெண்சாதியும் வரவேற்று இருக்கச் சொல்லியிருக்கினம்.மாமாவுக்கு ஒரு தமக்கை .தமக்கையும் புருசனும் அங்கை நின்றிருக்கினம்.

பொன்னையாவை ஒரு அறைக்குள் அழைத்துக் கொண்டு போன மாமாவின் தமக்கையின் புருசன் அங்கை மாமியும் மாமாவும் இருப்பதைக் கண்ட பொன்னையா „மாமியிடம் பயப்படாதை,கவலைப்படாதை நீ எடுத்த முடிவு சரியானதே.கெதியிலை கொழும்புக்குப் போங்கோ என்றவுடன், மாமா சொல்லியிருக்கிறார்.விடிய யாழதேவியிலை போறம் என்று.

பொன்னையா மாமியின்ரை தலையில் கைவைத்து நான் கொப்பாவுககுச் சொல்லமாட்டன்,இது ஐயனார் மீது சத்தியம் என்று சொல்லிவிட்டு,கொப்பா காருக்குள்ளைதானிருக்கிறார்.அவர் வரமாட்டார் காலம் எல்லாத்தையும் சரிப்படுத்தும் கொழும்புக்கு போய் சந்தோசமாய் வாழுங்கள் என்று சொன்னவர்,சட்டைப் பைக்குள் இருந்த ஐந்நூறு ரூபாயை எடுத்து மாமியின்ரை கையிலை கொடுத்துவிட்டு,வேகமாக வநதவர் காறில் ஏறிக் கொண்டே அங்கை இல்லை போவம் என்று சொன்னதிலிருந்து மாமி அங்கைதான் இருக்கிறாள் என்றதை ஊகித்துக் கொண்டே அங்கிருந்து வெளிக்கிட்டு வீட்டுக்கு வந்திட்டம்.

 

காராலை இறங்கிய பொன்னையா,தங்கச்சியிட்டை பித்தளை மூக்குப் போணியிலை ஒரு தேத்தண்ணி குடிச்சாத்தான் நிம்மதியாக இருக்கும் என்று சொல்லிவாறு விறாந்தையில் ஏறும் போதே „தங்கச்சி ஒரு நல்ல தேத்தண்ணி போட்டு பித்தளை மூக்குப் போணியிலை தா’ என்று சொல்ல’ஓமண்ணை கொண்டு வாறன் „என்று சொல்லி,கொஞ்ச நேரத்திலை தேத்தண்ணியை குடுக்க,ஒரு மிடறு குடிக்க,கொம்மா „ அண்ணை எல்லாம் சரிதானே சூடு சீனி எல்லாம் அளவாகத்தானே இருக்குது என்று கேட்டுக் கொண்டே அங்கை போன அலுவல் என்ன மாதிரி என்று கண்ணை உயர்த்தி சாடையாகக் கேட்க, அவரும், எல்லாம் சரியாக இருக்குது,அருமை,மூக்குப் போணியிலை குடிக்கிற திருப்தியிருக்குதே அது தனியானது என்று சொல்லி குடிச்சு முடிச்சவர்,மச்சான் யோசிக்க வேண்டாம் தங்கச்சி நான் வாறன் என்று சொல்லிக் கொண்டே போய்விட்டார்.

சினிமாப்படம் பார்த்த மாதிரி மூன்று பிள்ளைகளும் கையிலை நாடியை வைத்தபடி கேட்டுக் கொண்டிருந்தவர்கள்.தாயையும் தகப்பனையும் உற்றுப்

பார்த்தவர்களில்;, குரு தாயைப் பார்த்து’அம்மா நீங்கள் ஒரு கில்லாடிதான் மாமியைக் கொண்டு போய் அனுப்பிப் போட்டு,பொன்னையா மாமாவுக்கு தேதண்ணி குடுக்கிற மாதிரி குடுத்து,சீனியையும்,சூட்டையும் மாமி பன்னாலையிலை நிற்கிற சமிக்ஞைச் சொல்லாக்கி….அப்பப்பா சும்மா சொல்லக்கூடாது அம்மா நீங்கள் பெரிய ஆள்தான் என்றவன், அது சரி மாமி ஓடிப் போக உதவி செய்தது நீங்கள்தான் என்று தெரிஞ்சதற்குப் பிறகு அப்பா உங்களோடை சண்டை பிடிக்கேலையோ என்று கேட்க „ அவர் என்னெண்டு சண்டை பிடிக்க முடியும்,மாமாவும் மாமியும் விரும்பிய போது அவர்கள் இரண்டு பேரும் சந்திச்சதைவிட கொப்பா என்னைக் கூட்டிக் கொண்டு படத்துக்கும் திருவிழாக்களுக்கும் போனதுதான் அதிகம்’ என்று தாய் சொல்ல,சாந்தினி, காசு வாங்காமல் துணி குடுத்தது அதையும் சேருங்கம்மா „ என்று சொல்ல,அது சரி பிறகு என்ன நடந்தது என்று சாகித்தியன் கேட்க, தாய் ,கொழும்புக்கு மாமியைக் கொண்டு போன மாமா உடனடியாகவே கோவிலில் வைத்து தாலி கட்டினது மட்டுமல்ல, பதிவுத்திருமணத்தையும் செய்துவிட்டார்..என்று சொன்னவள்….

ஒரு கிழமைக்குப் பிறகு மாமியிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது.தபால் உறைக்குள் இரண்டு கடிதங்கள் இருந்தன.ஒன்று கொப்பாவுக்கு மற்றது எனக்கு.அப்பாவுக்கு என்று இருந்த கடிதத்தில்„ என்றும் அன்பு காட்டும் அண்ணைக்கு பிறாகட்டுக்குள் அம்மா என்று போட்டு அனைத்துக்குமாக உங்கள் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கிறேன்.அவர் எனக்குத் தாலி கட்டி நாங்கள் பதிவுத் திருமணமும் செய்துவிட்டோம்.என்றும் அன்புடன் உங்கள் அன்புத் தங்கச்சி என்றிருந்தது.கொப்பாவிடம் கடிதத்தை கொடுத்தேன்.அவர் வாங்கி வாசித்துவிட்டு அழுதார்.

எனக்கு மாமி அனுப்பிய கடிதத்தில், என்றும் அன்புள்ள அண்ணி,நீங்கள் எனக்கு தோழியாக அம்மாவாகஇருககிறீர்கள்;.காதலென்றால் அது என்னவென்று உங்களுக்கும் தெரியும்.உடல்தான் வாழ்க்கையை வாழுகின்றது. உடலில்தான் மனம் என்ற ஆன்மா இருக்கின்றது.ஆன்மா தனியாக இல்லையென்பது உங்களுக்குத் தெரியும்.உடலின் தேவை நிறைவேறினால்தான் ஆன்மா அமைதியடையும்.அவரை அலைக்கழியாது அவரின் தேவையை நான் பூர்த்தி செய்ய வேண்டும்.நல்லவன், நல்லவள் என்று சமூகம் சொல்வதில் எந்த ஆணும் பெண்ணும் அதுதான் வாழ்க்கை என்று திருப்திப்பட்டுக் கொள்ள முடியாது.எது எப்ப தேவையோ அதை நானும் அவரும் செய்திருக்கிறோம்.உங்களுக்கு புரியாதது ஒன்றுமில்லை.காலம் எங்களைச் சேர்த்து வைக்கும்.என்றும் அன்புடன் உங்கள் மச்சாள் என்று எழுதிய கடிதத்தை வாசித்ததும் கண்கள் கசியத் தொடங்கியது.

அந்தக் கடிதத்தைப் பலமுறை எடுத்து வாசித்தன்.மாமி எழுதியது அத்தனையும் உண்மை, உங்களுக்கு சில யதார்த்தத்தைச் சொல்ல வேண்டும் என்றவள்,கணவனைப் பார்த்தாள் அவர் மனைவி சொல்லட்டும் என்று அமைதியாக இருந்தார்

எந்தக் குடும்பமாக இருந்தாலும் அண்ணி என்பவள் தோழிக்குச் சமமானவள். தனது கணவனின் தங்கைக்கு கல்யாணம் நடந்து முதல் இரவு முடிந்ததும் முதல் இரவின் சங்கதியைப் பூடமாக விசாரிப்பது அண்ணிதான்.

அறையைவிட்டு வெளியே வரும் மைத்துனியின் கையைப் பிடித்து அடுப்படிக்குள் அழைத்துச் சென்று காதோடு வாயாக தலைகுனிந்து முகம் சிவந்திருக்கும் மைத்துனியிடம் குறும்புத்தனமாகவும் அக்கறையாகவும், மைத்துனி போட்டிருக்கும் இரவு உடையை நோட்டம் விட்டுக் கொண்டே „ என்ன எல்லாம் சரிதானே, இடுப்பு நோகுதா என்று கள்ளச் சிரிப்புடன் கேட்க, மைத்துனி வெட்கத்துடன் „ம்’ என்று இரண்டுக்கும்; சேர்த்து தலையாட்டுவதும்,கேட்டுக் கொண்டே அண்ணி முட்டைக் கோப்பி அடிச்சு அதற்குள் சாப்பாட்டுக் கரண்டியளவு வெள்ளைச் சாராயம் விட்டுக் கலக்கிப்போட்டு கொண்டு போய் மனுசனுக்கு குடு என்று குடுத்துவிட,குடுத்துப் போட்டு வந்தவளுக்கு முட்டைக் கோப்பிக்குள் அவளுக்குத் தெரியாமலே வெள்ளைச் சாராயம் விட்டுக் குடுத்து’ குடிச்சிட்டுப் போய்,கெதியிலை தோய்,அவரையும் எழும்பிப் போய் குளிக்கச் சொல்லு என்று சொல்ல,முட்டைக் கோப்பியை குடிச்சு முடிச்சு போனவளை இழுத்து,எத்தனை தரம் என்று குறும்புத்தனமாகக் காதுக்குள்ளை கேட்க,வெட்கத்தில் கையைக் தொடைவரையும் கொண்டு போய் இரவு உடையை விரல்களால் கசக்கியபடி மூன்று விரல்களை மடித்து இரண்டு விரல்களை நீட்டிக் காட்ட,அண்ணிக்காரி கையால் தனது வாயைப் பொத்தி கண்களை அகல விரிக்க அன்று வருவோர் அண்ணிக்காரியோடு சங்கதி விசாரிக்க இப்படித்தான் பெரும்பாலான அண்ணிமார் இருபபினம் என்று சொன்னதும்.

பிள்ளைகள் மூவரும் இந்தச் செல்லம்மா இவ்வளவு காலமும் எங்கை இருந்தவர் என்று திகைக்க, பிறகு என்னம்மா நடந்தது என்று சாந்தினி கேட்க,தகப்பன் தானே சொல்லத் தொடங்குகிறார்.

 

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *