சிங்கப்பூரில் சில காலம்!…. பகுதி 5….. (உண்மைக் கதை) ….. ஏலையா க.முருகதாசன்.

சனிக்கிழமை நானும் நீங்களும் அம்மன் கோவிலுக்குப் போக வேணுமென்றாள்.
ஏலையா க.முருகதாசன்…..
![]()
யோகமலர் முழுமையாக என்னைத் தன் கணவனாக்கிக் கொண்டாள்.நானும் அதனை என்னையறியாமலே ஏற்றுக் கொண்டேன்.
முதல் பார்வையில் ஈர்ப்பு உண்டாகி,பல நாட்களாக கண்ணும் கண்ணும் பேசி ,கண்கள் தமது கடமை முடிந்தது என்று இதழ்களிடம் பொறுப்பைக் கொடுக்க,இதழ்களின் புன்முறுவல் நீட்சியாகி பற்கள் தெரியச் சிரித்து சொற்களை உதிர்த்து வார்த்தைகள் உருவாகி, பிறகு விலகி நின்று கதைத்து, பிறகு விலகி நின்று கதைக்கும் தூரம் குறுகலாகி இடைவெளி சில சென்ரி மீற்றர்களாகி, நின்று கதைத்தல் இருந்து கதைத்தலாகி அதுவும் இடைவெளி குறுகி அவன் தோளும் அவள் தோளும் உரசியும் உரசாமலும்,அவள் தொடையும் அவன் தொடையும் உரசியும் உரசாமலும்; உரசிக் கொள்ளும் தொடுகையை விரும்பியும்;, விரும்பியதை காட்டிக் கொள்ளாமல் நடித்தும், மேசைக்குக் கீழே வைத்திருக்கும் அவன் அவளின் இரண்டு சோடிப் பாதங்களும் அங்குமிங்கும் கால் உழைய எடுத்து வைப்பது போல வைத்து, அவனின் பாதங்கள் மேல் அவள் பாதங்களை வைத்து, வைத்தலை விரும்பியும்,வைத்த கண் வாங்காது கண்கள் நிலைத்து நிற்க, அவனுக்கும் அவளுக்குமிடையில் மூச்சுக்காற்றுக்கள் சங்கமித்து சுழித்து நிற்க.அவள் இதழ்களின் ஈரலிப்பான மினுமினுப்பில் அவள் இதழின் சுவை என்று கிடைக்கும் என அவன் ஏங்கித் தவிக்க, அவன் ஏங்குவதை அவள் உணர்ந்து தவிக்கட்டும் என்று குறம்புக் கள்ளச் சிரிப்புடன் அவனைப் பார்க்க,கனவிலும் நினைவிலும் நடக்கையிலும் சாப்பிடுகையிலும் வேலைத்தளத்திலும் நித்திரை கொள்ள முன்பும், கனவிலும் பின் கற்பனையிலும் அவளின் உருவம் அவனுக்கும் ,அவனின் உருவம் அவளுக்கும் வந்து போக, தவிப்பில் உடல் உஸ்ணமாக இப்படி ஆகி ஆகித்தான் பரீட்சை எழுதி ஒவ்வொரு வகுப்பாக சித்தியடைவது போலத்தான் காதலில் சித்தி பெற முடியும்.
சித்தியும் கிறடிட், டிஸ்ரிங்சன் மார்க்ஸ் என்று எடுத்தால்தான் கணவன் மனைவி என்ற பட்டமளிப்புக்கு வந்து நிற்க முடியும்.
ஆனால் எனக்கும் யோகமலருக்கும் ஏற்பட்ட அறிமுகம் அரிச்சுவடியிலிருந்து றிபிள் புறமோசன் பிறகு அதிலிருந்து றிபிள் புறமோசன் பிறகு அதிலிருந்து றிபிள் புறமோசன் என இன்று நானும் அவளும் கணவன் மனைவியாகி விட்டோம்.நெற்றித் திலகமும், கழுத்துத் தாலியும் கணவன் மனைவிக்கான உத்தரவாதத்திற்கான சட்டபாதுகாப்பு என்று சொல்கின்ற பதிவுத் திருமணமும், இதில் எதுவுமே எங்களுக்கு இல்லை.
நம்முன்னோர்களில் பலர் தாலி கட்டாமலும் பதிவுத் திருமணம் இல்லாமலும் சோறு கொடுப்பித்தலுடன் திருமண பந்தத்தை ஆரம்பித்து பூட்டப் பிள்ளைகளையும் அதற்கு மேலேயும் வாரிசுகளைக் கண்டிருக்கிறார்கள்.
கறுப்பு பொட்டு இன்னும் இரண்டு கிழமைக்குள் என் நெற்றியில் உங்கள் விரல்களால் குங்குமப் பொட்டாக மாற்றி இன்னும் இறுக்கமாக மனைவி என்ற தகுதிக்கு என்னைக் கொண்டு வந்துவிடுவீர்கள் என்று அவள் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தாள்;.
நாட்கணக்கிலோ மாதக் கணக்கிலோ இரண்டொரு வருடக் கணக்கிலோ எதுவாக இருந்தாலும் உங்களுடன் வாழும் காலமே எனது உயிர் உடம்பிலிருக்கும் ஆயுட் காலம் என எண்ணிறந்த தடவைகள் சொல்லிவிட்டாள், இன்னும் சொல்லிக்; கொண்டிருக்கிறாள்.உங்கள் கைகளை அணைத்து தோள்மீது சாய்ந்து இருக்கும் தருணங்களே கடவுள் எனக்குக் கொடுத்த வாழ்வுத் தருணங்கள் என்பாள்,அதனை நான் ஒரு விநாடிப் பொழுதும் இழக்க மாட்டேன் என்பாள்.
என் இதயத்துக்குள் அவள் நுழைந்து போது அவளுக்கு இருபத்தேழு வயது.தனது அயுள் இருபத்தேழிலும் முடியலாம்,இருபத்தெட்டிலும் முடியலாம், இருபத்தொன்பதிலும் முடியலாம் என்பாள்.
உங்கள் தோள் மீது தலை வைத்திருக்கும் போது எனது உயிர் போகும் மகிழ்ச்சி எனக்கு வேணும் என்பாள்.
நீங்கள் சிறீலங்காவிற்கு போவதற்காக விமான நிலையத்துக்கு வந்து உங்களை வழியனுப்ப கையசைப்பேனே அப்பொழுது என் உயிர் பிரிய வேண்டுமென்பாள்.
உங்களை எப்படி வழியனுப்பி வைப்பேன் என்று கண்ணீர் சொரிவாள்.அவள் வேலை முடிந்து பஸ் ஏறுவதற்காக போய் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்து கையசைப்பவள் பஸ் என் கண்ணிலிருந்து மறையும் வரை கையசைத்துக் கொண்டேயிருப்பாள்.
வீட்டில் இருக்கும் நேரமும் பஸ்ஸில் இருக்கும் நேரமும் உயிரற்ற உடலாக நானிருப்பேன், அடுத்த நாள் வேலைக்கு வந்து,என் கண்கள் உங்களைத் தேடிப் பார்த்து மகிழ்ச்சி கொள்கின்ற போதுதான் என் உயிர் உடலுக்குள் வருகிறதென்பாள்.போகும் போது என்னுயிரைக் கொண்டு போய் மீண்டும் கொண்டு வந்து உடலுக்குள் விடுகிறீர்கள் என்பாள்
அவள் அழாத நாட்களே இல்லை.நீங்கள் சிங்கப்பூரில் இருக்கும்; போதே என் உடலில் மாற்றமுடியாத நோய் வந்து உங்கள் மடியில் சாகவேண்டும் உயிர் போக வேண்டும் என்பாள்.
ஏன் இங்கு வந்தீர்கள்.எதற்காக வந்தீர்கள். விதி ஏன் உங்களை இங்கு அனுப்பி வைத்தது என்பாள்.அவள் மனைவிக்கும் மேலே நின்றாள். என்னை அவள் கணவன் என்ற வரையறைக்குள் பார்க்கவில்லை.தனக்காக படைக்கப்பட்டவரை தனது இருபத்தேழாவது வயதில் விதி காட்டியிருக்கிறது என்பாள்.
எங்களுக்குள் இருப்பது என்ன.நான் இப்படியே இருந்தால் மனைவி பிள்ளைகளை மறந்து வாழ்நாள் பூராவும் இங்கேயே இருந்து விடுவேனோ எனப் பயந்தேன்.
நீ செய்வது தவறு என்று மனம் சொல்ல மூளையோ அது உன் விதி என அதன் சுவையை உணர வைக்கும்.வேலைக்கு வந்தவிடத்தில் என்னை ஆறுதல்படுத்த ஆற்றுகைப்படுத்த விதி எனக்கு அவளைக் காட்டியிருக்கிறது என நினைத்தேன்;.நான் நடந்து கொள்வது சரியா பிழையா என்பதை, சிலருக்கு இப்படியான வாழ்வு உண்டு அதை நீ நிராகரிக்க முடியாது,ஏதோ ஒரு பூர்வஜென்ம பந்தம் அவளை உனக்குக் காட்டியிருக்கிறது என்று எனது மூளை சொல்லும்.
அவளோடு இருக்கையில் அது நிஜம் என்ற நிலையிலும் இது கனவோ என மனம் நினைக்கும்
இரவுச் சாப்பாட்டு இடைவேளையின் போது ,மிசின்கள் இருக்கும் மண்டபத்திற்கு வெளியே படிகள் போன்ற ஒரு இடத்தில் இருந்துதான் சாப்பிடுவோம்.
வெளிச்சமும் இருளுமான மற்றவர்கள் பார்வையில் பளிச்சென்று தெரியாத வெளிச்சத்தில் இருந்துதான் அவளும் நானும் சாப்பிடுவோம். ஒரு கணவனுக்கு மனைவி எப்படி அன்புடனும் அக்கறையுடனும்; சாப்பாடு கொடுப்பாளோ,அது போலவே அவளும் சாப்பாடும் தேநீரோ கோப்பியோ தருவாள்.
சிறீலங்கா பிள்ளைகள் அங்கிருந்து பாரக்;கிறார்களே என்ற ஒரு பயத்தில் இருந்த நான் இப்பொழுது அவள் என் தோள்மீது சாய்ந்திருக்க வேண்டும் என்று விரும்பினேன்.
அதனால் அவர்கள் பார்த்தால் என்ன பார்க்காவிட்டால் என்ன என்று பயம் நீங்கிய நிலையில் திடமாகவிருந்தேன்.
இரவுச் சாப்பாட்டை முடித்துக் கொண்டு மீண்டும் நான் உதிரிப் பாகத்தை வெட்டிக் கொட்டும் மிசினை இயக்கத் தொடங்கினேன்.உதிரிப் பாகங்களின் தரத்தை கண்காணிக்கும் குவாலிற்றிக் கொன்ரோலர் ஆசா அரை மணித்தியாலத்திற்கு ஒருமுறை வந்து உதிரிப் பாகங்களை எடுத்துப் பரிசோதித்துக் கொணடிருந்தாள்;.
பரிசோதிக்கும் போது உதிரிப் பாகங்கள் சரியான அளவில் தரமாகவிருந்தால்; பெருவிரலையும் சுட்டும் விரலையும் வட்டமாகத் தொட வைத்து தரமாக இருக்கின்றது என்று சைகையால் காட்டி மேற்பக்கமாக கையை உயர்த்தினால் தொடர்ந்து மிசினை ஓடவிடுங்கள் என்று அர்த்தம்.
உதிரிப் பாகங்கள் தரமாகவிருந்தததால் மிசின் தொடர்ந்து ஓடட்டும் என சைகை காட்டியவள்,மிசினிலிருந்து கொஞ்சம் விலத்தி வந்து நின்று கேட்டாள்
„இரவுச் சாப்பாடு ஜோகூர்பாரு மனைவியிடமிருந்து வருகுது போல,கொடுத்து வைச்சனீங்கள் குட்லக் என்று சொல்லிச் கண்களை அங்குமிங்கும் அசைத்து சிரித்துக் கொண்டே போய்விட்டாள்.
யோகமலருக்கு ஓரளவு மலாய் மொழி விளங்கும் என்பதால் ஆசா அவளிடமும் போய்க் கதைப்பாள்.யோகமலர் இயக்கும் மிசினைப் போன்று நிரையாக ஒரு நிரைக்கு பத்து மிசின்கள் வீதம் இரண்டு பக்கமும் இருபது மிசின்கள் இருந்தன.
ஆனால் எல்லா மிசின்களும் ஒரே நேரத்தில் இயங்குவதில்லை.சில நாட்களில் பத்து மிசின்களே இயங்கும்.காலமை வேலை நாட்களில் இயக்கப்படும் மிசின்கள் மாலை வேளை வேலையின் போது இயக்கப்படுவது இல்லை.
சேர்விஸ் என்ற பராமரிப்புக்காக அவை நிறுத்தி வைக்கப்படுவதுண்டு.பராமரிப்புச் செய்வதற்கும் அவற்றின் பாகங்களை முற்றுமுழுதாக கழற்றி பழுதடைந்த பாகங்களுக்குப் பதிலாக புதியவற்றைப் பூட்டி மிசின்களை சரியாக இயங்கும் நிலைக்கு கொண்டுவருவதற்கும் சீனர் இருவரும் மலாய்க்காரர் ஒருவர் என மூன்று மெக்கானிக்குகள் இருந்தனர்.
நான் இயக்கும் மிசின் ஒழுங்காகத்தானே இயங்குகின்றது என்றதால் அங்கிருந்து வேகமாக யோகமலர் இருந்த இடத்திற்கு வந்து அவளருகில் நிற்க,அவள் வேலை செய்து கொண்டே „ஆசாவோடை சிரித்துக் கதைச்சியளே அவள் என்ன கதைச்சவள் „என்று கேட்க, ஜோகூர்பாரு மனைவி இரவுச் சாப்பாடு கொண்டு வந்து தருகிறார் போலவிருக்கு நீங்கள் குடுத்து வைச்சவன் என்று சொன்னவள் என்று சொன்னேன்.
என்னிடமும் வந்து சிறீலங்கா கணவனுக்கு சாப்பாடு கொண்டு வந்து கொடுக்கிறியள் என்று கேட்டுவிட்டு உங்களோட அவர் இருப்பாரா அல்லது சிறீலங்காவிற்குப் போய்விடுவாரா என்று கேட்டாள்.அதற்கு என்ன பதில் சொன்னனீங்கள் என்று கேட்க,அவரோடை நானும் சிறீலங்காவிற்கு போய்விடுவன் என்று சொன்னனான் என்றாள்;.அப்படியா சொன்னனீங்கள் என்று கேட்க, ஆமா அவளுக்கு இப்படித்தான் பதில் சொல்லனும்.எங்கட பேர்சனல் விசயத்தை இவள் ஏன் கேட்பான் என்றவள் அவளோட நீங்க பல்லிழிச்சுக் கதைக்க வேணாம்.வேல சம்பந்தமாக கேட்டால் பல்லைக் காட்டமா பல் தெரியாம கதைங்க என்று சொன்னாள்.
யோகமலர் இயக்கிக் கொண்டிருக்கும் மிசின்கள் போன்றவை காற்றழுத்தத்தினால் இயங்குபவை. ஆதலால் இரைச்சல் வராது.அதனால் இடைஞ்சல் இல்லாது கதைக்க முடியும்.ஜிஇ என்ற அந்த அமெரிக்கன் பக்ரறியில் தொழிலாளிகளுக்கு என்று யூனிபோர்ம் எதுவுமில்லை.அதனால் தொழிலாளர்கள் விரும்பிய உடையில் வேலைக்கு வரலாம்.
என்னிடம் எப்பொழுதும் நீளக்கைச் சேர்ட்டை முக்கால்கைவரை மடித்துவிடும் பழக்கமிருக்கும்.சிங்கப்பூர் ஜிஇ பக்ரறியில் வேலை செய்யும் போதும் அந்தப் பழக்கமிருந்தது.அந்த ஸ்ரைல் யோகமலருக்குப் பிடித்திருந்தது.
யோகமலருடன் கதைத்துக் கொண்டிருக்கும் போதே நான் இயக்கி ஓடிக் கொண்டிருக்கும் மிசினின் சத்தத்தை காதைக் கொடுத்து உற்றுக் கவனித்த போத அது ஒழுங்காக இயங்குவது கேட்டது.
அந்த மிசின் ஒரு லேத் மிசின் போன்றது. அந்த மிசினில் மேல் பாகத்தில் பொருத்தப்பட்டிருக்கும் லேத் பகுதி கீழ் பீடத்தில் உள்ள லேத் பகுதியுடன் வேகமாக கீழ் நோக்கி வந்து சேரும் போது அதன் இடைவெளிக்குள்ளால் நுழையவிடப்படும் தகடு உதிரி;ப்பாகமாக வெட்டப்படும்.வெட்டப்படும் உதிரிப் பாகத்தை காற்றூதல் இயந்திரம் ஊதித்தள்ள வெட்டப்பட்ட உதிரிப்பாகம் கீழே வைக்கப்படடிருக்கும்;; பெட்டிக்குள் போய்விழும்.
வேலை செய்யும் போது தேவையேற்படின் ஒருவருக்கொருவர் கதைக்கலாம்.ஆனால் அதுவும் விநாடிப் பொழுதுகளுக்கு உட்பட்டே இருக்க வேண்டும்.
நான் உதிரிப்பாக மிசினை இயக்கிய நாள் வியாழக்கிழமை.வேலை முடிந்து போகும் போது வழமை போல „புருசனாரே நான் போயிட்டு வர்றேன், போய் நல்லா தூங்குங்க.சனிக்கிழமை நான் உங்களையும் கூட்டிக்கிட்டு இங்கவுள்ள அம்மன் கோவிலுக்குப் போகனும்’ என்றாள்.’ ஏன்’என்று கேட்ட நான் ஜோகூபாருலிருந்து சனிக்கிழமை இங்கை வாறீங்களா „எனக் கேட்க, „ஆமா வருவன்,வர்ற சனிக்கிழமை மட்டுமில்லீங்க ஒவ்வொரு சனிக்கிழமையும் வருவன்.சனிக்கிழமையிலும் நீங்க என்கூடதானிருக்கனும்’ என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே பக்ரறியின் கேற்றடிக்கு வந்துவிட்டோம்.கேற்றுக்கும் பக்ரறி பில்டிங்க்கும் நூற்றம்பது மீற்றர் இருக்கும்.
அவள் குட்நைட் அன்ட் குட் பை என்று சொல்ல நானும் அவளுக்குச் சொல்ல,பஸ்ஸில் கால் வைத்தபடியே முகத்தைத் திருப்பி நல்லாத் தூங்குங்க நாளைக்கு சந்திப்பம் „எனச் சொல்ல நானும் எனது பஸ்ஸில் போய் ஏறினேன்.
மாலைநேர வேலைக்கு உடுவிலைச் சேர்ந்த சூரியகுமாரனே என்னுடன் வந்து கொண்டிருந்தார்.பஸ்சுக்குள் இருந்த அவர் பொஸ் இங்கை வந்து இருங்கள் என்று தனது அருகிருக்கையைக் காட்டினார்.சூரியகுமாரனைப் பார்த்ததும் அவருடைய அண்ணனின் ஞாபகத்துடன் ஊரிலிருந்து வெளிக்கிட்டு சிங்கப்பூருக்கு வந்த படிப்படியான ஞாபகங்களும் வந்தன.
சிங்கப்பூருக்கு வருவதற்கு உடுவிலில் உள்ள சபா சின்னத்தம்பியின் வீட்டிலிருந்தே வெளிக்கிட்டோம்.
சிங்கப்பூருக்கு வெளிக்கிட முன்பு எங்களுக்கு சிங்கப்பூரிலிருந்து ஒரு சீனர் வந்து எமக்கு நேர்முகப் பரீட்சை வைத்து தெரிவு செய்திருந்தார்.
சிங்கப்பூருக்கு வெளிக்கிடுகிற அன்று போகிறவர்களை அனுப்பி வைக்க பெற்றோர்கள் சகோதரங்கள் உடுவிலுக்கு வந்திருந்தனர்.
என்னை அனுப்பி வைக்க எனது மனைவி,மூன்று பிள்ளைகள் மைத்துனிமார் இருவர், மனைவியின் மாமா என வந்திருந்தனர்.
எங்களுடைய ஆண்பிள்ளைகள் இருவரும் சிறுவர்கள்.மகள் அப்பொழுது குழந்தையாக இருந்தாள்.மகளை மைத்துனி ஒருவர் தூக்கி வைத்திருந்தார்.
மனைவிக்கு நான் சிங்கப்பூர் போவதில் பெரிதாக விருப்பம் இல்லை.சிங்கப்பூருக்கு போனால் கொஞ்சக் காசை உழைக்கலாம் என்பதுடன் சிங்கப்பூரையும் பார்க்கலாம் என்ற எணணத்தை மனைவிக்குச் சொன்ன போது „சரி’ என்று ஒப்புக் கொண்டாள்.
மனைவியை அவளின் அப்பா,அம்மா பெண் சகோதரங்கள், ஆண் சகோதரங்கள் கவனமாக பார்த்துக் கொள்வார்கள் என்கின்ற அசைக்கமுடியாத நம்பிக்கை மட்டுமல்ல மனைவியின் பேரன் இன்னும் அதிகம் பாதுகாப்பார் என்ற நம்பிக்கையுந்தான் நான் சிஙகப்பூருக்கு போவது என்ற முடிவு எடுத்ததற்கு காரணமாகும்.
எனது மனைவி, எனக்கு மனைவியாவதற்கு முன் பெற்றோருடன் இருக்கும் போது,மனைவியின் தாயாரின் தந்தையான மனைவியின் பேரனுக்கு தனியாக சமைத்துக் கொடுப்பது, அவர் எனது மனைவிக்குத் தேவையானதை வாங்கிக் கொடுப்பது எனப் பாசம் காட்டி வந்தவர் பேரன்.
சிங்கப்பூருக்கு வெளிக்கிட முந்தி ஒரு நாள் மனைவி சொன்னாள் இரண்டு வருசமும் எப்படித்தான் தாக்காட்டப் போகிறியளோ தெரியாது எனச் சொன்னாள்.
மனைவிகளுக்கு மட்டுத்தான் தெரியும் கணவன்களின் பலம் என்ன பலவீனம் என்னவென்று.
உடுவிலில் எனது மூத்த மகன் போகாதீங்க அப்பா என்று அழுத போது மனைவி, மைத்துனிமாரும் அழுதனர்.இரண்டாவது மகனுக்குத் தாற்பரியம் தெரியாததால் அவர் அங்குமிங்குமாக நடந்து கொண்டிருந்தார்.அழுத மூத்த மகனுக்கு ஆறுதல் சொன்னவர் சூரியகுமாரனை அனுப்ப வந்த அவருடைய அண்ணன்.அப்பா கெதியிலை வந்துவிடுவார் என்று ஆறுதல்படுத்தினார்;.அவர் மிகவும் டீசன்டாகவும் கனவானைப் போன்றுமிருந்தார்.
எல்லோரிடமும் விடைபெற்று, எமக்கென்று ஒழுங்கு செய்யப்பட்ட வானில் போய்க் கொண்டிருந்தோம்.நான் கொழும்புக்குப் போய்ச் சேரும் வரை அழுகையும்; கண்ணீருமாக இருந்தன்.
தேவையில்லாமல் சிங்கப்பூருக்கு வெளிக்கிட்டிருக்கிறன் என்று மனம் தவித்தது.
சிங்கப்பூருக்கு வெளிக்கி;ட முதல் நாள் மனைவிக்குச் சொன்னேன் , நான் போகாமல் நிற்கப் போகிறன் என்று.மனைவி சொன்னாள்
போகவெண்டுமென்று ஆசைப்பட்டிட்டியள் யோசிக்காமல் போட்டு வாங்கோ,அப்பு (பேரன்) இருக்கிறார்,அம்மா அப்பா இருக்கினம், தம்பிமார் தங்கச்சிமார் இருக்கினம் ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம் என்றாள்.
மனைவியின் தாயார்,நாங்கள் இருக்கிறம் ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம் போயிட்டு வாங்கோ என்றார்.
வானிற்குள் சினிமாப் பாடல்கள் பாடிக் கொண்டிருந்தன.அதில் „பூங்கதவே தாழ் திறவாய்’ என்று தொடங்கும் பாட்டை திரும்பத் திரும்ப போடும்படி கேட்டு கொண்டிருந்தவர்களில் முக்கியமானவர் ஜெகதீஸ்வரி என்ற பிள்ளை.
அவர் என்னோடு சிங்கப்பூருக்கு வந்த, வட்டுக்கோட்டையைச் சேர்ந்த இராஜரட்ணம் என்ற இளைஞனின் மைத்துனி.அவர் பெற்றோருடன் நீர்கொழும்பில் வசித்தவர்.தான் கல்யாணம் செய்யப் போகிறவரும் மைத்துனருமாகிய இராஜரட்ணத்தை வழியனுப்ப உடுவிலுக்கு வந்து அங்கிருந்து நாங்கள் போய்க் கொண்டிருந்த வானில் அவரும் வந்திருந்தார்.
இராஜரட்ணம் மைத்துனியை மச்சி என்று அழைப்பவர். ஆதலால் மச்சிக்கு விருப்பமான பாட்டு என்று கேட்டு, அந்தப் பாட்டையே திரும்பத் திரும்ப போட்டுக் கொண்டிருந்தனர்.
ஆனால் எந்தப் பாட்டையும் நான் இரசிக்கவில்லை.கண்களிலிருந்து கண்ணீர் வந்து கொண்டேயிருந்தது.
சிங்கப்பூரிலிருந்து வந்ததன் பின் இராஜரட்ணத்தின் திருமணத்துக்கு நானும் மனைவியும் போயிருந்தோம்.
அவர்களும் ஜேர்மனிக்கு வந்ததையும், அவர்களை நாம் சந்தித்ததையும் ஜேர்மனியச் சுயசரிதையில் எழுதுவேன்.
கொழும்புக்குச் சென்ற நான் முதலில்; மனைவியினுடைய தங்கையின் கணவரான சகலனை முதலில் சந்தித்தேன்.அவர் வெள்ளவத்தையில் காலி வீதியில் மன்னவராஜன் என்பவரின் நகைக்கடையில் மனேஜராக வேலை செய்து வந்தார்.
நான் இறங்க வேண்டிய இடத்தை வான் றைவரிடம் சொல்லியிருந்தேன்.அவர் அந்த நகைக் கடைக்கு முன்னால் அதிகாலை நான்கு மணியளவில் இறக்கிவிட்டார்:
அன்று மாலையே நாங்கள் சிங்கப்பூருக்கு போகிறோம் என்பதால்,டிரைவர் தான் எங்கே வானை நிற்பாட்டி வைத்திருப்பேன் என்ற விலாசத்தை என்னிடம் தந்திருந்தார்.
நகைக்கடைக்கு முன்னாள் இறக்கிய இடத்தில் ஒரு பாலமிருந்தது.நான் இந்தத் திகதியில் சிங்கப்பூருக்குப் போகிறேன் உங்களை வந்து சந்திக்கிறேன் என்று எனது சகலனுக்கு அறிவித்திருந்தேன்.
நான் பாலத்தடியில் கடைக்கு முன்பாக, கடைக்கு கிழக்கு பக்கமாக இறங்கி நின்று கடைக்கு எப்படி போவதென்று யோசித்துக் கொண்டு நின்றேன்.வீதியைக் கடந்துதான் போக வேண்டும்.
அப்பொழுது எனக்குச் சற்றுத் தள்ளி பாலத்தின் மறுமுனையில் சாய்ந்து நின்று கொண்டிருந்த இரண்டு பொலிஸ்காரர்கள் என்னை நோக்கி வந்து, எங்கையிருந்து வந்தனி என்று கேட்க நான் தெல்லிப்பழை என்ற இடத்திலிருந்து வருகிறன் சிங்கப்பூருக்குப் போக வந்தனான் அந்த நகைக் கடையில் எனது மனைவியின் தங்கையின் கணவர் வேலை செய்கிறார். ஆவர் வீட்டிலிருந்துதான் சிங்கப்பூருக்குப் போகப் போகிறன் என்று சொன்ன நான் கொண்டு வந்த தலைகணிக்குள் இருந்த எனது பாஸ்போர்ட்டை எடுத்துக் காட்டினேன்.
நான் பொலிஸ்காரர்களுடன் கதைத்துக் கொண்டிருக்கும் போதே நான் வந்திருப்பதன் அசிகை தெரிஞ்சு நகைக்கடைக்கு மேலே வசித்துவந்த எனது சகலனின் அறையில் லைட்போடப்படும் வெளிச்சமும் அதனைத் தொடர்ந்து பல்கனிக் கதவைத் திறந்து கொண்டு அவர் வருவதும் தெரிந்தது.அந்த பல்கனி கிழக்கு நோக்கியிருந்தது.
சகலன் பல்கனியிலிருந்து கொண்டே,அவர் என்னிடம்தான் வந்தவர் என்று சொன்னவுடன் மேலதிக விசாரிப்பு எதுவுமில்லாமல் பொலிஸ்காரர்கள் என்னை விட்டுவிட்டனர்.
நான் சிங்கப்பூருக்குப் போகப் போவதை கொழும்பில் வேலை செய்து கொண்டிருந்த எனது அக்காவின் மகனான மருமகனுக்கும் அறிவித்திருந்தன்.
எனது சகலன் மருமகனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மாமா வந்திருப்பதாகச் சொல்ல, அவன் அரை மணித்தியாலத்திற்குள் அங்கு வந்துவிட்டான்.
சிங்கப்பூருக்கு கொண்டுபோகவென கொண்டு வந்த சூட்கேசையும் தலைகணியையும் சகலனின் வீட்டில் வைத்துவிட்டு நானும் மருமகனும் சகலனும் ஒரு தமிழ்ச் சாப்பாட்டுக் கடைக்குப் போய் காலைச் சாப்பாடாக இடியப்பம் சாப்பிட்டோம்.
„மாமா எயர் போர்ட்டுக்குப் போற வான் எங்கை நிற்கும் „என்று கேட்க, டிரைவர் தந்த முகவரியை அவனிடம் கொடுத்தேன்.தனக்கு அந்த இடம் தெரியும் என்று சொன்னான்.
அழுதழுது கண் சிவந்து போயிருந்தது.அதைப் பார்த்த சகலன் „ என்ன குழந்தைப் பிள்ளை மாதிரி இருக்கிறியள், கவலையை விடுங்கள் உதிலை
கிடக்கிற சிங்கப்பூருக்குத்தானே போகிறியள், இரண்டு வருசமென்றது „ம்’;எனப் போய்விடும் என்று எனது குமுறலான மனநிலையை சாந்தப்படுத்தினார்.
மருமகன் அனுதாபத்துடன் பார்த்தான்.சாப்பிட்டு முடிந்ததும் மீண்டும் சகலனின் வீட்டுக்குப் போனோம்.’மாமா நீங்கள் கொஞ்ச நேரம் படுத்து றெஸ்ட் எடுங்கோ நான் பிறகு வந்து மத்தியானச் சாப்பாட்டுக்கு கூட்டிக் கொண்டு போகிறன், என்றவன்,’மாமா ஏதாவது தேவையா சிங்கப்பூருக்கு கொண்டு போக என்று கேட்டான், நான் ஒன்றும் வேண்டாம் என்று சொல்ல, சகலன் சொன்னார் பிஸ்கட் ஏதாவது வாங்கிக் கொடுத்தால் அங்கை போய்ச் சேர்ந்ததும், உடன் பசிக்கு உதவும் என்றார்.
சகலனும் மலேசியாவில் பிறந்தவர்.சகலனின் தகப்பன் மலேசியாவில் வேலை செய்தவர்.சகலனின் பெற்றோர் மலேசியாவில் கனகாலம் இருந்துவிட்டு கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு முன் இலங்கைக்கு வந்துவிட்டனர். பெற்றோருடன் வந்த சகலன் உட்பட அவரின் இரண்டாவது அக்கா பெற்றோர் ஆகியோருடன் இலங்கையிலேயே இருந்துவிட்டார்.அவரின் மூத்த அக்காவும் தமையனும் திரும்பி மலேசியாவுக்குப் போய்விட்டனர்.
மருமகன் போய்விட சகலனும் நானும் கொஞ்ச நேரம் கதைத்துக் கொண்டிருந்தோம்.நித்திரை கொள்ளச் சொன்னார்.படுக்கையில் படுத்தேனே தவிர யோசனையில் நித்திரை வரவேயில்லை.அங்குமிங்கும் புரண்டு புரண்டு படுத்தேன் கொஞ்சம்கூட நித்திரை வரவில்லை.
சகலன் தேத்தண்ணி போட்டுத் தந்தார்.நேரமும் போக மருமகன் பையில் பிஸ்கட் பைக்கற்றுகளுடன்,; சொக்லேட் ,மாஸ்மலோ பைக்கற்றுக்கள் என வாங்கி வநதவன், தானே ‚சூட்கேசைத் திறந்து அவற்றை அடுக்கி வைத்தான்.
கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.பிறகு மத்தியானச் சாப்பாடு சாப்பிடுவதற்காக அதே சாப்பாட்டுக் கடைக்குப் போனோம்.பின்னேரம் நாலு மணிக்கு வானடியில் நிற்கச் சொன்னதால், எதற்கும் நேரத்திற்குப் போவது நல்லதென்று சாப்பிட்டவுடனேயே சகலனின் அறைக்குப் போய் சூட்கேசையும் தலைகணியையும் எடுத்துக் கொண்டு மருமகனுடன் பஸ்ஸில் புறப்பட்டேன்.சகலன் வரவில்லை.
பஸ்சுக்குள் இருந்த நான் சிங்கப்பூருக்கு பிளைட் எடுக்கப் போகிறேன் என்ற நினைப்பும், இன்னும் இரண்டு வருடத்திற்குப் பிறகுதானே மனைவி பிள்ளைகளைப் பார்க்கப் போகிறேன் என்ற நினைப்பும் என்னைச் சூழ கண்ணீர் வழியத் தொடங்கியது.மருமகன் அழாதீங்கள் மாமா என்ன சினனப்பிள்ளை மாதிரி அழுகிறீர்கள் என்று சொல்லி அவன் வைச்சிருந்த புதிய லேஞ்சியைத் தந்து கண்ணைத் துடையுங்கள் என்று சொன்னவன் லேஞ்சியை நீங்களே வைத்திருங்கள் என்றான்.
வான் நின்ற இடத்திற்குப் போன போது அங்கை சிங்கப்பூருக்கு போக வேணடியவர்கள் அனைவரும் நின்றார்கள்.வானில் எல்லோரும் ஏற, வான் புறப்பட்டது.மருமகனும் என்னுடன் வந்தான்.
விமான நிலையத்தில் எல்லாப் பரிசோதனைகளும் முடிந்து, விமானம் ஏறப் போவதற்கு முன் மருமகனிடம் போயிட்டு வாறன் என்று சொல்ல அவன், மாமா கவலைப்படாமல் போயிட்டு வாருங்கள் என்றான்.
அதுதான் எனது முதலாவது விமானப் பயணம்.இந்தியாவுக்கு 1979,1980 களில் நானும் மனைவியும் போயிருந்தோம்.அது தலைமன்னாருக்குப் போய் இராமானுஜம் கப்பலில் போன பயணம்.
நாங்கள் சிங்கப்பூருக்குப் போனது இலங்கைக்குச் சொந்தமான எயர்லங்கா விமானம். விமானத்துக்குள்ளே விமானப் பணிப்பெண் நான் கொண்டு போன தலைகணியை வாங்கி இருக்கைகளுக்கு மேலேயிருந்த கபினுக்குள் வைத்தாள்.
மனைவி தலைகணி உறையில் சுவீட் றீம் என ஆங்கிலத்தில் தைத்ததையே உறையாகப் போட்டுத் தந்திருந்தாள்.
விமானம் இரவு ஒன்பது மணியளவில் சிங்கப்பூர் விமான நிலையம் போய்ச் சேர்ந்தது.எல்லாப் பரிசோதனைகளும் முடிந்து வெளியே வந்த போது எங்களுடைய ஏஜன்சியும், எனக்கு மிக நன்கு தெரிந்த தூரத்து உறவினர் என்று சொல்லக்கூடிய பரமேஸ்வரனும் நின்றிருந்தனர்.
எங்களுடன் வந்த ஒருவரை அதிகாரிகள் மறித்து வைத்துவிட்டு,என்னிடம் சொன்னார்கள் உங்களுடைய ஏஜன்சியை வரசசொல்லிச்; சொன்னார்கள்:
வெளியே நான் சொன்னவுடன் ஏஜன்சியும் உள்ளே போய் சில நிமிடங்களில் மறித்து வைத்தவருடன் வெளியே வந்தார்.விமான நிலையம் பிரமாண்டமாகவும் நவீனமாகவும் இருந்தது.அதைப் பார்த்து வியந்து மகிழ்ந்து போதும் எனது மனம் ஒரு நிலையில் இல்லை. ஏஜன்சி எங்களனைவரையம் ஒரு பஸ்ஸில் ஏற்றி யூரோங் என்ற இடத்தில் இருக்கும் ஒரு மாடிக் கட்டிடத்துக்கு கொண்டு போனார்.
எங்களுடன் பரமேஸ்வரனும் வந்திருந்தார். எத்தனை பேர் எங்கெங்கே தங்குவதென்றும்.ஒவ்வொரு குழுவிற்கும் ஒருவர் பொறப்பு,அவரே எல்லோருக்குமாக கதைப்பவர் என்ற வகையில் என்னையே வயதின் அடிப்படையிலும்,திருமணம் செய்தவர் என்ற காரணத்திற்காகவும் அனுபவ ரீதியாகவும் ஏஜன்சி பஸ்ஸில் வைத்து என்னை லீடராக நியமித்து இருப்பதாகக் கூறினார்.
எங்களைக் கொண்டு போய்விட்ட வீட்டில் இரண்டு அறைகள்,ஒரு கோல், ஒரு அடுப்படி, ஒரு குளியலறை,ஒரு மலசலகூடம் என இருந்தன.
நாங்கள் தங்கிய வீடு தற்காலிகமானது என்றும் ஒரு கிழமைக்குள் பூன்லேடிரைவ் என்ற இடத்து வீடடுக்கு மாற்றப்படுவீர்கள்; என்று பரமேஸ்வரன் சொன்னார்.படுக்கைகளும் மெத்தைகளும் இருந்தன ஆனால் ஒருவருக்கு மெத்தையும் கட்டிலும் இல்லாமலிருந்தன.
சமாளியுங்கள் என்று சொல்லிவிட்டு, ஏஜன்சியும் பரமேஸ்வரனும் போய்விட ஒருவருக்கு மெத்தை போதாமல் இருக்கு என்ன செய்யிறது என்று என்னிடம் என்னோடு இருப்பவர்கள் கேட்டனர்.அதற்கு நான், ஒன்றுக்கும் யோசிக்க வேண்டாம்.நான் பேப்பரை போட்டு படுக்கிறன் நீங்கள் மெத்தையில் படுங்கள் என்றன்.அவர்கள் சம்மதிக்கவில்லை, கட்டாயப்படுத்தி சம்மதிக்க வைச்சன்.
இதையெல்லாம் நான் குறிப்பிடுவதற்குக் காரணம், கண்ணீரோடு வந்த நான் வந்து சில நாட்களுக்குள்ளேயே என்னில் ஒருத்தி தீவிரமான காதல் கொண்டு,ஆணித்தரமாக, நான் இங்கு உங்கள் மனைவியாக வாழ்வேன் என்ற போது அவள் மீது எனக்கு ஏன் இவ்வளவு தீராத காதல் தீராத அன்பு வந்தது என தடுமாறித் தவித்தேன்.
இரவு முழுவதும் நித்திரையின்றித் தவித்தேன்.ஒரே குழப்பம்.நான் எங்கே போய்க் கொண்டிருக்கிறேன் எதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறேன் எனத் தவித்தேன்.இப்படியே போனால் எனது வாழ்வில் என்னென்ன நடக்கப் போகிறதோ தெரியவில்லையே,அவளையும் என்னையும் விதி ஏன் இப்படிச் சோதிக்கிறது என யாருக்குமே சொல்ல முடியாத வாழ்வவாகத் தவித்தேன்.
அவளோடு நான் வாழ்ந்து 39 வருடங்கள் முடிந்துவிட்டன.நீங்கள் சிறீலங்காவிற்குப் போகுமுன் உங்கள் கண்முன்னால் என்னுயிர் போக வேண்டுமென்பாள்.
எந்த மருந்தாலும் எந்த டொக்ரராலும் குணப்படுத்த முடியாத நோய் வர வேண்டும் என்பாள்.அவள் வேண்டுதல் போலவே அவளுக்கு புளட்கான்சரும்,மூளையில் கான்சர் கட்டியும் வந்தது.
தனக்கு நோயிருக்கிறது என்பதை அவள் எனக்குச் சொல்லவேயில்லை, தனது உடலில் எந்த மாற்றமும் இல்லையென்பது போல மூடிமறைத்தாள்.
டொக்டரிடம் போகாமல் நோயை வளரவிட்டாள்.தன்னை நான் வந்து பார்த்த பிறகுதான் சாவேன் என்றவள் மருத்துவமனையில் தன்னை நெஞ்சோடு அணைத்து வைத்திருங்கள் என்று சொல்லி அணைத்து வைத்திருக்க தனது முகத்தைத் திருப்பி என் முகத்தைப் பார்த்தபடியே உயிர்விட்டவளை எப்படி மறக்க முடியும்.
சனிக்கிழமை நாங்கள் இரண்டு பேரும் அம்மன் கோவிலுக்குப் போக வேண்டும் என்று சொல்லிவிட்டு நாளைக்குச் சந்திப்பம் என்ற கையைக்காட்டிவிட்டு போய்விட்டாள்.
வீட்டுக்கு போய் படுத்த நான் நித்திரையின்றி நிம்மதியின்றித் தவித்தேன்.
(உண்மைகள் தொடரும்)
![]()