கவிதைகள்
அண்டப் புளுகர்!…. ( கவிதை )……. அகரம் செ.துஜியந்தன்.

லாப நட்டக் கணக்குப் பார்த்து
நட்புறவு கொள்வதில் கெட்டிக்காரர்
எங்கே எப்படி புகுந்து
பட்டம் பதவி சலுகைகளை
தட்டிக் கொள்ளலாமென்று
திருகு தாளம் புரிவதில் தந்திரி
கண்டால் வால் ஆட்டி
காணா விட்டால் கோள் மூட்டி
காரியம் சாதிப்பதில் காரியவாதி
ஆயிரம் பீத்தல் அவரிடத்தில்
ஆனால் அடுத்தவர் பீத்தல் பற்றி
அளப்பதில் வின்னர்
நான் இல்லா விட்டால்
இங்கொன்றும் நடக்காது
எல்லாம் என்னால் தான் நடக்கிறது
எல்லாம் எனக்குத் தான் தெரியும்
என்று பம்மாத்து காட்டுவதில் சூரர்
கலைஞானி என பீற்றுவதில் கூத்தாடி
சமூகம் தான் மூச்சு
சமயம் தான் வாழ்க்கை
சம யோசிதமாய் பேசி
சுய லாபம் ஈட்டி
ஏப்பம் விடுவதில் வல்லவர்
போலிகளுக்கு பொன்னாடை போர்த்தி
தன் புகழ் பாட கூட்டம் சேர்ப்பதில் பச்சோந்தி
தற் பெருமை பேசி மற்றவரிடம்
நற் பெயரை பெறுவதில்
ஒரு அண்டப் புளுகர்.
![]()
![]()