கதைகள்

காதலர் விமானம்!…. 34….. ( நாவல் ) ….. ஏலையா க.முருகதாசன்.

சந்திரசேகரம் கதையைச் சொல்லிக் கொண்டிருக்க,அமைதியாக மனைவியும் மூன்று பிள்ளைகளும் ஆர்வமாகக் கேட்டுக் கொண்டிருந்த போதிலும்,தமது தகப்பன் மாமியாருக்கு ஏதோ துரோகம் செய்திருக்கிறார் என்ற எண்ணத்தை அவர்கள் மனதில் ஏற்படுத்திவிட்டது.

தங்களுடைய மாமா மகாஜனாவின் சிறந்த விளையாட்டு வீரர் என்பதால்தான் சந்திரனும் சிறந்த உதைபந்தாட்ட வீரனாக இருக்கிறான் என்று நினைத்துக் கொண்ட சாந்தினி’ அதுதான் அத்தானும் புட்போலில் கெட்டிக்காரராக இருக்கிறார் போல’ என்று அவள் வாயிலிருந்து அவளையறியாமலே தானாகவே அத்தான் என்று உறவு சொல்லிச் சொன்னதும் குருவும் சாகித்தியனும் திரும்பிப் பார்க்க’இப்ப அவள் என்ன சொல்லிப் போட்டாள் என்று திரும்பிப் பார்க்கிறியள்,மாமா மாமியின் மகனை அத்தான் என்றுதானே சொல்ல வேண்டும்,அதுவும் அவள் கட்டிக்கப் போறவனை அத்தான் என்றுதானே சொல்ல வேண்டும்,உங்களுக்கும் சந்திரன் மச்சான்தான்,நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கியள் என்று எனக்கும் அப்பாவுக்கும் எல்லாம் தெரியும்,மலிஞ்சால் சந்தைக்கு வரும் என்பார்களே அதுமாதிரி எங்களுக்குச் சாகியின்ரை விசயமும்,இவளின்ரை விசயமும் தெரியும்.எப்பவுமே தாய் தகப்பனுக்கு தெரியும் முன் ஊர் உலகத்துக்கு தெரிய வரும்.உலை வாயை மூடினாலும் ஊர் வாயை மூட முடியாது’ என்று தாய் செல்லம்மா சொன்னதும் கப்சிப் என்று மூன்று பேரும் இருந்துவிட்டனர்.

சந்திரசேகரம் தொடர்ந்தார், நான் தங்கச்சிக்கு வாக்குறுதி கொடுத்த பின் அவள் ஆறுதலடைந்தாள்.வழமைபோல அவளை நான் மகாஜனாவில் கொண்டு போய் விடுவதும்,கூட்டிக் கொண்டு வருவதுமாக இருந்தேன்.

தங்கச்சி ஒருநாள் சொன்னாள், „அவர் அட்வான்ஸ் லெவல் பாஸ்பண்ணி யூனிவேர்சிற்றிக்கு போகவிரும்பவில்லையாம், கிளறிக்கல் சேவன்ற் வேலைக்கு விண்ணப்பிக்க போவதாகச் சொன்னார்’ என்றாள்.

சச்சிதானந்தத்தால் யூனிவேர்சிற்றிக்கு போக முடியும் என்று தெரிந்தும் போக விரும்பாததற்குக் காரணம்,யூனிவேசிற்றி படிப்பு முடிய மூன்று வருசமாவது செல்லும் அதுவரையும் மகேஸ்வரியும் தானும் கல்யாணம் செய்ய முடியாது என்ற காரணத்திற்காகவே சச்சிதானந்தம் அந்த முடிவை எடுத்தார் என்பது மகேஸ்வரிக்கு நன்றாகவே தெரிந்த போதும் மகேஸ்வரி அதைத் தமையனுக்குச் சொல்லவில்லை.

சொல்லிக் கொண்டிருந்தவர் இடையில் நிறுத்தி, மனைவியைப் பார்த்து அதையும் சொல்லவா’ என்று கேட்க, தகப்பனுக்கும் தாய்க்குமிடையில் ஏதோ இரகசியம் இருப்பதை உணர்ந்த குரு „சொல்லுங்கப்பா நாங்கள் எங்கள்

குடும்ப வரலாற்றைக் கேட்டதன் பின்புதான் நித்திரை கொள்வது என்று முடிவெடுத்திருக்கிறம் சொல்லுங்கள் „என்கிறான்.

„சொல்லத்தானே வேண்டும், எல்லாத்தையும் சொன்னனீங்கள் இதையும் சொல்லத்தான் வேண்டும், சொல்லுங்கள் „ எனத் தாய் சொல்ல, அவர் தயங்குவதைக் கண்ட செல்லம்மா,கொப்பா சொல்லத் தயங்குகிறார் நானே சொல்கிறன் என்றவள் சொல்லத் தொடங்கினாள்.

„நானும் அப்பாவும்கூட காதலிச்சுத்தான் கல்யாணம் செய்தனாங்கள்.எங்கள் குடும்பம் உடுவிலில்….’ என்று தாய் தொடர „பொறுங்கள் பொறுங்கள்….நீங்கள் இரண்டு பேரும் காதலிச்சுக் கல்யாணம் செய்ததை இன்றுவரை எங்களுக்குச் சொல்லவே இல்லையே…மூடிமறைச்சுப் போட்டு…….ம் சொல்லுங்கள் „ என்று சாகித்தியன் சொல்ல, சாந்தினி வாயைப் பொத்திக் கொண்டு சிரிக்க’ஏன்ரி சிரிக்கிறாய்’ தாய் கேட்க „ஒன்றுமில்லை’ என்று சாந்தினி சொல்ல, நீ ஏன் சிரிக்கிறாய் என்று எனக்குத் தெரியும் „ என்று தாய் சொல்ல,சரி சரி கதையைச் சொல்லுங்கம்மா என்கிறாள் சாந்தினி.

ஆரம்பத்தில் கண்ணீர் கோபம் விம்மல் என்று உணர்ச்சிகரமாகப் போய்க் கொண்டிருந்த குடும்ப வரலாற்றுக் கதை சொல்லல், இப்ப நிதானமான அமைதியான கதை சொல்லலாகப் போய்க் கொண்டிருந்தது.

தாய் தொடர்ந்தாள், நாங்கள் உடுவிலில்தான் இருந்தோம்.நான் உடுவில் மகளிர் பள்ளிக்கூடத்தில்தான் படித்தனான்.

எனக்கு புதுசு புதுசாத் துணி வாங்கி அழகழகாக உடுப்புத் தைத்துப் போடுவதில் விருப்பம்.பெரும்பாலும் மாதத்திற்கு இரண்டு தடவையாவது யாழ்பபாணம் நியூ மாக்கற்றுக்கு போய் துணி வாங்கி வந்து உடுப்புத் தைப்பன்.

அப்பா அம்மாவுக்கு நான் ஒரே பிள்ளை, செல்லப்பிள்ளை, அதனால்தான் எனக்குச் செல்லம்மா என்று பெயர் வைத்ததாக அம்மா நெடுகச் சொல்லுவா.

எனது சினேகிதியும் பக்கத்து வீட்டுக்காரியுமான பரிமளத்துடன்தான் நான் யாழ்ப்பாணம் நியூமாக்கற்றுக்குப் போவது வழக்கம்.

ஒரு நாள் கொப்பாவின்ரை கடைக்கும் போனம்,அங்கை சட்டைக்கு ஏற்ற விதம் விதமான துணிகள் இருந்தன.தேவையானதை வாங்கின நான் பரிமளத்திடம் வா கெதியிலை போய்ப் படரிக்கற் எடுக்க வேண்டுமென்றன்.கொப்பா கேட்டார் என்ன படம் பார்க்கப் போறியள் என்று நான் படத்தைச் சொல்ல, அது இண்டைக்குத்தானே தொடங்குது பார்க்கிறது கஸ்டம் என்றவர்,சரி நான் வாறன் டிக்கற் எடுத்துத் தாறன் என்று எங்களைக் கூட்டிக் கொண்டு போனார்.

கொப்பா எங்களை ராணித் தியேட்டரின் முன் கேற்வழியாகக் கூட்டிக் கொண்டு போனார்.படம் பார்க்க வந்த சனங்கள் பெரிய கியூவிலை நிற்க,

நாங்கள் மூன்று பேரும் யாரையும் பொருட்படுத்தாமல் போக ,தியேட்டர் வாசலில் நின்ற ராணித் தியேட்டர் மனேஜர் சபாரத்தினம் வாங்க முதலாளி படம் பார்க்கவா என்று அப்பாவைக் கேட்க நான் பார்க்கேலை இவை இரண்டு பேரும் பார்க்கப் போயினமாம் என்றவுடன் பிரச்சினை இல்லை,நீங்களும் வாங்கோ என்று கூட்டிக் கொண்டு போய் பல்கனியில் உட்கார வைத்தார்.

அப்பாவுக்குப் பக்கத்தில் நான் எனக்குப் பக்கத்தில் பரிமளம் …’என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, சாந்தினி திரும்பவும் வாயைப் பொத்திக் கொண்டு சிரிக்க „ என்ரி இப்ப சிரிக்கிறாய்’என்று தாய் கேட்க „இப்பத்தான் ஒவ்வொன்றாய் உங்கடை இரண்டு பேற்றையும் வண்டவாளம் வெளிய வருது „ என்றவள்’ அப்ப அடிக்கடி அப்பாவின்ரை கடைக்குப் போயிருப்பியளே, அப்பா துணிக்கு காசு வாங்கியிருக்க மாட்டாரே, அடிக்கடி அப்பாவோடை படம் பார்த்திருப்பியளே அதுக்கும் அப்பாதான் காசு கொடுத்திருப்பாரே……என்று தாயைச் சாந்தினி கிண்டலடிக்க,தகப்பன் அதைப் பார்த்துச் சிரிக்க, „அவள் உங்களையும் என்னையும் கிண்டலடிக்கிறாள்,நீங்களும் அவளோடை சேர்ந்து சிரிக்கிறியள்’ என்ற தாயிடம் „பிள்ளைகள் கிண்டலடிப்பiதை நினைத்து சதோசப்படப்பா’ என்று தகப்பன் சொல்ல,தாய் தொடர்ந்தாள்….பிறகு மாமியையும் கூட்டிக் கொண்டு அப்பா வரத் தொடங்கினார்.

 

கொப்பாவும் மாமியும் படம் பார்க்கப் போகிற நாளிலை நானும் பரிமளாவும் படம் பார்க்கப் போவம்.தொடர்ந்து நான் வருவதைக் கண்ட மாமி அப்பாவிடம் நேரிடையாக கேட்க கொப்பா உண்மையை ஒப்புக் கொண்டார்.அதற்குப் பிறகு மாமியும் நானும் சினேகிதகளாகிவிட்டோம்.அவள் என்னை அண்ணி என்றே கூப்பிடத் தொடங்கிவிட்டாள்.

மாமிதான் கொப்பாவின்ரை அப்பா அம்மாவிடம் கதைத்துப் போராடி எங்களைச் சேர்த்து வைத்தவர்.

பிறகு…

சச்சிதானந்தம் என்ரை ஒன்றுவிட்ட மச்சான்…..என்று சொல்லத் தொடங்க,குறுக்கிட்ட குரு „மச்சானா ….இதென்ன பதுக்கதையாயிருக்குது….அம்மா! அப்ப அந்த புட்போலரைச் செய்யாமல் இவரை ஏனம்மா செய்தனி’ என்று கேட்க,மாமா எட்டாம் வகுப்பிலேயே மாமியை விரும்பத் தொடங்கிவிட்டார்,ஒருநாள் எங்கட வீட்டுக்கு வந்த மச்சான் சச்சி ஒரு பொம்பிளைப் பிள்ளையின்ரை படத்தை எனக்குக் காட்டி இவளுக்குப் பெயர் மகேஸ்வரி,இவாவைத்தான் நான் விரும்புகிறன்.கல்யாணம் பண்ணுவன்.தேவையில்லாமல் இந்தக் கதையை வெளியில விடாதை குறிப்பாக உங்கட கொப்பா சங்கரப்பிள்ளைக்கோ உங்கடை கொம்மா தவமணிக்கோ இது தெரியக்கூடாது என்று சொன்னார்.

அம்மப்பாவையும் அம்மம்மாவையும் பெயர் சொல்லியா மாமா கதைப்பார் எனச் சாந்தினி கேட்க’ மாமா சரியான பகிடிக்காரன்.ஆனால் அதைக் காட்டிக் கொள்ள மாட்டார் என்ற தாய்…

பிறகும் ஒருநாள் வீட்டுக்கு வந்தார்.மாமியின்ரை இன்னொரு படத்தைக் காட்டினார்.காட்டிப் போட்டுச் சொன்னார், அவாவின்ரை பேரிலைதான் நியூமாக்கற்றிலை அவாவின்ரை தமையன் புடவைக்கடை ஒன்று வைத்திருக்கிறார் என்றார். நான் என்ன பெயர் என்று கேட்டன் மகேஸ்வரி ரெக்ஸ்ரைல்ஸ் என்றார்.எனக்குப் பகீர் என்றாலும் உள்ளுக்குள்ளை சந்தோசப்பட்டு நான் விரும்புகிறவற்றை தங்கச்சியாரைத்தானே விரும்புகிறார்,ஒன்றுக்குள்ளை ஒன்று என்று பேசாமல் இருந்து விட்டன்…..எனக்குச் சரியான சந்தோசம்.

இதற்கிடையிலை மாமா கிளறிக்கல் சேவன்ற் வேலை கிடைச்சு கொழும்புக்கு போய்விட்டார்.

கொழும்பிலிருந்து மாமிக்கு கடிதம் வரும்.மாமியும் எழுதுவா.அப்பா கடன்படாமல் மாமிக்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டுமென்று விரும்பியதால் கல்யாணம் தள்ளிக் கொண்டே போக, மாமா மாமியைக் கூட்டிக் கொண்டு போவது என்று தீர்மானத்துடன் மகாஜனாவுக்கு பக்கத்திலிருந்த மாமாவின் சித்தி முறையான நவமணிக்கு கடிதம் எழுதி ஐயனார் கோவில் திருவிழாவிலன்று அதற்கான ஏற்பாடு செய்வதாகக் கூறிய கடிதத்தை நவமணியின் வீட்டுக்குப் போய் மாமி வாங்கினார்.

மாமாவின் கடிதங்கள் இஞ்சையும் வரும், சச்சியின் சித்தி முறையான நவமணிக்கும் வரும்.இஞ்சை வரும் கடிதங்கள் அனைவரின் சுகம் என்ற விசாரிப்புகளுடன் நின்றுவிடும்.

ஆனால் அவரின் சித்திக்கு அனுப்பி மாமிக்குக் கொடுக்கவும் என்று வரும்; கடிதங்களிடம் கானப்படும் காதல் இரசம் சொட்டும் வார்த்தைகளிடம் கண்ணதாசனின் காதல் கவிதைகளே தோற்றுப் போய்விடும்.அப்படி இருக்கும் வார்த்தைகள்.

மாமி என்னிடமும் கொப்பாவிடமும் வைத்த பாசம் குறையாமலெ சச்சியிடமும் காதல் வைத்திருந்தார்.

அவர் நவமணி மூலமாக தனக்கு வந்த காதல் கடிதங்களை எனக்கு வாசித்துக் காட்டினார்.என்னிடம் கொடுத்து அதை வாசிக்கச் சொல்லாமல் அதை உணர்வுபூர்வமாக வாசித்த போது அவர் பக்கம் நியாயம் இருப்பதாகத் தோன்றியது.

மாமி என்னை அண்ணியாகப் பார்க்கவில்லை.ஒரு தோழியாகப் பார்த்தார்.நான் இந்த வீட்டுக்கு மருமகளாக வருவதற்கு முன் மாமி கொப்பாவை அம்மா என்று கூப்பிட்டு தானும் சச்சியும் ஒருத்தரை ஒருத்தர் எவ்வளவு விரும்புகிறோம் என்பதை கொப்பாவிடம் ஒரு எல்லைக்கு உட்பட்டு இவ்வளவுதான் ஒரு அண்ணனிடம் சொல்லலாம் என்ற நாகரீகத்துடன் சொல்லியிருந்தார்.

ஆனால் என்னைத் தன் தோழியாக்கி அவர் தன் காதலை மட்டுமல்ல.உடலுக்கு காலாகாலத்தில் எது தேவையென்பதை எல்லாம் சொல்லியிருந்தார்.

தன்னை நவமணியின் வீட்டுக்கு கூட்டிக் கொண்டு போனதையும்,அங்கு வைத்து; என்னவெல்லாம் சச்சி சொன்னார் என்பதையும் ,தான் கொண்டு போன புட்டை அவருக்குக் குழைத்துக் கொடுத்தது வரை அங்கு மாமியும் மாமாவும் என்னவெல்லாம் கதை;தார்கள் என்பதை மாமி இப்படித்தான் விவரித்தார் என்ற தாய் ,மகேஸ்வரி சொன்னதை அப்படியே சொன்னார்.

 

(தொடரும்)

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *