கதைகள்

காதலர் விமானம்! …. 33 ….. ( நாவல் ) ….. ஏலையா க.முருகதாசன்.

„எனக்கு பில்லி சூனியத்தில் நம்பிக்கையில்லாவிட்டாலும்,தங்கச்சிக்கு ஏதும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக’ என்ற சந்திரசேகரம்; குலுங்கிக் குலுங்கி அழுதார், அவரால் அழுகையை அடக்க முடியவில்லை…அழுது கொண்டே பொத்திப் பொத்தி வளர்த்த தங்கச்சிக்கு எதுவுமே ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக, அவளுடைய, சூதகத் துணியைக்கூட நானே வெட்டித் தாழ்ப்பேன், சூதகம் வந்த மூன்றாம் நாள் தோய்ச்சலுக்கு நானே தோய வார்ப்பேன்,வீட்டைக் கூட்டின தும்புத்தடியிலை இருந்து ஒவ்வொரு மயிராகப் பொறுக்கி எடுப்பன் குப்பைக்குள்ளை போடக்கூடாது என்பதற்காக,அந்த மூன்று நாட்களும் நான் கடைக்கே போவதில்லை’

-சந்திரசேகரம்

முடிச்சுக்கள் அவிழ்படும் போது,அதற்கான காரணமும் மெது மெதுவாக வெளிப்படுவது இயற்கை.அந்தச் சூழ்நிலையை ஏற்றுக் கொள்ளும் மனமும் தானாக வந்துவிடும்.

சச்சிதானந்தம் வீட்டிலிருந்து வந்த குரு, சாகித்தியன்,சாந்தினி என மூவரும் பெற்றோர்களுக்கு உணவு பரிமாறுவது என்பது வழமைக்கு மாறானது.

ஆனால் அதிலிருந்து பெற்றோர் விலகிக் கொள்ளாமல் அதை ஏற்றுக் கொண்டமை என்பது காலச் சூழ்நிலைதான்.

தாயார் என்ன சொல்லப் போகிறார் என்பதை உன்னிப்பாக பிள்ளைகள் கவனித்துக் கொண்டேயிருந்தனர். மனைவி சொல்லட்டும் என்று சந்திரசேகரம் அமைதியாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

„உங்கள் அப்பாவை இயல்பான அப்பாவாக, உங்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் செய்து வருகின்ற அப்பாவாகத்தான் நீங்கள் பார்த்திருப்பீர்கள்,அதைப் போல உங்களுடைய மாமியை அமைதியான மாமியாகத்தான் பார்த்திருப்பீர்கள்.

ஆனால் உங்களுடைய அப்பாவும் சரி மாமியும் சரி பெரும் பிடிவாதக்காரர்கள்;.அண்ணைக்கு மிஞ்சிய தங்கச்சியாகவும், தங்கச்சியை மிஞ்சிய அண்ணையாகவும் இருந்ததால்தான் இரண்டு குடும்பமும் நீங்கள் யாரோ நாங்கள் யாரோ என்று வாழ வேண்டியதாகப் போய்விட்டது.

இடையில் குறுக்கிட்ட குரு நீங்கள் இரண்டு பேரும் முதலிலை சாப்பிட்டு முடியுங்கோ,ஆறுதலாக இன்று விடிய விடிய கதைப்பம் என்று சொல்ல, தொடர்ந்து வழிந்து கொண்டேயிருந்த கண்ணீரைத் துடைத்தபடியே

தங்கச்சியார் கொடுத்தனுப்பிய புட்டையும் கறிகளையும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார் சந்திரசேகரம்.

இன்று எமது குடும்ப சரித்திரமே வெளிவரப் போகின்றது என்றெண்ணிய மூவரும் அதற்காக காவலிருந்தனர். எல்லாருக்கும் தேத்தண்ணி போடவென சாந்தினி அடுப்பு இருக்கும் பக்கம் போக குருவும் சாகித்தியனும் கூடத்துக்கு வந்து உட்காரத் தொடங்கினர்.

சந்திரசேகரும் செல்லம்மாவும் சாப்பிட்டு முடிந்ததும் கூடத்தில் வந்து உட்கார்ந்ததும் சாந்தினி எல்லாருக்கும் தேத்தண்ணி கொடுத்தாள்.

மனைவியையும் பிள்ளைகளையும் ஒருமுறை நிமிர்ந்து பார்த்தவர் சுவரை வெறிச்சோடிப் பார்த்தார்.பிள்ளைகளுக்கு நல்ல தகப்பனாக இருப்பவர்கள் அவசர கோபத்தினாலும் தான் என்ற அகங்காரத்தினாலும் உடன் பிறந்தவர்களுக்கும், உறவுகளுக்கும் வேண்டாத மனிதர்களாகி விடுவார்கள். அந்த நிலைக்குட்பட்டவராக சந்திரசேகரம் பிள்ளைகளின் முன்னால் நின்றார்.

நீண்ட காலத்துக்கு உறவுகள் பிரிந்திருக்காது .அப்படிப் பிரிந்திருப்பதற்கு காலம்அனுமதிப்பதில்லை.சிலபடிப்பினைகளை,வேதனைகளை கொடுத்துவிட்டுச் சேர்த்துவிடும்.

தண்ணீரில் கோடு கிழித்தால் இருபக்கமும் தனியாக பிரிந்து நிற்பது போலத் தோன்றினாலும் விநாடிப் பொழுதுக்குள் பிரித்த தண்ணீர் சேர்வது போல உறவுகள் சேர்ந்துவிடும்.அந்த விநாடிப் பொழுதுதான் உறவுகள் சேர எடுத்துக் கொள்ளும் மாதங்கள் ஆண்டுகள்.

தண்ணீர் போல கலந்து நின்ற அண்ணன் தங்கச்சி உறவு இருபத்தைந்து ஆண்டுகளாய் பிரிந்து நின்று தவித்ததற்கு எது காரணம், யார் காரணம்.

சந்திரசேகரால் கண்ணீரை அடக்க முடியவில்லை. செல்லம்மா சீலைத்தலைப்பால் கண்களையும் முகத்தையும் துடைத்துக் கொண்டாள்.

எந்த இடத்திலிருந்து தொடங்கி பிள்ளைகளுக்கு விளங்கப்படுத்துவது என்று தடுமாறிய சந்திரசேகர், இந்த வீட்டிலைதான் அப்பா அம்மா தங்கச்சி நான் என எல்லோரும் இருந்தோம்.

இந்த வீடு அப்பா அம்மா கட்டிய வீடு.இந்த வீட்டுக்குப் பினனால் இருக்கிற தென்னம் வளவு ஐயனார் கோவிலடியிலிருக்கிற பத்துப்பரப்பு நெற்காணி இவ்வளவுந்தான் எங்களுடைய சொத்து.

„அப்பா அம்மா இருக்கிற போது திருப்பிச் திருப்பிச் சொல்லிக் கொண்டிருந்தார்கள் இந்த வீடு உனக்கும் தங்கச்சிக்கும் பொது வீடாக இருக்கட்டும், ஐயனார் கோவிலடி வயல்காணியில் ஐந்து பரப்பை தங்கச்சிக்கு கொடுக்க வேண்டும் என்று’ அவர் சொல்லிக் கொண்டிருக்கிற போதே

குறுக்கிட்ட சாகித்தியன்’மாமிக்கு அதைக் கொடுத்தீர்களா’ „இல்லை’ என்று தடுமாறிய சந்திரசேகரம் , இனிப் பிள்ளைகளின் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறேன்’ எனத் தவித்தார்;.

ஆனால் பிள்ளைகள் விடுவதாக இல்லை.’அப்பா சொல்லுங்கப்பா மாமிக்கு ஏன் குடுக்கலை,இந்த வீட்டுக்குப் பின்னால இருக்கிற தென்னங்காணி,அதைவிட ஐயனார் கோவிலடியிலை இருக்கிற பத்துப் பரப்புக் காணி இவற்றிலை எதையாவது மாமிக்கு குடுத்திருக்கலாந்தானே,ஏனப்பா குடுக்கேலை…சொல்லுங்கப்பா….’

„என்ரை சொல்லைக் கேட்காமல் மாமாவோடை ஓடிப் போன கோபத்திலை குடுக்க மனம் வரேலை…..’

„மாமி மாமவைக் காதலிச்சா கல்யாணம் செய்தவ’ என்று கேட்ட சாந்தினி தொடர்ந்து „மாமா தெல்லிப்பழை ,மாமி உங்களோடை இருந்து ஸ்கந்தாவில படிச்சவ, அப்ப எப்படி அப்பா என்று கேள்வியைக் கேட்க…..தங்குதடையின்றி சந்திரசேகரம் சொல்லத் தொடங்குகிறார்.

ஸ்கந்தாவிலை எஸ்.எஸ்.சியோடை படிப்பை முடிச்ச நான் யாழ்ப்பாணம் நியூமார்க்கட்டிலை ஒரு கடையை எடுத்து புடவைக் கடை போட்டேன். அப்பொழுது அப்பா அம்மா காலமாகிவிட்:டார்கள்.நானும் தங்கச்சியுந்தான் இருந்தோம்.

அவளுக்காக, அவளை ஸ்கந்தாவிலை கொண்டு போய் விட்டிட்டு கூட்டி வர வேண்டுமென்பதற்காக கார் வாங்கினேன்.ஒவ்வொரு நாளும் அவளைக் கொண்டு போய் ஸ்கந்தாவிலை இறக்கிவிட்டுப் பிறகு கடைக்குப் போவேன்.

நான் போக முந்தியே என்ரை கடையிலை வேலை செய்கிற பொடியங்கள் போய்க் கடையைத் திறப்பாங்கள்.இரவு எட்டு மணிவரையும் கடை திறக்க வேண்டும்.எட்டு மணிவரையும் பொடியங்களிட்டை கடையைத் திறக்கச் சொல்லிவிட்டு பின்னேரம் ஸ்கந்தாவுக்குப் போய் அவளைக் கூட்டிக் கொண்டு வருவேன்.அதற்குப் பிறகு நானும் தங்கச்சியுமாக சமைத்துச் சாப்பிடுவம்.

அது எனது கடையாக இருந்த போதும்,நான் ஒரு நாளும் ,நான் கடையைத் திறந்ததும் இல்லை நானே பூட்டினதும் இல்லை.தங்கச்சி எட்டாம் வகுப்புப் படிக்கும் போதே நல்ல வளர்த்தி.ஒரு நாள் பின்னேரம் பள்ளிக்கூடம் விட்டு காரில் ஏறும் போது அழுது கொண்டு ஏறினாள்.வீடு வரும் வரை அழுது கொண்டு வந்தவள் சொன்னாள் நான் இனி ஸ்கந்தாவிலை படிக்க மாட்டன் மகாஜனாவிலை கொண்டு போய்ச் சேருங்கள் என்று அழுதாள்.

அதற்கிடையிலை வீட்டுக்கு வந்து சேர்ந்திட்டம்.சமைத்துக் கொண்டிருக்கும் போது சொன்னால் அண்ணை நான் இனிமேல் ஸ்கந்தாவுக்கு போகவே மாட்டேன் என்றாள்.ஏனென்று கேட்டேன்.தமிழ் படிப்பிக்கிற கணபதிபபிள்ளை மாஸ்ரர் அவர் படிப்பித்ததை நான் கவனிக்கவில்லையென்பதற்காக „திமிறிக் கொண்டிருக்கிற அரேபியக்

குதிரை மாதிரி இருக்கிறியே, படிப்பிலை கொஞ்சமாவது அக்கறையிருக்கா என்று பொடியங்கள் பொட்டையளுக்கு முன்னாலை பேசிட்டார், இனி நான் போக மாட்டன் என்று அடம்பிடித்தாள்.

மாமிக்கும் அரேபியக்குதிரை என்ற பெயரா என்று தன்னையறியாமலே சொன்ன சாந்தினி அதைச் சமாளிக்க முயல,’ வேற யாருக்கு அந்தப் பெயர் இருக்கு’என்று தாய் கேட்க’தங்கச்சிக்கும் அந்தப் பெயர் இருக்கம்மா, சரி அது கிடக்கட்டும் அப்பா பிறகு என்ன நடந்தது’ என்று குரு கேட்க’ அடுத்த நாள் தங்கச்சியையும் கூட்டிக் கொண்டு மகாஜனாவுக்குப் போனன், அப்ப அது நடு ஆண்டு.மகாஜனாவுக்குப் பக்கத்திலை இருந்த சிவகுரு மச்சானின்ரை உதவியுடன் ஒரு மாதிரி தங்கச்சியைச் சேர்த்தன்.

ஒவ்வொரு நாளும் காலைச் சாப்பாடு ஏதாவது செய்து அதை நானே தங்கச்சிக்கு கட்டிக் கொடுத்து இஞ்சையிருந்து தெல்லிப்பழை மகாஜனாவிற்கு காரிலை கொண்டு போய்விட்டிட்டுப் பிறகு கடைக்குப் போயிட்டு அங்கிருந்து நேரத்தோடு மகாஜனாவிற்குப் போய் தங்கச்சியையும் ஏற்றிக் கொண்டு வந்து இரவுச் சாப்பாடு செய்து கொடுப்பன்.அவளும் உதவி செய்வாள்..ஆனால் அவளை நோகவிடக்கூடாது என்பதற்காக எல்லாவற்றையும் நானே செய்தேன்.

„சரி மாமாவை மாமி எங்கை சந்திச்சவ’ என்று குரு கேட்க.மகாஜனாவிலைதான்.மாமியை மகாஜனாவிலை எட்டாம் வகுப்பிலை சேர்க்கும் போது உங்கடை மாமாவும் அந்த வகுப்பிலைதான் இருந்தவர்.

„அவர் அப்ப எங்களுக்குச் சொந்தமா’ சாந்தினி கேட்க, „பிறகுதான் தெரிஞ்சுது அம்மா வழியிலை கிட்டின சொந்தம் என்று’ தொடர்ந்த அவர்.மாமாவுக்கும் மாமிக்கும் எட்டாம் வகுப்பிலேயே காதல் ஆரம்பிச்சிட்டுது என்றார்.

வகுப்பு ஏற ஏற அவர்களின் காதலும் வளர்ந்தது.ஒவ்வொரு நாளும் மாமி வந்து காரில் ஏறும் போது ஒரு பொடியன் காரை விலத்தி சைக்கிளிலை மாமியை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டே போவதை நான் பார்த்த போதும் அதை நான் பெரிது படுத்தவில்லை.

மாமா லோவர் பிறப் வகுப்பு படிக்கேக்கிலை புட்போல் ரீமில் விளையாடத் தொடங்கிவிட்டார்.மகாஜனாவின் முதல்தர விளையாட்டு வீரர் அவர்.இடது கால் வீரர் என்றாலும்,வலது காலாலும் பந்து அடிப்பார்.எந்த நேரத்தில் எந்தக் காலால் அடிப்பாரென்று யாருக்குமே தெரியாதவாறு விளையாடுவார்..

மைதானத்தின் மத்தியிலிருந்து அடித்தார் என்றால் அந்தப் பந்து கோல் போஸ்ற்றை நோக்கி சமாந்தர உயரத்தில் போய் திடீரென்று மேலே எழுந்து கோல் போஸ்றுக்குள் போய்விழும்.உண்மையில் உங்கடை மாமா நுட்பமான விளையாட்டுக்காரர்தான்.வலது காலால் பந்தை பம்பரமாக சுற்றிவிட்டு இடது காலால் பந்தை அடிக்கும் நுட்பத்தை அவர் வைச்சிருந்தார்;.

எல்லா மாட்சிலும் அவர் கோல் அடிக்காமல் விட்டதில்லை என்று சொல்லிக் கொண்டிருக்க’ சரியப்பா பிறகு என்ன நடந்தது அதைச் சொல்லுங்கள் என்று,உதைபந்தாட்டத்திலையிருந்து திசைதிருப்பிய சாந்தினி’ கேட்க,கொஞ்ச நேரம் தரையையே பார்த்துக் கொண்டிருந்த, சந்திரசேகரம், மாமியின் அழகும் உயரமும் எனக்குள் பயத்தை ஏற்படுத்தியது.சொந்தக்காரர்களில் வயதானவர்கள் „சந்திரன் தங்கச்சியை இளவரசி மாதிரி வளர்த்து வாறாய் அவளை யாராவது கொத்திக் கொண்டு போயிடுவங்கள், பெல்லி சூனியம் வைச்சாவது கொண்டு போயிடுவங்கள் சூதகத் துணியையோ தலைமயிரையோ யாற்றை கண்ணிலையும் படவிடாதை கிணத்தடியிலை அவளுக்கு குளிக்க வார்க்கேக்கலை சூதகத் தண்ணி வாய்க்காலிலை போறதிலைகூட கவனமாயிரு.யாரையும் கொண்டு தண்ணியை அவளுக்கு வார்க்காதை,அண்ணை என்றால் அப்பா அம்மா மாதிரி நீயே வார் என்பார்கள்.

எனக்கு பில்லி சூனியத்தில் நம்பிக்கையில்லாவிட்டாலும்,தங்கச்சிக்கு ஏதும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக’ என்றவர் குலுங்கிக் குலுங்கி அழுதார், அவரால் அழுகையை அடக்க முடியவில்லை…அழுது கொண்டே பொத்திப் பொத்தி வளர்த்த தங்கச்சிக்கு எதுவும் ஏற்பட்டுவிடக்கூடாதே என்பதற்காக, அவளுடைய, சூதகத் துணியை நானே வெட்டித் தாழ்ப்பேன், மூன்றாம் நாள் தோய்ச்சலுக்கு நானே தோய வார்ப்பேன்,வீட்டைக் கூட்டின தும்புத்தடியிலை இருந்து ஒவ்வொரு மயிராகப் பொறுக்கி எடுப்பன் குப்பைக்குள்ளை போடக்கூடாது என்பதற்காக,அந்த மூன்று நாட்களும் நான் கடைக்கே போவதில்லை,அவளுக்கு ஏதாவது வருத்தம் என்று சொல்லி பள்ளிக்கூடம் போகாத நாட்களில் நானும் கடைக்குப் போவதில்லை, நம்பிக்கையான அந்த இரண்டு பொடியங்களும் நான் போகாத நாட்களிலும்கூட கடையை நடத்தி வந்தார்கள்.எவ்வளவோ முதல் போட்டு தொடங்கிய கடை நட்டத்திலை போகுமா இலாபத்தைக் கொடுக்குமா என்றுகூட நான் கவலைப்படவில்லை,நானில்லாத நேரங்களில் சொந்தக்காரர் வீட்டுக்கு வருவதைத் தவிர்த்து வந்தேன்.

அவளின் அழகு எனக்குள் பயத்தை ஏற்படுத்தியது „ என்றவர் நிதானிக்க „சரி ,மாமி மாமாவை விரும்புகிறார் என்பதை முழுமையாக எப்ப அறிஞ்சனீங்கள்’ என்று குரு கேட்க,„ஒரு நாள் தங்கச்சி, நாளைக்கு அளவெட்டி அருணோதயாவோடை பிரண்ட்லி மாட்ச் இருக்கு நான் மாட்ச் பார்க்கப் போறன் நீங்கள் ஆறுதலாக வாருங்கள் அண்ணை என்றாள்.ஆனால் நான் வழமையாக கூப்பிடும் நேரத்திற்கே போய் மகாஜனாக் கேற்றடியில் இருந்த தபால் பெட்டியடியில் காரை நிற்பாட்டிப் போட்டு நின்றன்.

காருக்குள்ளேயே கனநேரம் இருந்ததால் அலுப்படிக்கவே, மாட்சைப் பார்க்கலாம் என்று போய் பார்த்துக் கொண்டிருந்தன்,நானிருந்த இடத்திலிருந்து பார்த்த போது தங்கச்சி கல்லூரிக்கு மேற்குப்புற உயரமான மேடைப் படியில் இருந்து மாட்சைப் பார்த்துக் கொண்டிருந்ததைக் கண்டேன், அவளருகில் இன்னும் இரண்டு பொம்பிளைப் பிள்ளைகளிருந்தனர்.

அங்கிருந்தே நான் நிற்பதைக் கண்ட தங்கச்சி எழுந்து கையைக் காட்ட நானும் கையை உயர்த்திக் காட்டிவிட்டு மாட்சைப் பார்க்கத் தொடங்கினன் .

அன்றைக்கு உங்களுடைய மாமாவின்ரை விளையாட்டு தனித்துவமாகவிருந்தது.அருணோதயாவுக்கு நான்கு கோல்களை மாமாதான் அடித்தார்.இன்னொரு கோலை இன்னொரு பிளேயர் அடித்தார். அன்றைக்கு அருணோதயா தோற்றுப் போய்விட்டது.

மாச் முடியிற நேரம் பார்த்து நான் தங்கச்சிக்கு கையைக் காட்டிவிட்டு போய்க் காருக்குள் இருந்தன்.பொதுவாக மார்ச் முடிந்தவுடன் பிளேயேர்ஸ் மைதானத்தை விட்டு உடனடியாக வெளிறே மாட்டார்கள்.மைதானத் தரையில் படுத்திருப்பார்கள், ஒருத்தரையொருத்தர் கட்டிப்பிடித்து சந்தோசப்படுவார்கள்.தாங்கள் அன்று விளையாடிய விளையாட்டைப் பற்றிக் கோச்சருடன் கதைப்பார்கள்.ஆனால் எப்பொழுது தங்கச்சியை மாமா விரும்பத் தொடங்கினாரோ அன்றிலிருந்து அவர் மைதானத்திலிருந்து உடனே வெளியேறி , கோல் போஸ்ரடியிலிருக்கும் சேர்ட்டைப் போட்டபடி மார்ச் பார்த்துவிட்டு வரும் மாமிக்காக சைக்கிளை வைத்துக் கொண்டு காத்திருப்பாரம்.அவர் எதுவுமே பேசிக் கொள்ளமாட்டாராம், ஆனால் தங்கச்சி உள்ளுக்குள் மகிழ்ச்சியை வைத்துக் கொண்டு சொல்வாளாம் இன்னும் இரண்டு கோல் அடிச்சிருக்கலாம்,உங்களுக்கு விளையாடவே தெரியாது, நீங்களா கோல் அடிசசனீங்கள்,அது உங்கடை அதிர்ஸ்டம் அடிச்சது என்று கிலுக்கென்று சிரித்துச் சீண்டுவாளாம்.

தன்னை வேணுமேன்றே சீண்டுகிறாள் என்று தெரிந்து மாமாவும் சிரித்துவிட்டுப் போய் விடுவாராம்.இதையெல்லாம் நான்,தங்கச்சி மாமாவுடன் போனதற்குப் பிறகு சொந்தக்காரப் பிள்ளைகள் மூலம் அறிந்து கொண்டன்

அன்றும் நான் காருக்குள்ளை போயிருக்க தங்கச்சி வகுப்புத் தோழிகளுடன் வந்து கொண்டிருந்திருக்கிறாள். வழமை போல மாமாவும் தங்கச்சியும் கதைக்கப் போயினம் என்று அறிந்து அவர்கள் அவளை விலத்திக் கொண்டு முன்னுக்குப் போய்விட்டனர்.

மார்ச் முடிந்து தங்கச்சியை விலத்திக் கொண்டு போன அவனின் வகுப்பு மாணவர்களில் ஒருவன் பின்னால் வந்த மாமாவிடம் „டேய் சச்சி இங்கை உன்ரை ஆளின்ரை யூனிபோமின பின்னால பாரடா’ என்று சத்தத்தை பல்லுக்குள் அடக்கி வாயாலும் சைகையாலும் காட்ட மாமாவும் அதைப் பார்த்துவிட்டார்.

தங்கச்சி வீட்டுத் தூரத்திலிருந்து அன்று மூன்றாம் நாள் பள்ளிக்கூடத்திற்கு வந்திருந்தாள்.மேடை மேல் படியில் கனநேரம் இருந்ததால் சட்டையில் பெருக்கு பட்டிருக்கு.மாமா அதைக் கண்டவுடன் விறு விறுவென்று சேர்ட்டைக் கழற்றிக் கொண்டு ஈஸ்வரி நில் என்று கூப்பிட்டுக் கொண்டே ஓடிப் போனவர்,’இப்ப என்னை எதுவும் கேட்காதை முதலிலை புத்தகத்தைத் தா, இந்தச் சேர்ட்டை பின்னுக்குத் தொங்கவிட்டு கைப்பகுதி இரண்டையும்

இடுப்பில் கட்டு, அங்கை இங்கை திரும்பிப் பார்க்காதை, பின்னுக்கு பட்டிருக்குது என்று அவர் சொல்ல தங்கச்சி அழ, அழாதை அழுது காட்டிக் கொடுக்காதை கெதியிலை போய் காறிலை ஏறி பின் சீற்றிலை இரு என்று சொல்லிக் கொண்டே தங்கச்சியை மறைத்து நடந்து வந்தவர்,அவள் கேற்றைத் தாண்டி நடக்கும் வரை காத்திருந்து காறில் ஏறியதன் பின் பெனியனோடு சைக்கிளில் ஏறி, அன்று மட்டும் காரடிக்கு வராமல் பின் கண்ணாடியால் தங்கச்சி பார்க்க ஒருமுறை திரும்பிப் பார்த்து கையை மெதுவாக காட்டிப் போவதை நான் சைட் கண்ணாடியாலும், முன்னுக்கு இருக்கும் பின்னால் வருவற்றை பார்க்கும் கண்ணாடியாலும்; பார்த்திட்டன்.

தங்கச்சிக்கும் மாமாவுக்குமிடையில் ஏதோ இருக்கு என்பதை உணர்ந்த நான்ஏன் அந்தப் பொடியன் பெனியனை மட்டுமே போட்டுக் கொண்டு போகிறான்,சேர்ட் ஏன் போடேலை என்ற சிந்தனையுடன் காரை ஒட்டிக் கொண்டிருந்தன்.

வழமையாக தங்கச்சி என்னோடை முன்னுக்குத்தான் இருப்பாள். அன்று வீட்டுத் தூரத்திற்குப் பிறகு பள்ளிக்கூடத்திற்கு வந்ததால் உடல் சோர்ந்திருக்கும் என்பதால் பின்னுக்கு வசதியாக இருக்கிறாள் என நினைத்து பேசாமலிருந்துவிட்டன்.

வீட்டடிக்குப் போனதும், காரை விட்டு இறங்கிய தங்கச்சி வேகமாக வீட்டுப் படியேற,’என்ன தங்கச்சி சேர்ட்டை இடுப்பிலை கட்டியிருக்கிறாய்,இது யாற்றை சேர்ட் என்று கேட்க, அவள் விம்மி அழுது கொண்டே திரும்பிப் பார்த்தவாறு சேர்ட்டை அவிழ்த்தாள்,அவளின் , பின்பக்க யூனிபோமில் இரத்தப் பெருக்கிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன்.சேர்ட்டிலும் அது பட்டிருந்தது. எனக்குப் பகீரென்றது. அவள் அழத் தொடங்கினாள், அழாதை இப்ப என்ன நடந்திட்டுது,போ போய்க் குளிச்சிட்டு வா,மொக்கன் கடையிலை புட்டும் கோழிக்கறியும் வாங்கிக் கொண்டு வந்திருக்கிறன் சூடாக்கிச் சாப்பிடலாம் கெதியிலை குளிச்சிட்டு வா கனநேரம் குளியாதை கனநேரம் குளிச்சால் குளிர் பிடிச்சிடும் என்று சொல்ல,அவள் அழுகையை நிற்பாட்டாமலே சேர்ட்டையும் கொண்டு குளிக்கப் போனாள்.

நான் புட்டையும் கோழிக்கறியையும் சூடாக்கிவிட்டு சாப்பாட்டு மேசையில் காத்திருந்தேன்.சேர்ட்டையும் யூனிபோமையும் தோய்சசு காயவிட்டிட்டு உடையை மாற்றிக் கொண்டு வந்தவளுக்கு புட்டையும்கறியையும் போட்டுக் கொடுத்தேன்.

நடந்த விசயங்களால் நான் நெகிழ்ந்து போயிருந்தேன்.தங்கச்சியைப் பார்த்தேன்,அன்று நடந்ததை நினைத்து தாங்க முடியாமல் கண்கள் கலங்க „அப்பா அம்மா இல்லாத குறை இப்பத்தான் தெரியுது என்றவுடன்’ அப்படிச் சொல்லாதீங்கள் அண்ணை,அவைக்கும் மேலாலை நீங்கள் என்னைப் பார்க்கிறீங்கள்,எனக்கு நீங்கள் அண்ணணாகத் தெரியவில்லை,அம்மாவாகத்தான் பார்க்கிறன் என்று சொன்னாள்.

சாப்பிட்டு முடிந்ததும் தங்கச்சி தனது அறைக்குள் போய்விட்டாள்.நான் எனது அறைக்குள் போய்விட்டன்.கட்டிலில் சரிந்து படுத்து தங்கச்சியைப் பற்றியே யோசிச்சுக் கொண்டிருந்தன்.தங்கச்சி „அண்ணை’ என்று சொல்லிக் கொண்டு அறைக்குள் வந்து கட்டிலில் உட்கார்ந்தாள். நான் எழுந்து அவளருகில் உட்கார்ந்து தiலையை வருடிக் கொடுத்தேன்,அப்பொழது என்னைப் பார்த்து’அம்மா உங்கடை மடியிலை நான் படுக்கவா „என்றாள்,அவள் என்னை அம்மா என்று சொல்லியதை என்னால் தாங்கவே முடியவில்லை.அமைதியாக நடந்ததை எல்லாம் சொல்லிக் கொண்டிருந்த சந்திரசேகரம் நெகிழ்ந்து விம்மிக் கொண்டே தங்கச்சி என்னை அம்மா என்று அழைத்ததால் அப்படியே நொருங்கிப் போனேன் என்றார்.

தங்கச்சி எனது மடியில் படுத்துக் கொண்டே நா தழுதழுக்க கண்ணீரைப் புறங்கையால் துடைத்தபடி „அம்மா நீங்கள் என்னைக் கொண்டு போய் மகாஜனாவில் எட்டாம் வகுப்பில் சேர்த்த போது, சச்சியும் அந்த வகுப்பில்தான் இருந்தார். அவர் படிப்பில் கெட்டிக்காரர்.அவரில் ஒரு ஈர்ப்பு எனக்கு வந்தது.அவருக்கும் என்னில் விருப்பம் இருந்தது.அவரின் கெட்டித்தனத்தை எனது வகுப்பு மாணவிகளிடம் சொல்வேன்.அவரும் எனனைப் பற்றி பொடியங்களிட்டைச் சொல்ல’உன்ரை ஆள் „ என்று வகுப்புப் பிள்ளைகள் பகிடி பண்ணத் தொடங்கிவிட்டார்கள்.

அந்த „உன்ரை ஆள்’என்ற பகிடி வகுப்பு ஏற ஏற எங்களுக்குள் அது காதலாகவே மாறி வளர்ந்தது.நான் பள்ளிக்கூடம் போகாத நாட்களில் அவர் சோர்ந்து போய்விடுவாராம்.பாடங்களில் அக்கறைப்படவும் மாட்டாராம்.இடையில் நிறத்தியவள்,செருமிக் கொண்டே அவர் மாட்சுகளில் வகைதொகையாக கோல் அடிப்பதற்கும் நான்தான் காரணம் என்று சொன்னார்கள்.

நான் மாட்ச் பார்த்துக் கொண்டிருக்கும் போது, அவருடைய ரீம் பிளேயேர்ஸ் பகிடியாகச் சொல்லுவினமாம்’ டேய் சச்சி உன்ரை ஆள் பார்த்துக் கொண்டிருக்கிறா உன்ரை காதல் வாழ வேண்டுமென்றால் எல்லாம் நீ அடிக்கிற கோலிலைதான் இருக்கு என்பினமாம்.

மாட்ச் தொடங்க முந்தி என்னை மைதானத்தின் நடுவிலிருந்து பார்ப்பார்.நான் அவருக்கு கையைக் காட்டி உற்சாகப்படுத்துவேன். அவருக்கு இயற்கையாக உதைபந்தாட்டத்திலிருந்த ஆர்வம் அவரை நல்ல உதைபந்தாட்ட வீரராக்கியது.என்னை அவர் பார்த்த பிறகு இன்னும் அவர் வேகமெடுத்தார்.

ஒரு நாள் கோச்சர் ரிபி பத்மநாதன் சொன்னார்.வாற வெள்ளிக்கிழமை உரும்பிராய் இந்துக் கல்லூரி விளையாட இங்கை வருகினம்,இந்த முறை அவையின்ரை ரீம் கொஞ்சம் பலமானது.மாட்சிலை நாங்கள் வெல்லவேணுமென்றால் நீங்கள் மாட்ச் பார்க்க வேணும்,சச்சி உங்களைப் பார்த்தால் போதும் உரும்பிராய் ரீமை கதிகலங்க வைப்பான் என்றார்.காதலுக்கு அவ்வளவு சக்தியாக என்று சந்தோசப்பட்டேன்.

எங்களுடைய காதல் விவகாரம் ஓரளவுக்கு பள்ளிக்கூடம் முழுவதும் தெரியும். காதலர்களாக இருந்தாலும், என்னிடமும் அவரிடமும் இருந்த பள்ளிக்கூடத்தில் அதை எப்படிக் காட்டிக் கொள்ளாமல் இருக்க வேண்டுமென்பதையும் அளவுக்கு மீறிய சுதந்திரத்தால் உங்களுக்கும் அவரின் பெற்றோருக்கும் சங்கடங்களோ வேதனைகளோ ஏற்படக்கூடாது என்பதுடன் பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள் மத்தியிலோ மாணவர்கள் மத்தியிலோ எமது காதல் மலிவானதாக கதைக்கப்படக்கூடாது என்பதில் மிகக் கவனமாக இருந்ததுடன் அதை எனக்கும் விளங்கப்படுத்தினார்.

அம்மா என்று உங்களை அழைத்து இதையெல்லாம் சொல்வதற்கு காரணம்,ஒரு பெண்பிள்ளை தாயிடமே எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்வாள். அதுமாதிரித்தான் என்னுடைய மனதில் இதுவரை பூட்டி வைத்திருந்த அத்தனையையும் உங்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்’ என்று இடையில் நிறுத்திய சந்திரசேகரம் மூச்சை இழுத்துச் சுவாசித்தவர் தொடர்ந்தார்.தங்கச்சி என்னை அம்மாவாக்கி சொல்லிக் கொண்டிருந்தாள்.உங்களுக்கு எதையும் மூடிமறைக்கவில்லை என்று தொடர்ந்தாள்….

என்னை நீங்கள் படத்துக்கு கூட்டிக் கொண்டு போகும் போதும், ஐயனார் கோவிலுக்குப் போகும் போதும், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலுக்குப் போகும் போதும் ,நல்லூருக்குப் போகும் போதும்,சன்னதிக்குப் போகும் போதும் அங்கெல்லாம் அவர் வருவார்.உங்களுக்கருகில் நிற்கும் போதுகூட உங்களுக்கு தெரியாமலே காப்போ கடலையோ கைமாற்றிவிட்டுப் போய்விடுவார்…..

எத்தனை சனக்கூட்டத்திற்குள்ளும் அவர் முகம் எனக்குப் பளிச்சென்று தெரியும்.அவரும் அதையே சொல்வார்.ஈஸ்வரி உன் முகத்தைப் பார்த்தாலே போதுமென்பார்.

சந்திரசேகரம் சொல்லிக் கொண்டிருக்க பிள்ளைகள் மூவரும் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

இன்று அவர் ,நான் பலபேர் முன்னிலையில் கேலிக்குரியவளாக மாறிவிடக்கூடாதே, அவமானப்பட்டுவிடக் கூடாதே என்பதற்காக, எனது யூனிபோமின் பின்பக்கத்தில் இரத்தக்கசிவிருந்ததைக் கண்டு பதறியடித்து வந்து தனது சேர்ட்டைக் கழற்றித் தந்து,யூனிபோமை மூடிக்கட்டு, பட்டிருக்கு என்று சொல்லிய வேகத்தில் அவர் என்மீது வைத்திருந்த அதீதமான காதலைக் கண்டேன்.எனக்கொன்றென்றால் எதையம் செய்வார் என்பதைக் கண்டேன்.

சேர்ட்டை கழற்றித் தந்துவிட்டு பெனியனுடன் பலபேர் முன்னிலையில் என்னுடைய காதலிக்காக நான் எதுவும் செய்வேன் என்று கம்பீரமாக நின்றார்.என்னை மறைத்தபடி என் பின்னாலேயே வந்து நான் காரில் ஏறும் வரை காத்திருந்து போனவரம்மா அவர்.

அண்ணை உங்களை அம்மா என்று சொல்லி இவ்வளவையும் சொல்கிறேன்.எங்கள் அம்மாவின் சேலையில் வெங்காயம் வெட்டிய வாசனை வரும்,மீன் பொரித்த வாசனை வரும் சமையல் வாசனைவரும் சட்டிபானை கழுவி கைதுடைத்த வாசனை வரும்.நானும் நீங்களும் அம்மாவைக் கட்டிப்பிடித்தபடி மடியில் படுத்திருப்போம்.விறகெரித்துச் சமையல் செய்த வெக்கையான வாசனையுடன் அம்மாவின் வியர்வையின் வாசனையும் வரும்.

அவையெல்லாம் எனக்கும் உங்களுக்கும் எந்தப் பூவுக்குமேயில்லாத நறுமணமாக நாசியில் ஏறும்.அம்மா போட்ட பாக்கு வெத்திலை வாசனைகூட எங்களுக்கு பிராணவாயுவாகச் சுகந்தரும்.அம்மாவின் ஸ்தானத்திலிருக்கும் உங்களின் வேட்டியிலிருந்து வரும் வாசமும் உங்கள் உடம்பிலிருந்து வாசமும் அம்மா இருந்த போது அவரின் மடியில் கிடைத்த சுகமாகவே நான் பார்க்கிறேன்.

அம்மா நான் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்.என்னுடைய உயிரையும் மானத்தையும் உடலையும் ஆத்மாவையும் அழகையும் அவரால் மட்டுமே பாதுகாக்க முடியும்.அவருடன் சேர்த்து வையுங்கள் என என்னைக் கட்டிப்பிடித்து குலுங்கி குலுங்கி அழுதாள்.

அழுத அவளின் கண்ணீரைத் துடைத்து ஆறுதல் படுத்தி நிச்சயமாக உங்கள் இரண்டு பேருக்கும் கல்யாணம் செய்து வைப்பன் என்று அப்பா அம்மா மீது சத்தியம் செய்து சொன்னேன்.

தங்கச்சி எழுந்து தனது அறைக்குப் போய்விட அவளுக்கு விமரிசையாக கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என்று கற்பனை செய்து எனக்குள் சபதம் எடுத்துக் கொண்டேன்.இரவு முழுவதும் நித்திரையில்லாமல் தவித்தேன்.நானொன்று நினைக்க விதி ஒன்றை எழுதும் என்பது போல தங்கச்சிக்கான கல்யாணக் கனவுகள் அத்தனையும் தவிடுபொடியாகின

கதையைக் கேட்டுக் கொண்டிருந்த சாந்தினி அதிகம் அதிர்ச்சியடைந்தாள்.மாமி மாமாவைக் காதலிக்கும் போதும் தாய்மையாகும் தகுதியுடைய யூனிபோமில் கசிந்த மாதவிடாய் இரத்தப்பெருக்கை யாருமே கண்டுவிடாதபடி மறைத்த மாமாவும்,தன் நெற்றியில் கண்ணாடி வெட்டி வழிந்த இரத்தத்தை கட்டுப்படுத்திக் கட்டுப் போட்ட சந்திரனையும் நினைத்தாள்.

 

(தொடரும்)

 

 

 

 

 

 

 

 

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *