குளிக்காவிட்டாலும்?… ( சிறுகதை ) ….. சங்கர சுப்பிரமணியன்.

மைசூர் சாமுண்டி நகரில் வசித்து வந்தான் லோகேஷ். கர்நாடக மாநிலத்தில் பெங்களூருக்கு அடுத்து மக்களை ஈர்க்கக் கூடிய மாநகரமாக மைசூரைச் சொல்லலாம். காரணம் மைசூர் மகாராஜா அரண்மனை தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட தகராறு பண்ணும் கண்ணம்பாடி அணைக்கட்டு, மைசூர் தசரா என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
அப்படிப்பட்ட மாநகரில் டாக்டர் ஜகந்நாதன் என்பவர் மிகவும் பிரபலமானவர். பெங்களூர்வரை அவர் பெயர் மிகவும் பிரபலம். ஆனால் மைசூரிலேயே கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளாக வாழ்ந்து வரும் லோகேஷ் இதுவரை ஒருதடவைகூட டாக்டர் ஜகந்நாதனிடம் சென்றது கிடையாது. அதற்கு காரணமும் இருந்தது. லோகேஷ் பெரும்பாலானவர்களைப் போல் அல்ல. அதாவது பெரும்பாலானோர் எதாவது பிரபலம் என்றால் அதைநோக்கி ஓடுவார்கள். அதாவது ஒரு உணவகம் பிரபலம் என்றால் அங்கே போய்விட வேண்டும். அல்லது ஒரு கோவில் பிரபலம் என்றால் அங்கே போய்தரிசணம் பண்ணிவிட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். மற்றவர்கள் அப்படியல்ல அதற்கான சந்தர்ப்பம் வந்தால் மட்டுமே அதை உபயோகப் படுத்திக் கொள்வார்கள்.
இப்படிப்பட்ட சமயத்தில் லோகேஷுக்கு கொஞ்ச நாளாக உடல் முழுதும் நமைச்சல் ஏற்பட்டிருந்தது. எப்போதும் சொரிந்து கொண்டே இருந்தார். உடனே எல்லோரும் பிரபலம் என்று சொல்லும் டாக்டரிடம் நாமும் ஒருதடவை சென்று வரலாம் என்று புறப்பட்டுச் சென்றார். அந்த டாக்டரின் கிளினிக்கில் கேள்விப்பட்டதைப் போலவே திருவிழா கூட்டம். ரெம்ப நேரம் காத்திருந்து அவரது முறை வந்ததும் காத்திருந்த அவர் டாக்டரின் அறைக்குள் சென்றார். அவரைப் பார்த்ததும் டாக்டர்,
“வாங்க, உட்காருங்க. உங்களுக்கு என்ன பிரச்சனை சொல்லுங்க” என்றார்.
“கொஞ்சநாளாகவே உடம்பு முழுக்க நமச்சலா இருக்கு. எப்பவும் சொரிந்து கொண்டிருக்கவேண்டும் போல தோனுது”
“அப்படியா? எங்கெங்கெல்லாம் சொரியத் தோனுது. காட்டுங்க”என்றார் டாக்டர்.
உடனே அவர் கை, கால், இடுப்பு என சொரிகின்ற இடமெல்லாம் காட்டினார். அங்கெல்லாம் பார்த்த டாக்டர் கண்ணுக்கு அடியில் விரலால் தொட்டு கீழ்நோக்கி இழுத்துப் பார்த்தார். அவராகவே அவர் தலையை மேலும் கீழும் ஆட்டிக்கொண்டார். பின் வாயைத்திற நாக்கை நீட்டு என்று சொல்லிவிட்டு காதுக்குள்ளும் மூக்கிலும் லைட் அடித்துப் பார்த்துவிட்டு எதையோ கண்டுபிடித்து விட்டதுபோல் தலையை குலுக்கி ஆட்டிக்கொண்டார். பிரபலமான டாக்டர் என்றால் இப்படியெல்லாம் செய்யவேண்டும் போலிருக்கிறது என்று லோகேஷ் எண்ணிக் கொண்டார்.
திரும்பவும் நமச்சல் ஏற்படுவதாக சொன்ன இடங்களை எல்லாம் பார்த்தவர் இடுப்பின் பக்கம் எண்ணெய்ப்பசை போன்றிருந்த இடத்தைக்காட்டி இது என்ன என்று கேட்டபடியே தொட்டுப் பார்த்தார். பின் பெருவிரலால் மற்றவிரல்களின் நுனியை தடவி கையில் பிசுபிசுப்பாய் ஒட்டவே
விரல்களை லோகேஷிடம் காண்பித்து,
“என்ன இது?” என்றார்.
“க்ரெம் போட்டிருக்கிறேன்”
“இதை யார் கொடுத்தது?”
“மருந்துக் கடையில் கேட்டு வாங்கினேன்.”
“எப்போது போட்டீங்க”
“நேற்றைக்கு முன் தினம்”
“நேற்று குளித்தீர்களா?”
“இல்லை. கொஞ்சம் அதிகமான வேலை இருந்தது அதனால்தான் குளிக்க நேரமில்லை”
“இன்றைக்கு?”
“இன்னும் இல்ல. போய்த்தான் குளிக்கனும்” என்று அவர் சொன்னதும்,
கடுப்பான டாக்டர் லோகேஷைப் பார்த்து குளிச்சிடாதிங்க அழுக்கு போய்விடும் என்று சொன்னபடியே ஏங்க நீங்க சொல்றது எவ்வளவு அபத்தமா இருக்குன்னு உங்களுக்கே புரியலையா? போங்க, போங்க போய் முதலில் நல்ல அழுக்குப்போக தேய்த்து குளிங்க.அப்புறம் உடம்பை ஈரமில்லாம துடைத்து விட்டு இந்த ஆயிண்ட்மென்டை போடுங்க. ஒரு வாரம் விட்டு வாங்க என்று சொல்லி அனுப்பினார்.
வெளியே வந்த லோகேஷ், என்ன டாக்டர் இவர். இரண்டு நாள் குளிக்காட்டா என்ன? இப்படி வள்ளுன்னு விழுறார். இவரைப்போய் மிகவும் பிரபலமான டாக்டர்னு சொல்றாங்களே? ஒருவேளை பிரபலமான டாக்டர் என்றால் இப்படித்தான் சிடுசிடுவென இருப்பார்களோ என்றபடி தனக்குள்ளே புலம்பியவாறு சென்றார்.
-சங்கர சுப்பிரமணியன்.
![]()