
இனி
சிங்கப்பூரில் மூன்றுவருடகால இனிமையான வாழ்வும் எனக்காக வாழ்ந்தவளும்!….கதை….. 02.
ஏலையா க.முருகதாசன்.
சிங்கப்பூரில் நான் மூன்று வருடங்கள் முதலில் அமெரிக்கன் கொம்பனியான யூரோங் (Jurong)என்ற பகுதியிலிருந்த ஜிஇ(GE General Electric) என்ற நிறுவனத்திலும் அதற்குப் பின்னர் சிங்கப்பூர் விமான நிலையத்துக்கு அருகில் சாய்ச்சீ என்ற இடத்திலிருந்த என் எம்பி என்ற யப்பான் நிறவனத்திலும் வேலை செய்தேன்.சிங்:கப்பூரின் துரித வளர்ச்சியைக் நேரிடையாக பார்த்தவன் நான். சீனர் மலாயர் தமிழர் தெலுங்கர் மலையாளிகள் பஞ்சாபியர் கன்னடர் என்று வாழ்ந்த போது எல்லோரும் சிங்கப்பூரியர் என்ற ஒற்றைச் சொல்லுக்குள் உட்படுத்தியமைக்கான ஒழுங்கமைப்பு அனைவரும் சமம் என்ற ஆட்சியமைப்பு அனைத்து மக்களையும் சிங்கப்பூர் எமது நாடு என்று பாசம் கொள்ள வைத்து அவர்களுக்குள் தேசிய உணர்வை விதைத்திருந்து.
சிங்கப்பூரைப் பற்றி கதைக்கும் போது எல்லாருக்கும் அதன் சுத்தந்தான் ஞாபகத்துக்கு வரும்.கண்ட கண்ட இடங்களில் குப்பை போட்டால் அதற்கு தண்டனைப் பணம் உண்டு என்பது ஆரம்பத்தில் மக்களை அந்த வழிக்கு கொண்டு வருவதில் சிரமம் இருந்தது.சட்டத்தின் மீது மக்கள் விமர்சனம் வைத்தாலும் உன்னுடைய நாடு உன்னுடைய வீட்டுக்குச் சமன் என்ற பண்பை ஒவ்வொருவர் மனதிலும் விதைத்ததால் நல்ல செயலுக்கு அவர்கள் இசைவாக்கம் அடைந்தனர்.

சிங்கப்பூர் தமிழர்களாக இருந்தவர்களில் இலங்கைத் தமிழரும், இந்தியத் தமிழரும் அடங்குவர்.
சிங்கப்பூர் அமைச்சரவையில் சீனர், மலாயர்,தமிழர் என அனைவரும் அங்கம் வகிப்பார்கள்.நான் வேலை செய்து காலங்களில் இரண்டு அல்லது மூன்று தமிழ் அமைச்சர்கள் இருந்ததாக நான் அங்கிருந்த போது அறிந்தேன்.அவர்களில் துணைப்பிரதமராக இருந்தவர் இலங்கைத் தமிழரான இராசரத்தினம் என்பவர்.அவர் இலங்கையில் வட்டுக்கோட்டையயைச் சேர்ந்தவர் என்பதை அறிந்து கொண்டேன்.
நான் ஜிஇ(GE) (ஜெனரல் எலக்ரிக்) என்ற (டிரிப் சுவிட் செய்யும் கொம்பனி,இலங்கையில் பயன்படுத்தும் டிரிப் சுவிட்சுக்கும் ஐரோப்பிய நாடுகளில் பாவிக்கும் டிரிப் சுவிச்சுக்கும் மின்சாரத்தின் வலுவவைப் பொறுத்து வேறு பாடு உண்டு.ஜேர்மனியில் பயன்படுத்தும் டிரிப் சுவிட்சைப் போன்றதையே ஜிஇ அமெரிக்க நிறுவனம் தயாரித்தது) நிறுவனத்தில் சேலை செய்து கொண்டிருக்கும் போது ஒரு தமிழர் தனியாளாக உட்பகுதியைச் சுற்றிப் பார்த்துக் கொண்டே வந்தார்.எனக்கு அருகில் நின்ற சக தொழிலாளியான மலாய் அஸ்மன் என்ற நண்பர் „இவர் யார் தெரியுமா,
சிங்கப்பூரின் தொழில் அமைச்சர் பெயர் தங்கராஜாவோ என்னவோ என்று ஒரு பெயரைச் சொன்னார்.
எனக்கு வியப்பாக இருந்தது.எங்களுடைய நாட்டுக்கு அமைச்சர் ஒருவர் ஒரு இடத்துக்கு வருவாரென்றால் என்னவெல்லாம் தடல்புடல்கள் நடக்கும் என்பதை ஒப்பிட்டுப் பார்த்தேன்.
நான் அங்கு வேலை செய்த மூன்று வருட காலங்களில் நான் பெற்றுக் கொண்ட அனுபவங்கள் ஏராளம்.ஒரு சின்னஞ்சிறிய நிலபரப்பில் ஒரு பென்னம்பெரிய நாட்டுக்குரிய வடிவமைப்பைப் பார்த்து நான் வியந்திருக்கிறேன்.
சிங்கப்பூரைப் பற்றி எழுதுவதென்றால் நிறையவே எழுதலாம்.இன்னொரு சந்தர்ப்பத்தில் விலாவாரியாக எழுதலாம் என்பதற்காக சில முக்கிய விடயங்களை மட்டும் பதிவு செய்கிறேன்.
சிங்கப்பூர் மாடிக் கட்டிடங்களில் ஒரு குறிப்பிட்ட இனத்தவரை மட்டுமே குடியிருத்தும் முறை மறுக்கப்பட்டு அனைத்து இனத்தவரையும் கலந்து குடியமர்த்தும் முறை அங்கிருந்தது.
நாங்கள் இருந்த வீட்டுக்கு அருகருகான வீடுகளில் மலாய குடும்பம் இருந்தனர், சீனர் இருந்தனர்,தமிழகத் தமிழரும் இருந்தனர்.
ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது ஆங்கிலத்தில், சந்திக்கும் நேரத்தைப் பொறுத்து வணக்கம் சொல்லிக் கொள்வோம்.தமிழகத் தமிழ்க் குடும்பம் ஒன்று நாங்கள் இலங்கைத் தமிழர் என்று அறிந்தவுடன் அவர்கள் ஒவ்வொரு நாளிலும் ஏற்படும் முதல் சந்திப்பின் போது தமிழில் வணக்கம் சொல்வார்கள்.நாங்களும் பதிலுக்குச் சொல்வோம்.
அங்கேயுள்ள பஸ்களில்;, பயணிகளுக்கான அறிவுறத்தல்களோ அல்லது பயண அனுமதிச்சிட்டை இன்றி பயணம் செய்தால் அதற்குரிய தண்டப் பணம் பற்றிய அறிவுப்புகளோ ஆங்கிலம், சீனம், தமிழ், மலாய் ஆகிய மொழிகளில் இருக்கும்.ஆனால் இதில்கூட சிங்கப்பூர் அரசு சமநிலையைக் கடைப்பிடித்தது.
ஒரு பஸ்ஸில் சீன மொழி மேலே(முதலில் ) இருக்குமானால் இன்னொரு பஸ்ஸில் தமிழ் மொழி மேலே (முதலில் ) இருக்கும். இன்னொரு பஸ்ஸில் மலாய் மொழி மேலே இருக்கும்(முதலில்).
அறிவித்தல்களில் அனைத்து மொழிகளும் இருக்கும்.எனது மனம் கொள்ளத் தக்கதாக ஒரு விடயத்தைஅவதானித்தேன்.பெரிய மாடிக் கட்டிடங்களில் லிப்டுகளுக்கு உள்ளேயும் வெளியேயும் அனைத்து இன மக்களும் ஒன்றாக மலர்ந்த முகத்துடன் நிற்கும் படம் மட்டுமல்ல, திறந்த லிப்டுக்குள்ளே நிற்கும் சீனர் ஒருவர் லிப்டின் உள்ளே நுழையம் மலாயரையோ தமிழரையோ கைலாகு கொடுத்து உள்ளே அழைக்கும் படம் இருப்பது போல இன்னொரு லிப்டடியிலும் திறந்த லிப்டின் உள்ளே தமிழர் நிற்பாராயின்,அவர் உள்ளே நுழையும் சீனரையோ மலாயரையோ கைலாகு கொடுத்து வரவேற்பது
போலவும், இன்னொரு லிப்டில் மலாயர் திறந்த லிப்டின் உள்ளே நிற்பாராயின் அவர் தமிழரையோ சீனரையோ கைலாகு கொடுத்து உள்ளே அழைப்பது போல இருக்கும்
சீனர், தமிழர்,மலாயர் ஆகியோரின் பண்டிகைக் காலங்களில் சீனர் தமது மலாய தமிழ் நண்பர்களுக்கு விருந்து கொடுப்பதும், அது போல மலாயரின் ரமழான் பண்டிகைக் காலங்களில் சீன . தமிழ் நண்பர்களை அழைத்து விருந்து கொடுப்பது போலவும், அது போல தமிழர்களின் தைப்பொங்கல் தினமாகட்டும் அல்லது தீபாவளித் தினமாகட்டும் அவர்களின் சீன மலாய நண்பர்களை அழைத்து விருந்து கொடுப்பது போலவும் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி இடம்பெறும்.
தொலைக்காட்சியில் நிகழ்ச்சியாக மட்டுமல்ல சிங்கப்பூரியரின் வாழ்வியலும் அப்படித்தான்.பண்டிகைக் காலங்களில் மட்டுமல்ல பிறந்த நாள் விழாக்கள் திருமணம் போன்ற குடும்ப நிகழ்வுகளிலும் அவரவருக்கு இருக்கும் அனைத்து இன நண்பர்களும் கலந்து கொள்வார்கள்.
எனக்கும் அப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. ஜிஇ(GE) நிறுவனத்தில் வேலை செய்யும் போது ரமழான் பண்டிகைக்கு என்னோடு வேலை செய்து ஒரு மலாயப் பெண் என்னை விருந்துக்கு அழைத்து நானும் போயிருந்தேன். விருந்தின் போதும்,விருந்து முடிந்ததன் பின்பும் எங்கள் நாட்டைப் பற்றியும் எனது குடும்பத்தைப் பற்றியும் ஆர்வமாக விசாரித்தார்.
பிள்ளைகளின் பிறந்த நாள் கொண்டாட்டங்களில் படம் எடுப்பதற்காக நான் பிலிம் றோல்களை வாங்கி மனைவிக்கு அனுப்பி வைப்பேன்,மனைவி எடுத்த படங்களை சிங்கப்பூருக்கு அனுப்பி வைப்பார்.படங்களை கழுவி எடுத்ததன் பின் நான் மேலே குறிப்பிட்ட மலாயப் பெண்ணிடமும்,எனது சீன நண்பர்களிடமும் காட்டி மகிழ்வேன்.அவர்களும் ஆர்வமுடன் பார்த்து மகிழ்வார்கள்.எங்கள் இருவரின் உரையாடலும் ஆங்கிலத்திலேயே இருந்தது
எப்பொழுதுமே மரியாதைக்குரிய நட்புகள் தனித்துவமானவை.அந்த நட்புதான் மலாயப் பெண்ணுக்கும் எனக்குமிடையில் இருந்தது.அவர் ஏதாவது மலாயப் பலகாரம் செய்து கொண்டு தருவார்.
எனக்கு இன்னொரு மலாய நண்பன் இருந்தான். அவனுக்குப் பெயர் அஸ்மன் எனது பெயரில் கடைசியாக வரும் தாசனை அவன் தசான் என்றுதான் அழைப்பான் அவனும் வீட்டிலிருந்து மீன் வைத்துச் செய்த பற்றிஸ் கொண்டு வந்து தந்தான்.அது பெரிய பற்றிஸ்.மிகச் சுவையாகவிருக்கும்.நானும் கொண்டக்கடலை அவித்துக் கொண்டு போய்க் கொடுப்பேன்.
ஜிஇ நிறுவனத்திற்கு வேலைக்கு போன முதல் நாள்,கண்ரீனுக்கு போயிருந்தேன்.அங்கே கிளாஸ்களில் தண்ணீர் வார்க்கப்பட்டு அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.அதனருகே சற்றுத் தள்ளி அரையும் குறையுமா தண்ணீர் உள்ள கிளாஸ்களிருந்தன.அதில் ஒரு கிளாஸில் முக்கால்வாசித் தண்ணீர் இருந்தது. அதை எடுத்து குடிப்பதற்காக வாயருகே கொண்டு போன போது
எனக்கருகில் நின்ற சீனப் பெண் எனது கையைப் பிடித்து தடுத்து „பிளீஸ் டு நொற் றிங் திஸ் வாட்டர்,சம்பொடி யூஸ்ட் திஸ் வாட்டர் திஸ் இஸ் றெஸ்ட்’என்று சொல்லியவர் அதை வாங்கி அப்படியே வைத்துவிட்டு ,புதிய தண்ணீர் நிரப்பப்பட்ட கிளாஸ்களை காட்டி அதை எடுத்துக் குடியுங்கள் எனச் சொன்னார்.அவருக்கு நன்றி சொல்லிவிட்டு இருக்கையில் போய் அமர்ந்தேன்.
சிங்கப்பூரில் விரும்பிக் குடிக்கும் பானங்களில் ஒன்று சோயா பாலும் ஒன்று.நான் வேலை செய்த காலங்களில் சிறிய போத்தல் சோயா பால் 35 சதம்.ஒவ்வொரு நாளும் இல்லாவிட்டாலும் அடிக்கடி வாங்கிக் குடிப்பேன்.சோயா பால் தொடங்கி சோயா உணவுப் பொருட்கள் அங்கு இன்றியமையாத உணவுப் பொருளாகும்.
உணவை வீணடிக்கக் கூடாது என்பதில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அக்கறையுடனிருக்கிறார்களோ என நான் பலமுறை சிந்தித்ததுண்டு.இந்த அனுபவம் எனக்கு சிங்கப்பூரில் ஏற்பட்டது.வேலைக்குப் போகும், நானும் என்னோடிருந்த நண்பர்களும் புட்டவித்து பிளாஸ்ரிப் பெட்டியில் போட்டுக் கொண்டு போய் சாப்பாட்டுக்கான நேரத்தில் கண்ரீனில் வைத்துச் சாப்பிடுவோம்.
ஒரு நாள் பிட்டைச் சாப்பிட்டுக் கொண்டிருந்த நான், மிகுதியைக் குப்பையில் கொட்ட எழுந்த போது எனக்கருகிலிருந்த அஸ்மன் என்ற மலாய் நண்பன் என்னைத் தடுத்து சாப்பாட்:டைக் கொட்ட வேண்டாம்,அளவாக கொண்டு வந்து சாப்பிடுங்கள் அல்லது மிகுதியை வீட்டுக்கு கொண்டு போய் சாப்பிடுங்கள் என அறிவுரை சொன்னான்.
நான் ஊருக்கு வந்ததன் பின் தீபாவளிக்கு வாழ்த்து மடல் அனுப்பிக் கொண்டிருந்தான். நாங்கள் ஜேர்மனிக்கு வந்ததன் பின்னரும் ஊருக்கு அஸ்மன் அனுப்பிய தீபாவளி வாழ்த்து மடலை மனைவியின் பெற்றோர் ஜேர்மனிக்கு அனுப்பியிருந்தனர்.அது எனக்கு மகிழ்ச்சியாகவும் வியப்பாகவும் இருந்தது.
என்பதாகும்.அங்கு செய்யப்படும் டிரிப் சுவிட்சுக்கான உதிரிப் பாகங்களின் தரம் அல்லது தன்மை ஒரு மணித்தியாலத்திற்கு ஒமுறை வேறுபடும் இதை பிளஸ் ஓர் மைனஸ் என்று சொல்லப்படும்.
ஜிஇயில் எனது வேலை செற் அப் மென் என்பதாகும்அது எப்படியென்றால் ஒரு பாகம் இன்னொரு பாகத்துடன் இணைக்கப்படுவதற்காக செய்யப்படுகையில் இணைவிற்கான அந்த இடத்தில் இணையும் பகுதி சரியாக இருந்தால்தான் இணைக்க முடியும். அதற்கமைய மிசினை ஒழுங்கு படுத்திக் கொடுப்பதாகும்
(one who makes the adjustments for machine tool operations to be performed by one or more routine operators)
உதாரணமாக ஒரு துவாரத்திலிருக்கும் ஸ்குரு பகுதிக்குள், ஸ்குரு ஆணியை செலுத்தி திருகும் போது அது இலகுவாகவும் இறுக்கமாகவும் இருக்க வேண்டும்.இந்த இறுக்கம் பொருத்தமான இறுக்கம் இல்லாது மிகக்
குறைந்தளவிலான நூற்றிலொரு பங்கான இறுக்கத்தில் இருப்பதை பிளஸ் என்றும்,அதே ஸ்குரு துவாரத்திற்குள் ஸ்குரு ஆணியைச் செலுத்தும் போது நூற்றிலொரு பங்க மில்லிமீட்டர் ஈடாட்டம் இருப்பதை மைனஸ் என்றும் சொல்வர்.(மனித வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட விடயத்தையம் இங்கே பொருத்திப் பார்க்கலாம்.கணவன் மனைவியை சாடிக்கேற்ற மூடி என்பார்களே அது போல இன்னொரு உதாரணம் இருக்கிறது அது வேண்டாம்)
உற்பத்திகளில் தரம் மிக முக்கியம்.டிரிப் சுவிற்சிக்கான பாகங்களின் தரம் குறையும் போது,இயந்திரத்தை நிறுத்திவிட்டு என்னைக் கூப்பிடுவார்கள்.தரம் பார்க்கும் கருவியால் உற்பத்தியான பொருட்களின் அளவை பார்த்துவிட்டு பிழையாக இருந்தால் இயந்திரத்தை ஒழுங்கமைக்க வேணும்.அத்துடன் தரம்குறைந்த உற்பத்திப் பொருட்களை அதற்கென இருக்கும் குப்பைத் தொட்டியில் கொட்ட வேண்டும்.
மலேசியா சிங்கப்புர் எல்லையிலிருக்கும் யோகுபாரு என்ற எல்லை நகரத்திலிருந்து நான்கு தமிழ் யுவதிகள் பக்ரறி பேருந்தில் ஜிஇ நிறுவனத்திற்கு வேலைக்கு வந்து போய் கொண்டிருந்தனர்.அவர்கள் ஒரே விதமான மிசினில் பக்கம் பக்கமாக இருந்து வேலை செய்வார்கள்.
நாங்கள் வேலைக்கு போன புதிதில் நாங்கள் இலங்கையிலிருந்து வந்தவர்கள் என்று அவர்கள் அறிந்து வைத்திருந்த போதும் நாங்கள் சிங்களவர்களாக இருக்கலாம் என்று நம்பினார்கள்.வேலை நிமித்தமான அவர்களுக்கும் எனக்குமான உரையாடல் ஆங்கிலத்திலிருந்ததால் அவர்கள் என்னைத் தமிழன் என்று நினைக்கவில்லை.
ஒரு நாள் நானும் நண்பர்களும் கண்ரீனில் இருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.நாங்கள் இருந்த அதே வரிசையில் சற்றுத் தள்ளி அந்த நான்கு யுவதிகளும் சாப்பிட்டுக் கொண்டும் ஆங்கிலத்திலும் தமிழிலுமாக கதைத்துக் கொண்டுமிருந்தார்கள்.அவர்கள் கதைப்பது எங்களுக்கு கேட்குமளவு தூரத்தில்தான் இருந்தார்கள்.நாங்கள் தமிழில் கதைத்துச் சிரித்துக் கொண்டிருப்பது அவர்களின் காதில் விழவே எல்லாரும் எங்கள் பக்கம் திரும்பி பார்க்க அவர்களில் ஒருத்தி „அங்க பாருங்க அவங்க தமிழங்க தமிழ்ல பேசிக்கிறாங்க’ என்று சொன்னது எங்களுக்கு கேட்டது.
சாப்பாட்டுக்கான நேரம் இருந்தாலும் அந்த நான்கு யுவதிகளும் கண்ரீனிலிருந்து எழுந்து போய் அவரவர் இயந்திர இருக்கையில் உட்கார்ந்து வேலை நேரம் வரும்வரையும் கதைச்சுக் கொண்டிருப்பினம்.
அன்றும் அப்படித்தான்,அவர்கள் எழுந்து போகும் போது நான் கைகளை கட்டிக் கொண்டு மேற்கண்ணால் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.நான் மட்டுமல்ல யாராவது நடக்கும் அசிகை தெரிந்தால் எல்லாரும் பார்ப்பார்கள்தானே, எனது நண்பர்களும் பார்த்தார்கள்.
அவர்களில் ஒருத்தி என்னை உற்றுப் பார்த்தபடி போனவள் கண்ரீனைவிட்டு நடந்து கொண்டிருக்கையிலும் கண்ணாடிக்கூடாக என்னை உற்றுப் பார்த்துக்
கொண்டே போனாள்.அவள் என்னை முறைக்கிறாளா உற்றுப் பார்க்கிறாளா என்பதை என்னால் ஊகிக்க முடியவில்லை.அவளுடைய இயந்திரந்தான் அடிக்கடி குழப்படி விடுவதுண்டு.நான் அங்குமிங்குமாக நடந்து கொண்ருக்கையில் என்னை அவள் பார்த்தால் அவளின் இயந்திரம் பிழையான அளவுகளில் உற்பத்தி செய்கிறது என்பதைக் கண்டு கொண்டு நான் அதை ஒழுங்குபடுத்திக் கொடுத்து விடுவதுண்டு.
அவள் என்னை உற்றுப் பார்த்ததைக் கண்ட கனகேஸ்வரன் என்ற எனது அறை நண்பன்’ பொஸ் அந்தப் பிள்ளை உங்களை வைத்த கண் வாங்காமல் உற்றுப் பார்த்துக் கொண்டே போகுது அதோடை ஏதேன் பிரச்சினையா’என்றான்.ஒரு பிரச்சினையும் இல்லை, அவாவின்ரை மிசுனுக்கும் நான்தான் செற் அப் மென்.அந்த மிசின் அடிக்கடி பிழையாக வேலை செய்வதால்,அவாவின்றை புரடக்சன் குறைவு அதுதான் காரணமோ தெரியாது.புரடக்சன் குறைவுக்கு மிசின்தான் காரணம் அதுக்கு நான் என்ன செய்யிறது என்று அவனுக்கு பதில் சொன்னாலும் உள்ளுக்குள்ளை ஒரு பயம்,அந்தப் பிள்ளை என்ரை வேலைபற்றி புகார் கொடுத்து என்னைத் திருப்பி அனுப்பி விடுவார்களோ என்று யோசிச்சன்.
இன்னொரு காரணம், அடிக்கடி இயந்திரம் பழுதடைந்தால் உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்படும்.உற்பத்தி பொருட்களை தராசில் நிறுத்துக் கொடுக்க வேணும்.ஒரு கிலோவில் எண்ணிக்கையின்படி இருக்கும் உற்பத்திப் பொருட்களின் தொகையளவில் எவ்வளவு எண்ணிக்கை உற்பத்தி செய்யப்பட்டது என்பதை கணக்கெடுத்துவிடுவார்கள்.
உற்பத்தி செய்தவரின் பெயர்,செற்அப் மென்னின் பெயர் நிறை குறிக்கும் தாளில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
அந்தப் பிள்ளை ஏன் உற்றுப் பார்த்தது என்று தெரியாமல் குழப்பத்துடன் சாப்பாட்டு நேரம் முடிய அந்தப் பிள்ளைகள் இருந்த இடத்துக்கு போனேன்.
கண்ரீனில் வைத்து உற்றுப் பார்த்த பெண்ணைத் தாண்டுகையில் „ஸ்ரொப் பிளீஸ் சீ திஸ் மிசின் (Stop, Please see this machine) „ என்றாள், நான் வட்ஸ் த மிஸ்ரேக்’ (What´s mistake) என்றேன்,அவள் „ஐ டோன்ற் நோ பிளீஸ் சீ திஸ் „( I dont know please see this machine) என்றாள். என்னடா இவள்,இப்படி இருக்கிறாளே „ என்று நினைத்தபடி உயரமான ஸ்ரூலை அவளருகில் போட்டபடி தலையைக் குனிந்து மிசின் நட்டைக் கழற்றுவதற்கு முன்னர் அவளை நிமிர்ந்து பார்த்தேன்.முகம் வாடியிருந்தது. அவளுக்கு நீளமான தலைமயிர், மிகக் கொஞ்சம் நீளமான முகம்,; ஆனால் மிக அழகாக இருந்தாள். அவளிடம் ஏதோ ஒரு அழகு இருந்தது.
நான் நட்டைக் கழற்றிக் கொண்டிருக்க அவள் கேட்டாள் „ நீங்க தமிழ்னு எனக்கு ஏங்க சொல்லல’ நான் பேசாமல் என் வேலையைச் செய்ய,’உங்களுக்கு நான் கேட்டது கேட்கலையா’ என்றாள் மீண்டும்.’கேட்டது „என்று அவளுக்கு பதில் சொல்ல தலையை நிமிர்த்தப் போன என்னை’ நோ தலய நிமிர்த்தாதீங்க,மேலேருந்து அந்த அமெரிக்க கெட்டும் பேர்சனல் மனேஜரும்
எங்களேயே பார்த்திட்டே இருங்காங்க,வேல ஆரம்பிக்காத நேரத்தில நீங்க றிப்பேர் பண்றீங்க அதுதான் பார்க்கிறாங்களோ தெரியல றிப்பேர் பண்ணுங்க இல்லென்னா றிப்பேர் பண்றமாதிரி நடிங்க’ என்றாள்.
பிறகு உங்க பேர் முருகதாசன்தானே என்றவளுக்கு „ம்’ என்று சொல்லிவிட்டு,எப்படித் தெரியுமென்றேன் „புரடக்சன் லிஸ்டில் பார்த்தனான் என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவளுடைய நண்பிகள் „ கேளடி சொல்லடி „ என்று சொல்வது கேட்டது.அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை கவனத்தில் நான் எடுக்கவில்லை.
திருத்தி முடிந்து இயந்திரம் வேலை செய்யத் தொடங்கியதும் உங்களுடைய பெயர் என்ன என்று அவளைப் பார்த்துக் கேட்ட நான் என்னுடைய தமிழ் உங்களுக்கு விளங்குதா என்று கேட்க „ஓ நல்லாவே விளங்குது, என்றவள் என்னோட பேர் யோகமலர்’ என்றவுடன் எனக்கு பகீர் என்றது.
நீர்கொழும்பு கொச்சிக்கடையில் நானிருந்த போது இதே பெயரில் எனக்கொரு தோழி இருந்தாள்,அவளை அதற்கும் மேலே என்றுகூட அவளைச் சொல்லலாம்.அது வேறு கதை.
„என்ன யோசிக்கிறீங்க’என்று அவள் கேட்க ஒன்றுமில்லை என்று சொல்லிக் கொண்டே அந்த இடத்தைவிட்டுப் போயிட்:டேன்.வேலை நிமித்தமாக பேசலாமே தவிர, வேலை செய்பவர்களுடன் வீணான பேச்சை வைத்துக் கொள்ளக்கூடாது என்பது அந்தப் பக்ரறியின்; சட்டம்.
அந்த இயந்திரங்கள் இருக்கும் நேர் மேலே கண்ணாடிகள் பொருத்திய பல அறைகளிருக்கின்றன.அங்கிருக்கும் பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் முழு தொழிற்சாலைiயும் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
எத்தனை பேர் வேலை செய்கிறார்கள், எத்தனை இயந்திரங்கள் வேலை செய்கின்றன என்பதை மேலேயிருந்து துல்லியமாகப் பார்க்க முடியும்.
நாங்கள் வேலைக்கு வந்து இரண்டாவது கிழமைதான் யோகமலர் என்னைத் தமிழன் என்று கண்டு கொண்டு பேசத் தொடங்கினாள்.
இந்த இரண்டு கிழமைக்கிடையில் வேலை முடிந்து போகும் போது வேலை செய்த அனைவரும் ஒன்றாக வீதிக்கு வந்து, வீதியில் நிற்கும் பக்ரறியினால் ஒழுங்கு செய்த , இந்தந்த இடத்திற்கு என்ற அவரவர் இடத்துப் போகும் பஸ்களில்; ஏறிப் போய்விடுவோம்.
யோகமலர் தனது பஸ்ஸில் ஏறும் போது என்னைத் திரும்பிப் பார்த்து குட்பை என்று சொல்லிக் கொண்டே; ஏறுவாள் .நானும் சக தொழிலாளிக்கு குட்பை சொல்வது சகஜந்தானே என்று குட்பை சொல்வேன்.
( தொடரும்)
![]()
அன்பு நண்பர் முருகதாசன் அவர்களுக்கு,
வணக்கம்.
உங்கள் படைப்புக்கள் யாவற்றையும் வாசித்தும் வருகிறேன்.
“சிங்கப்பூரில் சிலகாலம்” என்ற தலைப்பில் தாங்கள் எழுதிய இரண்டு தொடர்களையும் வாசித்துவிட்டேன். தலைப்பிலேயே அசத்தி விட்டீர்கள். படைப்புக்கு தலைப்பு மனித உடலில் தலை போன்றது.
மிகத்துணிவுடன் உள்ளதை உள்ளபடியே எழுதும் தங்கள் முயற்சியை பாராட்டுகிறேன். படைப்பாளிகள் பலவற்றை படைக்கலாம் ஆனால் சுயசரிதையாக தங்கள் வாழ்க்கையையே எழுதுவதென்பது எல்லோராலும் முடியாது.
பொதுவாகவே தாங்கள் எவர்க்கும் அஞ்சாமல் உங்களுக்கு எது சரியெனப் படுகிறதோ அதை எழுதும் நெஞ்சுறுதி படைத்தவர் என்பதால் உங்கள் முயற்சியைக் கண்டு நான் வியப்படையவில்லை. உங்கள் எழுத்து நடை நன்றாக இருப்பதால் உங்கள் வாழ்க்கை முழுவதையும் எழதுவீர்களானால் சிறப்பாக இருக்கும். அத்தோடு வர்ணனைகளையும் நகைச்சுவைகளையும்
கருப்பொருளில் இருந்து விலகாமல் சேர்க்கலாம். அப்படி எழுதும்போது
இன்னும் இன்ப துன்பங்களுடன் பல சுவராசியங்களையும் உள்ளடக்கிய படைப்பாகவும் அங்கீகாரம் பெற வாய்ப்புள்ளது.
முன் வைத்தகாலை பின் வைக்காமல் முழு முயற்சியுடன் தொடருங்கள். சாதனை படைத்து சாதித்து விடுவீர்கள். இது உறுதி.
என்றும் அன்புடன்,
சங்கர சுப்பிரமணியன்.