கவிதைகள்
தனமதில் தயையை நிறைத்துவிடு தாயே!…. ( கவிதை ) ….. கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா.

இல்லம் மகிழ இலக்குமி வந்திடுவாய்
இன்பம் பெருக இலக்குமி வந்திடுவாய்
அல்லல் அகல அம்மாவே அருளிடுவாய்
அன்னை இலக்குமியே அடிபரவி நிற்கின்றோம்
அகமதில் தூய்மை அமர்த்திவிடு தாயே
முகமதில் மலர்ச்சி கொடுத்துவிடு தாயே
கறைநிலை மனத்தில் அகற்றிவிடு தாயே
களிப்புடனே வாழ அருளிவிடு தாயே
சினமது தொடரா நிறுத்துவிடு தாயே 
சிறப்பதை மனதில் இருத்துவிடு தாயே
தனமதில் தயையை நிறைத்துவிடு தாயே
தாழ்பணிந்தோம் அம்மா காத்திடுவாய் நீயே
பொருளோடு அருளும் பொருந்தி வரவேண்டும்
பொறாமை யெனும்பேயும் பொசுங்கி விடவேண்டும்
அறமோடு அன்பும் பெருகிவிட வேண்டும்
அலைமகளே உந்தன் அடி பரவுகின்றோம்
![]()