கதைகள்

பார்த்த முகம்!…. ( சிறுகதை ) ….. சங்கர சுப்பிரமணியன்.

வினோதினியும் தமிழரசும்  நான்கு ஆண்டுகளாக விரட்டி விரட்டி காதலித்து ஒருவரையொருவர் மணம் முடித்துக் கொண்டனர். முதலிரவு அறை சூழ்நிலையையே மாற்றி இருந்தது. மலர்களும் ஊதுவத்தி புகையும் ஏற்படுத்தி இருந்த மணம் வியாபித்திருக்க ஒரு பக்கம் இனிப்புக்களும் பழங்களும் நிறைந்திருந்தன. சிறிதுநேரத்தில் பால் செம்புடன் வந்து கதவைத்தாளிட்டாள் வினோதினி. அவள் தலை நிறைய அணிந்திருந்த மல்லிகை மலர்கள்
“மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ”என்று தமிழரசை
மயங்க வைக்க பட்டாடைகளின் மணமும் சேர்ந்து கொண்டன.

அருகில் வந்து அமர்ந்தவளை “மெல்ல மெல்ல அருகில் வந்து மென்மையான கையைத் தொட்டு அள்ளி அள்ளி அணைக்க தாவுவேன்” என்றிராமல் மெய்மறந்தவனாய் வினோதனியின் முகத்தைப் பார்த்தபடியே இருந்தான். “பார்த்து பார்த்து நின்றதிலே பார்வை இழந்தேன்” என்றமாதிரி இருக்கிறாரே என்ற எண்ணத்துடன்
அவனை உலுக்கினாள்.

“என்ன தமிழ், நான் அறைக்குள் வந்து அருகில் வந்து அமர்ந்த பின்னும் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?”

“உன் முகத்தைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது. வேறொன்றமில்லை”

“நான்கு ஆண்டுகளாக பார்த்த முகம்தானே. இன்னும் ஆயுள் முழுதும் பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய முகம்தானே?” என்று தமிழைச் சீண்டினாள்.

போதும், போதும் இன்னும் விட்டால் “முகத்தில் முகம் பார்க்கலாம் விரல் நகத்தினில் பவளத்தின் நிறம் பார்க்கலாம்” என்று பாட ஆரம்பித்து விடுவீர்கள். அப்படிப் பாடினால் கூட பவளநிறத்தைப் பார்க்கமுடியாது. நகமெல்லாம் வண்ணம் பூசியுள்ளேன் என்று விளக்கை அணைத்தபடியே அவனையும் அணைத்தாள்.

“குயில்கூவித் துயிலெழுப்ப கொடி அரும்பு கண் விழிக்க” என்று கண்விழிக்க வேண்டிய நேரத்தில் அடுக்களையில் இருந்து மிக்ஸி சத்தத்தால் எழுந்த தமிழரசு வினோ வினோ என்று மனைவியை அழைக்க ஒரு ஐம்பத்தைந்து மதிக்கத்தக்க பெண் இதோ வந்துட்டங்க என்றபடி வந்தாள். மூக்குக் கண்ணாடியுடன் சிறுதே முடிகள் நரைத்த தலைமுடியோடு வந்தவளிடம் என்ன ஒரே சத்தம் என்று கேட்டான்.

என்ன சத்தமா? இட்லிக்கு சட்னி அரைத்தேன். இவ்வளவு நாட்களாக
கோவில் திருவிழாவுக்காக சென்னையிலிருந்து மகனும் மருமகளும் பெங்களூரில் இருந்து மகளும் மருமகனும் பேரக்குழந்தைகள் என்று வந்திருந்தவர்களோடு காலை ஆறுமணிக்கே எழுந்து கூத்தடித்துக் கொண்டிருந்தீர்களே அதெல்லாம் சத்தமில்லை. இப்ப மணி ஏழாகியும் எழுந்திராமல் என்ன சத்தம் என்கிறீர்கள். இதுவே முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் இருந்திருந்தால் “என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா?” என்று என்னைச் சுற்றி சுற்றி வந்திருப்பீர்கள் என்று
சொன்னவள் சீக்கிரம் குளிச்சிட்டு வாங்க சாப்பிடலாம் என்றாள்.

எழுந்து சென்று குளித்துவிட்டு வந்தவன் முன் சுடச்சுட இட்லியைப் பறிமாற அவள் முகத்தை பார்த்தபடியே இருந்தான். காலயில் பூசைசெய்யும்போது ஏற்றிய ஊதுவத்தி மணமும் அவள் தலையில் சிறிதளவே வைத்திருந்த மல்லிகை மணமும் சேர அந்த இடம் மணம் கமழ்ந்திருந்தது. அப்போது அவனை உலுக்கிய அவள் இட்லி ஆறிடப்போகுது சாப்பிடுங்க என்றாள்.

அப்போது இவ்வுலகுக்கு வந்தவன் சாப்பிட்டபடியே வினோ எவ்வளவு சீக்கிரம் ஆண்டுகள் ஓடிவிட்டன. பிள்ளைகளைப் பெற்று வளர்த்து படிக்கவைத்து திருமணமும் செய்துவைத்து பேரக்குழந்தைகளையும் பார்த்து விட்டோம் என்றான். ஆமாம் ஆண்டுகள் போனதே தெரியவில்லை என்றாள் வினோதினி.

இப்போது நாம் மட்டும் வயதான காலத்தில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தபடி பார்த்த முகத்தையே பார்த்துக் கொண்டுருக்கிறோம் என்றான் தமிழரசு. உடனே ஓ அப்படியா? உன் முகத்தைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போலிருக்கிறது என்று சொன்னது ஒரு காலம். இப்போது பார்த்த முகத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறோமா? அப்படி என்றால் ஒன்று செய்வோமா? என்றாள்.

“அதென்ன ஒன்று?” என்றான் தமிழரசு.

“நான் முடியை வெட்டி பாப் வைத்துக் கொள்கிறேன். அப்படியே கொஞ்சம் உதட்டுச்சாயமும் பூசிக்கொள்கிறேன்”

“அப்படியா? நானும் நரைத்த மீசையை எடுத்துவிட்டு தலைமுடிக்கும் சாயம் பூசிக்கொள்கிறேன்” என்றான் தமிழரசு.

அப்படியே செய்யலாம். பார்த்த முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க வேண்டாம் இல்லையா? இருவர் முகமும் வித்தியாசமாய் இருக்கும் என்று வினோதினி சொல்லவும் அந்த இடத்தில் சிரிப்பலைகள் அடங்க சிறிது நேரமானது.

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button