கவிதைகள்

கடப்பதெளிது காசு இருந்தால்!…. ( கவிதை ) …. சங்கர சுப்பிரமணியன்.

நல்லதும் தீயதும் பார்ப்பவர் கண்களிலே
உயிரைக் கொல்வதைத் தீயதென்றால்
இறைச்சிக்காக உயிரைக் கொல்பவனை
இப்புவியில் சொல்வாரோ தீயவனென்று

நல்லது செய்கிறோமென்று சொல்பவரும்
நலமென்றெண்ணி பசியிலே மகவிருக்க
பசித்திருக்கும் குழந்தை பசியாற்றாமல்
பரமன் தலை பால் ஊற்றல் நல்லதாமோ

பசுமடியில் நிறைந்திருக்கும் பாலதையும்
கன்றுக்கு குடித்திட சிறிதும் விட்டிடாமல்
ஒட்டக்கறந்தே கன்றினை வாடவிடுதலுமே
உன்னதமான நற்செயலென போற்றுவீரோ

கல்விக்கண் திறந்தால் நல்லதென்றிருக்க
காசொன்றே குறியென்று வியாபரம் செய்ய
கொட்டிக் கொடுத்தே அதைக்கொள்பவரை
குவலயத்தில் எந்நிலை வைத்து கண்டிடுவீர்           

இருப்பவன் எது செயினும் நல்லதாகிடுதே
இல்லாதன் செய்தாலதும் பொல்லாதாகுதே
நடப்பது எதுவாகிலும் இந்த நாநிலத்தில்
கடப்பதெளிது காசதுவுமே கையிருந்தால்!

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *